காவல்துறை கெடுபிடிகள்-தடைகள் தகர்ந்தன மேட்டூரில் நாத்திகர் விழா-பேரணி
சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மே 30 அன்று மேட்டூர் புதுச்சாம்பள்ளியில் நாத்திகர் விழா-பேரணி-பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடந்தது. விழாவுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் திருமூர்த்தி, துரை அருண் ஆகியோர் கழக சார்பில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி வி. தனபால் காவல்துறை விதித்த தடையை நீக்கி, விழாவுக்கு அனுமதி அளித்தார். விழா நடைபெறுவதற்கு இரு நாள் முன்புதான் அனுமதி கிடைத்தது.
காவல்துறை விதித்த தடை தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறவிருந்த மாரியம்மன் கோயில் நிர்வாகிகள், நாத்திகர்விழாவை எதிர்ப்பதாக ஒரு செய்தி உருவாக்கப்பட்டது. மாரியம்மன் கோயில் நிர்வாகிகள், அந்தக் கோயில் உள்ள பகுதிகளில் நாத்திகர் விழா நடப்பதற்கு எதிர்ப்பு காட்டுவதால், விழாவை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளுமாறு காவல்துறை கெடுபிடி காட்டியது. பொதுக் கூட்டத்தையும் வேறு இடத்துக்கு மாற்றிக் கொள்ள வற்புறுத்தினார்கள். கழகத் தலைவர் கொளத்தூர் மணி கோயில் நிர்வாகிகளிடம் நேரில் பேசினார். அப்போது விழா பொதுக் கூட்டத்தை மாற்று இடமான பள்ளிக்கூட மைதானப் பகுதிக்கு மாற்றுவதால் கழகத்துக்கு ஏற்படக்கூடிய பொருட் செலவை எடுத்துக் கூறி, இடத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார். அதைத் தொடர்ந்து புதுச்சாம்பள்ளி பள்ளி மைதானத்தில் மேடை, ஒலிபெருக்கி அமைக்கும் செலவுகளை தாங்களே ஏற்றுக் கொள்வதாக கோயில் நிர்வாகிகள் கழகத் தலைவரிடம் கூறினர். அதைத் தொடர்ந்து பள்ளி மைதானத்துக்கு பொதுக் கூட்டம் மாற்றப்பட்டது. இதற்காக மேடை, ஒலி பெருக்கிக்காக கோயில் நிர்வாகமே ரூ.20,000 வரை செலவிட்டது குறிப்பிடத்தக்கதாகும். மாற்றப்பட்ட இடம் மைதானமாக இருந்ததால் பொதுக் கூட்டம் திறந்தவெளி மாநாடாக சிறப்பாக காட்சியளித்தது.
எதிர்ப்புகளை எதிர்கொண்டு திட்டமிட்டபடி நாத்திகர் பேரணி, குஞ்சாண்டியூர் ஆர்.சி. பிளான்ட் அருகிலிருந்து பறை இசை, கடவுள் மறுப்பு முழக்கங்களுடன் புறப்பட்டது. பெண்கள், குழந்தைகள், கடவுள் மறுப்பு முழக்கங்களுடன் தீச்சட்டி ஏந்தி வர, கருஞ்சட்டைத் தோழர்கள் அணி வகுத்து வந்தனர். அலகு குத்தி கார் இழுத்தல், ஆணிப் படுக்கையில் படுத்தல், முதுகில் அலகு குத்தி ‘பறவைக் காவடி’ போல் தொங்குதல் என மூடநம்பிக்கையை தோலுரிக்கும் நிகழ்ச்சிகள் பேரணியில் இடம் பெற்றன. ஒரு மணி நேரம் நடந்த பேரணியை வழியின் இருபகுதியிலும் பொது மக்கள் திரண்டு பார்த்தனர். பேரணி பொதுக் கூட்ட மேடையை 6 மணியளவில் வந்தடைந்தது.
மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் பகுத்தறிவு, ஜாதி எதிர்ப்பு இசை நிகழ்ச்சி சிறப்புடன் நடந்தது. தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டக் கழகத் தலைவர் துரை. தாமோதரன், ‘மந்திரமல்ல, தந்திரமே’ நிகழ்ச்சிகளை நடத்தினார். பொதுக் கூட்டத்துக்கு புதுச்சாம்பள்ளி மூத்த கழகத் தோழர் க.சின்னையன் தலைமை தாங்கினார். தோழர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் திருமூர்த்தி, ‘நாத்திகமும் பெண்ணுரிமையும்’ என்ற தலைப் பிலும், வழக்கறிஞர் துரை. அருண், ‘நாத்திகமும் அறிவியலும்’ எனும் தலைப்பிலும், எழுத்தாளர் வே. மதிமாறன், ‘நாத்திகமும் சமூகநீதியும்’ எனும் தலைப்பிலும் உரையாற்றினர். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெங்களூரிலிருந்து குடியரசு கட்சியைச் சார்ந்த தோழர்களும், பகுத்தறிவாளர் அமைப்புகளை சார்ந்த தோழர்களும், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும் 20 பேர் தனி வாகனங்களில் வந்திருந்தனர். பெங்களூர் பல்கலைக்கழக சமூகவியல் துறை பேராசிரியர் டாக்டர் சமதா தேஷ்மானே, டாக்டர் வெங்கடசாமி, சுயமரியாதை மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் முளி. ஆஞ்சி நேயப்பா, தோழர்கள் ஜார்ஜ், நாகரத்தினம்மா ஆகியோரும் வந்திருந்து நாத்திகர் பேரணியில் பங்கேற்றனர். அவர்களின் சார்பில் முனைவர் வெங்கடசாமி ஆங்கிலத்தில் உரையாற்றினார். தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார். தலைமைக் குழு உறுப்பினர் மேட்டூர் சக்தி நன்றி கூறினார். 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, வீடுகளின் மாடிகளிலும் நிறுத்தப்பட்டதோடு, காவல்துறை மாவட்ட தலைமை அதிகாரிகளும் குவிந்திருந்தனர். எந்தவித சலசலப்பும் இன்றி, மக்கள் ஆதரவுடன் பேரணியும் பொதுக் கூட்டமும் அமைதியாக நடந்தது. இதுவே காவல்துறையின் கெடுபிடிகளுக்கான பதிலடியாக இருந்தது. – நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 04062015 இதழ்