விநாயகர் சிலை ஊர்வலங்களில் பங்கேற்பது – அம்பேத்கர் கொள்கைக்கு இழைக்கும் துரோகம்!
14.10.1956 அன்று நாக்பூரில் புத்தமார்க்கம் தழுவிய அம்பேத்கர், மதமாற்றத்துக்குத் திரண்டிருந்த இலட்சக் கணக்கான மக்களிடம் 22 உறுதி மொழிகளைக் கூறி ஏற்கச் செய்தார். விநாயகன், இலட்சுமி, இராமன், கிருஷ்ணன் மற்றும் இந்துக் கடவுள்களை வணங்க மாட்டேன் என்பதே அந்த உறுதி! புரட்சியாளர் அம்பேத்கர் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட எந்த அம்பேத்கரிஸ்டும் ஒருபோதும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டார்கள்; பங்கேற்கவும் கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்பது அம்பேத்கர் உழைத்த இலட்சியத்துக்கு செய்யும் துரோகம்.
அம்பேத்கர் – நாக்பூரில் எடுத்த உறுதிமொழிகளை இங்கு வெளியிடுகிறோம்:
- பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி நான் வணங்க மாட்டேன்.
- இராமன், கிருஷ்ணன் இரண்டும் அவதாரமென எண்ணி நான் வணங்க மாட்டேன்.
- விநாயகன், லட்சுமி மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று நான் வணங்க மாட்டேன்.
- கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்து வந்ததாகவோ நான் நம்ப மாட்டேன்.
- மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை எதிர்த்து நான் முறியடிப்பேன்.
- பிறப்பு, இறப்பு நிகழ்ச்சிகளில் இந்து மதச் சடங்குகளை நான் செய்ய மாட்டேன்.
- மகாபுத்தரின் போதனைகளையும், நெறிகளையும் மீறி நான் நடக்க மாட்டேன்.
- பார்ப்பனர்கள் செய்யும் எந்த ஒரு ஆச்சாரச் செயலையும் நான் அனுமதிக்க மாட்டேன்.
- மானுட சமத்துவத்தில் நான் மிகுந்த நம்பிக்கை வைப்பேன்.
- சமத்துவத்தை நிலைநிறுத்த நான் முழு மூச்சாய் பாடுபடுவேன்.
- மகாபுத்தரின் எட்டு வழி நெறிகளை நம்பிக்கையோடு நான் பின்பற்றுவேன்.
- மகாபுத்தரின் புத்த மார்க்க போதனைகளை ஏற்று நான் செயல்படுவேன்.
- எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி அவைகளை பாதுகாத்து நான் வாழ வைப்பேன்.
- நான் பொய் பேச மாட்டேன்.
- நான் களவு செய்ய மாட்டேன்.
- நான் காமவெறி கொள்ள மாட்டேன்.
- நான் மது அருந்த மாட்டேன்.
- புத்தர் போதித்த அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறிகளின் அடிப் படையில் என் வாழ்க்கையை நான் உருவாக்க முயற்சி செய்வேன்.
- மானுட நேயத்திற்கு முரணானதும், சமத்துவம் இல்லாததுமான இந்து மதத்தை விட்டொழித்து இன்று முதல் மேன்மைமிகு பவுத்தத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
- புத்தரும் அவர் கொள்கையும் உண்மையான மார்க்கமென நான் உறுதியாக ஏற்கிறேன்.
- இன்று பௌத்தனானதால் மறுவாழ்வு பெற்றதாய் நான் மனதார நம்புகிறேன்.
- புத்தரின் கொள்கைக் கோட் பாட்டிற்கேற்ப புத்த நெறிகளுக்கிணங்க இன்று முதல் செயல்படுவேன்.
இதுதான் அம்பேத்கர் பல இலட்சம் மக்களோடு எடுத்த உறுதி மொழி.
விநாயகன் சிலை ஊர்வலங்களும் அதில் பங்கேற்பதும், புரட்சியாளர் அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானது என்பதை நெஞ்சில் நிறுத்துவோம்!
பெரியார் முழக்கம் 24082017 இதழ்