மோடியின் ஓராண்டு – அருண் ஜெட்லி, கதை இது!
மோடி, அமித்ஷா, அருண் ஜெட்லி – இந்த மூவர் குழுதான், இப்போது ஆட்சியில் அதி காரத்தைக் கையில் வைத்திருப் பவர்கள். அருண் ஜெட்லி, நிதியமைச்சராகவும், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும் உள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே போய° தோட்டத்துக்கு வந்து அவரை நேரில் சந்தித்துப் பேசியவர் அருண் ஜெட்லி! பார்ப்பன அம்மையாரை பார்ப்பன அமைச்சர் சந்தித்ததால் இந்த அப்பட்டமான அதிகார முறைகேட்டை ஊடகங்கள் ஊதிப் பெருக்கவில்லை.
பல கார்ப்பரேட் நிறுவனங்களின் வழக்கறிஞராகவும், சட்ட ஆலோசகராகவும் செயல்பட்டவர் ஜெட்லி. இவருடைய இரட்டை வேடம் அதிகார முறைகேடுகளுக்கு இரண்டு உதாரணங்கள்:
2012இல் மாநிலங்களவையில் பா.ஜ.க. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் அருண் ஜெட்லி. நிலக்கரி ஒதுக்கீட்டில் மன்மோகன் சிங் ஆட்சி மீது புகார்கள் வந்த நேரம். அப்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜுடன் இணைந்து போர் முரசு கொட்டினார். இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்றத்தை நடத்தவிட மாட்டோம்; இது அரசியல் பிரச்சினை மட்டுமல்ல; நமது பொருளாதார வளங்களைப் பாதுகாக்கும் போராட்டம்” என்றெல்லாம் அந்த அறிக்கை ஆவேசக்கனல் கக்கியது.
இதே அருண் ஜெட்லி, பன்னாட்டு நிறுவனம் ஒன்று, தான் கொள்ளை அடித்த இலாபத்தில், ஒரு பகுதியை அரசுக்கு அளிக்க முன் வந்தபோது, அது தேவையில்லை என்று ஆலோசனை கூறி தடுத்தார். அந்த பன்னாட்டு நிறுவனத்தின் பெயர் ‘°ட்ரா ஜெடிக் எனர்ஜி டெக்னாலஜி° பிரைவேட் லிமிடெட்’, டாட்டா நிறுவனம் மற்றும் தென்னாப்பிரிக்க நிறுவனங்கள் இணைந்த அமைப்பு 2008இல் இந்தியாவில் நிலக்கரி ஒதுக்கீடுகளைப் பெற்று கொள்ளை இலாபம் அடித்தது இந்த நிறுவனம். இதன் சட்ட ஆலோசகர் அருண் ஜெட்லி, இலாபத்தில் ஒரு பகுதியை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்து இந்த நிறுவனம், அருண் ஜெட்லியிடம் கருத்து கேட்ட போது, அவர் 21 பக்க அறிக்கையாக தனது கருத்துகளை முன் வைத்தார். “சட்டப்படி இலாபத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்பதுதான் அருண் ஜெட்லி கூறிய அறிவுரை. பொருளாதார வளங்கள் எல்லாம் மக்கள் உரிமை என்று சூளுரைத்த ஜெட்லியின் யோக்கியதை இது.
இப்போது, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் என்ற முறையில், அரசு தொலைக்காட்சி மற்றும் அரசு வானொலியின் சுயேச்சைத் தன்மையை முடக்கி, நேரடியாக தனது அதிகாரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். ‘பிரச்சார் பாரதி’ என்ற அமைப்பின் கீழ் தொலைக்காட்சிகள், வானொலிகள் செயல்பட்டு வருகின்றன. ‘பிரச்சார் பாரதிக்கு’ தனிச் சட்டம், விதி முறைகள் உண்டு. தொலைக்காட்சி, வானொலிகளுக்கான பதவி நியமனங்களை அரசே நேரடியாக செய்துவிட முடியாது. ‘பிரச்சார் பாரதி’ சட்டப்படி மேற்குறிப்பிட்ட ஒலி, ஒளிபரப்பு நிறுவனங்களின் இயக்குனர்கள் அடங்கிய குழுவின் ஒப்புதலோடு தான் நியமனங்கள் நடக்க வேண்டும். ஆனால், ‘தூர்தர்ஷன்’ செய்தித் துறை இயக்குனர் ஜெனரல் பதவியில் வீணா ஜெயின் என்பவரை விதிகளை மீறி அருண் ஜெட்லி தன்னிச்சையாக நியமித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, வானொலியில் ஒலிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சி உள்ளடக்கங்களையும் தனது அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று, 2015, ஏப். 30ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார். அருண் ஜெட்லியின் இந்த அத்துமீறல்களுக்கு பிரச்சார பாரதியின் தலைவர் சூர்ய பிரகாஷ் எதிர்ப்பு தெரிவித்து முடிவுகளை நியமனங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அனைத்து நிறுவனங்களையும் ‘காவி மயமாக்கி’ அதிகாரத்தில் பார்ப்பன மய்யம் உறுதி யாக்கப்பட்டு வருகிறது!
பெரியார் முழக்கம் 11062015 இதழ்