அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் வழக்கு: எந்த நேரத்திலும் தீர்ப்பு வரலாம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை குறித்து வழக்கின் விவாதங்கள் உச்சநீதிமன்றத்தில் முடிவடைந்துள்ளன. தீர்ப்பை உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
பெரியார் தனது வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்பதாகும். கோயில் கர்ப்பகிரகத்துக்குள் ‘மதச் சுதந்திர உரிமை’யைப் பயன்படுத்திக் கொண்டு பார்ப்பனர்கள் தங்கள் ‘பிராமண’ பிறவி மேலாண்மையை சட்டப்படி உறுதியாக்கிக் கொண்டு, பார்ப்பனரல்லாத மக்களை ‘சூத்திரர்கள்’ என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கோயிலுக்குள் நுழையும் உரிமை, அனைத்து ஜாதியினருக்கும் வந்துவிட்டாலும், ‘கடவுளை’ தங்கள் மந்திரத்தின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள பார்ப்பனர்கள், ‘கர்ப்பகிரக’ உரிமையை உறுதிப்படுத்த துடிக்கிறார்கள். 1971ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு வழிவிட பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்து, சட்டமன்றத்தில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, ஜீயர்கள் உள்ளிட்ட பார்ப்பனர்கள் நேராக உச்சநீதிமன்றம் சென்றார்கள். ‘சேஷம்மாள் வழக்கு’ என்று அழைக்கப்பட்ட இந்த வழக்கை, உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு விசாரித்தது. ‘அர்ச்சகர் நியமனம்’ ஒரு மதச்சார்பற்ற செயல்பாடு என்று கூறிய உச்சநீதிமன்றம், பரம்பரை வழியிலான அர்ச்சகர் நியமனத்தை ஏற்க மறுத்தது. அதே நேரத்தில் கோயில்களில் ‘பழக்க வழக்கங்களாக’ தொடரும் பூஜை முறைகள், அர்ச்சகர் முறைகள் தொடர வேண்டும் என்று கூறிவிட்டது.
‘ஆபரேஷன் வெற்றி; ஆனால் நோயாளி இறந்து விட்டார்’ என்று இந்தத் தீர்ப்பு அப்போது வர்ணிக்கப் பட்டது. அதற்குப் பிறகு, பெரியார் நூற்றாண்டு விழாவை கொண்டாடிய எம்.ஜி.ஆர். ஆட்சி, இது குறித்து ஆராய நீதிபதி மகாராஜன் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. மதப் பண்டிதர்கள் அடங்கிய அந்த குழு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக, ஆகமங்கள் தடை விதிக்கவில்லை என்று திட்டவட்டமாகக் கூறியது.
இதன் பிறகு 2002ஆம் ஆண்டு கேரளாவில் அர்ச்சகராக ஈழவ சமுதாயத்தைச் சார்ந்த இராஜேஷ் என்பவரை கேரள தேவ°வம்போர்டு நியமித்ததை எதிர்த்து, பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள். வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அரசியல் சட்டம் அமுலுக்கு வந்துவிட்ட பிறகு, ஜாதி பாகுபாடுகளை நிலைநிறுத்தும் எந்த வழிபாட்டு முறைகளையும் ஏற்க முடியாது என்று கூறி, இராஜேஷ் நியமனத்தை உறுதி செய்தது. இந்த வழக்கை முன்னுதாரணமாகக் கொண்டு, 2006ல் தி.மு.க. ஆட்சி அனைத்து ஜாதியினரும் உரிய கல்வித் தகுதியுடன் அர்ச்சகராக நியமிக்க அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து ‘ஆதி சைவ சிவாச்சாரியார் நலச் சங்கம்’ என்ற பெயரில் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.பராசரன், பார்ப்பனர்களுக்காக வாதிட்டார். தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி. ராவ் வாதிட்டார். தமிழக அரசு வழக்கில் எந்த ஆர்வமும் காட்டாது விலகி நின்றாலும், அரசு நியமித்த வழக்கறிஞர் மிகவும் ஆர்வத்தோடு முழு அர்ப்பணிப்புடன் தனது கடமையை செய்தார். தமிழ்நாட்டில் அர்ச்சகர் பயிற்சிப் பெற்ற அனைத்து ஜாதி மாணவர் அமைப்பும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது. இவர்கள் சார்பில் வழக்கறிஞர் கோவிலன் பூங்குன்றன் வாதாடினார்.
தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சினையில் தீவிர ஆர்வம் காட்டிய தமிழின உணர்வாளர்கள் சிலர், டெல்லியில் முகாமிட்டு, இதற்கான முழு செலவினையேற்று செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணியுடன் தொடர்பு கொண்டு வழக்கிற்குத் தேவையான ஆவணங்களையும் பெற்று வந்தனர். 2001ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் சார்பில், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் கர்ப்பகிரக நுழைவுப் போராட்டம் நடந்தது. 1000 தோழர்கள் கைதானார்கள். இதன் மூலம் இப் பிரச்சினை மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் மே மாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளி வரக் கூடும்.

பெரியார் முழக்கம் 25062015 இதழ்

You may also like...

Leave a Reply