வாஞ்சிநாதன் மனைவிக்கு முத்துராமலிங்க தேவர் அடைக்கலம் தந்தாரா?
பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தீவிர ஆதரவாளரான முத்து ராமலிங்க தேவர், தென் மாவட்டங் களில் தலித் மக்களின் உரிமை களுக்காகப் போராடிய இமானுவேல் சேகர், படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டவர். ‘தேசியம் – தெய்வீகம்’ என்பதே தனது இரு கண்கள் – என்று கூறி செயல்பட்டவர். தென் மாவட்டங்களில் ஜாதியக் கட்டமைப்பும் ஜாதிய உணர்வும் ஆழமாக புரையோடியிருப்பதற்கு முக்கிய பங்காற்றியவர். அவர் வரலாறு குறித்து செவி வழி செய்திகள் ஆதாரங்களின்றி ஏராளமாக பரப்பப் பட்டு வருகின்றன.
அண்மையில் ‘தமிழ் இந்து’ நாளேடு (ஆக. 16) இதே போல் ஒரு ‘கற்பனை’யை வரலாறாக பதிவு செய்தது. நெல்லை மாவட்டம் மணி யாச்சியில் பிரிட்டிஷ் கலெக்டராக இருந்த ஆஷ் துரையை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக் கொண்டான் வாஞ்சிநாதன் அய்யர். ஆஷ் ‘சனாதன தர்மத்துக்கு’ எதிராக செயல்படுவதால் அவரை சுட்டுக் கொன்றதாக ஒரு கடிதத்தையே எழுதி வைத்திருந்தான், அந்த வாஞ்சிநாதனின் ‘பேரன்’ ஜெயகிருஷ்ணன் வாஞ்சியின் மகள் வயிற்றுப் பேரன் என்று கூறிக் கொள்ளும் அவரது பேட்டியை ‘தமிழ்இந்து’ வெளி யிட்டது. அந்தப் பேட்டியில் ‘எங்கள் தாத்தா வாஞ்சி, எங்கள் பாட்டியின் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் பொறுப்பில்லாமல் ஆஷ்துரையை சுட்டுவிட்டு எங்கள் பாட்டியையும் அனாதையாக திரிய விட்டார். எங்கள் தாத்தா வாஞ்சி தன்னைத் தானே சுட்டுக் கொண்டபோது எங்கள் பாட்டி நிறைமாத கர்ப்பிணி” என்று கூறியிருந்தார். தொடர்ந்து, ‘பேரன்’ ஜெய கிருஷ்ணன் கூறியதாக ‘தமிழ் இந்து’ வெளியிட்டுள்ள செய்தி இது:
“வயித்துல பிள்ளையோட நிர்கதியா நின்ன எங்க பாட்டிக்கு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தான் அடைக்கலம் கொடுத்தாரு. எதைப் பத்தியும் கவலைப்படாம, பாட்டிய தன்னோட கூண்டு வண்டியிலே ஏத்திகிட்டு கிளம்புனவரு மூன்று மாசமா பாட்டியை கூண்டு வண்டியில் வெச்சுகிட்டே சுத்தி யிருக்காரு. நல்ல படியா பாட்டிக்கு எங்கம்மா பொறந்ததும் கந்தர்வக் கோட்டையில் டீக்கடைக்காரர் ஒருத்தர்கிட்ட ரூ.25,000 கொடுத்து எங்கம்மாவை ஒப்படைச்சுட்டாரு. (அப்போது ஒரு பவுன் ரூ.5 என்று விற்ற காலம். அந்த காலத்தில் ரூ.25000 என்பது எவ்வளவு பெரிய தொகை. அவ்வளவு தொகையை தந்திருக்க முடியுமா என்பதை வாசகர்கள் முடிவுக்கே விடுகிறோம்) மயிலாப்பூர் கச்சேரி ரோட்டுல ஒரு வீட்டைப் பிடுச்சி பாட்டியையும் மறைவா தங்க வச்சிருக்காரு தேவரு” என்று ‘தமிழ் இந்து’வுக்கு அளித்த பேட்டியில் ‘பேரன்’ ஜெயகிருஷ்ணன் கூறி யிருந்தார்.
இந்த ‘வரலாறு’ முழுமையான கற்பனை என்பதற்கு சான்றுகள் முகநூல்களில் ‘வாட்ஸ்’ அப்பில் உடனே வெளிவரத் தொடங்கின. விடுதலை இராசேந்திரன் நாள்தோறும் பேசும் ‘வாட்ஸ் அப்’ செய்தியில் அடுத்த நாளே இந்த வரலாற்றுப் புரட்டை அம்பலப்படுத்தினார்.
ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற நாள் 1911 ஜூன் 17.
முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் 1908 அக்டோபர் 30ஆம் தேதி.
ஆஷ் துரை சுட்டுக் கொல்லப் பட்ட போது முத்துராமலிங்கத் தேவர் ஒரு தவழும் குழந்தை. அப்போது அந்தக் குழந்தையின் வயது 2 ஆண்டு 8 மாதம். இரண்டரை வயது குழந்தை. வாஞ்சிநாதன் மனைவிக்கு பாது காப்புக் கொடுத்து அவரை கூண்டு வண்டியிலேயே 3 மாதம் வைத்து காப்பாற்றியதாக ஒரு ‘வரலாறு’ பதிவு செய்யப்படுகிறது என்றால், அது மோசடி வரலாறு. உண்மை ஆதார பூர்வமாக அம்பலமானவுடன் அடுத்த நாள் வெளி வந்த ‘தமிழ் இந்து’ (ஆக. 16) ஒரு ‘திருத்தம்’ போட்டது. அதில் “நிர்க்கதியாய் நின்ற வாஞ்சி நாதன் மனைவி பொன்னம்மாளுக்கு அடைக் கலம் தந்து உதவியவர் முத்துராமலிங்க தேவர் அல்ல; அவரது தந்தை உக்கிர பாண்டித் தேவர்” என்று விளக்கம் தந்த அந்த ஏடு, “முத்துராமலிங்க தேவரின் தந்தையும் தேசப்பற்று மிக்கவராக, இது போன்ற சேவைகள் செய்து வந்தார் என்பது இதன் மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் நெகிழ்வான செய்தி” என்று எழுதி பூரித்தது.
அதற்குப் பிறகு இந்த வரலாற்றுப் புரட்டலுக்கு மற்றொரு அடி செமத்தியாக வீழ்ந்தது. “வாஞ்சி நாதனுக்கு வாரிசே இல்லை. அவர் உயிருடனிருக்கும்போதே ஒரு குழந்தை பிறந்து இறந்து விட்டது” என்ற உண்மையை போட்டு உடைத்தார் வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாளின் தங்கை பேரானாகிய எஸ். இராமநாதன்.
அவரது மறுப்பை ‘தமிழ் இந்து’ நாளேடு (ஆக.19) இதழில் இவ்வாறு வெளியிட்டிருக்கிறது. “‘பேரன்’ ஜெயகிருஷ்ணன் கூறியிருக்கும் தகவல்கள் உண்மையில்லை என்று எங்களால் உறுதியாகக் கூற முடியும். எங்களது பெரிய பாட்டி பொன்னம் மாளுக்கு வாரிசு என்று யாரும் இல்லை. எனது பெரிய பாட்டி பொன் னம்மாள் அவர்கள் திருமணமாகி ஒரு ஆண்டுகூட கணவருடன் வாழ வில்லை. கணவரை இழந்த பிறகு திருவனந்தபுரத்தில் எங்கள் குடும்பத் தோடே இருந்தார். எங்கள் குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தபோது அவரும் சென்னைக்கே வந்து விட்டார். அது முதல் சென்னையிலே வசித்த பொன்னம்மாள் பாட்டி நோய்வாய்ப் பட்டு, 1967 ஜூலை முதல் தேதியன்று எங்களது வீட்டில் தான் இயற்கை எய்தினார்” என்கிற மறுப்பை ‘தமிழ் இந்து’க்கு எழுதினார்.
வாஞ்சியின் மனைவிக்கு உதவி செய்தது முத்துராமலிங்கதேவர் அல்ல; அவரது தந்தை உக்கிரபாண்டியத் தேவர் என்ற விளக்கத்தை ‘நெகிழ்ச்சி யோடு’ வெளியிட்ட அந்த ஏடு, அப்படி ஒரு விளக்கத்தை ‘பேரன்’ என்று கூறிக் கொள்ளும் ஜெய கிருஷ்ணன் கூறியதாக வெளியிட வில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ‘தமிழ் இந்து’வின் மூளையில் கற்பனையாக உதித்த விளக்கம் அது. இப்போது வெளி யிட்ட இறுதி திருத்தத்தில் அந்த “நெகிழ்ச்சியான” விளக்கத்தையும் ஜெயகிருஷ்ணனே தந்ததாக இந்தப் புரட்டையும் அவர் தலை மீதே சுமக்க வைத்து விட்டது, ‘தமிழ் இந்து’.
தமிழ்நாட்டில் வாசிப்பு தரத்தை உயர்த்தி வரும் ஏடு ‘தமிழ் இந்து’. அத்தகைய ஏடு இத்தகைய ‘புனைவு’களை வரலாறாகப் பதிவு செய்து அதற்கு சப்பைக்கட்டுகள் ஏன் கட்ட வேண்டும்?
பெருங்காமநல்லூரில் ஒடுக்கப் பட்ட மக்கள் மீது திணிக்கப்பட்ட கட்டாய ‘கைரேகை’ப் பதிவை எதிர்த்து மக்கள் வெகுண்டெழுந்து போராடினார்கள். போராட்டத்தில் துப்பாக்கி சூடுகளும் நடந்தன. அந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியது முத்துராமலிங்கதேவர் என்று ‘வரலாறு’ பதியப்படுகிறது. அந்தப் போராட்டம் நடந்த ஆண்டு 1920. அப்போது முத்துராமலிங்க தேவரின் வயது – அவரது பிறந்த நாள் கணக்கின்படி 12.
12 வயது சிறுவனாக இருந்தவர், துப்பாக்கி சூடு வரை சென்ற ஒரு போராட்டத்துக்கு தலைமையேற்று வழி நடத்தியிருக்க முடியுமா?
பெரியார் முழக்கம் 24082017 இதழ்