‘நட்புத் திருவிழா’வாக நடந்த பாமரன் இல்ல மண விழா
சீரிய பெரியாரியலாளரும் எழுத்தாளருமான பாமரன் – யாழ்மொழி ஆகியோரின் மகன் சேகுவேரா-கனிமொழி ஜாதி மறுப்பு இணை ஏற்பு விழா, ‘பீடை மாதம்’ என்று மூடநம்பிக்கையாளர்களால் கருதப்படும் ஆடி 28ஆம் தேதி (ஆகஸ்ட் 13) மாலை கோவை பி.எம்.என். திருமண மண்டபத்தில் ‘நண்பர்கள் கூடும் திருவிழா’வாக சிறப்புடன் நடந்தது. நிமிர்வு கலையகத்தின் பறை இசை யுடன் நிகழ்வுகள் தொடங்கின. கலைஞர்களுக்கு கவிஞர் அறிவுமதி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நினைவு பரிசுகளை வழங்கினர்.
ஈழப் போராளி பாலகுமார் துணைவியார், பாமரனின் வயது முதிர்ந்த தாயார் முன்னிலையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மணமக்களுக்கு சுயமரியாதை திருமணத்துக்குரிய உறுதி மொழிகளைக் கூற, மணமக்கள் உறுதியேற்று மாலை மாற்றிக் கொண்டனர். பெரியாரியலாளரும் ஆய்வாளருமான தொ. பரமசிவம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் கலை, இலக்கிய, திரை உலக நண்பர்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மணவிழாவுக்கு திரண்டு வந்திருந்தனர். ‘ஜாதி கடந்த நட்புகளின் திருவிழா’வாக மணவிழா நடந்தது.
பெரியார் முழக்கம் 31082017 இதழ்