தலையங்கம் ‘அனிதாவின் 1176’
தமிழ்நாட்டின் சமூக நீதி தத்துவம் வார்த்தெடுத்தப் பெண் அனிதா. ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் ஏழை தலித் குடும்பத்தில் வறுமைச் சூழலில் தனக்கும் மருத்துவராகும் ஆற்றல் இருக்கிறது என்ற தன்னம்பிக்கையோடு இரவு பகலாக உழைத்து படித்துப் பெற்ற மதிப்பெண் 1200க்கு 1176. ‘நீட்’ தேர்வு என்பது இல்லாமலிருந்தால் மருத்துவக் கல்லூரியின் கதவுகள் அவருக்கு திறந்திருக்கும். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிப் பார்த்தார். ஒரு கிராமத்தில் வறுமைச் சூழலில் ஜாதிய ஒடுக்குமுறை வலியோடு படித்தப் பெண்ணின் சாதனையை உச்சநீதிமன்றம் திரும்பிப் பார்க்க மறுத்துவிட்டது. மருத்துவக் கல்வியின் திறனை உயர்த்துவதற்குத்தான் நீட் தேர்வு என்று வாதிடுவோரை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சரியான விடைக்கு மதிப்பெண் என்பதுதான் நாம் பழகியிருக்கும் நேர்மையான கல்வித் திட்டம். ஆனால், தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு; தவறான விடையைத் தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு மாணவர்களைக் குழப்பி விடும் சூழ்ச்சித் திறன் மிகுந்த வினாக்கள் என்று அறமேயற்ற ஒரு பயிற்சித் தேர்வு ‘நீட்’....