ஆண் பெண் சமத்துவம்

ஆண் மக்கள் தங்களுடைய பெண் மக்களை அதாவது தாங்கள் மிகுதியும் மரியாதை செலுத்தும் தாய்மார்களாயிருந்தாலும் சரி, அன்பு செலுத்தும் சகோதரியாயிருந்தாலும் சரி, காதலுக்குரித்தான மனைவிகளா யிருந்தாலும் சரி ஒரே படியாக அவர்களைக் கேவலமாகவே எண்ணியும், மதித்தும் வருவது சகஜமாக இருந்து வருகிறது. நமது நாட்டில் வெகுகாலமாக இம்மாதிரி பெண்களை இழிவாகக் கருதப்படுவதற்கு நமது சாஸ்திரங்களும், பண்டிதப் பெரியோர்களும், முற்றும் துறந்த முனிவர்களென்று சொல்லப் பட்டவர்களும் ஒருவித காரணமுமின்றி பெண்களைக் கேவலமாக வர்ணித்து வந்ததோடு, பாரபக்ஷமாக ஏட்டிலும் எழுதிவைத் திருக்கின்றனர். இதைப் படிக்கும் மக்கள் சாதாரணமாக தங்கள் பகுத்தறிவைக் கொண்டே ஆராயாமல் தங்கள் பெண்மக்களைக் கேவலமாக நடத்தி வந்ததோடு அவர்களுக்கு எவ்விதத்திலும் சமத்துவம் ஏற்படாதபடி சட்ட திட்டங்களையும் செய்து அதைப் பழக்கத்திலும் கொண்டுவந்து விட்டார்கள். இந்தப் பழக்கமானது இந்தியர் ஒவ்வொருவருடைய மனதிலும் ஆழமாகப் பதிந்து விட்டது. சுயமரியாதை இயக்கத்தின் பலனால் மக்கள் சிறிது சிறிதாக உண்மையை உணர்ந்து வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றி மேனாட்டு மனோதத்வ நிபுணர்கள் செய்யும் முடிவையும் நாம் பெரிதும் கவனிக்க வேண்டியது அவசியம்.

ஆடவர்கள் சாதாரணமாகப் பெண்களை “பேதையர்க”ளென்று அழைப்பதில் எவரும் பின் வாங்குவதில்லை. அடுப்பங்கரையில் சட்டி சுரண்டும் அம்மையர்களைத்தான் இவ்வாறு கூறிவிடுகிறார்களென்றாலோ தற்கால படிப்புப் படித்து ஆண்களைப் போலவே பி.ஏ., எம்.ஏ., பட்டம் பெற்றவர்களையும் கூட “எப்படியிருந்தாலும் பெண்புத்தி பின் புத்தி தானே; பேதமை என்பது மாதர்க்கணிகலன்” என்று அலட்சியமாகக் கூறி விடுகிறார்கள்.

இதைப் போல் பாமர மக்கள் கூறுவதுதான் ஒருபுறமென்றால் படித்த ஆண்களும் இவ்வாறு கூறுவதற்கு கூச்சமடைவதில்லை. அவர்கள் கூறுவ தெல்லாம் என்ன? பெண்களுக்கு “மூளையில்லை” என்பதுதான் பொதுவானது. இது மனிதனுடைய பழக்க வாசனையா, அல்லது இயற்கைவாசனையா என்று கூட நாம் சில சமயங்களில் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. என்றாலும் இது ஒரு அலட்சிய புத்தியினாலும், தற்பெருமையினாலும் நாளா வட்டத்தில் நிலைபெற்று விட்ட ஒரு தப்பபிப்பிராயமென்றே கூறவேண்டும். இந்தக் காரணத்தினாலேயே அவர்களை அலட்சியம் செய்து சரியான கல்வியை அளிக்காமல் இருந்து விட்டார்களெனக் கூறலாம். பெண்கள் புத்தியில்லா தவர்களென்று பொதுவாகக் கருதப்படுவதால் ஒவ்வொரு ஆடவரும் தங்கள் பெண்டிர்க்கு எல்லா விஷயத்திலுமே தங்களுடைய “புத்திசாலித் தனமான” யோசனைகளைக் கூற முன் வந்து விடுகிறார்கள். சமைக்கின்ற வேலை முதற்கொண்டு வீட்டு வேலைகள் சகலமும் சேர்த்துப் பிள்ளை பராமரிப்பு வரையிலுங் கூட விஷயங்கள் தங்களுக்கு எந்த விதத்திலும் அனுபோகமில்லாதிருந்துங் கூட தங்களுக்கு அதிக புத்தியுண்டு என்கின்ற ஒரு தற்பெருமையினால் எதையும் யூகித்து சொல்லக்கூடிய திறமை உண்டென்கின்ற அசட்டுத் தைரியத்தால் தங்கள் யோசனையைப் பெண் களுக்குக் கூற முன் வந்து விடுகிறார்கள். இந்த சம்பவமானது எந்தக் குடும்பத்திலும் சகஜமானதென்றாலும் அவர்கள் அப்படிக் கூறும் சந்தர்ப்பங்கள் நேரும்போதெல்லாம் குடும்பத்திற்குள் கொஞ்சம் “முறு முறுப்பு” ஏற்படாமல் போவதில்லை. சாதாரணமாக வீட்டிலுள்ள பெண்டிர் அந்த “நிபுணத்தனமான” யோசனையை எதிர்த்துக் கண்டிக்காமல் விடுவதில்லை. சில சமயம் ஆத்திரம் பொங்கி தாங்கள் எப்பொழுதும் காட்டும் அடக்கத்தையும் கூட மீறி “நீங்கள் பேசுவது இன்னதென்றே புரியாமல் பேசுகிறீர்கள்; உங்கள் வேலையைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூடச் சொல்லி விடுவார்கள். ஆடவர் தற்பெருமைக்குச் சிறிது ஆட்டங்கொடுத்தாலும் தனது படிப்பை விடுவதில்லை. ஏனெனில் தன் பெண்ஜாதியைவிட இல்லை, மற்ற எந்தப் பெண்களையும் விடவே தனக்கு “அதிகமான மூளை” இருப்பதாகவே அவரது எண்ணம். அதோடு அதை “நிரூபித்து” காட்டக் கூட முடியுமென்று கூறுவார்கள். அதற்கு உதாரணங்களின் மேல் உதாரணம் எடுத்துக்காட்டுவார்கள். எது எப்படி யிருந்தாலும் இவர்கள் இம்மாதிரியாக தம் பெண் ஜாதிகளுக்கு குடும்ப விஷயத்தைப்பற்றி யோசனை கூறப்போகும் போதெல்லாம் “முறுமுறுப்பு” ஏற்படுவதற்குக் காரணந்தான் என்ன வென்று யோசித்தாலோ இவர் கூறும் 10 யோசனைகளில் 9 யோசனைகள் சரியாகயிருப்பதில்லை. ஆனால் இவர் யோசனை சரியென்று இவர் நிரூபிப்பதற்கு பேசுகின்ற பேச்சோ ஊரை வளைக்கும்; ஆடுகின்ற ஆட்டமோ சொல்ல முடியாது. மற்ற உப அங்கங் களுக்கும் குறைவிருக்காது. இருந்தும் என்ன பயன். சில சமயம் இவர் கூறப்புறப்படும் யோசனைகள் யாவுமே பிசகாய்ப்போய் விடுவதுண்டு.

ஆனால் அவர்கள் சச்சரவு எப்படியிருந்தாலும் இருந்து போகட்டும், மனோதத்வ நிபுணர்கள் இது விஷயமாக என்ன கூறுகிறார்களென்றாலோ பெண்டிர்க்கும் “சரியான மூளை உண்டு” என்கிறார்கள். இது உத்தேச மென்றோ, கிட்டத்தட்ட என்றோ, வேறு சித்தாந்தமென்றோ சொல்லி விட முடியாது. அவர்கள் நேரடியாகச் சோதித்துப் பார்த்து ஆராய்ந்தறிந்து கண்டறிந்த முடிவுண்மைகளாகும். அமெரிக்காவிலே ஒரு கல்லூரியிலுள்ள 115 ஆண்களையும், 111 பெண்களையும் எடுத்துக்கொண்டு அவர்களுடைய புத்தித்திறமையைப்பற்றி வெகு கவனமாக சோதனை செய்து பார்த்ததில் சராசரியாக பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி, சமத்துவமாக 142 மார்க்குகள் கொடுத்தார்களாம். அதை விடுத்து பல பிரபல்யமான கல்லூரி களிலுள்ள எல்லோரையும் ஒன்று சேர்த்து மொத்தம் 3175 ஆண்களையும், 1575 பெண்களையும் சோதித்துப்பார்த்ததில் அவர்களுடைய கல்வித் திறமையானது “ஏ” கிரேடு, “பி” கிரேடு முதலிய இரண்டுமே சேர்த்து ஆண்களுக்கு 100க்கு 75.4 மார்க்குகள் என்றும், பெண்களுக்கு 100க்கு 75.2 மார்க்குகள் என்றும் முடிவிற்கு வந்தார்களாம். அமெரிக்காவில் ஹேர்வார்டு பல்கலைக்கழகமானது சற்று மேல் தரமான கல்லூரி. இதனுடைய மாணவர்களையும், உயர்தாராட்கிளிப் பெண் கல்லூரியிலுள்ள மாணவி களையும் சோதித்து சில மாதங்கள் அவர்களுடைய அறிவுத்திறமையை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் மாத்திரம் முதல் தரமானவர்களென்று தேர்ந்தெடுக்கப்பெற்று அவர்களுக்கு 86% மார்க்குகள் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ஹார்வார்டு மாணவர் எல்லோரையும் விட நிரம்பத் தாழ்ந்ததான 8% மார்க்கு வாங்கினதைப்பற்றி யாவரும் ஆச்சரியப்பட நேர்ந்தது. ஆனால் வெகு குறைந்த மார்க்குகள் வாங்கின பெண்மணிகள் மாத்திரம் 28% மார்க்குக்கு குறையாமல் வாங்கி யிருந்தார்கள். பொதுவாக எல்லோரையும் சேர்த்து சராசரி பார்த்தபொழுது மாணவர்களுக்கு 100க்கு 50.5 ஆகவும், மாணவிகளுக்கு சராசரி 100க்கு 55 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதில் பெண்களுக்கும் ஆண்களுக்கு மிடையே அறிவு, திறமை இவைகளில் அதிகமான வித்தியாசங்கள் இருக்கவில்லை என்பது திட்டமாகத் தெரிகிறது. மற்றும் அவரவர்களுக்கு இட்ட வேலைகளில் சிறிதும் ஏற்றத்தாழ்வு கூற முடியாதபடி திறமையாகவே நடத்தக்கூடிய ஆற்றல் உண்டென்று தெரிகிறது.

இப்பொழுது நாம் சாதாரணமாக உலகத்திலேயே உள்ள ஆண், பெண்களையும் எடுத்துக்கொண்டோமானாலும், திறமைசாலிகளான பெண்கள் சராசரியில் சமத்துவமாகவே தோன்றியிருப்பதாகக் கண்டு கொள்ளலாம். ஆண்களுக்குப் பிறகு எவ்வளவோ காலத்திற்குப் பின்னால் பெண்கள் தங்கள் சுதந்திரங்களைப் பெற்றிருந்தாலும் இந்தக் குறுகிய காலத்திற்குள் நல்ல புகழ்பெற்ற ஆசிரியைகளும், நடிகர்களும், பிரசங்கிகளும், வர்த்தகம் முதலான துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களும், எண்ணிக்கையில் கூடுமான வரையில் வீதாச்சாரத்திற்குக் குறையா தென்பது திண்ணம், இந்தியாவின் பெண்கள் சுதந்திரமோ வெகுகாலமாகத் தடுக்கப்பட்டிருந்தும் அவர்களிலும் புகழ் பெற்றவர்களும், அறிவிலும், ஆற்றலிலும், ஆண்களோடு சமத்துவமாக வைத்துப் போற்றக்கூடிய இயல் புடையவர்கள் எத்தனையோ பேர் இந்த குறுகிய காலத்திற்குள் தோன்றி யிருக்கிறார்களென்பதையும் கண்டு கொள்ளலாம்.

இதனால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள சமத்துவமானது ஒரே தன்மையிலென்பதாக தவறுதலாகக் கொள்ளக்கூடாது. அவர்கள் ஆண்களுக்குச் சமத்துவமான துணைவர்களே ஒழிய, அதாவது தன்மையில் வேறுபட்டாலும் ஒவ்வொருவருக்குமுள்ள திறமையில் அவரவர்கள் சமத்துவமென்று சொல்ல வேண்டியிருக்கிறதே ஒழிய ஆண்களைப் போன்ற நகல்கள் என்று கூறுவதல்ல. இருபாலார்களுக்கிடையே அவசியமான வித்தியாசங்கள் உண்டு. அவர்களுடைய மனோ பாவத்தில் தெளிவாக வித்தியாசப் படுகிறார்களென்பதாக புரொபசர் எட்வர்ட்டி தான்டைட் என்ற மனோ தத்துவ சாஸ்திரி கூறுகிறார். பெண்களானவர்கள் பாஷா வித்வத்திலும், சடுதியான ஞாபக சக்தியிலும், கிரகிக்கும் தன்மையை யுடையவர்களென்றும், ஆண்களோ சரித்திர ஆராய்ச்சியிலும், உள் உணர்ச்சியிலும், திரேக பலத்திலும், ரசாயன சாஸ்திரங்களிலும் பெருமையாய் இருப்பதோடு நுணுக்கமான வேலைகளிலும் திறமைசாலிகள் என்றும் கூறுகிறார். ஒவ்வொரு பாலாருக்கும் இம்மாதிரியான, இயல்பான குணா குணங்கள் தனித்தனியாக இருக்கிறதென்பதை உணராமல் ஆண்களுக்குள்ள அறிவுத்திறமையில் பெண்கள் குறைவானவர்கள் என்ற முடிவுக்கு வருவதானது ஒரு பெரிய தவறு; ஒரு பிரபல விஞ்ஞான சாஸ்திரியானவர் விஞ்ஞான ஆராய்ச்சியைப் பற்றி வியாசம் தயாரிக்கும்போதெல்லாம் அடிக்கடி தன் பக்கத்திலுள்ள 13 வயதுடைய மகளை தனக்குச் சந்தேகமாய் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எழுத்துக் கூட்டுதலைக் கேட்டுக் கொண்டு எழுதுவாராம். இந்தப் பெண் சாதாரணமாகப் பள்ளி மாணவியாயிருந்தும் விஞ்ஞான கலை சம்பந்தமான வார்த்தைகளைக் கூட பிழையில்லாமலும் தயக்கமின்றியும் எழுத்துக் கூட்டிச் சொல்லும் வழக்கமுண்டாம். அப்படிச் சொல்லும் பொழு தெல்லாம் அந்தப் பெண் குழந்தையானது தனக்கு இருக்கும் ஞாபகசக்தி கூட தந்தையாருக்கு இல்லாதிருப்பதைப் பற்றி பெரிதும் வியப்புறுவாளாம்.

ஒவ்வொரு குடும்பத்திலும், வீட்டு ஆண்களுக்கு பாட்டனார் திதி எப்பொழுது, அமாவாசை எப்பொழுது, தான் ஊர் போய் வந்தது எப்பொழுது என்பதான வெகு சாதாரணமான விஷயங்களைக் கூட எந்தத் தேதியிலென்பது கூட ஆண் மக்களுக்கு ஞாபகம் வருவதில்லை. குடும்பத்தில் நடந்த எந்த சந்தர்ப்பங்களைப் பற்றியும் சரியானபடி எந்த தேதியில் நடந்தது என்று சொல்லவும் முடியாது. தன்னுடைய பவுண்டன் பேனாவை எங்காவது வைத்து விட்டு வீடெல்லாம் தேடித் திரிவார்கள். ஆனால் வீட்டிலுள்ள பெண்களோ எதுவாயிருந்தாலும் மறக்காமல் ஞாபகத்தோடு சொல்வதும், எடுத்துக் கொடுப்பதும், ஞாபகமூட்டுவதும் வெகு சகஜமான தென்பது யாவருக்கும் தெரிந்த விஷயம். மேனாட்டிலோ தற்சமயம் பெரும்பாலான பெண்கள் தங்கள் பாஷா ஞானத்தின் திறமையை யாவருக்கும் திடுக்கிடும் படியான விதத்தில் பிரத்தியட்சத்தில் காட்டி வருகின்றார்கள். முற்காலத்தில் எப்படி இருந்தது என்பதை இப்பொழுதும் நாம் கவனிக்க விட்டு விட்டே பார்த்தாலும் 100க்கு 30 பேர்கள் வரையில் உலகத்தில் புகழ் பெற்ற பேராசியர்களாய் இருப்பவர்கள் பெண்களென்றே சொல்ல வேண்டும். இங்கிலாந்தில் நூல் வல்லார்களெல்லாம் பெண்மணிகளே. பிரான்சில் எத்தனையோ நூலாசிரியர்களும் நடிக நாடகத்தில் பேர்போனவர்களும், அரசியல் நிபுணர்களும் பெண்களாக இருந்திருக்கின்றனர். இத்தாலியி லிருந்தும், ஜர்மனியிலிருந்தும் எவ்வளவோ சங்கீத சாகித்யத்தில் பேர் போனவர்களெல்லாம் தோன்றியிருக்கின்றனர். அமெரிக்காவில் எவ்வளவோ சமூக சீர்திருத்தத்தில் புகழ் பெற்ற பெண்களைக் காணலாம். இன்னும் அநேக தொழில்களிலும் ஈடுபட்டு இருக்கின்றார்களெனினும் சமூக சீர்திருத்தத்தில் முனைந்து நிற்பவர்கள் பெண்கள் தான் அதிகமெனலாம். வர வர அமெரிக்கப் பெண்கள் அரசியல் விஷயத்திலும் புகுந்து யாவருடைய போற்றுதலையும் பெற்று வருகின்றனர். சமீப காலத்திற்கு முன் தான் விஞ்ஞான சாஸ்திர வழிகளிலும் தங்களுக்குத் திறமையுண்டென்று பெண்கள் அறியத் தொடங்கினார்கள். சென்ற ஜனக் கணிதத்திலிருந்து விஞ்ஞான ரசாயன சாஸ்திர ஆராய்ச்சியிலும் முனைந்து நிற்கும் பெண்கள் 10 வருடங்களுக் குள்ளாக இரட்டிப்பாக அதிகரித்திருக்கின்றார்களென்று தெரிகிறது. இப்பொழுது அமெரிக்காவிலோ 10 வருடங்களுக்கு முன் 400 பேர் இருந்த விடத்தில் இப்பொழுது 3000 பெண்கள் பிளான் வரைவதில் திறமைசாலிகளாகவும், பெண் கல்லூரித் தலைவிகளாகவும் பேராசிரியர்களில் 10000க்கு மேற்பட்டவர் களும், 2000 ஜட்சுகளும், லாயர்களில் சுமார் 5000 வரையிலும் பெண்கள் இருப்பதாகவும் தெரிகிறது. பாங்கு உத்தியோகத்தில் முக்கிய ஸ்தானங்கள் வகித்து வருபவர்கள் மாத்திரம் 4000க்கு மேற்பட்டவர்களென்று தெரிகிறது. பெண்கள் டாக்டர்களாகவும், நர்சுகளாகவும், பாதிரிமார்களாகவும் எத்தனையோ 1000 பேர்கள் இருப்பதாகவும் தெரிகிறது. இவற்றை யெல்லாம் கொண்டு நாம் என்ன முடிவிற்கு வர முடிகிறதென்றால் அவர்களுக்கு எந்த விஷயங் களிலும் ஆண்களைப் போன்ற திறமை உண்டென்றும் ஆனால் அவர்களுக்கு முன்னிருந்த சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு அவர்களுடைய திறமையைக் காட்ட ஒட்டாதபடி செய்ததே ஒழிய அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கப் பட்டால் அவர்களுடைய போக்கில் நல்ல திறமையைக் காட்டக் கூடுமென்பதாகவே நாம் கருத வேண்டி இருக்கிறது.

ஒரு காலத்தில் ஆண்களுடைய மூளையை விட பெண்களுடைய மூளை அளவில் சிறியதாக இருந்திருப்பதால் புத்தியில் பெண்கள் குறைந்தவர்கள் என்று கருதப்பட்டது. ஆனால், உடற்கூறு சாஸ்திரிகளும் மனோதத்துவ சாஸ்திரிகளும் மூளையினுடைய அளவில் உள்ள வித்தியாசத்தைக் கொண்டு புத்தியை நிர்ணயிக்க முடியாதென்றும், பெரிய மூளைகளை விட சிறிய மூளைகளிலே தான் அதிலும் பெண்களுடைய மூளைகளிலே அதிகமான “பிரைன் செல்கள்” இருப்பதாகவும், செல்களுடைய எண்ணிக்கைக்கு தகுந்த விதத்திலே தான் புத்தியின் அளவும் இருக்கிறதென்றும், ஆதலால் சாதாரணமாகப் பெண்களும், ஆண்களும் சமத்துவமான அறிவு பலம் உடையவர்களென்று முடிவு கட்டி இருக்கின்றனர். ஆனால், ஆண்கள் எப்பொழுதும் தங்கள் மனைவிக்கு “மூளை இல்லை” யென்று அடிக்கடி ஏன் சொல்லுகிறார்களென்று யோசித்துப் பார்க்குமிடத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மனப்போக்கும், குணப்போக்கும், உணர்ச்சிப்போக்கும் வித்தியாசப்பட்டு இருப்பதினாலேயே யென்பதை கவனிக்க வேண்டியது. இவற்றை அளவிடுவதற்கு நிபுணர் களாலேயே பெரிதும் கஷ்டமாயிருக்கிறது. அவர்களுக்கு உணர்ச்சியும், உற்சாகமும் புத்திப் போக்கு, மதாபிமானம், இரக்கம், பொறுமை, கூச்சம், நாணம் முதலியவைகளான குணங்கள் அதிகமாயிருந்து வருகின்றன. ஆண்களோ, சுயேச்சையிலும், தீவிரத்திலும் உள் உணர்ச்சியிலும், கேலிகளிலும் அதிகமான போக்குடையவர்களாய் இருந்து வருகிறார்கள். இந்த அளவு கூட சராசரி என்று தான் கொள்ள வேண்டி இருக்கிறதே ஒழிய தனித்தனியாகவும் கூற முடியவில்லை. ஏனெனில் சில ஆண்கள் குழந்தை களிடத்தில் பெண்களைவிட அதிகமான ஆர்வத்தைக் காண்பிக்கின்றனர். சில பெண்கள் ஆண்களைப் போல திடமும், தீவிரமுள்ளவர்களாகவு மிருக்கிறார்கள். பெண்களானவர்கள் ஒரு ஆசாமியினுடைய தோற்றத்தைக் கொண்டே நிர்ணயிக்க முற்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் உண்மை நிகழ்ச்சிகளைக்கொண்டே தங்கள் அபிப்பிராயங்களை ஏற்படுத்திக் கொள்ளுகிறார்கள். ஆண்களானவர்கள் ஒருவர் செய்த காரியத்தைக் கொண்டே அவர்களை மதிக்கின்றார்களே ஒழிய அவர்களுடைய குணாகுணங்களைக் கொண்டோ, அந்தரங்க நடவடிக்கைகளைப் பற்றியோ கவலைப்படுவ தில்லை. மனித ஸ்பாவத்தை சம்பந்தப்பட்டு எந்த விஷயங்களையும் பெண்களுக்கு யூகித்து உணர்வதற்கான நுட்ப அறிவானது ஆண்களை விட அதிகமாகவே இருக்கிறது. இதற்கு உதாரணமாக, ஒரு ஆணானவன் எவ்வளவுதான் தன் மனைவியோடு பழகி இருந்தாலும் அவளுடைய குணா குணங்களை சரிவர அறிந்து கொள்வதற்கு சக்தியில்லாமலிருக்க, ஒரு மனைவி தான் பழகிய புருஷனின் குணா குணத்தை சிறு காலத்திற்குள் அவனைப் பற்றி அவனே உணர்ந்திருப்பதைவிட அதிகமாக உணர்ந்திருக்கிறாள்.

எவ்வளவு காரணங்கள் இதைப்போல் சொன்னாலும் ஆண்களுக்கு மாத்திரம் பழக்க வாசனையால் ஏற்பட்ட ஒரு அபிப்பிராயமானது திருந்துவதற்கு வெகு நாட்கள் பிடிக்கும்போல் தோன்றுகிறது. இருந்தாலும் இதற்கு முக்கியமான காரணம் குடும்பத்தில் சச்சரவு ஏற்படாமல் சமாதானம் நிலவ வேண்டுமென்று பெண்கள் நினைத்துத் தங்கள் ஆண்மக்களுக்கு அடிக்கடி எந்த விஷயத்திலும் விட்டுக் கொடுத்து விடுவதினாலேயே பெண்களைப்பற்றி சர்வ சாதாரணமாக சமத்துவமில்லாதவர்களென்று எண்ணம் தோன்றுவதற்கு இடமாயிருக்கிறது. மேலும், அவர்கள் சுதந்திரத்தோடு தங்களுடைய சுய சம்பாத்திய முயற்சியினால் வாழ்ந்து காட்ட வேண்டுவதும் அவசியமாயிருக்கிறது. பெண்கள் தங்கள் ஜீவனத்திற்கு ஆண்களை எப்பொழுதும் எதிர்பார்த்து நிற்பதானது அவர்களை ஆண்களுக்கு சமத்துவ மானவர்களாய்ச் செய்ய முடியாமலிருக்கிறது. பெண்கள் அறிவுத்திறமையில் சமத்துவமானவர்களாயினும் புத்திப் போக்கில் மாத்திரம் மாறுபட்டவர்களாய் இருக்கிறார்களாதலால் அவர்கள் இருவரும் சமத்துவமானவர்களென்பதோடு இவர்கள் இருவருடைய குணாகுணங்களும் ஒத்து நின்று ஒரு காரியம் நடத்துவதாலேயே வாழ்க்கையும் இன்பமும் ஏற்பட முடியுமென்பதையும் திண்ணமாய் உணர வேண்டும்.

பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை ஜுன் 1936

 

You may also like...