பார்ப்பனரல்லாதார் இயக்கம் சுற்றுப்பிரயாணத்தில் செய்த உபன்யாசங்களின் சாரம்
தலைவர் அவர்களே! தோழர்களே!!
நாங்கள் ஒரு மாத காலத்துக்கு மேலாகவே தமிழ்நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்து வருகிறோம். சென்னை நகரத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு போதிய ஆதரவும் ஒத்துழைப்பும் தந்து எங்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
சென்னை
சென்னையில் தான் இயக்கப் பிரமுகர்கள் என்பவர்கள் எங்களை சிறிதும் சட்டை செய்யவில்லை. அவர்களுக்கு பயம் என்றே கருதுகிறோம். ஏனெனில் பிரசாரம் ஏற்பட்டால் பிறகு தங்களுக்கு மரியாதை இல்லாமல் போகுமே என்கின்ற பயமேயாகும். காலமெல்லாம் பட்டம், பதவி, பணம் பெற்று சுகமாக தூங்கிக் கொண்டு இருந்துவிட்டு சமயம் வரும்போது எப்படியோ தந்திரம் செய்து பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றி அது செய்கிறேன் இது செய்கிறேன் என்று வாயளந்து பதவிபெறும் வழக்கம் பட்டணத்தில் தான் இருந்து வருகிறது. ஆனால் இனி அது பலிக்காது என்று கருதுகிறேன்.
ஜனங்களிடத்தில் வந்து தாங்கள் செய்ததை சொல்லி எதிரிகளின் விஷமங் களை மறுத்துக் கூறினாலல்லது இனி தேர்தல்களில் வெற்றிபெற முடியாது.
~subhead
மதராஸ் எந்த இயக்கத்திலுமே மோசமான தன்மையுடையது.
~shend
நான் காங்கிரசிலிருக்கும் போது கூட எங்கள் முதல்வேலை மாகாண காங்கிரஸ் ஸ்தாபனத்தை சென்னையை விட்டுக் கடத்திக்கொண்டு போனதோடு அவர்கள் தலைமைப் பதவிகளையும் பறித்துக் கொண்டதே யாகும். கிட்டத்தட்ட இரண்டு வருஷகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஸ்தாபனம் என் வீட்டின் தாழ்வாரத்திலேயே இருந்தது. அந்தக் காலம்தான் தமிழ்நாடு காங்கிரஸ் வேலை இந்தியாவுக்கே வழிகாட்டியாய் இருந்தது.
~subhead
ஸ்தாபனத்தை சென்னையில் இருந்து மாற்ற வேண்டும்
~shend
அதுபோல் தென்னிந்திய நல உரிமை ஸ்தாபனம் இச்சென்னையை விட்டு வெளியூருக்கு கொண்டு போகப் பட்டால்தான் அது ஏதாவது உருப்படி ஆகமுடியும். நாங்கள் சென்னைக்கு வந்து இங்குள்ள நிலையைப் பார்த்தவரை ஒருவருக்கொருவர் குழி தோண்டும் வேலையில் ஈடுபட்டிருப் பதைத்தான் பார்க்க முடிந்தது. காரியம் செய்வதற்கு யாரையும் காணோம். சென்னை பிரமுகர்களுக்குப் பொது ஜனங்களிடம் நம்பிக்கை கிடையாது.
ஆனபோதிலும் நாங்கள் இவர்களுக்கு ஆக எதையும் எதிர்பார்க்க வில்லை. இயக்கத்தை இந்த மாகாணத்து பார்ப்பனரல்லாதார் மக்கள் எல்லோருக்கும் பொதுவானது என்று கருதுகிறோம். யாரோ சிலர் மாத்திரம் தங்கள் சொந்தத்துக்கு சுயநலம் அனுபவித்துக் கொள்ளுவதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. யாரோ சிலர் கட்சியின் நன்மையில் கவலை யில்லாமல் நன்றி விஸ்வாசமற்றவர்களாய் நடந்து கொள்வதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது.
~subhead
காங்கிரசை ஆதரித்தவர்கள் வருந்துகிறார்கள்
~shend
வரப்போகிற தேர்தலில் மதராஸ்காரர்களால் எவ்வளவு முட்டுக் கட்டை ஏற்பட்டாலும் நாம் வெற்றி பெறப்போகிறோம் என்பதில் எங்களுக்கு தைரியம் இருக்கிறது. பொது ஜனங்கள் உண்மை உணரக்கூடிய காலம் சமீபத்தில் வந்துவிட்டது. இப்போதே அவர்கள் காங்கிரசை இரண்டொரு தேர்தலில் ஆதரித்த குற்றத்தை உணர்ந்து விசனப்படுவதைப் பார்த்து வருகிறோம். இந்தச் சென்னையிலும் கூட சில நபர்கள் தோல்வி அடைய நேரிட்டாலும் அவசியம் பார்ப்பனரல்லாதாருக்கு தான் பெரும் வெற்றி ஏற்படும்.
இந்திய சட்டசபை தேர்தல்களிலும் ஜில்லா போர்டு தேர்தல்களிலும் தோல்வி ஏற்பட்டது என்று சொன்னாலும் அது நம் பிரசாரமில்லாக் குறையாலும், நம்மவர்களே ஒருவருக்கொருவர் துரோகம் செய்த தன்மையாலும், சிலர் சமயோசிதவாதிகளாய் விட்ட காரணத்தாலுமே தவிர பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் மீது ஏற்பட்ட குறைகளாலல்ல.
~subhead
பார்ப்பன “வெற்றி”க்குக் காரணம்
~shend
அதுபோலவே காங்கிரசுக்கு வெற்றி ஏற்பட்டது என்று சொன்னாலும் பார்ப்பனர்களுடைய விடாமுயற்சியும், கட்டுப்பாடும், பத்திரிகை பிரசாரமும், சமூக அபிமானமும், துரோகம் செய்யாத குணமும், கூலிகளின் வேலையும் எல்லாம் சேர்ந்தே தவிர அவர்களது கொள்கைக்கு ஆக ஏற்பட்ட வெற்றி அல்ல என்பதே என் அபிப்பிராயம். இந்தக் காரணத்தால்தான் தலைவர்கள் இயக்க பிரமுகர்கள் என்பவர்களின் செய்கையில் ஏற்பட்ட தோல்விகளை மாற்றி வெற்றி பெறச் செய்யலாம் என்று முன் வந்திருக்கிறோம்.
~subhead
நம் கொள்கைகள்
~shend
நம்முடைய கொள்கைகள் மிக மேலானவை. மனித சமூகத்துக்கு இன்றியமையாதவை. வெறும் பொது நோக்கையே கொண்டவை. அதனாலேயே இந்த இருபது வருஷ காலமாக அவை நிலைத்து இருப்பதுடன் நாளுக்கு நாள் பரவி வந்திருக்கிறது. நாம் எவ்வித ஆடம்பரமும் மக்கள் ஏமாறும்படியான போலிக்கிளர்ச்சிகளும் செய்யாமலேயே நம் இயக்கமும் கொள்கைகளும் வலிவு பெற்றுவருகின்றன.
~subhead
நிலை குலைந்த காங்கிரஸ்
~shend
ஆனால் காங்கிரஸ் ஆரம்பித்த காலம் முதல் சிறப்பாக ஒத்துழையாமை ஆரம்பித்த 1921ம் வருஷம் முதல் வருஷத்துக்கு வருஷம் கொள்கை மாறுதல், ஒவ்வொன்றிலும் தோல்விகள், ஒருவருக்கொருவர் அபிப்பிராய பேதங்கள், கொள்கைகளில் உள் கலகங்கள் முதலியவை நடந்த வண்ணமாகவே இருந்து வருகின்றன.
1921 வருடத்திய ஒத்துழையாமை திட்டங்களை சென்னைப் பார்ப்பனர்கள் அப்போது ஒப்புக்கொள்ளவே இல்லை. இதே தோழர்கள் சத்தியமூர்த்தியார் உள்பட இந்து, மித்திரன் பத்திரிகை உள்பட தோழர் சீனிவாசய்யங்கார் முதலிய பல பிரமுகர்கள் வரை எல்லோரும் அதை எதிர்த்து தொல்லை விளைவித்தே வந்தார்கள். அத்தொல்லைகள் பெற்ற குழந்தைதான் சுயராஜ்யக்கட்சி என்பதாகும். அதனால் காங்கிரஸ் ஒத்துழையாமைத் திட்டமும் நிர்மாணத்திட்டமும் பாழ்பட்டு நசுங்குண்டன. பிறகு காந்தியார் காங்கிரசிலிருந்து ஓய்வெடுத்தார்.
~subhead
சைமன் பஹிஷ்காரம்
~shend
ஒத்துழையாமையும் நிர்மாணத்திட்டமும் ஒழிந்தது என்று தெரிந்த உடன் மறுபடியும் சென்னை பார்ப்பனர்கள் முன்வந்து காந்தியாரை திரும்பவும் பயன்படுத்திக்கொண்டு சைமன் கமிஷனை பஹிஷ்கரிப்பது என்ற நாடகத்தை நடத்தினார்கள்.
மற்றொருபுறத்தில் நேரு முதலிய தலைவர்கள் ஆளுக்கொரு அரசியல் திட்டம் ஏற்படுத்தி காங்கிரசில் அரங்கேற்றி பார்லிமெண்டுக்கு சமர்ப்பித்தார்கள். அவைகள் குப்பைத் தொட்டிக்குப் போனவுடன் உப்பு சத்தியாக்கிரக நாடகத்தை நடத்தினார்கள். அது பொஸ்ஸென்று போனவுடன் இர்வின் காந்தி ஒப்பந்த நாடகத்தை நடத்தி கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டு ஜெயிலில் இருந்து விடுதலை பெற்று வெளியானார்கள். அதன் பயனாய் காந்தியார் வட்டமேஜை மகாநாட்டுக்கு போய் காங்கிரசின் யோக்கியதையும் காந்தியாரின் யோக்கியதையும் இந்தியாவின் யோக்கியதையும் உலகமே அறிந்து சிரிக்கும்படியான நிலைமையை எய்தி மானங்கெட்டுத் திரும்பினார்கள். அதற்குப் பிறகும் “நாங்கள் பயந்து ஓடவில்லை ஒண்ணுக்குப் போக மறைந்தோம்” என்று சொல்லி தோழர் ஜவஹர்லால் வீரத்தைக் காட்டுவதற்கு ஆக மறுபடியும் ஒரு சட்டமறுப்பு ஆரம்பித்தார்கள்.
~subhead
சட்டமறுப்பு நிறுத்தப்பட்டது
~shend
இதன் பயனே “காங்கிரஸ் சட்டமறுப்பைக் கைவிட்டுவிட்டது” என்று காங்கிரஸ் பச்சையாய் வெளிப்படையாய் தீர்மானம் செய்ய வேண்டி வந்தது. அந்தப்படி ஒரு தீர்மானமும் செய்தார்கள். அதனால் ஏற்பட்ட அவமானத்தையும் தோல்வியையும் மறைத்துக்காட்டி பாமர மக்கள் கண்களில் மிளகாய்ப் பொடிபோட காந்தியார் வில்லிங்டன் பிரபுவை காண பல தடவை முயற்சித்தார்; பலர் தூது நடந்தார்கள். வில்லிங்டன் பிரபு ஒரே அடியாய் காந்தியாருக்கு பேட்டி கொடுக்க மறுத்துவிட்டார்.
இவ்வளவு சிக்ஷைகள் ஏற்பட்ட பிறகே தோழர் காந்தியார் “காங்கிரசின் நன்மைக்கு ஆகவே நான் காங்கிரசை விட்டு விலகுகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து காங்கிரசுக்கும் தமக்கும் சம்மந்தம் இல்லை என்றும் “காங்கிரசில் நான் ஒரு நாலணா மெம்பராகக்கூட இல்லாமல் விலகிவிட்டேன்” என்றும் உலகத்துக்கு வெளிப்படுத்தினார்.
~subhead
சட்டசபை பிரவேசம் ஆளுக்கு ஒரு அபிப்பிராயம்
~shend
இப்பொழுது “பொதுவுடமை வீரர்” ஜவஹர்லால் அவர்களை கதா நாயகனாக வைத்து சட்டசபை பிரவேசமும் மந்திரி பதவி ஏற்றலும் என்கின்ற நாடகம் நடக்கின்றது.
சட்டசபை பிரவேசத்துக்கோ மந்திரி பதவி ஏற்றலுக்கோ என்ன அவசியம்? அங்கு போய் என்ன செய்வது? என்கின்ற விபரங்களைச் சொல்லி பொது ஜனங்களிடம் ஓட்டுக் கேட்க இவர்களிடம் ஏதாவது சரக்கு இருக்கின்றது என்று யாராவது சொல்லமுடியுமா என்று பாருங்கள்.
சட்டசபைக்கு போவதைப்பற்றியும் போய் என்ன செய்வது என்பதைப்பற்றியுமே காங்கிரஸ் தலைவர்களுக்குள் அபிப்பிராய பேதம் பலமாக இருக்கிறது.
அதுபோலவே மந்திரி பதவிகளை ஏற்பதைப்பற்றியும் ஏற்றபின் என்ன செய்வது என்பதைப் பற்றியும் பலமான அபிப்பிராய பேதம் இருந்து வருகின்றது.
எல்லா இந்திய காங்கிரஸ் தலைவருக்கும் மாகாண காங்கிரஸ் தலைவருக்கும் சுயராஜ்ஜியம் என்பதிலேயே அபிப்பிராய பேதம் இருந்து வருகின்றது.
மாகாணத்துக்கு மாகாணம் தலைவர்களுக்குள்ளாகவும் அபிப்பிராய பேதம் என்பது மாத்திரமல்லாமல் ஒரே மாகாணத்தில் மகாநாட்டுக்கு மகாநாடு அபிப்பிராய பேதமான தீர்மானங்கள் நடைபெற்று வருகின்றன.
~subhead
இவர்களிடம் அதிகாரம் கொடுக்கலாமா?
~shend
இப்படிப்பட்ட கூட்டத்தார் இடம் புதிய சீர்திருத்தங்களையும் அதன் அமுல்களையும் கொடுத்தால் நாடு என்ன கதி ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள். குரங்கு கையில் சிக்கின பூமாலையின் கதிதானேயாகும்.
“எலக்ஷன் நடந்த பிறகு நாம் என்ன செய்வது என்பதை யோசித்துக் கொள்ளலாம்” என்று வேலைக் கமிட்டியிலும் காங்கிரஸ் கமிட்டியிலும் தீர்மானம் போட்டு காங்கிரஸ்காரர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
தங்களுக்கே இன்னது செய்வது என்று தெரியாதவர்களை வெளியில் சொல்ல தைரியமில்லாதவர்களை சட்டசபைக்கு அறிவுள்ள மனிதர்கள் அனுப்பலாமா என்று யோசித்துப்பாருங்கள்.
~subhead
சொன்னபடி நடக்காதவர்கள்
~shend
ஒரு காரியம் மாத்திரம் நான் உறுதியாய் சொல்லுவேன். அதாவது காங்கிரஸ்காரர்கள் சொன்னபடி நடந்து கொள்ள முடியாதவர்கள். இதுவரை அவர்கள் இந்த 15 வருஷ காலமாக ஒரு திட்டத்திலாவது ஒரு தேர்தலிலாவது அவர்களால் சொன்னபடி நடந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர்களுடைய வேலைத்திட்டமும் கவலையும் எப்படி பொது ஜனங்களை ஏமாற்றுவது என்பதும் எதைச் சொன்னால் தேர்தலில் வெற்றிபெறலாம் என்பதுமேயல்லாமல் காரியத்திலும் அனுபவத்திலும் சாத்தியமான கொள்கைகளோ திட்டங்களோ அவர்களுக்கு கிடையாது. இதனாலேயே அவர்கள் ஒரு திட்டத்தை ஒரு வருஷத்துக்குக்கூட வைத்திருக்க முடியாமலும் ஒரு விதத்திலாவது சொன்னபடி நடந்துகொள்ள முடியாமலும் இருந்து வருகிறார்கள். இது காங்கிரஸ் தலைவர்களுடைய குற்றமென்று நான் சொல்ல வரவில்லை. மற்றென்னவென்றால் காங்கிரஸ் ஸ்தாபனம் என்னும் அந்த யந்திரத்தின் தன்மையேயாகும். அதற்கு ஏற்றாப்போல் நம் பொதுஜனங்களின் அறியாமையையும் கல்வி அற்ற தன்மையையும் பயன்படுத்திக் கொள்ள மத உணர்ச்சிபோல் காங்கிரஸ் உணர்ச்சியை ஊட்டிவிட்டதால் அவர்கள் இவ் விஷயத்தில் பகுத்தறிவை பயன்படுத்த இடமே இல்லாமல் போய்விட்டது.
இந்த நிலைமை காங்கிரஸ் யந்திரத்துக்கு மிக அனுகூலமாய் போய்விட்டதின் காரணமே அது ஒரு நிலையாகவும் நாணயமாகவும் அனுபவ சாத்தியமாகவும் இருக்க முடியவில்லை.
~subhead
ஜஸ்டிஸ் கட்சி
~shend
ஜஸ்டிஸ் கட்சி என்னும் தென் இந்திய நல உரிமைச் சங்கமாகிய பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் கொள்கையில் திட்டத்தில் ஏதாவது ஒரு பிசகு நடந்ததாக எடுத்துக் காட்டுங்கள் பார்க்கலாம். இந்த 20ஆண்டுகாலமாக அவர்கள் கொள்கையில் என்ன மாறுதல் காண முடிந்தது. எதில் அவர்கள் தோல்வி அடைந்தார்கள்? எதில் அவர்கள் பின்னால் சென்றுவிட்டார்கள்? பொது ஜனங்களுக்கு அவர்கள் கொடுத்த வாக்கில் எதில் தவறினார்கள்? என்பவைகளை நன்றாய் யோசித்துக் கூறுங்கள். அதிகாரத்தில் பதவியில் இருப்பவர்கள் மீது பாமர மக்களுக்கு அதிருப்தி ஏற்படுவது சகஜம்தான்.
அதிலும் ஒரு கட்சியானது 15ஆண்டுகாலம் அதிகாரத்தில் இருந்தால் எவ்வளவு எவ்வளவு பேர்களுடைய விரோதத்தையும் நிஷ்டூரத்தையும் அதிருப்தியையும் பெற்றிருக்கும் என்பதை நான் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
ஆதலால் பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் மக்களை ஏமாற்றியும் கூலிகளை விட்டு வையச்சொல்லி இருப்பதையும் பற்றி யாரும் ஏமாந்து விடாதீர்கள். ஜஸ்டிசார் அதிகாரத்தில் இருந்த காலத்தில் காங்கிரசுக்கு அனுகூலம் செய்யவில்லை என்றும் சர்க்காரோடு ஒத்துழைத்தார்கள் என்றும் குற்றம் கூறப்படுகிறது. குறிப்பிட்டு அது என்ன குற்றம் செய்தது என்று இதுவரை ஒருவருக்காவது எடுத்துச் சொல்ல ஆதாரம் இல்லை. பார்ப்பனர்களில் காங்கிரசுக்கு எவ்வளவு விரோதியானாலும் அவர்களை பார்ப்பனர்கள் சேர்த்துக்கொள்ளுகிறார்கள். தோழர் கனம் சீனிவாச சாஸ்திரியார் என்கின்ற பார்ப்பனர் காந்தியை ராஜத்துரோகி என்று சொல்லி கைதி செய்யுமாறு அரசாங்கத்துக்கு தைரியமும் உதவியும் செய்தவர். இன்று அவர் பார்ப்பனர்கள் வாயிலும் பத்திரிகைகளிலும் மகாகனம் சாஸ்திரிவாளாய் விளங்குகிறார். அவர் கெட்ட கேட்டுக்கு ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப்புதைக்க வேண்டும் என்கிறார். சத்தியமூர்த்தியாரும் இவரும் இரட்டைப்பிள்ளை சகோதரர் போல் நடந்துகொள்ளுகிறார். இதுமாத்திரமா? தோழர் காந்தி வந்தாலும் சாஸ்திரியாரைப் போய் பேட்டி கண்டுவிட்டு அவர் வாயால் மகாத்மா காந்தி என்று சொல்லச் செய்துவிட்டு வருகிறார்.
~subhead
பார்ப்பனர் அல்லாதார் போர்
~shend
ஆகையால் பார்ப்பனர்களில் ஒருவர் காந்தி துரோகியாகவும் காங்கிரஸ் துரோகியாகவும் தேசத் துரோகியாகவும் தேசத்தைக் காட்டிக் கொடுத்து பட்டம் பதவி பெற்றவராகவும் இருந்தால் அவரைப்பற்றி பார்ப்பனப் பத்திரிகைகளோ பார்ப்பனக் கூலிகளோ ஒன்றும் சொல்வதில்லை. சமூகத்திலும் அப்படிப்பட்டவரை பஹிஷ்கரிப்பதும் இல்லை. அதற்குப் பதிலாக பஹுமானப்படுத்துகிறார்கள்.
பார்ப்பனரல்லாதார்களில் யாராவது இம்மாதிரி செய்திருந்தால் எவ்வளவு இழிவுபடுத்தி இருப்பார்கள் என்பதை யோசித்துப்பாருங்கள்.
எதற்காக இவைகளைப்பற்றி பேசுகிறேன் என்றால் காங்கிரஸ்ஜஸ்டிஸ் கிளர்ச்சிகள் என்பது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் போரே தவிர தேசாபிமானம், தேசத்துரோகம் என்பது அல்ல என்பதற்காகவே பேசுகிறேன்.
~subhead
காங்கிரஸ் திட்டங்கள்
~shend
காங்கிரசுக்காரர்கள் கூறும் பூரண சுயேச்சைக்கு என்ன அருத்தம் என்று பாருங்கள். தோழர் சத்தியமூர்த்தியார் ஆனைமலை பிரசங்கத்தில் பூரண சுயேச்சை என்பதற்கு குடியேற்ற நாட்டு அந்தஸ்து என்று பொருள் கூறவில்லையா? பிரிட்டிஷாருடன் சமாதானம் செய்துகொள்வதுதான் பூரண சுயேச்சையின் தத்துவம் என்று கூறவில்லையா?
சட்டசபைக்கு போவது மந்திரி பதவி ஏற்பதற்கு என்று சத்திய மூர்த்தியார் கூறவில்லையா? மந்திரி பதவி ஏற்றது சேலத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக என்று மூர்த்தியார் கூறவில்லையா?
மந்திரி பதவி ஏற்பது என்றால் அது பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துழைப்பதாகுமே ஒழிய பூரண சுயேச்சைக்கு மார்க்கமாகாது என்று காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் கூறவில்லையா?
ஆகவே சுயராஜ்யம் என்பதிலும் சுயேச்சை என்பதிலுமே எப்படிப்பட்ட சுயராஜ்யம், எப்படிப்பட்ட சுயேச்சை என்பதிலுமே இன்னமும் காங்கிரஸ் தலைவருக்கும் மாகாண காங்கிரஸ் தலைவருக்கும் நேர்மாறான அபிப்பிராய பேதத்தில் இருக்கும்போது ஜஸ்டிஸ்கட்சி சர்க்காருடன் ஒத்து உழைக்கின்றது என்றால் என்ன அருத்தம் என்று கேட்கின்றேன்.
~subhead
கராச்சி திட்டம்
~shend
கராச்சி திட்டத்திலாவது நியாயம் இருக்கிறதா என்று பாருங்கள். அதில் ஜாதி பாகுபாடுகளைக் காப்பாற்றுவதற்கு உத்தரவாதம் இருக்கிறது என்று பந்தயங்கட்டி கூறுகிறேன். இதை யாராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றேன். இந்த நிலையில் எனது திட்டங்களை சில அறிவிலிகள் கராச்சி திட்டம் என்று கூறுகிறார்களே, இது யோக்கியமா? என்று கேட்கின்றேன்.
அந்தப்படி எனது திட்டம் கராச்சி திட்டத்தில் இருந்து திருடியதாய் இருந்திருந்தால் அதைத் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் “ராமசாமி திட்டம் பொது உடமை திட்டம்” என்று சர்க்காருக்கு எடுத்துக்காட்டி இருப்பாரா என்று கேட்கின்றேன்.
~subhead
ஜஸ்டிஸ் திட்டம்
~shend
ஜஸ்டிஸ் கட்சியாரின் திட்டம் சட்டப்படி கிளர்ச்சி செய்வதும் சுயராஜ்யம் பெறுவதும் அரசியலில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்குவதும் என்று 20 வருஷங்களுக்கு முன்னையே வகுத்து இருக்கிறார்கள். இந்தக் கொள்கைக்குக் கட்டுப்பட்ட எவரும் அங்கத்தினராகலாம் என்று ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதில் இதுவரை ஒரு பார்ப்பனராவது வந்து சேரவில்லை.
சட்டத்திற்கு அடங்கிக் கிளர்ச்சி செய்து சுயராஜ்யம் பெறுவதே கொள்கையாகக் கொண்ட மிதவாதிகள் என்பவர்களில் கூட ஒருவரும் மெம்பராகவில்லை. இதனால்தான் ஜஸ்டிஸ்கட்சி என்பது பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றும் மிதவாத பார்ப்பனரும் காங்கிரசை ஆதரிப்பதால் காங்கிரசை பார்ப்பனர்கள் இயக்கம் என்றும் சொல்லுகிறேன்.
~subhead
ஜஸ்டிஸ் இயக்கம் ஏற்பட்ட பிறகு
~shend
ஆனால் இந்தப் பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்ட பிறகுதான் நமது நாட்டில் பார்ப்பனரல்லாதார் நிலை அரசியலிலும், சமூக இயலிலும், பொருளாதார இயலிலும் சிறிதாவது முற்போக்கடைந்திருக்கிறது. இதற்கு புள்ளி விவரங்களை வேண்டுமானாலும் நான் காட்டக்கூடும். 1920க்கு முன் உள்ள உத்தியோகம், படித்தவர்கள் எண்ணிக்கை, ஸ்தல ஸ்தாபனங்களின் நிர்வாகிகள், வக்கீல்கள், பட்டதாரிகள், நீதி நிருவாக உத்தியோகஸ்தர்கள், ஹைகோர்ட்டு, கவர்னர் ஆலோசனை சபை முதலியவைகளின் அங்கத்தினர்கள் ஆகிய லிஸ்டைப் பாருங்கள். இப்போது உள்ளவர்களின் லிஸ்டைப் பாருங்கள், அப்பொழுது பார்ப்பனரல்லாதார் எத்தனை பேர்? இப்போது பார்ப்பனர் அல்லாதார் எத்தனை பேர்? என்று கணக்குப்போட்டுப் பாருங்கள். சும்மா பொறுப்பில்லாமல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தேசத்துரோக இயக்கம் என்று சொல்லிவிட்டால் போதுமா என்று கேட்கின்றேன்.
இது எப்படியோ இருக்கட்டும் என்றே வைத்துக் கொள்ளுங்கள். இந்த பார்ப்பனரல்லாத இயக்கம் ஏற்பட்ட பின்பு பொது மக்களுக்கு அல்லது தேசத்துக்கு அதற்கு முன் இல்லாத எந்த கெடுதி புதிதாய் ஏற்பட்டது என்று யாராவது ஒரு விரலை விட முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள்.
அல்லது பார்ப்பனரல்லாதார் இயக்கம் இல்லாத எந்த மாகாணத்தை விடவாவது நமது மாகாணம் எதிலாவது பிற்போக்கடைந்திருக்கிறது என்றாவது யாராவது சொல்லமுடியுமா என்று பந்தயம் கூறிக்கேட்கின்றேன்.
~subhead
நமது மாகாணமே மேலானது
~shend
பல விஷயங்களில் மற்ற மாகாணத்தைவிட நமது மாகாணம் பார்ப்பனரல்லாதார் ஆட்சியால் முன்னணியில் இருக்கிறது என்று நான் புள்ளி விவரங்களை காட்டக்கூடும். ஆகையால் பார்ப்பனர்கள் சிலருக்கு முன் போல ஏகபோக உரிமை இல்லை என்பதற்காக பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை குறை கூறுவதால் பயன் என்ன என்று கேட்கிறேன்.
~subhead
காங்கிரசின் கதி
~shend
எங்களால் காங்கிரசை ஒன்றும் செய்ய முடியாது என்று காங்கிரஸ்காரர்கள் மனப்பால் குடிப்பதை மறந்துவிடும்படி எச்சரிக்கை செய்கிறேன்.
காங்கிரசைப் பொறுத்தவரை எங்களால் செய்யப்பட்ட காரியங்கள் என்னவென்றால் இந்த 10, 15 வருஷ காலமாக காங்கிரசின் சூழ்ச்சிகள் ஒரு துறையிலும் பலிதமாகாமல் செய்திருக்கிறோம். இன்றைய தினமும் சொல்லுகிறேன், காங்கிரசின் இன்றைய கதி என்ன என்று யோசித்துப் பாருங்கள். உபயதுல்லா, குப்புசாமி போன்றவர்கள் இஷ்டப்படி தரகு வியாபாரம் நடத்தத்தக்கதாய் காங்கிரஸ் இருந்து வரச் செய்துவிட்டோம். மேலும் அதன் கை கால்களைக் கட்டிப் போட்டு ஒரு மூலையில் உட்காரவைத்துவிட்டோம். அதாவது அதற்கு ஒரு கொள்கையும் இல்லாமல் செய்துவிட்டோம். எந்தக் கொள்கையையும் சொல்லிக்கொண்டு வெளிவருவதற்கு யோக்கியதையில்லாத மாதிரியில் அதன் வண்டவாளங்களை வெளிப்படுத்தி விட்டோம். நாளைக்கு வரப்போகும் சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் எந்தப் பிரச்சினையைச் சொல்லி ஓட்டு கேட்கக்கூடும் என்று யோசித்துப்பாருங்கள்.
இப்பொழுதே கொள்கை விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் திக்கு முக்காடுகிறார்கள்.
மக்களுடைய முட்டாள்தனமும் கூலிகளுடைய காலித்தனமும் அல்லாமல் காங்கிரசுக்கு வேறு என்ன ஆதரவு இருக்கிறது என்று கேட்கிறேன்.
~subhead
காங்கிரசின் ஓட்டுப் பிரச்சினை என்ன?
~shend
ஒரு ஓட்டர் ஒரு காங்கிரஸ் அபேட்சகரைப் பார்த்து நீங்கள் ஓட்டுப் பெற்று வெற்றியடைந்தால் அங்கு சென்று என்ன செய்வீர்கள் என்று கேட்டால் ஜவஹர்லால் தானாகட்டும், சர்தார் தான் ஆகட்டும், ராஜாஜி தானாகட்டும் என்ன பதில் சொல்லுவார்கள்.
காந்திக்கு ஓட்டுப்போடுங்கள் என்பார்கள். காந்தியார் காங்கிரசில் இல்லையே என்றால் காங்கிரஸ் கட்டளைப்படி நடப்போம் என்பார்கள். காங்கிரஸ் கட்டளை என்ன என்றால் மகாத்மா உத்திரவுப்படி என்பார்கள். மகாத்மா எங்கே என்றால் பூத கண்ணாடி தேடுவார்கள்.
இந்த பரிதாபகரமான நிலையில் இன்று காங்கிரசை வைத்தது அதன் பித்தலாட்டங்களை தைரியமாய் வெளியாக்கும் நாங்கள் தான் என்று பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளுகிறோம்.
~subhead
ஜஸ்டிஸ் இயக்கம் இல்லாதிருந்தால்
~shend
ஜஸ்டிஸ் இல்லாவிட்டால் இந்தப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்களை மெத்தைப் படிக்கட்டுக்கு படிக்கல்லாய் மதித்து எங்கள் தலையில் கால் வைத்து நடந்து கொண்டிருப்பார்கள். ஆதலால் நாங்கள் என்ன செய்தோம் எதில் வெற்றி பெற்றோம் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் காட்டவேண்டும் என்று கேட்கிறேன். நாங்கள் இல்லாதிருந்தால் பார்ப்பனரல்லாதார் கதி என்ன ஆயிருக்கும் என்பதற்கு பழைய சரித்திரத்தைப் படித்துப்பாருங்கள். தோழர் காந்தியார் மெல்ல மெல்ல வந்து கடசியாக வருணாச்சிரம தர்மத்தை காப்பாற்றவும் ராமராஜ்யத்தை ஏற்படுத்தவும்தான் நான் சுயராஜ்யம் கேட்கிறேன் என்று சொல்லி ராமாயண காலக்ஷேபமே மேடைப்பிரசங்கமாக இருக்கும்படி செய்துவிட வில்லையா என்று பாருங்கள். அப்படிப்பட்டவர் இன்று மூலையில் உட்கார்ந்திருக்க வேண்டிய நிலைமை யாரால் ஏற்பட்டது? நமது ஓயாஉண்மையான உழைப்பால் அல்லவா?
“காங்கிரசுக்கே வெற்றிமேல் வெற்றி” ஏற்பட்டாலும் அவ்வெற்றிகள் எல்லாம் பார்ப்பனரல்லாதாருக்கே எப்படி வந்து சேர்ந்தது, நமது ஓயா உழைப்பாலல்லவா?
இப்படிப்பட்ட நாம் இந்த சந்தர்ப்பத்தில் ஓய்ந்து இருந்து விட்டோமானால் நமது இவ்வளவு நாளைய வேலையும் கெட்டுப்போகும் என்று பயந்தே நாங்கள் வந்திருக்கிறோம்.
ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் இதை கவனத்தில் வைத்து எங்கள் ஆசைகளை ஈடேற்றி வைக்க வேண்டுகிறோம்.
குறிப்பு: கோவை, தஞ்சை, திருச்சி, சேலம், ராசிபுரம், மதராஸ், வேலூர், நாட்டறம்பள்ளி, அம்பலூர் ஆகிய இடங்களில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றி ஜூன் 22 முதல் ஜூலை 4 வரை ஆற்றிய சொற்பொழிவுகளின் சுருக்கம்.
குடி அரசு சொற்பொழிவு 12.07.1936