திருவாரூர் நூல் வெளியீட்டு விழாவில் கொளத்தூர் மணி பேச்சு ‘தமிழவேள்’ சாரங்கபாணியிடம் பெரியாரின் பெருமதிப்பு

தோழர் கவி தொகுத்துள்ள “மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” நூல் வெளியீட்டு விழா 8.5.2015 அன்று திருவாரூர் எத்திராஜ் திருமண மண்டபத்தில் முக்கூடல் அமைப்பின் சார்பில் நடைபெற்றது. நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டு ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி.
சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேசு நூலுக்கு முன்னுரை எழுதும் போது, அதன் ஆசிரியர் அ.சி.சுப்பய்யா ஒன்றை சொல்லுகிறார். நம்மவர் என்பதற்காக எல்லோரையும் ஏற்றுக் கொள்வ தில்லை. 1948இல் முன்னுரை எழுதுகிறார் என்றால், அதற்கு முன்பு பல ஆண்டுகள் நூலை எழுதியிருக்க வேண்டும். இந்த விரிவான நூலை நீண்ட காலம் எழுதியிருக்க வேண்டும். 1938இல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது சுயமரியாதை இயக்கத்தோடு பலர் உடன் இணைந்து போராடியவர்கள் இருந்தார்கள். மறைமலையடிகள் இருந்தார். சோமசுந்தர பாரதியார் இருந்தார். உமாமகேசுவரம் பிள்ளை இருந்தார். திரு.வி.க. இருந்தார். எல்லோரும் கூட இருந்தவர்கள்தாம். பெரியாரோடு இருந்தவர்கள்தாம். அவரைப் பற்றியெல்லாம் சொல்லுகிறார். ‘தமிழறிஞர்கள் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், உமா மகேசுவரம் பிள்ளை, திரு.வி.க போன்றவர்கள் புராணங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், பார்ப்பன சடங்கை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பெரிய புராணத்தை மட்டும் விட்டுவிட மாட்டார்கள்’ என்று அ.சி.சுப்பையா எழுதுகிறார். ‘அதை மட்டும் தூக்கிப் பிடித்திருப் பார்கள். அதைப் பற்றித் தான் நாம் பார்க்கப் போகிறோம்’ என்கிறார். நம்மாள் தான், அதற்காக அவர்களை விட்டுவிட முடியாது என்பதைப் போல் பேசி, விளக்கம் கொடுக்கிறார். அதில் அவர் சொல்லுகிற போது, ‘இப்போது நமக்கு சுயராஜ்யம் கேட்கப்படுகிறது’. இது பெரியார் சொன்னதுதான். பெரியார் கருத்தைதான் அவர் பிரதிபலிக்கிறார். ‘சுயராஜ்யம் கிடைத்தால் இராம இராஜ்யத்தைத் தவிர வேறு எந்த இராஜ்யமும் வரும் என்று நினைக்காதீர்கள்’ என்று முன்னுரையில் எழுதுகிறார். ஒன்னும் பெரிய சுதந்திரம் கிடைக்கல. வந்தா இராம ராஜ்யம்தான் வரும். பார்ப்பான்தான் ஆட்சிக்கு வருவான். பெரியார் சொன்னாருல… வெள்ளைக் காரன் போனால் பார்ப்பன கொள்ளைக் காரன் கையில் கொடுத்துவிட்டு போய்விட்டான் என்று சொன்னதைப் போலத்தான். அவர் அப்போதே எழுதுறார். சுயராஜ்யம் கேட்டுகிட்டு இருக்கான், என்ன வரப்போவுது பெரிசா? இராமராஜ்யம்தான் வரப்போவுது. இப்பவும் அதுதான் வந்திருக்கு. இன்னும் அய்ந்து ஆண்டுகளுக்கு இருக்கும்.
முதல்முறை பெரியார் மலாயா (மலேசியா) போகும்போது எஸ்.இராமநாதன் கூடப் போகிறார். பெரியார் ஒவ்வொரு இடங்களில் பேசிமுடித்த பின், அங்கிருக்கிற பிற மொழிக்காரர்களுக்காக எஸ்.இராம நாதன் அரைமணி நேரம், ஒருமணிநேரம் ஆங்கிலத்தில் பேசுகிறார். பெரியார், இரண்டாவது முறை போகும்போது எஸ்.இராமநாதன் வேறு இயக்கத்திற்கு போய்விட்டார், இராஜாஜி அமைச்சரவையில் அமைச்சாராகிவிட்டார். அப்போது ஒரு சட்டக்கல்லூரி மாணவர் பெரியா ருடன் போகிறார். அவர்தான் இராஜாராம். தி.மு.க.வில் அமைச்சராகவும், பிறகு சட்டப் பேரவைத் தலைவராகவும் இருந்தவர் அதே இராஜாராம் தான். சட்டக்கல்லூரி மாணவராக இருந்த இராஜாராம் பெரியாரோடு பர்மாவுக்கு புத்த மாநாட்டுக்கு போய் அங்கிருந்து மலாயா போகிறார். இராஜாராம் ஆங்கிலத்தில் பேசுகிறார். அதைவிட சிறப்பாக, பெரியாருடைய பேச்சுகளை முழுமையாக எழுதி அங்கிருக்கும் ஏட்டில் வரச் செய்கிறார். இது பற்றி (கவி) சொல்கிறார், அங்கிருக்கும் ‘தமிழ்முரசு’ ஏட்டில் எப்போதும் நிகழ்ச்சிகளின் சுருக்கங்கள்தான் வரும். உரை வந்ததில்லை. இப்போது பெரியார் உரைகள் மட்டும் எப்படி வந்திருக்க முடியும்? இந்த நூலை தொகுத்த கவி ஒரு கேள்வி எழுப்புகிறார். அப்போது உடன் பயணம் சென்ற இராஜராம் எல்லா உரைகளையும் ‘தமிழவேள்’ கேட்டுக் கொண்டதற்காகவே எழுதியுள்ளார் என் பதை பதிவு செய் கிறார்.
அய்யா தமிழவேள், பெரியார் மீது கொண் டிருந்த மதிப்பென்பது சாதாரணமானதல்ல. ஒரு கட்டத்தில் தமிழவேள் சாரங்கபாணிக்கும் மலாயா திராவிடர் கழகத்துக்கும் மனக்கசப்பும் அதனால் வழக்கும் ஏற்பட்டு விடுகிறது. அந்த சமயத்தில் இங்கிருந்து நம்முடைய திருவாரூர் தங்கராசு அங்கு போகிறார். திருவாரூர் தங்கராசு அவர்களிடத்தில் ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பு கிறார் பெரியார்.
அதில் சொல்லுகிறார், ‘நமது மதிப்புமிக்க நண்பர் உயர்திரு சாராங்கபாணி அவர்கள் சங்கத்தின் (கழகத்தின்) மீது மன வருத்தம் ஏற்பட்டு விவகாரம் தொடங்கி இருப்பதாக சொன்னார்கள்.
திரு. சாரங்கபாணி அவர்கள் இல்லாதிருந்தால் அங்கு நமது இயக்கமோ கழகமோ கட்டிடமோகூட ஏற்பட்டிருக்க முடியாது. ஏதோ காரணமாக ஏற்பட்டுவிட்டது’ என்று சொல்லி விட்டு, ‘ஆதலால் நீங்கள் அங்கிருந்து உயர்திரு. சாரங்கபாணி அவர் களைக் கேட்டுக் கொண்டு ஏதாவது வகை செய்து நல்ல முடிவு ஏற்படும்படி செய்ய வேண்டுகிறேன்’ என்று பெரியார் கடிதம் எழுதி 1971 இல் கொடுத் தனுப்புகிறார். மலேசியாவில் திராவிடர் கழகத்துக்கு பெரும் உதவி செய்த மூன்று பேர் மீது பெரியாருக்கு மிகுந்த மரியாதை உண்டு. அ.சி.சுப்பய்யா, மற்றவர் சாரங்கபாணி, மற்றொருவர் இராமசாமி நாடார், இவர் சி.பா. ஆதித்த னாருடைய மாமனார்.
இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்டுரைப் பற்றி குறிப்பிட வேண்டும். மலாயா அரசு, இராமசாமி நாடாருக்கு, ‘சமாதான நீதிபதி’ (Justice of Peace) என்ற பட்டத்தை வழங்கியது. இதைப் பாராட்டி, ‘விடுதலை’, ‘குடிஅரசு’ ஏட்டில் கட்டுரைகள் வருகின்றன. ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் வரவேற்றுப் பாராட்டி எழுதும்போது, அவரை ‘தோழர் நாடார்’ என்று எழுதுகிறார். ஆனால், ‘விடுதலை’யில் வேறு விதமாக குறிக்கப்படு கிறது. அப்போது ‘விடுதலை’யில் யார் ஆசிரியராக இருந்திருக்கிறார் என்பது தெரியவில்லை. ‘சத்திரிய குல சிகாமணி உ.இராமசாமி நாடார்’ என்று ‘விடுதலை’யில் வருகிறது. ஆனால், சாரங்கபாணி ‘தமிழ்முரசில்’, ‘சூத்திர குல சிகாமணி உ.இராமசாமி நாடார்’ என்று எழுதுகிறார். அங்க எங்கடா சத்திரிய குலம் இருக்கிறது? எல்லாருமே சூத்திர குலம்தானடா என்று எழுதுகிறார்.
ஒரு கூட்டத்தில் பேசுகிற போது சுப்பய்யா அவர்கள் தனிநாடு கோரிக்கையை வலியுறுத் துகிறார். ‘ஏன் நாம் தனி நாடாக இருக்க முடியாது? நம்மை ஆளுகின்ற இங்கிலாந்தை விட நாம் இரண்டு மடங்கு பெரிய நாடு’. ‘பெல்ஜியத்தைவிட பத்துமடங்கு பெரிய நாடு நம்நாடு. கிரேக்கத்தைவிட மூன்று மடங்கு பெரிய நாடு நம் நாடு. ஆலந்தைவிட பத்து மடங்கு பெரிய நாடு. போர்ச்சுக்கல்லைவிட 4 மடங்கு பெரிய நாடு பால°தீனத்தைவிட 14 மடங்கு பெரிய நாடு. நாம் ஏன் தனிநாடாக இருக்க முடியாது’ என்று சுப்பையா கேட்கிறார்.
திராவிட நாடு என்று குறிப்பிடுகிற இடத்தில் எல்லாம் அடைப்புக்குறியில் சென்னை மகாணம் என்று எப்போதும் தவறாமல் பெரியார் குறிப்பிடுவார். இங்கே பேசிய அய்யா (சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் பேரன் மார்டின் செல்வம்) கூட குறிப்பிட்டார், இதே திருவாரூரில் இந்தக் கூட்டம் நடக்கும் இடத்தின் அருகேதான் நீதிக்கட்சி யினுடைய மத்திய குழுக் கூட்டம் 1940இல் நடந்தது என்று சொன்னார்கள். அங்கு தான் முறையான தீர்மானமாக, திராவிடநாடு கோரி போடப்பட்டது. அதிலும் அடைப்புக்குறியில் சென்னை மாகாணம் என்று போட்டார்கள். இந்திய அரசின் கட்டுப் பாட்டிலிருந்து விலகி நேரடியாக இங்கிலாந்தோடு தொடர்புடைய நாடாக சென்னை மாகாணம் விளங்க வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள். அப்போது நீதிக்கட்சியாக இருந்தது.
(தொடரும்)

பெரியார் முழக்கம் 11062015 இதழ்

You may also like...

Leave a Reply