மன்னையில் வாசகர் வட்டம் தொடக்க விழா பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை நிறுத்த சதி

சென்னை ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதை கண்டித்து திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஜூன் 4ம் தேதியன்று மன்னார்குடியில் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. முறையாக 5 நாட்களுக்கு முன்பே காவல்துறையில் அனுமதி கேட்டும் காவல்துறை திடீரென அனுமதி மறுத்தது. அதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி குமாரசாமி திருமண அரங்கத்தில் கடந்த ஜூன் 15ம் தேதி மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று கவிஞர் கலைபாரதி உரையாற்றினார். திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு கருத்தரங்கத்திற்கு தலைமையேற்றார். திராவிடர் விடுதலைக்கழக தலைமைக்குழு உறுப்பினர்கள் தூத்துக்குடி பால்பிரபாகரன், திருப்பூர் துரைசாமி, ஈரோடு இரத்தினசாமி, கோபி, இராமஇளங்கோவன், தமுமுக மாவட்ட செயலாளர் நூர்தீன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.
அம்பேத்கர் பெரியார் “சமூக விடுதலையின் கலகக் குறியீடுகள்” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர்மணி உரையாற்றினார். அவர் தனது உரையில், சென்னையில் ஐஐடியில் படிக்கின்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள், 1959ம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை ஐஐடியில் ஏராளமான மாணவர் அமைப்புகள் பல்வேறு ஆண்டுகளாக செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய மாணவர் அமைப்புகள் அனைத்தும் இந்துத்துவா கருத்துக்களை பரப்புகின்ற வகையில் பல்வேறு வகையான கருத்துப் பிரச் சாரங்களை ஐஐடியில் தொடர்ந்து செய்து வருகின்றன. இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜுன் சம்பத் போன்றோர்கள் சென்னை ஐஐடிக்கு அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும் என்றும் எக்காரணத்தை முன்னிட்டும் பெரியாரின் பெயர், அவர் கருத்துக்கள், ஐஐடியில் பரவு வதை அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் தொடர்ச்சியாக கூறி அம்பேத் கரையும், பெரியாரையும் வேறு வேறு சிந்தனைகள் கொண்ட தலைவர்களாக மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரத் தில் ஈடுபடுகிறார்கள். தான் இறக்கும் போது இந்துவாக இறக்கமாட்டேன் என்றும் இந்துமதத்தின் புராணக் குப்பைகளை அதன் வேதநூல்களின் வாயிலாகவே அம்பலப்படுத்திய அம் பேத்கரை பெரியாரை எதிர்ப்பதற்காக துணைக்கு அழைக்கிறார்கள். பெரி யாரை எதிர்க்க இவர்கள் அண்ணலை நாடுகிறார்கள் என்றாலே அது பெரியாரை கண்டு இவர்கள் எவ்வளவு நடுங்கி போயிருகிறார்கள் என்பது நமக்கு தெளிவாகிறது. புரட்சியாளர் அம்பேத்கர் 1951ல் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யும் போது அதற்கென கூறிய நான்கு கார ணங்களை கூறினார். பிற்படுத்தப் பட்டவர்களின் நலன் காக்க, அதற்கென பிற்படுத்தப்பட்ட ஆணையம் அமைக்க-அரசியல் சட்டத்தில் இட மிருந்தும், அதை நேரு அரசாங்கம் செய்யவில்லை என்பது அதில் ஒன்று. பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்தவர் மற்றும் அதற்காக போராடி யவர் அம்பேத்கர். ஆனால் இந்துத்துவ மதவாத சக்திகள் ஜாதியை தூக்கி பிடிக்கின்ற சனாதான சக்திகள் புரட்சி யாளர் அம்பேத்கரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவரென பொய் யான கருத்தை மக்கள் மத்தியில் நச்சு விதைகளாக விதைத்து வருகின்றன. அம்பேத்கரும் பெரியாரும் பிற் படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான ஆயுதங்களாவார்கள். சென்னை ஐஐடி யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட் டத்தை தடை செய்ததின் நோக்கத்தை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். வசிஷ்டர், வியாசர்கள் உலவும் அய்.அய்.டி. வளாகத்திலே அம்பேத் கரும், பெரியாரும் நுழைந்தால்…. அதன் விளைவை அவர்கள் அறிவார் கள் அல்லவா! அதற்குத் தானே இந்தத் தடைவிதித்தார்கள்? நம் நாட்டில் நடக்கின்ற சமூகப் போராட்டத்தின் அடிநாதமே இதுதான்” என்று கூறினார்.
அம்பேத்கர்-பெரியார் “சனாதானத் திற்கு எதிராக சுழலும் போர்வாள்கள்” என்ற தலைப்பில் தமுமுக பொதுச் செயலாளர் தோழர் ப.அப்துல்சமது உரையாற்றினார். அவர் தனது உரை யில், அம்பேத்கர் பெரியார் பெயரில் உள்ள புரட்சிகர அமைப்புகளை ஒடுக்குவதற்கு இந்துத்துவா சக்திகள் நீண்ட நெடிய காலமாக முயற்சித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே சென்னை ஐஐடியில் உள்ள அம்பேத் கர் பெரியார் வாசகர் வட்டத்தை தடைசெய்ததாகும். எதிர்த்து அழிக்க முடியவில்லை என்றால் தோளில் கை போட்டு கழுத்தறுப்பதுதான் பார்ப்பனீய சக்திகள் காலம் காலமாக செய்துவரும் சூழ்ச்சியாகும். அதற்கு உதாரணம் கூறவேண்டுமென்றால் புத்தமதத்தை இந்தியாவில் இவர்கள் அழித்தனர். மலம் கழித்தால் அந்த பாகத்தை மட்டும் கழுவுகிறோம், ஆனால் தாழ்த்தப்பட்டோரை உடம் பெல்லாம் தீட்டு என்று கூறி ஜாதிய வெறியோடு குளித்தார்களே இது நியாயமா? பார்ப்பனீய கண்டுபிடிப் பான சனாதானம் என்ற சாக்கடை சிந்தனையை அம்பேத்கர், பெரியார் என்கின்ற ஆயுதங்களை கொண்டு நாம் வேரோடும், வேரடி மண்னோடும் நம் மண்ணிலிருந்து பிடுங்கி எரிய வேண்டும். அப்துல் சமது ஆகிய நான் அரேபியாவிலிருந்தோ, துருக்கியி லிருந்தோ இந்த நாட்டிற்கு வரவில்லை. இந்த பார்ப்பனீய சனாதான கொடுமை காரணமாக கோவில்-நுழைய முடியாத ஜாதியாக தமிழ் நாட்டில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஆறுமுகம் தான் இன்றுஅப்துல் சமதாக உங்கள் முன்பு நிற்கிறேன். அம்பேத்கரும் பெரியாரும் வேறு வேறு தலைவர்கள் என பிரிக்கின்ற முயற்சியும் நடைபெறுகிறது. பாஜக வின் இத்தகைய முயற்சி ஒரு போதும் பலிக்காது. காரணம் அம்பேத்கரும் பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக மக்களால் போற்றப்படு கின்றனர் என்று கூறினார்.
முன்னதாக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை தமுமுக பொதுச் செயலாளர் அப்துல் சமது முன்னிலை யில், திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி தொடக்கி வைத்தார். அதன் தலைவராக ‘கருக்கல் விடியும்’ பத்திரிகை ஆசிரியர் அம்ரா பாண்டியன், செயலாளராக மன்னை வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கப் பொருளாளர் சேரன்குளம் செந்தில் குமார், அமைப்பாளர்களாக கவிஞர் தம்பி, கவிஞர் கலைபாரதி மற்றும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்டச்செயலாளர் இரா.காளிதாசு ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். கருத்தரங்கில், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் ஈரோடு சிவக்குமார், மன்னை நகர சிபிஎம் நகர செயலாளர் சந்திரா, தஞ்சை வடக்கு மாவட்ட அமைப்பாளர் கு.பாரி, கடலூர் மாவட்ட அமைப்பாளர் பாரதிதாசன், விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் கணேசமூர்த்தி, திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மணி கண்டன், செந்தமிழன், சேரன் ரமேஷ், நல்லிக்கோட்டை முருகன், உத்திரா பதி, மனோகர், தென்பரை பன்னீர் செல்வம், ஏனாதி சங்கர், குடவாசல் ஸ்டாலின், கரிகாலன், வெங்கடேசன், அம்ஜத்கான், கோவிந்தன், மன்னை சசிக்குமார், சுபஜெயச்சந்திரன், வட சேரி சிவசுப்ரமணியன், பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான பொறுப் பாளர்கள் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 25062015 இதழ்

You may also like...

Leave a Reply