திருச்செங்கோட்டில் எழுச்சியூட்டிய பயண நிறைவு விழா மாநாடு

இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய 6 நாள் பரப்புரைப் பயணம், திருச்செங்கோட்டில் பயண நிறைவு விழா மாநாடாக எழுச்சியுடன் நடந்தது. ஆகஸ்டு 12 திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கப்பட்ட நாளாகும். மாலை 4 மணியிலிருந்து ஒவ்வொரு பயணக் குழுவினரும் திருச்செங்கோடு நோக்கி வரத் தொடங்கினர். பயணத்துக்கு மக்கள் காட்டிய பேராதரவில் தோழர்கள் உற்சாகத்தில் மூழ்கியிருந்தனர். 6.30 மணியளவில் திருச்செங்கோடு நெல்லுக்குத்தி மண்டபம் அருகில் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் தலைமையில் நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் பறை இசை, பயணத்தில் மக்களிடம் நடத்திய வீதி நாடகக் கலை நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து சென்னை பயணக் குழுவில் வந்த விரட்டு குழுவினரின் பறை. வீதி நாடகம், கலை நிகழ்வுகள் நடந்தன. தொடர்ந்து 5 பயணக் குழுக்கள் சார்பில் குழுவில் பங்கேற்ற ஈரோடு சிவக்குமார், கோவை நிர்மல் குமார், மயிலாடுதுறை இளையராஜா, சென்னை உமாபதி, கோபி வேலுச்சாமி மக்களிடம் சந்தித்த அனுபவங்களை உணர்வு பூர்வமாக பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து கழகப் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் பயண அனுபவங்களையும் மக்களின் பேராதரவையும் விளக்கிப் பேசினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மோடி ஆட்சிக்கு எதிரானமக்களின் எதிர்ப்பை இந்தப் பயணம் உணர்த்தியிருப்பதையும்தமிழகத்தின் தனித்துவத்தையும் விளக்கிப் பேசினார். இறுதியாக மாநாட்டின் தீர்மானங்களை முன் மொழிந்து நோக்கங்களை விளக்கி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார்.

தொடர்ந்து ஒவ்வொரு பயணக் குழுவினரும் தனித்தனியாக தலைவர், பொதுச் செயலாளரோடு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். பங்கேற்ற தோழர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்ட செயலாளர் ம.சரவணன் நன்றி கூறினார். கழகத் தோழர்களும் பொது மக்களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்தனர். நிறைவு விழா மாநாட்டுக்கான நிகழ்ச்சிகளை நாமக்கல் மாவட்டக் கழகத் தோழர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பயணத்தில் பங்கேற்ற தோழர் களுக்கு இரவு மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. பயணத்தின் களைப்புகளையும் மீறி மக்கள் பேராதரவில் கிடைத்த மகிழ்ச்சியில் பயணக் குழுவினர் பரப்புரை வாகனங்களில் இரவு 11 மணியளவில் தங்களின் மாவட்டங்களுக்குப் புறப்பட்டனர்

மாநாட்டின் படங்களுக்கு

பெரியார் முழக்கம் 17082017 இதழ்

You may also like...