‘கருவறை’யிலிருந்து ‘கவர்னர்’ மாளிகை நோக்கி
கடவுளோடு உரையாடக்கூடிய மொழியாக வேதத்துக்கு பெருமை கொண்டாடுகிறது பார்ப்பனியம். வேதம் படித்த பார்ப்பனர்கள், ‘கடவுளுக்கு’ உரிமை கொண்டாடி, ‘கருவறையை’ தங்களுக்கான ‘தீட்டுப்படாத’ புனித இடமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ‘கருவறை’யைப் மட்டுமல்ல; ‘கவர்னர் மாளிகையையும்’ வேத பண்டிதர்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இமாசலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆச்சார் யாதேவ விரத் வேதம் படித்த பார்ப்பனர். அரியானாவில் ‘குருகுல குருnேத்ரா’ என்ற பெயரில் வேத பாடசாலை நடத்து கிறார். யோகா, பயிற்சியும் இயற்கை மருத்துவமனையையும் நடத்தி வரும் இவர், உலகம் முழுதும் வேத கலாச்சாரத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு வேதம், உபநிஷத்துக்களை ‘பிராமணர்’களுக்கு கற்பித்து வருகிறார்.
பீகாருக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் என்பவரும் வேத கலாச்சாரத்தைப் பரப்புவதற்காகவே அரியானாவில் பயிற்சி மய்யம் நடத்தி வருகிறார். ஆனால், இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். பா.ஜ.க. – தாழ்த்தப்பட்ட வர்களுக்காகவே தனியாக உருவாக்கியிருக்கும் ‘ஷெட்யூல்ட் கேஸ்ட் மோர்ச்சா’ என்ற அமைப்பின் தலைவர். என்னதான் வேதம் படித்தாலும், பா.ஜ.க. வின் தாழ்த்தப்பட்டோருக்கான தனிப் பிரிவில்தான் இவர் இயங்க முடியும். இனி அடுத்தடுத்த ஆளுநர்களாக வரப் போகிறவர்கள், இப்போது எந்தக் கோயிலில் அர்ச்சகர்களாக இருக்கிறார்களோ தெரியவில்லை. ஆளுநர் மாளிகைகள் – வேத மடாலயங்களாகி விடும்போல!
பெரியார் முழக்கம் 13082015 இதழ்