தலையங்கம் – மீண்டும் அவசர நிலையா?

இந்தியாவில் மீண்டும் நெருக்கடி நிலை வராது என கூற முடியாது என்று அத்வானி, ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டி – பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது. அத்வானி, மோடியைத்தான் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதை, ஆளும் கட்சியினர் மறுக்கின்றனர். அவர் பொதுவாகக் கூறிய கருத்து என்கிறார்கள்.
1975ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள ‘அடிப்படை உரிமைகளை’ தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அவசர நிலையை அறிவித்தார். ‘மிசா’ சட்டத்தின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப் பட்டனர். ‘மிசா’ சட்டம் என்றால், (ஆயiவேநயேnஉந டிக ஐவேநசயேட
ளுநஉரசவைல ஹஉவ) எந்தக் காரணமும் இல்லாமல் ஒரு வருடம் வரை சிறையில் அடைக்கும் சட்டம். பத்திரிகைகள், அரசு அதிகாரிகளால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் அனுமதித்த செய்திகள் மட்டுமே வெளியிட முடியும். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அத்வானியும், ‘மிசா’வில் கைது செய்யப்பட்டவர்தான்.
‘அவசர நிலை’ இந்தியாவில் சட்டப்படி இப்போது அமுலில் இல்லை என்பது உண்மைதான். ஆனால், தமிழ்நாட்டிலோ அது வேறு வேறு வடிவங்களில் அமுலில் இருக்கிறது. இப்போது ‘மிசா’ சட்டம் இல்லை; அதற்கு பதிலாக ‘தேசிய பாதுகாப்பு’ சட்டம் இருக்கிறது. இப்போது ‘பத்திரிகை தணிக்கை’ என்று ஒன்று இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களை எதிர்த்து எழுதினால், ‘அவதூறு’ சட்டங்கள் உடனே பாய்ந்து விடுகின்றன. அவசர நிலை காலங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்த முடியாது. இப்போதும் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டங்கள் நடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. காவல்துறை, கூட்டங்களுக்கு அனுமதிப்பது இல்லை. நீதிமன்றங்கள் வழியாகவே அனுமதி பெற வேண்டியிருக்கிறது. நீதிமன்ற அனுமதிக்குப் பிறகு கூட்டங்களில் பேசப்பட வேண்டிய கருத்துகளைக்கூட காவல்துறையே ‘கட்டளை’களாக பிறப்பிக்கிறது.
அவசர நிலை காலத்தில் ஆட்சி எந்திரங்கள் இந்திராவின் புகழ் பாடின. தமிழ்நாட்டிலும் அரசு எந்திரங்கள் முதல்வர் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் அதிகார ஒடுக்குமுறைகளின் பிடியில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரப்பட்டு விட்டன. எனவே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இனி புதிதாக அவசர நிலை என்று ஒன்று அறிவிக்க தேவையில்லை. இதே நிலை, இந்தியா முழுவதிலும் எதிர்காலத்தில் வராது என்று உறுதியாக சொல்ல முடியாது. மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அவரது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் அமைச்சகங்கள் கொண்டு வரப்பட்டு விட்டன. மோடியின் நம்பிக்கைக்கு உரிய பார்ப்பன அதிகார வர்க்கம், அமைச்சர்களை மீறி மோடியுடன் நேரடி தொடர்பில் செயல்படுகிறது. கல்வி, பண்பாட்டு மய்யங்களில் ஆர்.எ°.எ°. காரர்களே தலைமைப் பதவிகளில் அமர்த்தப்படுகிறார்கள். இந்துக்களின் உரிமை என்ற பெயரில் பார்ப்பன மேலாண்மை திணிக்கப்படுவதோடு, பார்ப்பனர்கள் ‘மனுதர்ம பொற்காலம்’ மீண்டும் வந்துவிட்டது போலவே பேசி வருகிறார்கள். மாநில ஆட்சிகளை ஒவ்வொன்றாகக் கைப்பற்றி வரும் மதவாத சக்திகள், அதற்குப் பிறகு இந்தியாவை முழுமையான பார்ப்பன ஆட்சி யாக்குவதற்கு அதிகாரத்தைக் கையில் எடுக்கும் ஆபத்துகள் எதிர்நோக்கியிருக்கின்றன.
அத்வானி, மோடியைத்தான் குறி வைத்துப் பேசினார் என்ற கருத்துக்கு மறுப்பாக அத்வானி தந்துள்ள விளக்கம், ‘குளிக்கப் போய் சேறு பூசிக் கொண்ட கதை’யாகவே இருக்கிறது. “காங்கிர° கட்சியை மனதில் வைத்துத்தான் அப்படிக் கூறினேன்” என்கின்றார். அப்படியானால் அதை வெளிப் படையாக சொல்லியிருக்கலாமே! காங்கிரசை குற்றம் சாட்டுவதில் அப்படி என்ன தயக்கம் அவருக்கு? அத்துடன், அத்வானி தனது விளக்கத்தை நிறுத்திடவில்லை. “ஆணவம் தான் சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கிறது. இன்றைய தலைவர்கள் வாஜ்பாய் போல் அடக்கமானவர்களாக இருக்க வேண்டும்” என்கின்றார். இன்றைய தலைவர்கள் என்பது யாரை குறிக்கிறது என்று கேள்வி கேட்டால், அதற்கு ஒரு நீண்ட பட்டியலைத்தான் அத்வானி போட வேண்டியிருக்கும். அதில் மோடியும் அடங்கு வாரா என்பது குறித்து, அவர் விளக்க வேண்டியிருக்கும்.
ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். அவசர நிலையை அறிவிப்பதற்கான அதிகாரம் யாரிடம் இருக்கிறது? மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களிடம் தானே! இந்த நிலையில், ஆட்சியி லிருந்து விரட்டப்பட்ட காங்கிரசைத் தான் அப்படி கூறியதாக அத்வானி கூறுவது, காதில் பூ சுற்றுவது அல்லவா? கட்சிக்குள் தனது இருப்பை அடையாளப்படுத்திக் கொள்ள அத்வானி இத்தகைய சலசலப்புகளை உருவாக்கியிருந்தாலும்கூட, அவர் முன் வைத்துள்ள கருத்து மிகவும் ஆபத்தானது. தமிழ்நாட்டில் நடக்கும் அறிவிக்கப்படாத அவசர நிலையையும் இந்தியா முழுதும் எதிர்பார்க்கக்கூடிய அவசரநிலை ஆபத்துகளையும் எதிர் கொள்ள இயக்கங்கள் தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பெரியார் முழக்கம் 25062015 இதழ்

You may also like...

Leave a Reply