காற்றில் பறக்கும் ஒப்பந்தம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது வில்லூர்.  வில்லூரில் வாழும் தலித் மக்கள், ஆதிக்கசாதியினர் வாழும் வீதிகளில் சைக்கிளில் போக முடியாது. 2011 ஆம் ஆண்டு மே முதல் தேதி தலித் இளைஞர் ஒருவர், பொது வீதியில் சைக்கிள் ஓட்டிச் சென்றார் என்பதற்காக சாதிவெறியர்களால் தாக்கப்பட்டார். இது கலவரமாக மாறி, காவல் துறை தலையிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட காவல்துறை அதிகாரி தலித் பிரதிநிதிகளையும், ஆதிக்கசாதி பிரதிநிதிகளையும் அழைத்து சமரசப் பேச்சு நடத்தினார். கடந்த ஏப். 24 ஆம் தேதி இரு பிரிவினருக்கிடையே உடன்பாடு கையெழுத்தானது. இதன்படி இரு தரப்பும் சமாதானமாக நட்புறவுடன் பழகி வருகிறார்கள் என்று காவல்துறை கூறிக் கொண்டாலும், உண்மை நிலவரம் அப்படி அல்ல என்று நேரில் பார்வையிட்ட ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர் கூறுகிறார். ‘உடன்பாடு காகிதத்தில் தான் இருக்கிறது, மீண்டும் தலித் மக்கள் பொது வீதிகளில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்கப்படுவது இல்லை’ என்று அந்நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. (ஏப்.27) வில்லூர் தலித் குடியிருப்பில் வாழும் ஒரு இளைஞர், சைக்கிள்களில் குடிநீர்ப் பானைகளைக் கட்டிக்கொண்டு, சைக்கிளில் ஏறிப் போக முடியாமல் தள்ளிக் கொண்டு போகும் காட்சியை படமாக, அந்நாளேடு வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்ற ஆணையானாலும், காவல்துறை ஆணையிட்டு உருவாக்கிய சமரச உடன்பாடானாலும் எதையும் மதிக்க சாதி ஆதிக்கவாதிகள் தயாராக இல்லை. பார்ப்பனீயம் அவ்வளவு ஊறிப்போய் கிடக்கிறது. தொடர்ச்சியாக சாதி தீண்டாமைக்கு எதிரான தீவிர இயக்கங்களும் போராட்டங்களும் தேவைப்படுவதையே இவை உணர்த்துகின்றன.

பெரியார் முழக்கம் 03052012 இதழ்

You may also like...