சேஷ சமுத்திரத்தில் ஜாதி வெறிக் கலவரம்: நடந்தது என்ன?
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உட்பட்டது சேஷ சமுத்திர கிராமம். இந்த கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அம்மன் தேர் ஊர்வலம், பேருந்து போகும் ஊர் பொதுச் சாலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தேர் இழுக்க முயன்றனர். இதைப் பொருத்துக் கொள்ள முடியாத ஜாதி வெறியர்கள் தேர் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி, அம்மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பு ஊர் விழாக்களையும் நடத்த தடை உத்தரவு போட்டனர். ஆதலால் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த கிராமத்தில் எந்த விழாவும் நடைபெறவில்லை. இருப்பினும் இரு தரப்பினர்களுக்கிடையே இதுவரை பத்து முறை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருவிழாவிற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட மக்கள் நடத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், 16.8.2015 அன்று காலையில் தேர் இழுப்பதென்று முடிவு செய்து, இந்த ஊர்வலத்தில் மாவட்ட ஆட்சியரும் பங்குபெற இருந்தார்.
விழா ஏற்பாடு செய்த கொண்டிருந்த நிலையில், அந்த ஊரைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சுப்ரமணி (தலைவர், பா.ம.க.), அண்ணாதுரை (கவுன்சிலர் அ.தி.மு.க.), இளையாமுட்டு இராமச்சந்திரன் (அ.தி.மு.க.), வேலு (தி.மு.க.) ஆகியோர் தூண்டுதலின்பேரில் பெட்ரோல் பாட்டிலுடன் சென்று 15.8.2015 அன்று இரவு தாக்குதல் நடத்தினர். இதில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஏழு வீடுகள் எரிந்து தீக்கிரையாக்கப்பட்டது. முற்றிலும் எல்லா பொருள்களும் எரிந்தன. தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் படுகாயமுற்றதுடன் பாதுகாப்பிற்கு இருந்த ஏழு காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர். ஒரு காவலருக்கு கண் பாதிக்கப்பட்டுள்து. பாதிக்கப்பட்ட ஏழு காவல்துறையினரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். தேரையும் தீ வைத்து எரித்ததுடன் பொது மக்கள் மற்றும் காவல்துறையை சார்ந்த அய்ந்து இரு சக்கர வாகனங்களை எரித்து விட்டனர்.
பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இரவோடு இரவாக உயிருக்கு பயந்து பல கிராமங்களுக்குச் சென்று தஞ்சம் அடைந்தனர். கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் செ.நாவாப்பிள்ளை, வேலாயுதம் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர். மறுநாள் காலையில் மாவட்டப் பொறுப்பாளர்கள் தமிழ்க் குமரன், பெரியார் வெங்கட், செ.நாவாப்பிள்ளை, குப்புசாமி, வேலாயுதம், நாகராஜ், முருகன், இராமர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்து வந்தனர். இவ்வளவு பெரிய சாதிவெறி தாக்குதலுக்கு மேற்குறிப்பிட்ட நான்கு பேரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரியும், தாழ்த்தப்பட்ட மக்கள் தேர் இழுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், காவல்துறையின் தடையை மீறி கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 20082015 இதழ்