“தினமணி”க்கு சவால்
தென்னாட்டுப் பத்திரிகை யுலகத்தில் மழலைப்பருவங் கடவாதிருக்கும் “தினமணி” மூத்த பத்திரிகைகளைக் கிழடு தட்டிய பத்திரிகைகள் என்றும் விளக்கெண்ணெய், வெண்டைக்காய்ப் பத்திரிகைகள் என்றும் கேலிசெய்து தன்னைத்தானே விளம்பரப்படுத்தி வருவதைத் தென்னாட்டார் அறிந்திருக்கக் கூடும். மழலை உளறலை லக்ஷ்யம் செய்யலாமா எனப் பொறுப்புடையவர்கள் அடங்கியிருப்பதினால் “தினமணி”யின் திமிர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. தமிழ்ப் பத்திரிகை உலகத்துக்குத் தானே சக்கரவர்த்தி என பாவித்துக்கொண்டு தலைகால் தெரியாமல் குதிக்கிறது. வசைபுராணம் பாடுவதில் தோழர் சத்தியமூர்த்தியையும் வென்றுவிடப் போட்டி போடுகிறது. ஜஸ்டிஸ் கட்சிக்குக் கருமம்செய்யத் தனக்கு இருந்து வரும் ஆவலையும் அடிக்கடி காட்டிக்கொள்கிறது. ஜுலை 2ந் தேதி வெளிவந்த “தினமணி”யில் “நாயக்கரின் பாவனை” என்ற தலைப்புடன் எழுதப்பட்டிருக்கும் உபதலையங்கத்தில் “தினமணி”யின் ஆணவமும் அற்பத்தனமும் அறியாமையும் ஒருங்கே மிளிர்கின்றன. ஜுலை 1ந் தேதி மாலை சென்னைப் பச்சையப்பன் கலாசாலை மைதானத்தில் தோழர் ஈ.வெ.ராமசாமி நிகழ்த்திய பிரசங்கத்தைக் கண்டித்து உப தலையங்கம் எழுதப் புறப்பட்ட “தினமணி” தோழர் நாயக்கரின் பிரசங்கத்தைப் பிரசுரம் செய்யவே இல்லை. அவரது பிரசங்கத்தைப் பிரசுரம் செய்து கண்டனத்தையும் வெளியிட்டிருந்தால் இரண்டையும் சீர்தூக்கி முடிவு காண பொது ஜனங்களுக்கு வசதி வாய்த்திருக்கும். அவ்வாறு செய்யவேண்டியதே பொறுப்பும் கண்ணியமும் வாய்ந்த பத்திரிகைகளின் கடமை. அவ்வாறு செய்யாமல் நாக்கில் நரம்பில்லை யென்றும், பைத்தியக்காரப் பேச்சென்றும் வசை புராணம் பாடுவது “தினமணி”யின் சின்னப்புத்தியையே காட்டுகிறது. “தினமணி” பத்திரிகாசிரிய மண்டலத்தார் அநாமதேயப் பேர்வழிகளாயிருந்த காலத்திலேயே, தோழர் ஈ.வெ.ராமசாமி, “இந்தியாவில் காங்கிரசுக்கு நிபந்தனை விதிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவர் ஒருவர் உண்டென்றால் அவரே “மகாத்மாகாந்தி” என “தினமணி” ஒப்புக்கொள்ளும் பெரியாரால், நன்கு மதிக்கப்பட்டவர் என்பதை “தினமணி” உணர்ந்திருந்தால் இவ்வளவு அற்பத்தனமாக எழுதியிருக்காது. கூட்டத்தில் யார் என்னென்ன கேள்வி கேட்டாலும் பதிலளிக்க வேண்டியதே பொதுக்கூட்டத்தில் பேச முன்வருவோரின் நீங்காக்கடமை. பொதுக்கூட்டங்களில் நாலு வார்த்தை பேசியறியாத “தினமணி” ஆசிரியருக்கு இந்தச் சாதாரண விஷயம் தெரியாதிருந்தால் அதற்கு ஏனையோர் ஜவாப்தாரிகளல்ல. “காங்கிரஸ்காரர் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதிலளிப்பேன்; ஏனையோர் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன்” எனக் கூறுவதும் மேடை மீது வந்து கேள்வி கேட்டால் பதிலளிக்கலாமென்று கூறி கேள்வி கேட்பவர்களை மேடைக்கு அழைத்து அடிப்பதும் தோழர் சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் வீரர்களின் வழக்கம். பச்சையப்பன் மைதானக் கூட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலாக தோழர் ஈ.வெ.ராமசாமி தமது கருத்தைத் தெரிவித்தார். இதனால் அவர் காங்கிரசில் சேரத் தவித்துக் கொண்டிருப்பதாகவோ, அல்லது காங்கிரசில் சேரத்தான் வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர்கள் வலியவந்து அழைக்க வேண்டுமென்று விரும்புவதாகவோ ஏற்படவே செய்யாது.
காங்கிரசிலே, “தினமணி” ஆசிரியர் தவங்கிடந்தாலும் பெற முடியாத ஒரு கண்ணியமான ஸ்தானம் வகித்திருந்த காங்கிரஸ் சர்வாதிகாரியான காந்தியாரின் நன்மதிப்புக்குப் பாத்திரராயிருந்த தோழர் ஈ.வெ.ராமசாமி, தாம் காங்கிரசிலிருந்து பிரிவதற்குள்ள காரணங்களை அப்பொழுதே விளக்கி கூறியிருக்கிறார். தம்மைப் போன்றவர்கள் சம்மந்தம் வைத்துக்கொள்ள முடியாதவாறு தற்கால காங்கிரஸ் அவ்வளவு சீரழிந்து கிடப்பதையும் அவர் பலமுறை விரித்துக்கூறியிருக்கிறார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு எந்தக் காங்கிரஸ் வாதியும் இதுவரை விடையளிக்க முன்வரவில்லை. குற்றச்சாட்டு களுக்குத் தக்க ஆதாரங்களுடன் விடையளிக்க முன்வராமல், சம்மந்தமற்ற விஷயங்களைக் கிளப்பி வசை புராணம் பாடுவதே அற்பமனம் படைத்த காங்கிரஸ் கூலிகளின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த முறையை “தினமணி”யும் பின்பற்றத் தொடங்கியிருப்பதைப்பற்றி நாம் ஆச்சரியப்பட வில்லை. காங்கிரஸ் புரட்டர்கள் புகழ்பாடி உயிர்வாழ வேண்டியிருக்கும் ஒரு பத்திரிகையிடம் யோக்கியப் பொறுப்பையோ, நேர்மையையோ எதிர்பார்க்க முடியாது. “தினமணி” யின் ஒன்றரைப் பத்தி கொண்ட உபதலையங்கத்தில் சிதறிக்கிடக்கும் வசைமொழிகளுக்கெல்லாம் விடையளித்து நமது பத்திரிகைப் பத்தியையும் அசுத்தப்படுத்த நாம் விரும்பவில்லை. அறியாமையினால் “தினமணி” கூறும் ஒரு மடத்தனமான விஷயத்தைப்பற்றி மட்டும் சில வார்த்தைகள் கூற விரும்புகிறோம். தோழர் ஈ.வெ.ரா. திட்டத்தை ஜஸ்டிஸ் கட்சியால் ஒப்புக் கொண்ட போதே தோழர் ராஜகோபாலாச்சாரியார் “அது கராச்சித் திட்டத்தின் காபி” எனக் குற்றம் சாட்டினார். அதற்கு “யார் திட்டத்தை யார் திருடியது” என மகுடமிட்டு “குடி அரசு” 1935 டிசம்பர் 1ந் தேதி விடையளித்து விட்டது. தினசரிப் பத்திரிகை ஆசிரியர்களாயிருப்பவர்கள் முக்கியமான விஷயங்களைப்பற்றி மாகாண பத்திரிகைகளில் வெளிவரும் விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். சர்வஞானி ஆகி விட்டோம் என்ற அகம்பாவத்தினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ சகோதரப் பத்திரிகைகளின் அபிப்பிராயங்களை உணராமல் கன்னா பின்னா கத்துவது விவேகமுடைய பத்திரிகாசிரியர்களின் செயலல்ல.
தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்கு அன்று “குடி அரசு” அளித்த விடையை 9 ஆம் பக்கத்தில் தருகிறோம். அதைப்படித்துப் பார்த்து விடையளிக்க “தினமணி”க்கு ஆண்மை யுண்டா? விடையளிக்க “தினமணி” முன்வந்தால் திருடியது யார்? ஈ.வெ.ராவா காங்கிரசா என்பது “தினமணி”யின் மரமண்டையிலும்கூட ஒருகால் நுழையக்கூடும். காங்கிரசில் சேர தோழர் ஈ.வெ.ரா. வகுத்த நிபந்தனைகளின் மர்மமும் விளங்கக்கூடும்.
குடி அரசு துணைத் தலையங்கம் 05.07.1936