நீதிபதி ஏ.பி. ஷா பரபரப்பான பேட்டி தேசபக்தி – தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள் அல்ல!
ஒற்றைக் கலாச்சாரத்தை வலிந்து திணிப்பது இந்தியாவை அழித்து விடும் என்று டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் சட்ட ஆணையத்தின் தலைவராகவும் இருந்த அஜித் பிரகாஷ் ஷா (ஏ.பி.ஷா). ‘இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு (ஆக.9, 2017) அளித்த பேட்டியில் எச்சரித்துள்ளார்.
‘தேசியம்’ என்பது குறித்து அவர் கூறுகையில், ‘தேச பக்தி, தேசியம்’ என்பவை வரையறைகளுக் குட்பட்டதே ஆகும். நைஜிரிய நாட்டின் எழுத்தாளர் சிம்மானந்தா நாகோசி அடிச்சே தேசியம் – தேசபக்தியை “ஒற்றைக் கதையாடலின் ஆபத்து” என்று கூறுகிறார். ஒரே கண்ணோட்டத்தில் தேசியத்தைப் பார்க்க முடியாது. ‘தேசியம்’ என்பது பன்முகத் தன்மையானது என்ற புரிதல் அவசியம். பல்வேறு இனங்கள் கலாச்சாரங்களை உள்ளடக்கியதே ‘தேசியம்’ என்ற புரிதலுக்கு வராமல் ஒற்றைப் பண்பாடு கொண்டதே தேசியம் என்று செயல்பட்டால் அது ‘பாசிசம் –நாசிசம்’ என்ற இட்லர், முசோலினியின் கோர முகமாகிவிடும். தேசியத்தை மதத்தின் அடிப்படையில் கட்டமைப்பது ஆபத்தானது. சட்டத்தின் அதிகார முனையில் திணிக்கப்படும் கலாச்சார தேசியம் வெறுப்பையும் பகையையும் உருவாக்கி நாட்டை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லும் – பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டில் நடக்கும் வன்முறைகள் தேசியத்துக்கு எதிரானவை.
“சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, ஒரு நாட்டின் வலிமையைக் கட்டமைப்பது, மனிதகுலத்தை சீரழித்துவிடும்” என்றார் ரவீந்திரநாத் தாகூர். “இப்போது தாகூர் கருத்துகளையே பாட நூல்களி லிருந்து நீக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் ஷா.
தேசம் என்பதற்கான அர்த்தமும் விளக்கமும் காலச் சூழலுக்கு ஏற்ப மாறுபடக் கூடியது. 150 ஆண்டுகளுக்கு முன்பு நாடுகளுக்கான எல்லைகள் மிகவும் அவசியமாக இருந்தன. எல்லைகளைப் பாதுகாப்பதே தேசியம், தேசபக்தி என்ற நிலை இருந்தது. அதற்குக் காரணம், ஒவ்வொரு நாடும் ஒன்றுக்கொன்று பிணைப்புகள் இன்றி தனிமைப் பட்டிருந்தன. எனவே எல்லைகளை வைத்தே தேசபக்தி தேசியம் மதிப்பிடப்பட்டது. இப்போது நிலைமை வேறு. இப்போது நாடுகள் சர்வதேச மயமாகி வருகின்றன. சாதாரண வெகு மக்களின் அடையாளங்கள் ஒன்றோடு ஒன்றாக கலந்து வருகின்றன. எல்லை களுக்குட்பட்டதே ‘தேச பக்தி’ என்ற கதையாடலுக் குள் நாம் மக்களை மூழ்கச் செய்யக் கூடாது. அது மக்களை அறிவுக்கு ஒவ்வாத கண்மூடித்தனமான வெறிக்கு இட்டுச் சென்று விடும். அதன் விளைவுகள் மிக மோசமான பாதிப்புகளை உருவாக்கிவிடும். ஆனால், இத்தகைய ‘தேசியங்களையே’ நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. இது கவலை தரும் போக்கு என்றார் ஏ.பி.ஷா. (இதே கருத்தைத்தான் பெரியார் தேசியம் குறித்துக் கூறியிருக்கிறார் “நான் விஸ்தீரணத்துக்காகப் போராடுகிறவன் அல்ல; விடுதலைக்காகப் போராடுகிறவன்” என்றார் பெரியார். இப்போது சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்த ஏ.பி.ஷா, “If we allow territorial identity to overwhelm our narrative, we may regress into a situation where people become blinded by a nationality driven by irrationality, which in turn may have extreme consequences” என்று கூறுகிறார். – ஆர்)
தேசபக்தி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உற்பத்திப் பண்டமல்ல; அரசு மீதோ, அரசாங்கத்தின் மீதோ அல்லது பிரதமர் அலுவலகம், இராணுவம், காவல்துறை போன்ற அரசு நிறுவனங் களின் மீதோ ‘பக்தியை’ தொழிற்சாலைகளைப்போல் உற்பத்தி செய்ய முடியாது. ஆனால், அத்தகைய போக்கு தான் இப்போது நிலவுகிறது. இந்த நிறுவனங்களை கேள்வி கேட்பதே ‘தேச விரோதம்’ என்கிறார்கள். அரசுக்கு எதிரான நடவடிக்கை என்கிறார்கள். அரசின் தவறான கொள்கைகளையும் சட்ட விரோதமாக நடத்தும் ‘என்கவுண்டர்களையும்’, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இராணுவ சட்டங்களையும் கேள்வி கேட்டாலே ‘தேச விரோதம்’ என்று முத்திரை குத்தப்படுகிறது. பிரிட்டிஷ் காலத்தில் இத்தகைய சட்டங்களை எதிர்த்துத்தான் திலகரும் காந்தியும் போராடினார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. அதே சட்டங்கள் இப்போது தேசபக்தி சட்டங்களாகிவிட்டன. அரசு நிறுவனங்களை விமர்சித்து பேசுவதே தேச விரோதமாகிவிடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவுபடுத்தியிருந்தாலும், அது குறித்து கவலைப்படாமல், தேச விரோத சட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது மிகவும் கவலை தரும் போக்காகும். சட்டங்கள் வழியாக தேசபக்தியை திணிக்க முடியாது என்று காந்தி கூறியதோடு, ‘விமர்சனங்களை தாராளமாக அனுமதிக்க வேண்டும்’ என்றார். ‘கேதார் நாத்சிங் எதிர் பீகார் அரசு’ வழக்கில் (1962) உச்சநீதிமன்றமும் இதையே கூறியிருக்கிறது. ஆனால், தேசத் துரோக வழக்குகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும்போது வாதங்கள் இந்த திசையில் நடப்பது இல்லை. ‘தேச விரோத சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது’ என்று கூறினாலேகூட அதுவும் ‘தேச விரோதம்’ என்று முத்திரை குத்தப்படுவதுதான் இன்னும் மோசமானது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், மருத்துவர் விநாயக்சென், அருந்ததிராய் அணு உலையை எதிர்த்துப் போராடிய இடிந்தகரை மக்கள் மீது இதுதான் நடந்தது.
பேச்சுரிமை, கருத்துரிமை நியாயங்களின் வரம்புகளுக்கு உட்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மாற்றுக் கருத்துகளே கூடாது என்பது சரியல்ல; மராட்டிய மொழியில் ‘நான் கோட்சே பேசுகிறேன்’ என்ற நாடகத்தை, காந்தி கொலையை நியாயப்படுத்தி நடத்தினார்கள். 2001ஆம் ஆண்டு நாடகத்துக்கு எதிரான வழக்கில் மாற்றுக் கருத்துகளை சகித்துக் கொள்வதுதான் ஜனநாயகப் பண்பு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனந்த்பட் வர்த்தன் தயாரித்த ஒரு ஆவணப் படத்தை தூர்தர்ஷன் ஒளிபரப்ப மறுத்தது. ‘In memory of my friends’ (எனது நண்பர்களின் நினைவுக்காக) என்பது அந்த ஆவணப் படத்தின் பெயர் 1966ஆம் ஆண்டு நடந்த இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘வெளிப் படையான விவாதங்களை தடுக்கும் உரிமை அரசுகளுக்கு கிடையாது’ என்று கூறியது. “ஒரு ஜனநாயகத்தில் எல்லோரும் ஒரே பாடலைத்தான் பாட வேண்டும் என்பதற்கான தேவையில்லை” என்று ‘எஸ்.இராமலிங்கம் எதிர் பி. ஜெகஜீவன்ராம் வழக்கில் (1989) உச்சநீதிமன்றம் தெளிவாகவே கூறியது. (In a democracy, it is not necessary that everyone should sing the same song.)
“தேசத் துரோகச் சட்டத்தை (Sedition Law) சட்டப் புத்தகத்திலிருந்தே எடுத்துவிடவேண்டும். இந்தச் சட்டம் வழங்கும் வரம்பற்ற அதிகாரங்களைக் கைவிட அரசுகள் விரும்பவில்லை. எனவே அந்தச் சட்டத்தைப் பாதுகாக்க விரும்புகிறார்கள்” என்றார் ஷா.
தேச பக்திக்கான சட்டங்களைப் பயன்படுத்தி நீதிமன்றங்களே நம்முடைய அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தி வருவதையும் பார்க்கிறோம். திரையரங்குகளில் தேசிய கீதம் பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது. அடிப்படை உரிமைகளில் குறுக்கீடுவதாகும். சென்னை உயர்நீதிமன்றம் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடச் சொல்லியிருக்கிறது. ஒரு பாடலை பாட வைப்பதும் அதற்கு எழுந்து நிற்க வைப்பதும் நேர்மையான தேசபக்திக்கான ‘நிகழ்ச்சி நிரல்’ இல்லை என்பதை நீதிமன்றங்கள் உணர வேண்டும். ஆனால் இதை நீதிமன்றங்கள் உணரத் தவறிவிட்டன. மக்களும் எழுந்து நிற்கிறார்கள்; பாடுகிறார்கள் என்றால் சட்டத்துக்குப் பயந்துதானே தவிர தேசப்பற்றால் அல்ல; எழுந்து நிற்காவிட்டால் அடி விழலாம் என்று அஞ்சுகிறார்கள். அந்தப் பாடல்களின் அர்த்தம்கூட மக்களுக்குத் தெரியாது. (People now sing or stand not because truly they respect the sentiment that these songs or poem convey, but because they are afraid of being beaten up)
அதேபோல் மக்கள் விரும்பும் உணவை உண்ண அனுமதி மறுப்பது, அதற்கு கலாச்சாரம் என்று கூறுவது எல்லாம் ஏற்க முடியாதவை. இது திணிக்கப்படும் கலாச்சார தேசியம் (Enforced cultural nationalism). பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாட்டை ஒற்றைக் கலாச்சாரத்துக்குள் திணிக்கும் முயற்சிகளை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆதார் வழக்கில் “ஒரு குடிமகனின் அந்தரங்கத்தைக் காப்பாற்றுவது அடிப்படை உரிமையல்ல” என்று அரசு வாதாடுகிறது. மனித மாண்புக்கான அடிப்படைகளில் மிகவும் முக்கியமானது ஒருவரது அந்தரங்கமான தனிப்பட்ட உரிமை. அவற்றில் பல வகை உண்டு.. இதில் எந்த வகையான ‘அந்தரங்க உரிமை’ சரி அல்லது தவறு என்று தனித்தனியாகப் பார்க்க வேண்டும். ஒட்டு மொத்தமாக அந்தரங்க உரிமை (Right to Privacy) அடிப்படை உரிமையல்ல என்று வாதிடுவது தவறு. இது அரசுக்கும் குடிமக்களுக்கும் எதிரான வழக்கு. நீதிமன்றம் குடிமக்கள் சார்பாகவே உறுதியாக நிற்கவேண்டும்” என்றார் ஏ.பி.ஷா.
(தமிழில் சுருக்கமாக ‘இரா’)
பெரியார் முழக்கம் 17082017 இதழ்