வரலாற்றை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி உரை வாழ்நாள் முழுதும் இனத்துரோகம் செய்தவர் ம.பொ.சி.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னை-தாம்பரத்தில் மார்ச் 31 ஆம் தேதி நடந்த கழகக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து:
பெரியார் விநாயகர் சிலை உடைப்புப் போராட் டம் நடத்தியபோது தி.மு.க.வினர் சொன்னார்கள்… “நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்” என்று. தேர்தலுக்கு போனவுடன் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கொள்கையில் வழுவ ஆரம்பித்து, சன் டி.வி.யில் இராமாயணம் போட ஆரம்பித்து விட்டார்கள். இராமாயண எதிர்ப்பு என்பது அந்த கதையை எதிர்ப்பதாக பொருள் அல்ல. அதை வைத்துக் கொண்டு தமிழர்கள் மத்தியில் பார்ப்பனி யத்தை புகுத்தும் ஏற்பாடு என்பதால் தான் எதிர்க்கப் படுகிறது.
1938 இல் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியபோது சொன்னார்… “இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது மொழிப் போராட்டம் அல்ல. பண்பாட்டு போராட்டம். தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு, சமய, இயல் ஆகியவற்றில் மனுதர்மத்தை புகுத்தும் சூழ்ச்சியை எதிர்க்கும் போராட்டம் இது” என்று சொன்னார். ஆங்கிலம் வந்தபோது அறிவியலும் சேர்ந்து வந்தது. ஆனால் சமஸ்கிருதம் வந்தபோது அடிமைத்தனமும் சேர்ந்து வந்தது என்று சொன்ன பெரியார், இந்தியை சமஸ் கிருதத்தின் ஒரு வடிவமாகப் பார்த்தார். நாங்கள் சமஸ்கிருதத்தை தான் இந்தியாவின் ஆட்சி மொழி யாக செய்திருக்க வேண்டும். முதலில் இந்தியை மக்களிடம் அறிமுகப்படுத்தி, பின்னால் சமஸ் கிருதத்தை கொண்டுவரப் போகிறோம் என்று இராஜாஜி சொல்லியிருந்தார். எனவேதான் பெரியார் இந்தியை எதிர்த்தார்.
மொழிப் போராட்டம் என்பது பண்பாட்டுப் போராட்டத்தின் ஒரு வடிவம்தானே தவிர, அதுவே முழு போராட்டம் ஆகிவிடாது என்றும் பெரியார் சொல்லியிருக்கிறார். 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் மொழிப் போராட்டமாக மட்டுமே இருந்தது அதில் பண்பாட்டு தன்மை சிறிதும் இல்லை. அதில் பார்ப்பன எதிர்ப்போ, வடவர் எதிர்ப்போ சிறிதும் இல்லை. சுயமரியாதை திருமணத்தை தமிழர் திருமணம் என்று மாற்றி செய்தார்கள். அதில் பார்ப்பன எதிர்ப்போ, பெண் விடுதலையோ, பகுத்தறிவோ இருக்காது. சமஸ் கிருதத்திற்கு பதிலாக தமிழ் இருக்கும். பெரியார் ஒரு முறை சொன்னார்… “பக்தவச்சலம் கும்பாபிஷேகம் செய்தார், கலைஞர் அதையே குடமுழுக்கு என்ற பெயரில் நடத்துகிறார், இரண்டிற்கும் என்ன வேறுபாடு?” என்று. மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது, சித்தூர், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகள் போய் விட்டது. பெரியார் எல்லைப் போராட்டத்திற்கு வரவில்லை என்று சொல்வார்கள். பெரியாரை அழைத்த போது பெரியார் சொன்னார்… “நான் வருகிறேன். ஆனால், இதோடு போராட்டத்தை நிறுத்தக் கூடாது. இந்தி ஆட்சி மொழி ஆகக் கூடாது. தட்சிணப் பிரதேசம் (தமிழ்நாடு, கர்நாடகம், கேரள மாகிய மூன்று மாநிலங்களையும் ஒன்றாக இணைப் பது) என்பதை எதிர்க்க வேண்டும். இதையும் சேர்த்து போராடுவதாக இருந்தால் உங்களோடு சேர்ந்து வருகிறேன்” என்று. எனவே பெரியார் ம.பொ.சி. யுடன் இணைந்து போராட மறுத்து விட்டார்.
தமிழ் தேசியத்தின் தந்தை என்று சிலரால் தூக்கிப் பிடிக்கப்படும் ம.பொ.சி. தமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரிந்து போக வேண்டுமென தாம் ஒரு போதும் சொல்லவில்லை என்றார். இந்தியாவின் ஒற்று மையைக் கருதி இந்தி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று சொன்னார். நான் இந்து என்பதால் வழிபடுவதற்கு சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்றார். இவர் தமிழ் வழிபாடும் பேசவில்லை, இந்தி எதிர்ப்பும் பேசவில்லை. தமிழ்நாடு தன்னுரிமை யோடு இருக்க வேண்டும் என்றார். பெரியாரை தூக்கிப் பிடிக்க கூச்சப்படும் (அல்லது) விரும்பாத, இராஜாஜியின் தொண்டர் களான சில தமிழ் தேசியவாதிகள் ம.பொ.சி.யைத் தூக்கிப் பிடித்து கொண்டிருக்கிறார்கள். திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடத்தி விளம்பரம் பெற்றார். பெரியார் இந்தி எழுத்துகளை தார் பூசி அழித்தால், மண்ணெண் ணெய் ஊற்றி தாரைத் துடைத்தவர் தான் ம.பொ.சி. இப்படிப்பட்ட ம.பொ.சி., தி.மு.க. வில் எம்.எல்.ஏ. ஆனார். மேலவைத் துணைத் தலைவர் ஆனார். அ.தி.மு.க.விற்குப் போனார். அவசர நிலை (மிசா) காலத்தில் காங்கிரசிற்கும் போனார். ஈழத்தில் தமிழர்களை அழிக்க அமைதிப்படை வந்தபோது ஆதரித்துப் பேசினார். தமிழின துரோகத்தைதான் தன் வாழ்நாள் முழுவதும் செய்தார்.
(தொடரும்)
பெரியார் முழக்கம் 03052012 இதழ்