கழுத்துக் கயிறும் கைக் கயிறும்
கணவன் – திருமணம் செய்யப்போகும் ஒரு பெண், இனி தனக்கு ‘கீழ்ப்படிந்தவளாகவே’ இருக்கவேண்டும் என்பதன் அடையாளமாகக் கட்டப்படுவதுதான் தாலி. சமத்துவத்தையும் சுயமரியாதையையும் விரும்பும் பெண்கள், தாலியை அகற்றிக் கொள்ள முன் வந்தால், அது இந்து மதத்துக்கும், பண்பாட்டுக்கும் எதிரானது என்று தோள் தட்டி தொடை தட்டி, ‘இந்துத்துவா’வாதிகள் கிளம்பி விடுகிறார்கள். கடந்த ஏப்.14ஆம் தேதி, பெரியார் திடலில் நடந்த தாலி அகற்றும் நிகழ்வில், உள்ளே புகுந்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள். தாலி குறித்து விவாத நிகழ்ச்சி நடத்திய ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வெடிகுண்டு வைத்தார்கள்.
கழுத்தில் கயிறு கட்டுவதுபோல கையில் கயிறு கட்டும் ஒரு பழக்கமும் ‘இந்து கலாச்சாரமாக’ நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பெயர் ‘ரக்ஷா பந்தன்’. இது பெண்கள் ஆண்களின் கைகளில் கட்டும் கயிறு. ஒரு பெண், ஆணின் கையில் இந்தக் கயிறை கட்டிவிட்டால் அவனை சகோதரராக ஏற்றுக் கொண்டதாக அர்த்தம். சகோதரனாக இப்படி அறிவிக்கப்பட்ட ஒரு ஆண், அந்தப் பெண்ணின் மீது சகோதரன் என்ற உரிமையில், தனது கட்டுப்பாட்டைத் திணிக்க முடியும். இதையெல்லாம் இப்போது ஏன் குறிப்பிட வேண்டியிருக்கிறது என்று, சந்தேகம் வரலாம். இந்த ‘ரக்ஷா பந்தன்’ என்ற இந்துமத சடங்கை மோடி ஆட்சி, தேசிய விழாவாக ஆகஸ்ட் இறுதியில் அறிவிக்கப் போகிறதாம். இதற்கு சமூக ஆர்வலர்களும் இடதுசாரி சிந்தனையாளர் களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரக்ஷாபந்தன் என்ற சடங்கு 1905ஆம் ஆண்டு அறிமுக மானது. இந்து மத முறைப்படி பெண்கள் பிறமதத்தினரை சகோதரராகக் கருதவே இது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்து–முஸ்லீம் பிரிவினருக் கிடையே திருமண உறவுகள் நிகழ்ந்துவிடாது தடுப்பதே இதன் நோக்கம். பிறகு ‘இந்து’ மதத்துக் குள்ளேயே இந்த கயிறு கட்டும் பழக்கம் வந்துவிட்டது. இது குறித்து சமூக ஆர்வலர் ராம்புனியானி தலைமையில் கூடிய சமூக ஆர்வலர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “இந்துமத சடங்கை – ஒரு அரசு தேசிய விழாவாக ஏன் அறிவிக்க வேண்டும்? இதன் மூலம் பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட வேண்டும். அவர்களை சகோதரர்களாக மட்டுமே ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. ஒரு பெண்ணை ‘சக மனுஷியாக’ ஒரு ஆண் பார்க்காமல் அவளை தனது கட்டுப்பாட்டில் இருப்பவளாக ஒரு ஆண் ஏன் பார்க்க வேண்டும்? வடமாநிலங்களில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகள் இதே பார்வையில் தீர்ப்பை அளிக்கின்றன. அதற்கும், இதற்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விகளை எழுப்புகிறது, அந்த அறிக்கை. மதக் கட்டுகள் பழக்க வழக்கங்களை எதிர்த்து, பெரியார் உயர்த்திய பெண்ணுரிமைக் குரல், இப்போது சமூக மாற்றத்தை விரும்புவோரின் குரலாகவே ஒலிக்கத் தொடங்கியிருப்பது பெரியாரியத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி அல்லவா?
பெரியார் முழக்கம் 13082015 இதழ்