இந்திய துரோகங்களை விளக்கி கழகத் தலைவர் உரை சலகண்டாபுரம் – தாரமங்கலத்தில் கழகக் கூட்டங்கள்

சேலம் (மேற்கு) மாவட்டக் கழகம் தீவிரமாக பரப்புரை இயக்கங்களை நடத்தி வருகிறது. பம்பரமாய் சுழலும் கழகத் தோழர்களின் செயல்பாடுகள். கடந்த இதழின் தொடர்ச்சி.

சேலம் மேற்கு மாவட்டம் சலகண்டாபுரத்தில் 10.2.12 வெள்ளி மாலை 5 மணிக்கு கழகத்தின் சார்பாக மத்திய அரசின் தமிழின விரோதப் போக்கைக் கண்டித்து மாநாடு, பொதுக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கி.முல்லைவேந்தன், செயலாளர் சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மாலை

5 மணிக்கு பறை முழக்கத்துடன் துவங்கிய நிகழ்ச்சி 30 நிமிடங்கள் பறை முழக்கமும், 5.30 மணி முதல் 7.00 மணி வரை காவை இளவரசனின், ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்ச்சியும், 7 மணி முதல் 8 மணி வரை பகுத்தறிவு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தொடங்கிய பொதுக் கூட்டம், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, மாவட்ட தலைவர் முல்லை வேந்தன் உரைக்குப் பின் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுமார் ஒன்றரை மணி நேரம் சிறப்புரையாற்றினார். மாலை 5 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு பத்தரை மணிக்கு நிறைவுற்றது. குமார் நன்றி கூறினார்.

சலகண்டாபுரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கூட்டத்தில் 2000 பேருக்கு மேலாக திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1971 ஆம் ஆண்டு சலகண்டாபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு உரையாற்றியது தொடர்பான செய்திகளை அன்றைக்கு பெரியார் உரையாற்றிய கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த மூத்தவர்கள், தங்களது அனு பவங்களை தோழர்களுடன் பகிர்ந்து கொண்டதும், அவர்களில் சிலர் இன்றும் மிகுந்த மனநிறைவுடன் நன்கொடை தந்து உதவியதும் நெகிழ்ச்சியானது. குறிப்பாக சலகண்டாபுரம் சாமி போட்டோ ஸ்டுடியோ செந்தில்குமார், திருக்குறள் புத்தக நிலையம் பாண்டியன் ஆகியோர் சுவரொட்டிக்கான முழு செலவை பகிர்ந்து கொண்டனர். இரவு தோழர்களுக்கான உணவிற்குண்டான செலவினை சண்முகராசா (சி.பி.எம்.) ஏற்றுக் கொண்டதுடன், சேலம் மாவட்டத்தில் எங்கு கழக நிகழ்ச்சி நடந்தாலும் தனது பங்களிப்பாக ரூ.2000 தருகிறேன் எனக் கூறியது, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களை உற்சாகமூட்டியது.

தோழர்கள் யாருமே இல்லாத ஊரிலும் நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த முடியும் என்பதையும் பெரியார் கொள்கைப் பிரச்சாரத்துக்கு உதவிட பொது மக்கள் எப்போதும் தயாராக இருக் கிறார்கள் என்பதையும்உணர முடிந்தது. மாவட்ட தலைவர் முல்லைவேந்தன், நங்கவள்ளி அன்பு, கிருட்டிணன், இராசேந்திரன், சிவக்குமார், குமார், மேச்சேரி தமிழ் இளஞ்செழியன், செந்தில் குமார், அருள்செல்வம், காவை இளவரசன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

தாரமங்கலம்

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் கழகத்தின் சார்பாக இந்திய தேசத்தின் துரோகம் ஈழத்தில், முல்லை பெரியாறில், கூடங்குளத்தில் என்ற தலைப்பில் 1.3.2012 வியாழன் மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் துவங்கியது. முதல் நிகழ்வாக பறை முழக்கம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சமர்பா குமரனின் மற்றும் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் பகுத்தறிவு இன எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேட்டூர் கோவிந்தராசு ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்ச்சி நடத்தினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். தோப்பூர் கண்ணன் வரவேற் புரையுடன், மாவட்ட அமைப்பாளர் முத்து மாணிக்கம், தாரமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் சரவணன் முன்னில வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு உரைக்குப்பின், கழகத் தோழர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினார். இரவு 10 மணிக்கு குடந்தைபாலன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

நிகழ்ச்சியில், இந்திய தேசியத்தின் துரோகத்தை விளக்கி, நகர் முழுதும் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டன. துண்டறிக்கை வழங்கப்பட்டது.

  • ஒரு சில தோழர்கள் மட்டுமே உள்ள தாரமங்கலத் தில் சுமார் ரூ.30000/- நன்கொடையாக திரட்டப் பட்டது.
  • ஒரு வார காலத்தில் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • குடந்தை பாலன் துணைவியார் வனிதா, மகன்கள் திலீபன், குட்டிமணி, சிவராசன் ஆகியோர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு தங்கள் குடும்பத்தின் சார்பாக வான்கோழி பிரியாணி விருந்து அளித்து உபசரித்தனர்.

பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் முல்லைவேந்தன், செயலாளர் சூரியகுமார், அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, குடந்தை பாலன், அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் விஜயகுமார், குமரப்பா, கிருட்டிணன், தோப்பூர் கண்ணன், பவளத்தானூர் தனசேகர், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான தோழர்களும், பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 24052012 இதழ்

You may also like...