‘விந்து’ வங்கியிலும் வீரியம் பெற்றுள்ள மனுதர்மம்
குழந்தை பெறுவதற்கான தடைகளை மருத்துவ விஞ்ஞானம் தகர்த்து விட்டது. கருத்தரிக்கும் சக்தி இல்லாமல் போவோருக்கு, நன்கொடை மூலம் குருதிக் கொடை பெறுவதுபோல், விந்துக் கொடை பெறும் முறைகளும் வந்து விட்டன. இதற்காக குருதிகளை சேகரிப்பதுபோல், ‘விந்து’களை கொடையாகப் பெற்று, சேகரிக்கும் மய்யங்கள் செயல்படுகின்றன. இந்த மய்யங்களிலிருந்து விந்துக்களைப் பெற்று, ஊசி மூலம் உடலில் செலுத்தி, கருவை வயிற்றில் வளர்த்து பெறப்படும் விஞ்ஞானக் குழந்தைகள் ஏராளமாக பிறந்து வளர்ந்து வருகின்றனர்.
குருதிக்கு, சாதி-மத வேறுபாடுகள் கிடையாது. விஞ்ஞானம், ரத்தத்தின் பிரிவுகளை பட்டியலிட்டுள்ளது. சாதிகளைக் கடந்து, ஒவ்வொரு தனி மனிதருக்கும் ரத்தத்தின் பிரிவுகளை கண்டறிந்து, தேவைப்படும்போது அந்தப் பிரிவு ரத்தம் மட்டுமே ஏற்றப்படுகிறது. அதை மட்டுமே உடலும் ஏற்கும்.
இதேபோல், சாதி மத அடையாளங்களைக் கடந்து பெறப்படும் விந்துகளும், பெண்களின் கருப்பையில் செலுத்தப்படுகின்றன. ஆனாலும்கூட மருந்துவ விஞ்ஞானம் மகத்தான சாதனைகளை செய்து, மனித குலத்தை உய்விக்க வந்தாலும்கூட, ‘மனுதர்ம’ சிந்தனை மட்டும் மாறவே இல்லை.
கடந்த மே 13 ஆம் தேதி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் வெளிவந்த செய்தி இது:
விந்துக்கள் சேமிப்பு வங்கிக்கு வந்து, பணம் கொடுத்து, விந்துக்களை வாங்கி, கருவுற விரும்பும் இணையர்களில் பெரும்பாலோர் ஒரு கேள்வியை கேட்கிறார்கள். “இந்த விந்தைத் தந்தவர் எநத சாதி?” என்பதாகும். பீகாரைச் சேர்ந்த பிரபல குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கவுரவ குமார், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டி, நாட்டில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. விந்துக்களை வாங்க விரும்பும் இணையர், தங்களுக்கு குறிப்பிட்ட சாதிக்காரர்களின் விந்து மட்டுமே வேண்டும் என்று வற்புறுத்துவதாக அவர் பேட்டியில் கூறியிருந்தார்.
இது, பீகார் போன்ற சாதிவெறிப் பிடித்த மாநிலங்களில் மட்டுமல்ல, டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இதே ‘மனுதர்ம’ சிந்தனைதான் நிலவுகிறது.
மும்பையில், ‘டிரிவெக்டர்’ என்ற விந்து வங்கி நடத்தும் திலிப்பட்டீல், மற்றொரு தகவலைக் கூறியுள்ளார். ‘பிராமணர்’ விந்து வேண்டும், எவ்வளவு பணம் தரவும் தயார் என்று கேட்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். முஸ்லீம்கள்கூட ‘சன்னி’ விந்து, ‘சீயா’ விந்து என்று குறிப்பிட்டுக் கேட்கிறார்கள் என்று கூறும் அவர், மருத்துவ ஆய்வு வழிகாட்டுதலின்படி ‘விந்து’ தந்தவர் சாதியை வெளிப்படுத்துவது குற்றம். ஆனால், மதத்தை வெளிப்படுத்தலாம் என்றார், அவர். சிவப்பு நிறமுள்ள அடர்த்தியான கூந்தல் உள்ள, கூர்மையான பார்வைக் கொண்டவர்களிடமிருந்து பெறக்கூடிய ‘விந்து’வை கருவில் சுமக்க விரும்புகிறார்கள். அதிலும், தான் சார்ந்திருக்கிற ‘சாதி’க்கே அவர்கள் முன்னுரிமை தருகிறார்கள். எல்லாவற்றையும்விட “பிராமணர்” விந்துக்கு சந்தையில் கடும் போட்டி!
குழந்தைப் பெற வாய்ப்பற்றவர்களுக்கு விஞ்ஞானம் தனது ஆராய்ச்சியில் கண்டறிந்த மகத்தான கண்டுபிடிப்புகளிலும் ‘மனுதர்மமே’ ஆட்டிப் படைக்கிறது என்றால், இது நாகரிகமான நாடு தானா? இதைப் போன்ற வெட்கக்கேட்டை தலைகுனிவை வேறு எங்கும் பார்க்க முடியுமா?
விந்துக் கொடையிலும் பார்ப்பனியமே ‘வீரியமானது’ என்ற மனு தர்ம சிந்தனையை மரணப்படுகுழியில் ஆழக் குழித் தோண்டி புதைக்க வேண்டாமா?
பெரியார் முழக்கம் 31052012 இதழ்