பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரக்கமிட்டியின் சுற்றுப்பிரயாண திட்டம்
ஜஸ்டிஸ் கட்சியில் வறுமை நீங்குமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் பேசியதாவது:
இன்று இந்தியாவில் எந்தக் கட்சியாலும் வறுமை நீங்காது என்றும், வறுமை நீங்க காங்கிரசிலும் கூட திட்டம் இல்லை என்றும் இந்து சமூகத்தில் உள்ள ஜாதிப் பாகுபாடுகளே வறுமைக்கும், செல்வத்துக்கும் பெரும்பாலும் காரணமாய் இருக்கிறதென்றும், அது ஒழிக்கப்பட்டால் இன்றுள்ள இவ்வளவு வறுமை இருக்காதென்றும் வறுமை என்று சொல்லப்படுவது பெரும்பாலும் கீழ் ஜாதிக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்குள்தான் இருக்கிறது என்றும் உதாரணமாக பார்ப்பானையும், “பறையனையும்” எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் பார்ப்பான் எவனாவது வறுமையில் கஷ்டப்படு கிறானா? எவனாவது மூட்டை தூக்குகிறானா? சரீரக் கஷ்டமான வேலை செய்கிறானா? என்றும், பறையர்கள் முதலிய படிப்படியான கீழ்ஜாதிகள் என்பவைகள் எவ்வளவோ கஷ்டப்படுவதுடன் வறுமையால் படிப்பில்லாமல் வீட்டுவசதி, வயித்திய வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்றும், ஜாதி ஒழிந்தால் வறுமைகள் அநேகமாய் குறையும் என்றும், ஒரு அளவுக்கு செல்வமும் உழைப்பும் சமமாக பிரிக்கப்படும் என்றும், காங்கிரஸ் இந்த கொள்கைக்கு விரோதம் என்றும், காங்கிரஸ் திட்டத்திலும் காந்தீயத்திலும் ஜாதி ஒழிப்பு திட்டம் இல்லை என்றும், காந்தியார் ஒரு இடத்திலாவது ஜாதி பாகுபாடுகள் அடியோடு ஒழிந்தாக வேண்டுமென்று சொல்லவே இல்லை என்றும், காங்கிரசின் வறுமை நீக்கும் திட்டமெல்லாம் கதர்தான் என்றும், கதருக்கு இதுவரை 10 கோடி ரூபாய் பாழாயிருக்கலாம் என்றும், எப்படி எனில் 2 அணா துணிக்கு 10 அணா 12 அணா வீதம் விலைகொடுத்து வாங்கி கட்டியவர்களின் நஷ்ட பணம் எவ்வளவு இருக்கலாம் என்று பார்த்தால் விளங்கும் என்றும், அப்படியெல்லாம் செய்தும் கதர் நிர்வாகிகள்தான் கொள்ளைபோல் அதிக சம்பளம் பெற்று வாழ முடிந்ததே தவிர நூல் நூற்றவர்களுக்கு தினம் 1 அணாவுக்கு கூட விதியில்லை என்றும், அதுவும் ஏழை மக்களில் 100க்கு அரைப் பேருக்குக்கூட கிடைத்திருக்காது என்றும், அதுவும் நாளுக்குநாள் குறைந்து முன் இருந்ததில் 100க்கு 25 வீதம்தான் நடை பெறுகிறதென்றும், அதுவும் காங்கிரசினால் வயிற்றுப் பிழைப்பு நடத்துகிறவர்களாலும் காங்கிரசினால் தகுதிக்கு மேற்பட்ட பட்டம் பதவி வேட்டை ஆடுகிறவர்களாலும் தான் நிபந்தனையின் காரணமாய் கதர் மதிக்கத்தக்கதாய் விட்டதென்றும், ஆதலால் அதுவும் பயன்படாது என்பதோடு கதர் இன்று சாவதற்கு மேல்மூச்செடுக்கும் நிலையில் இருக்கிறது என்றும், இனி கொஞ்சகாலத்தில் கதரை பயித்தியக்கார ஆஸ்பத்திரி கண்காட்சியில் தான் பார்க்க முடியும் என்றும், தனி உடமை உள்ள வரை அடியோடு தரித்திரம் நீங்க முயற்சிப்பதும், வழி சொல்லுவதும் முட்டாள்தனமும் ஹம்பக்கும் தான் என்றும், ஜஸ்டிஸ் கட்சியின் சமுதாய வேலையின் பயனாகத்தான் ஒரு அளவுக்கு அதுவும் ஒரு கூட்டத்தார் வறுமையிலேயே இருக்க வேண்டும், ஒரு கூட்டத்தார் சோம்பேறிகளாய் இருந்து செல்வமும் போக போக்கியமும் அனுபவிக்க வேண்டும் என்று இருக்கும் கொடிய முறை மாறக்கூடும் என்றும் சொன்னார்.
~subhead
இரண்டாவது கேள்வி.
~shend
மதம் கூடாது என்கின்ற நீர் ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம் மதத்தை ஏன் சிபார்சு செய்கிறீர் என்று கேட்டதற்கு பதில் சொன்னதாவது:
ஆம். சிபார்சு செய்கிறேன் என்றும், இதைப்பற்றி நாள் கணக்கில் பேசி 100த்துக் கணக்கான கலம் கணக்கில் சமாதானம் எழுதி இருப்பதாகவும் இப்போதும் சொல்லத் தயார் என்றும் சொல்லி விளக்கியதாவது:
“நான் ஜாதியால் கொடுமையடையாத சுயமரியாதைக்காரர்களையோ மேல்ஜாதிக்கார இந்துக்கள் என்பவர்களையோ மதம் மாறுங்கள் என்று கட்டாயப்படுத்துவதில்லை.
தாழ்ந்த வகுப்பார்கள் பறையர், சக்கிலியர், தோட்டிகள், பள்ளர்கள், புலையர், நாயாடிகள் என்பது முதலிய பெயர்களால் அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஜனசமூக உரிமை இல்லாமல் அடிக்கப்பட்டு தொடவோ, நெருங்கவோ, பார்க்கவோ கூட அனுமதிக்கப்படாமல் செய்து கல்வி இல்லாமல், வீடு இல்லாமல், பிழைப்புக்கு சராசரி மார்க்கத்துக்குக் கூட நெருங்க அனுமதியில்லாமல் கொடுமைப்படுத்தப்பட்டு நாயிலும், நாய் பன்றி மலத்திலும் கேடாய் மதிக்கப்படும் மக்களைப் பார்த்தே நீங்கள் மனிதத்தன்மை பெற வேண்டுமானால் இந்து மதம் என்பதை விட்டு விட்டு மகமதியர்கள் என்று சொல்லிக்கொள்ளுங்கள்; அதற்குத் தகுந்தபடி நடவுங்கள்” என்று சொல்லுகிறேன் என்று சொன்னதோடு இதனால் சுயமரியாதைக்காரர் முதல் யாருக்கு என்ன நஷ்டம் என்பது விளங்கவில்லை என்றும், இக்கேள்வி கேட்பவர்கள் பெரும்பாலும் அறியாமையாலும் முஸ்லீம்களிடம் இருக்கும் துவேஷத்தினாலும்தான் கேட்கிறார்களே ஒழிய வேறில்லை என்றும், கண்டிப்பாக இந்தியாவில் தீண்டாமை ஒழிந்து மனித சமூகம் ஒற்றுமை அடையவேண்டுமானால் எல்லோரும் ஒரு மதமாக முதலில் ஆகித்தான் தீரவேண்டிவரும் என்றும், அதுவும் முஸ்லீம்களாக ஆனால் தான் முடியலாம் என்றும் “ஆத்மார்த்தத்துக்காக மதம்” என்றால் நாம் வாதாட வேண்டியதுதான் என்றும், மனித சமூகத்தில் பல மதங்களின் பேரால் இருக்கும் தொல்லையும், கொடுமையும் ஒழித்து அரசியல், பொருளியல், சமூக இயல் ஆகிய காரியங்களில் முன்னேற்றமடைய ஒரு மத வேஷம் அனுகூலிக்குமானால் அதற்காக அறியாமை காரணமாகவோ, துவேஷம் காரணமாகவோ, சுயநலம் காரணமாகவோ யாரும் முட்டுக்கட்டை போடக்கூடாது என்றும் சொன்னார்.
குறிப்பு: 06.06.1936 ஆம் நாள் நாகையில் நடைபெற்ற “பார்ப்பனரல்லாதார் பிரசாரக் கமிட்டி” பொதுக் கூட்டத்தில் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியது.
குடி அரசு சொற்பொழிவு 14.06.1936