ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து அதிகார மய்யம் நோக்கி…
• ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ – மேல் மட்டத்து ஊழல்களை வெளிக் கொண்டு வருவதற்கும், ‘அரசு இரகசியங்கள்’ என்ற போர்வையில் முடக்கப் பட்ட மக்கள் விரோத செயல்பாடுகளை வெளியே கொண்டு வருவதற்கும் மக்களுக்குக் கிடைத்த ஆயுதம். ஆனால், இந்தச் சட்டத்தை சுரண்டும் ஆளும் வர்க்கங்களால் செரிமானம் செய்ய முடியவில்லை; சட்டம் வழங்கியுள்ள உரிமைகள், காங்கிர° ஆட்சி காலத்திலிருந்து படிப்படியாக பறிக்கப்பட்டு வரு கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், 2014 ஆக°டிலிருந்து தலைமைத் தகவல் ஆணையர் பதவி நிரப்பப்படாமல் காலியாகவே வைக்கப்பட் டிருப்பதுதான். 2008ஆம் ஆண்டு இப்பதவிக்கு சைலேஷ் காந்தி என்பவர் நியமிக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு ஆக°டில் அவர் ஓய்வு பெற்று விட்டார்.
9 மாதங்களாக இப்பதவி காலியாகவே இருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்கும் நோக்கத்துடனேயே மோடி ஆட்சி, ஆணையர் பதவியை நிரப்பாமல் காலம் கடத்தி வருவதாக ஊடகங்களுக்கு சைலேஷ் காந்தி பகிரங்க கடிதம் எழுதினார். இதன் காரணமாக ஊழல் தடுப்பு அமைப்புகள், பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாக அமைப்புகள் போன்ற அரசு நிறுவனங்களிலிருந்து முக்கிய தகவல்கள் பெற முடியாமல் தடுக்கப்பட்டிருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரசாத் பூஷன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பொது நலன் வழக்கு தொடர்ந்தனர். இவ்வளவுக்குப் பிறகு (இந்தக் கட்டுரை அச்சேறும்போது) ஜூன் 8 ஆம் தேதி, மத்திய ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையராக கே.வி.சவுத்ரி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக டி.எம். பாசினும் நியமிக்கப்பட்டுள்ள செய்தி வந்துள்ளது. இருவரும் பார்ப்பனர்கள். இந்த நிலையில் 2015 பிப்ரவரியில், பிரதமர் அமைச்சகம் ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறது. அமைச்சர்கள் அறிவித்த சொத்து விவரங்களை இணையதளத்தில் எல்லோராலும் பார்க்க முடியாதவாறு தடை செய்துவிட்டது. உரிய அங்கீகாரம் பெற்று அதற்குள் சென்று பார்ப்பதற்கான அடையாள மொழிகள் (password) தெரிந்தவர்கள் மட்டுமே அமைச்சர்கள் சொத்துக்களை இணையதளத்தில் பார்க்க முடியும். வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிர்வாகத்தை நடத்துவோம் என்று தேர்தலுக்கு முன் மக்களுக்கு மோடி அளித்த உறுதிமொழி இப்படி காற்றில் பறக்கிறது.
• கல்வி, கலாச்சாரம் ஆய்வு மய்யங்களில் ‘இந்துத்துவா’ ஆதரவாளர்களை அதிகாரப் பொறுப்புக்கு கொண்டு வருவது பா.ஜ.க. அரசின் மற்றொரு திட்டமாகும். பள்ளிப் பாடத் தி ட்டங்களை மாற்றியமைப்பதற்கான திட்டம் – அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2005இல் தொடங்கப்பட்டு, அதற்கான பணிகள் முடியாத நிலையில் இப்பொறுப்பை ஏற்று வந்த கல்வி, ஆய்வு மற்றும் பயிற்சிக்கான நிறுவனத்தின் இயக்குனரான பர்வின் சின்களர் என்ற பெண் கணித ஆய்வாளரை மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, நெருக்கடி தந்து அவரை பதவி விலகச் செய்தார். ‘இந்துத்துவா’ கொள்கைக்கேற்ப பாடத் திட்டங்களை உருவாக்குவதற்கு ஏற்ற ஆட்களை நியமித்து வருகிறார்கள். அதன்படி, இந்திய வரலாறு மற்றும் ஆய்வு மய்யத்தின் (அய்.சி.எச்.ஆர்.) தலைவராக ஆய்வாளர்களிடையே அறியப்படாதவரும், தனது புலமையை வெளிப்படுத்த ஆய்வுகள் ஏதும் வெளியிடாதவருமான ஒய்.சுதர்சனராவ் எனும் பார்ப்பனர், இப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்லாமிய வெறுப்பில் ஊறிப் போனவர்; இவர் பதவி ஏற்றவுடன், சர்வதேசப் புகழ் பெற்ற ‘இந்திய வரலாற்று மதிப்பீடு’ (Indian Historical Review) என்ற சர்வதேச இதழின் ஆலோசனைக் குழுவை கலைத்தார். இந்தக் குழுவில் ரொமீலாதாப்பர், இஃப்ரான் ஹபீப், சதீஷ் சந்திரா போன்ற புகழ்பெற்ற ஆய்வாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதைத் தொடர்ந்து இதழின் ஆசிரியராக பணி யாற்றிய சய்யாச்சி பட்டாச்சாரியா, சுதர்சனராவின் போக்கு பிடிக்காமல் பதவியிலிருந்து விலகி விட்டார். இந்துமதம், புராணங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதே தனது நோக்கம் என்று ராவ் கூறி விட்டார்.
• அரசுத் தொலைக்காட்சியான ‘தூர்தர்ஷன்’ விவசாயிகளுக்கான தனிப்பிரிவு ஒன்றை தொடங்க இருக்கிறது. இதற்கான தலைமை ஆலோசகராக ஒளி பரப்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத நரேஷ்சிரோகி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், பா.ஜ.க.வின் விவசாயப் பிரிவான ‘கிசான் மோர்ச்சா’வின் செயலாளர்; இது ஒன்றே அவருக்கான தகுதி.
• ‘விவேகானந்த சர்வதேச மய்யம்’ என்பது ஆர்.எஸ்.எஸ். ஆதரவு நிறுவனம், இந்த அமைப்பில் செயல்பட்டவர்களான அஜித்டோவல், இப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர். நிர்பேந்திர மி°ரா பிரதமரின் முதன்மை செயலாளர் டேப்ராய் என்பவர் பிரதமர் அலுவலகத்தில் மற்றொரு முக்கிய பொறுப்பில் உள்ளார். இப்படி பல முக்கிய பொறுப்புகளில் அமர்ந்திருப்பவர்கள் விவேகானந்த சர்வதேச மய்யத்திலிருந்து வந்தவர்கள்தான். இந்த மய்யம் 1972இல் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளராக இருந்த ஏக்நாத் ராணடே என்பவரால் உருவாக்கப்பட்டது.
தகவல்: ‘பிரன்ட் லைன்’ ஜூன் 2, 2015
பெரியார் முழக்கம் 11062015 இதழ்