கிராமம் கிராமமாய் சுழன்று வீசுகிறது பிரச்சார அலை! சேலம் (மேற்கு) மாவட்டத்தின் தீவிர களப் பணிகள்!

சேலம் மேற்கு மாவட்டக் கழகம் கிராமம் கிராமமாக பரப்புரை இயக்கத்தை தீவிரப்படுத்தி வருகிறது. புயலாய்ச் சுழன்று வீசும் மாவட்டக் கழகப் பரப்புரை இயக்கம் பற்றிய தொகுப்பு.

கொங்கனாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் வாழ்வுரிமைகளை பாதிக்கும் ஈழத் தமிழர் பிரச்சினை, முல்லை பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிய பிரச்சினைகளில் மத்திய அரசின் தமிழின வாழ்வுரிமை விரோதப் போக்கைக் கண்டித்து 26.1.2012 சனிக் கிழமை மாலை 4 மணிக்கு கொங்கனாபுரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத் திற்கு சேலம் மாவட்ட அமைப்பாளர் முத்து மாணிக்கம் தலைமை தாங்கினார்.

சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் நங்கவள்ளி கிருட்டிணன், கோகுலக் கண்ணன் முன்னிலை வகித்தனர். சேலம் மேற்கு மாவட்ட தலைவர் முல்லை வேந்தன், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத் தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தோழர்களும்,பொறுப்பாளர்களும் ஏராளமாக கலந்து கொண்டனர். இளம்பிள்ளை வெ. பிரபாகரன் நன்றி கூறினார். ஏராளமான துண்டறிக்கைகள் அச்சிடப்பட்டு, பொது மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.

காவேரி கிராஸ்

கடந்த 7.1.12 மாலை 5 மணிக்கு மேட்டூர் அருகே உள்ள காவேரி கிராஸ் பகுதியில் பெரியார்-அம்பேத்கர் பிறந்த நாள் விழாவும், மத்திய அரசின் தமிழின வாழ்வுரிமை விரோதப் போக்குகளை கண்டித்தும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு கொளத்தூர் ஒன்றிய தலைவர் க.ஈசுவரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முல்லைவேந்தன், மாவட்ட அமைப்பாளர் நங்க வள்ளி அன்பு ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக காவை இளவரசன், ‘மந்திரமல்ல தந்திரமே!’ நிகழ்ச்சியும் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பறை முழக்கமும் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி நன்றி கூறினார்.

கோல்நாயக்கன்பட்டி – ரெட்டியூர்

8.12.12 மாலை 5 மணிக்கு மேட்டூர் அருகே உள்ள ரெட்டியூர் என்ற பகுதியில் பெரியார் திராவிடர் கழக கொள்கை விளக்கத் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கொளத்தூர் ஒன்றிய தலைவர் ஈசுவரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முல்லைவேந்தன், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேட்டூர் கோவிந்தராசு ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்ச்சி சிறப்பாக நடத்தினார். மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் பறை முழக்கம் நடைபெற்றது.

மாசிலாபாளையம்

மேட்டூர் அருகே உள்ள மாசிலாபாளையம் என்ற பகுதியில் 21.1.12 மாலை 5 மணிக்கு கழக சார்பில் பெரியார், அம்பேத்கர் பிறந்த நாள் விழா மற்றும் மத்திய அரசின் தமிழின விரோதப் போக்குகளைக் கண்டித்து தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட் டத்திற்கு ஈசுவரன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு சிறப்புரை யாற்றினார். மாவட்ட பிரச்சாரக் குழுப் பொறுப் பாளர் கோவிந்தராசு ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்ச்சியும், மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழு வினரின் பறை முழக்கம் நிகழ்ச்சியும் நடை பெற்றது.

அச்சங்காடு

22.1.12 ஞாயிறு மாலை 5 மணிக்கு மேட்டூர் அருகே உள்ள அச்சங்காடு என்ற இடத்தில் கழகத்தின் சார்பில்  தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு கொளத்தூர் ஒன்றிய தலைவர் ஈசுவரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முல்லை வேந்தன் சிறப்புரையாற்றினார். முன்னதாக டி.கே. இசைக் குழுவினரின் பறை முழக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடாந்து ‘மந்திரமல்ல தந்திரமே!’ நிகழ்ச்சியை காவை இளவரசன் சிறப்பாக செய்து காட்டினார். மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

காவேரி கிராஸ், கோல்நாயக்கன்பட்டி, மாசிலா பாளையம், அச்சங்காடு ஆகிய நான்கு பகுதிகளும், தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் கிராமப்புற பகுதிகளாகும். மேற்குறிப்பிட்ட நான்கு ஊர்களிலும் நடைபெற்ற தெருமுனை கூட்டங்களில் அப்பகுதிகளை சார்ந்த பெண்களும், குழந்தைகளும் ஆர்வமாக திரண்டு வந்து செய்திகளை கேட்டனர். அவர்களிடம் கழக செயல்பாடுகளை விளக்கிடும் துண்டறிக்கைகள் ஏராளமாக வழங்கப்பட்டன. மேற்கண்ட நான்கு நிகழ்ச்சிகளுக்குமான ஏற்பாடுகளை மேட்டூர் நகர தலைவர் பாஸ்கர், நகர செயலாளர் சம்பத்குமார், கோவிந்தராசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குமரப்பா, மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

(அடுத்த இதழிலும் தொடரும்)

 

பெரியார் முழக்கம் 17052012 இதழ்

You may also like...