விருதுநகரில் ஜஸ்டிஸ் கட்சிப் பொதுக்கூட்டம்
அரசியல் பித்தலாட்டம் ஒரு நாட்டு மக்கள் முன்னேற வேண்டுமானால் அரசியலில் கட்சி, பிரதிகட்சி இருக்க வேண்டியதும், அவை ஒன்றுடன் ஒன்று போராட வேண்டியதும் நியாயமும் இயற்கையுமேயாகும். ஆனால் அவ்வித போராட்டமானது நியாயமான முறையிலும் ஒருவரை ஒருவர் துஷ்பிரசாரம் செய்யாமலும் இருப்பதே வரவேற்கத்தக்க விஷயமாகும். ஒரு கட்சியை மற்றொரு கட்சி தாக்குவதும் துஷ்டப் பிரசாரம் செய்வதும் ஒரு நிமிஷமும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாத காரியமாகும். நமது மாகாணத்தைப் பொறுத்த வரையில் காங்கிரசானது ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்வதையே தன் தொழிலாகக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சென்ற இந்திய சட்டசபை தேர்தலுக்குப் பின் ஜஸ்டிஸ் கட்சி அழிக்கப்பட்டு விட்டதாகவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒன்றுதான் இருப்பதாகவும் உண்மைக்கு மாறாக தோழர் சத்தியமூர்த்தி முதல் சாதாரணத் தொண்டர் வரை தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால், புதியதாக ஜனக்கட்சி ஆரம்பிக்கப்பட்டவுடன் தமிழ்நாட்டில் ஜஸ்டிஸ் காங்கிரஸ் என்ற இரண்டு கட்சிகள் இருப்பதாகவும், இந்நிலையில் மூன்றாவது கட்சிக்கு...