மோடியின் ஓராண்டு – அம்பேத்கருக்கு சொந்தம் கொண்டாடும் பா.ஜ.க.வினரின் ‘தலித்’ விரோதக் கொள்கைகள்!

• கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை, 82.771 கோடியாக இருந்தது. இப்போது 69.74 கோடியாக வெட்டப் பட்டு விட்டது. ஆனால், ‘கங்கை’யை தூய்மை யாக்குவதற்கு ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. 50 ஆண்டுகாலமானாலும் இத் திட்டம் நிறைவேறப் போவது இல்லை என்கிறார், முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி. இதைவிடக் கொடுமை, பள்ளிக் குழந்தைகளை மீண்டும் ‘குலக்கல்வி’யான ஜாதித் தொழிலுக்கு குழந்தைகளை தள்ளி விடுவதற்கு இந்த ஆட்சி ஒப்புதல் தந்திருப்பதாகும். கல்வி உரிமைப் பாதுகாப்பு சட்டத்தின் நோக்கத்தையே குலைத்துவிட்டது மோடி ஆட்சி. ‘பள்ளிக் குழந்தைகள், குடும்பத்தில் பெற்றோர்கள் செய்யும் வேலைகளில் ஈடுபடலாம்’ என்று குழந்தைகள் வேலை பாதுகாப்புச் சட்டத்தை திருத்த ஒப்புதல் தந்துள்ளது. “குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்” எனும் சட்டம் 1986ல் கொண்டு வரப்பட்டு, குழந்தைகளை தொழி லாளர்களாக்குவதை தடுத்தது. கல்விக்கான நிதியை குறைத்துவிட்டு, குழந்தை களையும் குலத்தொழிலில் பங்கேற்க பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள்; மீண்டும் ‘வர்ணா °ரமம்’ திரும்புகிறது.
• அதுமட்டுமல்ல; பட்டியல் இனப் பிரிவினரான தாழ்த்தப்பட்டோர் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் 12 ஆயிரம் கோடியையும், பழங்குடி யினருக்கான ஒதுக்கீட்டில் ரூ.5 ஆயிரம் கோடியையும், மகளிர் நலனுக்கான ஒதுக்கீட்டில் ரூ.20 ஆயிரம் கோடியையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலனுக்கான ஒதுக்கீட்டில் ரூ.8 ஆயிரம் கோடியையும் வெட்டி விட்டார்கள். குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையே முடக்கப்பட்டுவிட்டது. துறை அமைச்சரான மேனகா காந்தி, இதைச் சுட்டிக்காட்டி, நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு கடிதமே எழுதியிருக்கிறார்.
• ஆர்.எ°.எ°. குடும்பங்களும், பா.ஜ.க. பார்ப்பனர்களும் இப்போது அம்பேத்கருக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். அம்பேத்கரை ஆர்.எ°.எ°. நண்பராக, திரித்து சித்தரிக்கத் துடிக்கும் இவர்கள்தான் பட்டியல் இன, பழங்குடியின மக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மிக மோசமாகக் குறைத்திருக்கிறார்கள். ஜாதி யமைப்பு, தலித் தொழிலாளர்களை முடக்கிப் போட்டிருப்பது குறித்து கவலைப்பட்ட அம்பேத்கர், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கே தடையாகி விடுவதால், அதற்கேற்ற பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றார். அந்தக் கண்ணோட்டத்தில், திட்டக்குழு, அனைத்துத் துறைகளிலும் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று முடி வெடுத்தது. இதற்கான சட்ட வரைவை தயாரித்தவர் மிகச் சிறந்த சமூகநீதியாளர், மண்டல் குழு பரிந்துரையை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய முன்னாள் அய்.ஏ.எ°. அதிகாரி பி.எ°. கிருஷ்ணன். 1978இல் இந்த தலித் உட்கூறு திட்டம், சட்டப்படி அமுலுக்கு வந்து விட்டது என்றாலும், 16.2 சதவீதம் பட்டியல் இனப் பிரிவினருக்கோ, 8.2 சதவீதம் பழங்குடி யினருக்கோ நிதி ஒதுக்கீடு செய்யப்படவே யில்லை. மொத்த திட்ட ஒதுக்கீட்டில் இதுவரை பட்டியல் இன மக்களுக்கான நிதி ஒதுக்கீடு 8.1 சதவீதத்தைத் தாண்டியதே இல்லை. பழங்குடி யினருக்கு 4 சதவீதத்தைத் தாண்டியது இல்லை. 1932ஆம் ஆண்டு உருவான பூனா ஒப்பந்தம் – பட்டியல் இன மக்களின் மக்கள் எண்ணிக்கைக்கேற்ப தொகுதி ஒதுக்கீடுகள் தரப்பட வேண்டும் என்று கூறுகிறது. இது, நிதி ஒதுக்கீட்டுக்கும் பொருந்தக் கூடியதே. இப்போது மோடி ஆட்சி, திட்டக் குழுவையே ஒழித்து விட்டதால் பட்டியல் இன மக்களுக்கான உட்கூறு திட்டமும் அதனுடன் சேர்ந்து ஒழிந்து போய்விட்டது. இனி, தலித் மக்களின் மக்கள் தொகைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக் கையையே சட்டரீதியாக எழுப்ப முடியாது.
• ‘நிலத்தைக் கைப்பற்றும்’ சட்டத்தை நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற முடியாமல், மூன்று முறை குடியரசுத் தலைவர் வழியாக அவசர சட்டமாக பிறப்பித்து வருகிறது பா.ஜ.க. ஆட்சி. ஆனால், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அதன் ஓட்டைகளை அடைத்து, புதிய வடிவில், 2014இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, குடியரசுத் தலைவர் வழியாக, அவசர ஆணை பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. இந்த நிலையில், 6 மாதம் மட்டுமே இந்த அவசர ஆணை சட்டப்படி நீடிக்க முடியும். அதற்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் இதை நிறைவேற்ற வேண்டும். இந்த மசோதாவுக்கு காங்கிர° உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் ஆதரவும் இருப்பதால் இரு அவைகளிலும் நிறைவேற்று வதில் எந்தத் தடையும் இல்லை. சமூக நீதிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, இந்த மசோதாவை பரிசீலித்து, குழுவில் இடம் பெற்ற அனைத்துக் கட்சியினரின் ஒப்புதலோடு டிசம்பர் 19, 2014 இல் பா.ஜ.க. அரசிடம் சமர்ப்பித்தது. இவ்வளவுக்கும் பிறகு, பா.ஜ.க. ஆட்சி, அவசர சட்டத்துக்கு உயிர் தர விரும்பாமல், அப்படியே அமைதியாக ‘காலாவதியாக்கி’ கல்லறையில் புதைத்துவிட்டது. அனைத்துக் கட்சி ஆதரவு இருந்தும் தலித் மக்களுக்கான இந்த சட்டத்தைக் கொண்டுவர பா.ஜ.க. விரும்பவில்லை. இவர்கள்தான் அம்பேத்கருக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பெரியார் முழக்கம் 11062015 இதழ்

You may also like...

Leave a Reply