அத்தாணியில் பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டம்
அந்தியூர் ஒன்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் 133-வது பிறந்த நாள் விழா, கீழ்வானி இந்திராநகர் கிளையின் பெயர் பலகை திறப்பு விழா, கழகத்தின் புதிய நூல் வெளியீட்டு விழா பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டம் ஆகியவை 8.3.2012 அன்று நடைபெற்றது. விழாவிற்கு பகுத்தறி வாளர் பேரவைத் தோழர் ஜீ.மா. சுந்தரம் தலைமையேற்றார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கீழ்வானி இந்திரா நகரில் கழகத்தின் பெயர்ப் பலகையை திறந்து வைத்து கொடியேற்றினார். சுந்தரம் இல்லத்தில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டு, அனைவரும் ஊர்வலமாக அத்தாணி பொதுக் கூட்ட திடலுக்கு வந்தடைந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் தலைவர் கழகக் கொடியினை ஏற்றி வைக்க, பொதுக் கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்கின.
வீரன் வரவேற்புரையாற்ற, மடத்துகுளம் மோகன், ‘மந்திரமல்ல தந்திரமே!’ நிகழ்ச்சி நடத்தினார். பொள்ளாச்சி விஜய ராகவன் கழக வெளியீடுகளை அறிமுகம் செய்தார். மாவட்ட கழகத் தலைவர் நாத்திக சோதி, தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் இரத்தினசாமி, மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர். கழகத்தின் புதிய வெளியீடான “இராவண லீலா-தமிழ்நாட்டின் தேசிய விழா” என்ற மணியம்மையார் நூலை கழகத் தலைவர் வெளியிட, மாவட்ட ம.தி.மு.க. துணை செயலர் இராமன் பெற்றுக் கொண்டார். “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற ஈ.வெ.ரா. மணியம்மையார் எழுதிய நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, பகுத்தறிவாளர் பேரவை மோகன்ராசு பெற்றுக் கொண்டார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார். வீரக்குமார் நன்றி கூறினார்.
கோவில் திருவிழா கூட்டங்களையும், மக்களை முட்டாளாக்கும் அரசியல் கூட்டங்களையும் கண்ட அத்தாணி மக்களுக்கு, இக்கூட்டம் புதியதாக இருந்ததால் அதிக அளவில் திரண்டிருந்தனர். கழக வெளியீடுகள் ரூ.2500-க்கு விற்பனை ஆனது.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இ.ம.சுந்தரம், வீரக்குமார், அர்சுணன், நடராஜ், கார்த்தி, யுவராஜ், சேகர், தேவராஜ், சென்னையப்பன், செல்வராசு, மாரிமுத்து, குமரி, கனகு, ரமேசு மற்றும் பகுத்தறிவாளர் பேரவை, பெரியார் தி.க. தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
கூட்டத்தில் தலைவரிடம், மாவட்ட கழகம் சார்பாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கான 127 சந்தா தொகையும், வளர்ச்சி நிதியாக ரூ.1000-த்தையும் சுந்தரம் வழங்கினார்.
பெரியார் முழக்கம் 03052012 இதழ்