வெளிநாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத தோழர்களுக்கு வேண்டுகோள்
தோழர்களே!
பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரம் செய்வதற்காக “தமிழ்நாடு பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசார மத்தியக் கமிட்டி” என்ற பெயரால் ஒரு கமிட்டி ஏற்படுத்தி அப்பிரசாரத்திற்கு ஜில்லாக்கள் தோறும் நிதி வசூலித்து வருகிறோம். வசூல் செய்து முடிந்ததும் ஜில்லாக்கள் தோறும் பிரசாரம் செய்ய போகிறோம். ஒரு சிறு தமிழ் தினசரி பத்திரிகையும் துவக்க எண்ணியுள்ளோம்.
ஆதலால் கொளும்பு, பர்மா, சிங்கப்பூர், பினாங், ஜாவா, சுமத்திரா, கொச்சின், சைனா, டர்பன் ஆகிய வெளிநாடுகளிலுள்ள பார்ப்பனரல்லாத தோழர்கள் எங்கள் பிரசாரக் கமிட்டிக்கு உதவி செய்ய வேண்டுகிறோம். முக்கியஸ்தர்களாய் உள்ளவர்கள் முயற்சி எடுத்து பணம் வசூலித்து அனுப்ப விரும்புகிறோம். அந்தப்படி வசூலித்து அனுப்பப்படும் ஒவ்வொரு காசும் பார்ப்பனரல்லாதார் சமூகம் சுயமரியாதை பெறவும் பார்ப்பனீயம் அழிக்கப்படவும் பயன்படுத்தப்படும். அவ்விதம் உதவி செய்பவர்கள் þ கமிட்டி பொக்கிஷதார் விருதுநகர் (சேர்மன்) தோழர் வி.வி. இராமசாமி அவர்கள் பெயருக்கு செக்கு எழுதி “குடி அரசு” ஆபீஸ் மூலம் அனுப்பும்படி வேண்டுகிறோம். மூவார் தோழர்கள் இக்காரியத்துக்கு வழிகாட்டியிருப்பதை சென்றவாரக் குடி அரசில் பிரசுரித்திருக்கிறோம்.
தங்கள் ஆதரவுகளை எதிர்பார்க்கும்
– W. P. A. சௌந்திரபாண௯�டியன்,
ஈ.வெ. ராமசாமி.
குடி அரசு அறிவிப்பு 26.07.1936