பூணூல் ரோபோக்கள்

ஜப்பானில் டோக்கியோ நகரில் ‘இடுகாடு – இடுகாட்டில் நடக்கும் இறுதிச் சடங்குகள்’ குறித்து சர்வதேச கண்காட்சி நடந்திருக்கிறது. அப்படி ஒரு கண் காட்சி ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டில் நடக்கிறது. இந்த முறை நடந்தது டோக்கியோ நகரில். கண்காட்சியில் பங்கேற்கும் பார்வையாளர் களுக்கு இறுதிச் சடங்கு குறித்த தொழில்முறை பயிற்சிகள் தரப்படுகிறது.

இதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது புத்தமதச் சடங்கு முறையில் ஜப்பானில் நடக்கும் இறந்தவர்களுக்கான சடங்குகளை ஒரு ‘ரோபோ’ எந்திரம் செய்து காட்டியதுதான். ஜப்பானில் இளைஞர்களைவிட முதியோர் எண்ணிக்கை அதிகம். எனவே இறுதிச் சடங்குகள் நடத்த “அதில் பயிற்சிப் பெற்றவர்கள் எளிதில் கிடைப்பதில்லை என்பதால் அந்நாட்டின் ‘சாப்ட் பேங்க்’ எனும் நிறுவனம், ‘பெப்பர் ரோபோட்’ என்ற இந்த மனித எந்திரத்தை உருவாக்கியிருக்கிறதாம்.

நமது நாட்டில் கோயிலில் ‘அர்ச்சனை’, ‘கும்பாபிஷேகம்’, வீட்டில் ‘விவாக சுபமுகூர்த்தம்’, ‘கிரகப் பிரவேசங்களை’ நடத்த பிறப்பால் ‘பிராமணன்’ என்ற பிறப்புச் சான்றிதழ் கொண்ட ‘பூணூல் ரோபோக்கள்’ மட்டுமே செய்ய முடியும். ‘ஆகம வழிபாட்டு முறைகளை மீறப்படாது; அது கடவுளுக்கே எதிரானது’ என்று இந்த ‘பூணூல் ரோபோக்கள்’ உச்சநீதிமன்றம் வரை போய் வழக்காடி வெற்றி பெற்று விட்டன.  ‘ஆகமம்’ ஏதோ அய்.நா.வின்மனித உரிமை சாசனம் என்பது போல் பம்மாத்து காட்டுகிறார்கள். தன்மானச் சிங்கங்களாக மார்தட்டும் ஏராளமான ‘தமிழர்களும்’, ‘பூணூல் ரோபோக்’களிடமே மானமிழந்து சரணடைந்து கிடக்கிறார்கள்.

கிராமத்தில் ஒருவர் இறக்கிறார் என்றால், ஒவ்வொரு வேலைக்கும் இங்கே தனித் தனி ஜாதி; பறை அடிக்க சங்கு ஊத ஒரு ஜாதி; பாடை கட்ட – வீதிகளில் பிணம் போகும் பாதைக்குப் பூப்போட; பிணத்தை எரிக்க அல்லது புதைக் குழித் தோண்ட, இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மொட்டை அடிக்க, அல்லது மீசை எடுக்க என்று ஒவ்வொரு வேலைக்கும் தனித் தனி ஜாதி இங்கே தேவைப்படுகிறது.

“பூலோகத்தில்” மக்கள் சேவைக்காக அவதரித்ததாகக் கூறிக் கொள்ளும் ‘பூதேவர்’களான ‘பூணூல் ரோபோக்கள்’கூட தங்கள் வீட்டுப் பிணங்களைத் தூக்குவதற்கு ‘சவுண்டிப் பிராமணன்’ என்ற ஒரு பிரிவை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் புத்த மதச் சடங்குகளை நடத்த புத்த மத குரு வேண்டாம். ‘ரோபோக்களே’ போதும் என்று ஜப்பான் நாட்டுக்காரர்கள் செயல்படத் தொடங்கியிருப்பதைப் பார்த்து கைத்தட்டி மகிழ்ச்சிக் கூத்தாடத் தோன்றுகிறது.

அதேபோன்ற ரோபோக்கள் இங்கேயும் வந்துவிட்டால் ஜாதி அவலங்களும், பாகுபாடுகளும் ஒழிந்து போய் விடுமே; அப்படி ஒரு மாற்றம் இந்த நாட்டுக்கு வந்து சேராதா என்று ஏங்குகிறோம்.

ஆனாலும்…

அப்படியே ரோபோக்கள் வந்தாலும் அவைகளுக்கு ‘பிராமணர்களின்’ அங்கீகாரமும் அதற்கான ‘தட்சணை’யும் கட்டாயம். அப்படி ‘பிராமண’ அங்கீகாரம் பெற்ற ‘ரோபோக்களுக்கு தான்’ சடங்கு செய்யும் உரிமையே உண்டு என்று நமது ‘பூதேவர்கள்’ நீதிமன்றத்துக்குப் போய் விடுவார்களே! உச்சநீதிமன்றமும் அதுதான் சரி என்று தீர்ப்பு வழங்கினாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லையே!

எத்தனை அறிவியல் புரட்சி வந்தாலும் அது ‘ஆகமத்துக்கு’ கட்டுப்பட்டது என்பதே இந்த நாட்டின் பேரவலம்!

டோக்கியோ சாப்ட்வேர் நிறுவனங்களே! இந்த பூணூல் ரோபோக்களை முடிவுக்குக் கொண்டு வர ஏதேனும் ‘அறிவியலை’ கண்டுபிடியுங்களய்யா!

– கோடங்குடி மாரிமுத்து

பெரியார் முழக்கம் 31082017 இதழ்

You may also like...