மோடியின் ஓராண்டு – துள்ளிக் குதிக்கும் சு.சாமி
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் அக்கட்சிக்கான செயல் உத்திக் குழுவின் தலைவர் என்ற பதவி கிடைத்தது, சுப்ரமணியசாமிக்கு. அதிகார போதை தலைக்கேறி, அவர் அவ்வப்போது உதிர்த்த ‘முத்துக்கள்’ சில:
• இராஜபக்சே அதிபராக இருந்தபோது, அந்த இனப்படுகொலையாளரை நேரில் சந்தித்துப் பேசினார் சுப்ரமணியசாமி. “அய்.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராக வரும் தீர்மானங்களைக் கண்டு பயப்பட வேண்டாம். அந்த அமைப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை. கல்லெறிந்தால், ஓடும் காக்கையைப் போன்றது அந்த அமைப்பு என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ‘டெய்லி மிர்ரர்’ நாளேட்டுக்கு பேட்டி அளித்தார் (ஜூலை 23, 2014).
• கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச இராணுவ ஆய்வு மய்யத்தில் ‘மோடியின் இந்தியா’ எனும் தலைப்பில் சுப்ரமணியசாமி பேசினார். அவரது பேச்சால் துணிவும் நம்பிக்கையும் பெற்ற இலங்கை இராணுவத் துறை, ஆணவத்தின் உச்சிக்குப் போனது. “மீனவர்கள் சிறை பிடிப்புக் குறித்து, தமிழக முதல்வர், மோடிக்கு எழுதும் கடிதங்கள், காதல் கடிதங்களைப் போன்றது” என்று இராணுவத்துறை தனது இணையதளத்தில் திமிருடன் பதிவிட்டது, ஒட்டு மொத்த தமிழகமும் இதை எதிர்த்தவுடன் தனது பதிவை, திரும்பப் பெற்றுக் கொண்டது இலங்கை இராணுவம்.
• ‘தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதற்கு பதிலாக, அவர்களது படகுகளை பறிமுதல் செய்யுங்கள் என்று இராஜபக்சேவுக்கு ஆலோசனை கூறியது நான்தான்’ என்று சுப்ரமணியசாமி, ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பெருமையுடன் கூறினார்.
• மோடி அமைச்சரவை விரிவாக்கத்தின்போது தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காதது குறித்து சுப்பிரமணியசாமி வெளியிட்ட கருத்து: “வரலாற்றில் அரசர்களுக்கு ஆலோசகர்களாக இருந்தவர்கள் ‘பிராமணர்கள்’தான். இப்போதும் நான் மோடிக்கு ஆலோசகராக இருக்கிறேன்; இதைவிட, அமைச்சர் பதவி எதற்கு?”
• டெல்லி அய்.அய்.டி.யின் இயக்குனராக இருந்தவர் சச்சின் டெண்டுல் சன். இவர் சுப்பிரமணியசாமிக்காக தனது பதவியை விட்டே விலக வேண்டியதாயிற்று. காரணம் இதுதான்: டெல்லி அய்.அய்.டி.யில் பொருளாதாரப் பேராசிரியராக 1969இல் சுப்பிரமணியசாமி பணியாற்றினார். இந்திரா பிரதமரானபோது அவரைப் பதவி நீக்கம் செய்தார். அப்போது தனக்கு ஊதியமாக கிடைக்க வேண்டிய ரூ.70 இலட்சத்தைக் கேட்டு சுப்ரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ளது. மோடி ஆட்சி வந்தவுடன், மத்திய வேலை வாய்ப்பு அமைச்கம் சுப்பிரமணியசாமிக்கு ரூ.70 இலட்சத்தைத் திருப்பித் தர, அய்.அய்.டி. இயக்குனரை கட்டாயப்படுத்தியது. வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, இயக்குனர் இதற்கு உடன்படவில்லை. அரசு கட்டாயப்படுத்தி, இயக்குனரிடம் விலகல் கடிதத்தைப் பெற்றது ‘இந்து’ ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தி இது.
பெரியார் முழக்கம் 11062015 இதழ்