காவல்துறை கெடுபிடிகள்-தடைகள் தகர்ந்தன மேட்டூரில் நாத்திகர் விழா-பேரணி
சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மே 30 அன்று மேட்டூர் புதுச்சாம்பள்ளியில் நாத்திகர் விழா-பேரணி-பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடந்தது. விழாவுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் திருமூர்த்தி, துரை அருண் ஆகியோர் கழக சார்பில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி வி. தனபால் காவல்துறை விதித்த தடையை நீக்கி, விழாவுக்கு அனுமதி அளித்தார். விழா நடைபெறுவதற்கு இரு நாள் முன்புதான் அனுமதி கிடைத்தது. காவல்துறை விதித்த தடை தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறவிருந்த மாரியம்மன் கோயில் நிர்வாகிகள், நாத்திகர்விழாவை எதிர்ப்பதாக ஒரு செய்தி உருவாக்கப்பட்டது. மாரியம்மன் கோயில் நிர்வாகிகள், அந்தக் கோயில் உள்ள பகுதிகளில் நாத்திகர் விழா நடப்பதற்கு எதிர்ப்பு காட்டுவதால், விழாவை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளுமாறு காவல்துறை கெடுபிடி காட்டியது. பொதுக் கூட்டத்தையும் வேறு இடத்துக்கு மாற்றிக் கொள்ள வற்புறுத்தினார்கள். கழகத் தலைவர் கொளத்தூர் மணி கோயில் நிர்வாகிகளிடம் நேரில் பேசினார். அப்போது...