மாட்டிறைச்சி உணவுத் திருவிழாவுக்கு ‘மனுதர்மக் கும்பலின்’ எதிர்ப்பு

பார்ப்பனர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டவர்கள் என்பதற்கு அவர்களின் வேதங்களே சான்று கூறுகின்றன. வால்மீகி இராமாயணத்தில் இராமன் மாட்டுக்கறியை சுவைத்து சாப்பிட்டதை விரிவாக எடுத்துக் கூறுகிறது. புத்தர் இயக்கம் கால்நடைகளை தீயிலிட்டு எரிக்கும் பார்ப்பன யாகங்களை எதிர்த்தது. உழைக்கும் மக்களின் உற்பத்திக் கருவிகளான ஆடு மாடுகள், உயிருடன் நெருப்பில் பொசுக்கப்படும் யாகத்தால், விவசாயம் கடும் நெருக்கடிக்குள்ளானது. எனவே விவசாயத்தை தொழிலாகக் கொண்ட திராவிடர்கள் புத்தரின் கருத்துகளை ஏற்றனர். பார்ப்பனர்களின் செல்வாக்கு இழந்தது. மீண்டும் தங்களை உயிர்ப்பித்துக் கொள்ள பார்ப்பனர்கள் புத்த மதத்தில் மக்கள் செல்வாக்குள்ள கருத்துகளை தங்கள் கருத்துகளாக ‘சுவீகரித்து’க் கொண்டனர். அப்போதுதான் பார்ப்பனர்கள் ‘மாட்டிறைச்சி’ சாப்பிடுவதை கைவிடுகிறார்கள். ‘சைவ’த்துக்கு மாறுகிறார்கள்.

மாட்டிறைச்சி உண்பவர்கள் தீண்டத்தகாதவர் கள்; இழிவானவர்கள் என்ற மனுதர்ம சிந்தனையை பார்ப்பன சிந்தனையை சமூகத்தில் திணித்தார்கள். இப்போதும் இங்கே உணவு முறையில் மூன்று பிரிவினர் உண்டு.

ஒன்று – சைவம்;

இரண்டு – அசைவம்;

மூன்று – மாட்டிறைச்சி சாப்பிடும் அசைவம்.

அதிலும் ‘செத்த மாட்டை’ சாப்பிடுவதற்கும் அந்த மாட்டை தூக்கிப் போய் புதைப்பதற்கும் ஒரு ‘சமூகம்’, ஒரு ‘சாதிப் பிரிவு’ உருவாக்கப்பட்டது.

அந்த இழிநிலை இன்றும் தொடருகிறது.

அண்மையில் அய்தராபாத்தில் உள்ள உஸ் மானியா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மாட்டிறைச்சி உணவுத் திருவிழா ஒன்றை நடத்தினர். உடனே ‘மனுதர்ம’வாதிகள் எதிர்த்தனர். இப்படி ஒரு உணவுத் திருவிழாவை நடத்தியதை பெரும் குற்றம் என்று சீறினார்கள். சில பேராசிரியர்கள் மாணவர் களைத் தூண்டிவிட்டு நடத்தியதாக புகார் செய்தனர். மாநில காவல்துறையும், உணவுத் துறையும் சில பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது.

இப்படி ஒரு ‘மாட்டிறைச்சி உணவு விழா’ நடத்தி னாலே அது ஏதோ இரு சமூகங்களுக்கிடையே ‘பகைமையை’ உருவாக்கும் முயற்சியாக கருதப்படு கிறது. ‘மனுதர்ம’ பார்ப்பன சிந்தனை சமூகத்தை ஆட்டிப் படைப்பதே இதற்கு காரணம். இந்த நிகழ்வை முன் வைத்து, ‘உணவுக் கண்காணிப்பு வழியாக ஒழுங்குபடுத்தப்படும் கலாச்சாரம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் கல்பனா கண்ணபிரான் ‘இந்து’ நாளேட்டில் (மே 1, 2012) விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

உணவு முறையில் மதம், சமூக அந்தஸ்து, சாதிகள் பின்னிப் பிணைந்து நிற்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பல்வேறு கலாச்சாரங்களுக் கிடையே உணவு முறைகள் மாறுபட்டு இருப்பது இயற்கை என்றாலும், இந்தக் கலாச் சாரங்கள் சாதியோடும், சமூக வாழ்நிலையோடும் மதத்தோடும் பிணைக்கப்பட்டுவிட்டன. குறிப்பாக மாட் டிறைச்சியும் பன்றி இறைச்சியும் இழிவு கலாச்சார அடையாளங்கள் என்று சித்தரிக்கப்படுகின்றன.

இந்த கலாச்சாரம் அரசியலாக கட்டமைக்கப்படு கிறது. உஸ்மானியா பல்கலையில் மாட்டிறைச்சி உண்பதை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் நடத்திய ‘உணவுத் திருவிழா’கூட சட்டவிரோதமானது என்று கருதக்கூடிய அரசு நிர்வாகமும் சமூகமும் இருக்கவே செய்கின்றன.

இது எதைக் காட்டுகிறது?

மனுதர்ம சிந்தனை உயிருடன் இருக்கிறது என்பதைத் தானே?

எனவேதான் பெரியார் திராவிடர் கழகம் அறைகூவி அழைக்கிறது.

மனுதர்மத்துக்கு தடைபோடு;

மனுதர்மத்தை நெருப்பில் போடு!

பெரியார் முழக்கம் 17052012 இதழ்

You may also like...