காவல்துறைக்கு என்ன தண்டனை?

மதுரை மாநகர காவல்துறை மகேஷ்குமார் அகர்வால், ‘‘சாதி மறுப்புத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து புகாரைப் பெறுவதற்கு ஆணையர் அலுவலக வளாகத்தில் குற்றத்தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்படி வரும் புகாரை விசாரிக்க தனி ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகாரைத் தெரிவிக்கவும் தகவல்களைப் பெறவும் 0452 2346302 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,’’ என்று அறிவித்திருக்கிறார்.  இந்தத் தனிப்பிரிவு குறித்து ஆணவக் கொலைக்கு எதிராகப் போராடி வரும் கவுசல்யாவிடம் கேட்டபோது:

“இந்தப் புதுபிரிவினால் ஆணவக் கொலை குறைந்துவிடுமா என்ன? நாங்கள் கேட்பது பாதுகாப்பு. அவர்களால் அந்தப் பாதுகாப்பை கொடுத்துவிட முடியுமா? பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடையும் பெண்ணிடம் பெற்றோருடன் சென்றுவிடும்படி கவுன்சலிங் செய்யப்படுகிறது அல்லது அவளிடம் கறக்க வேண்டிய விஷயங்களைக் கறந்து நல்லவர்களாக நடிக்கும் போலீசார், அந்தப் பெண்ணின் பெற்றோர் வந்ததும் அவர்களுக்குச் சாதகமாக செயல்படுகிறார்கள். சாதிமறுப்புத் திருமணம் செய்றவங்களைக் காட்டிக்கொடுக்கிற போலீஸுக்கு என்ன தண்டனை?

என்னைப் பொறுத்தவரை, இந்தத் தனிப்பிரிவு என்பது புகார் சொல்வதற்கான ஒரு தொலைபேசி எண் மட்டுமே. இதன்மூலம் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதி காப்பாற்றப்பட்டால் மட்டுமே இந்தப் பிரிவின் செயல்பாடுகள் மக்களால் வரவேற்கப்படும். இல்லையென்றால் இதுவும் ஒரு தொலைபேசி எண் என்கிற அளவில் கடந்துபோகப்படும்.

வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டம், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டம் போன்று ஆணவக்கொலைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டும். சட்டம் இருந்தால்தான் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆதரவு அளிப்பது, பாதுகாப்பு அளிப்பது மற்றும் குற்றம் செய்தவர்களைத் தண்டிப்பது போன்றவை எல்லாம் சாத்தியப்படும்’’ என்கிறார் கௌசல்யா.

விகடன் மாணவ பத்திரிக்கையாளர்களிடம் கூறியது.

 

You may also like...