சேலத்தில் சத்திய மூர்த்தியார் சவடால்

 

பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப்பற்றித் தோழர் சத்திய மூர்த்தி சேலம் மகாநாட்டில் பேசிவருகையில் “பண்டித ஜவஹர்லால் சொல்லுவதை நான் ஆதாரமாய் எடுத்துக்கொள்ள முடியாது” “காந்தி அபிப்பிராயம் என்ன என்பது எனக்குத் தெரியாது” “ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்கு ஆக சிறை செல்லத் தயாராய் இருக்கிறேன்” “மந்திரி ஆகி மேட்டூர் தண்ணீரை சேலத்துக்கு கொண்டுவர வேண்டும்” என்று பேசி இருக்கிறார். இது 20536ம் தமிழ்நாடுவில் இருக்கிறது.

ஜஸ்டிஸ் கட்சி ஒழிவதற்கு ஆக ஒரு பார்ப்பனர் சிறை செல்லுவதாய் இருந்தால் பார்ப்பனப்பூண்டு ஒழிவதற்கு ஆக எத்தனை பார்ப்பனரல்லாத மக்கள் சிறைச் செல்லத் தயாராய் இருப்பார்கள் என்பதை சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அறியார் போலும்.

பார்ப்பன ஆதிக்கமானது மனித சமூகத்துக்கு சிறப்பாக பார்ப்பன ரல்லாத சமூகத்துக்கு செய்துவந்த கொடுமைக்கும் துரோகத்துக்கும் நிவர்த்திக்காக ஆயிரக்கணக்கான பார்ப்பன மக்கள் ஜெயிலுக்குப் போவது மாத்திரமல்லாமல் தூக்கு மேடைக்கு போனாலும் தகும் என்றும் தகுதியான காரியம் என்றும் சொல்லலாம்.

ஆனால் பார்ப்பனரல்லாத சமூகம் யோக்கியப் பொறுப்பும், பொறுமையும், சமத்துவ உணர்ச்சியும் கொண்டதாய் இருப்பதால் அதன் தலைவர்கள் மக்களுக்கு அப்படிப்பட்ட அபிப்பிராயம் உதிக்கவே முடியாமல் செய்து வருகிறார்கள். இதை அனுகூலமாகக் கொண்டு சில பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கம் பேடித்தனமான இயக்கம் என்று கருதிக் கொண்டு தங்கள் கொடுமையையும் சூழ்ச்சியையும் மேலும் மேலும் காட்டி வருகிறார்கள். பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு.

இனிவரும் பார்ப்பனரல்லாதார் சமூக வாலிபர்களுக்கு பலாத்காரத்தில் இறங்கவும் பார்ப்பனர்களை ஒழிப்பதற்காகத் தூக்குமேடை செல்லுவதை அவசியமாகக் கருதவும் தோழர் சத்தியமூர்த்தியாரே எடுத்துக்காட்டி வழிகாட்டுகிறார் என்றே கருதவேண்டி இருக்கிறது.

ஜஸ்டிஸ் கட்சிக்கும் சத்தியமூர்த்தியார் கொள்கைக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு விரலையாவது சுட்டிக் காட்டுவாரா?

மேலே காட்டப்பட்டபடி ஜவஹர்லால் கொள்கையை ஒப்புக் கொள்ளாதவர், காந்தியாரின் கொள்கை இன்னதென்றே தெரியாதவர், ஜெயிலுக்குப் போவதும், ஒத்துழையாமையும் சட்டமறுப்பும் கூடாது என்பவர், மந்திரி ஆகி மேட்டூர் தண்ணீரை சேலத்துக்கு கொண்டு வரவேண்டும் அதற்கு ஆக மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லுகிறவர் ஆகியவர்க்கு ஜஸ்டிஸ் கட்சி கொள்கையில் எது விரோதம்? எதற்கு ஆக ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும்? என்று கேட்கிறோம்.

ஆகவே சத்தியமூர்த்தியாருக்கும் ஜஸ்டிஸ் கட்சியாருக்கும் உள்ள வித்தியாசம் எல்லாம் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பேதம் தவிர பார்ப்பனர்கள் பிராமணர்கள் கடவுள் முகத்தில் பிறந்தவர்கள், பார்ப்பனரல்லாதார் சூத்திரர்கள் கடவுளின் பாதத்தில் பிறந்தவர்கள் தீண்டாதார் ஜாதியார்கள் சண்டாளர்கள் என்பதல்லாமல் வேறு என்ன வித்தியாசம் என்று கேட்கின்றோம்.

சுயமரியாதை அற்ற பார்ப்பனரல்லாத வாலிபர்களுக்கும் பார்ப்பனர்களுக்கு கூலியாய் இருந்து தங்களது சமூகத்தைக் காட்டிக்கொடுத்து மானத்தை விட்டுக்கொடுக்கும் வாலிபர்களுக்கும் எதை விட்டுக்கொடுத்தாவது அதிகாரமும் பதவியும் சம்பாதிக்க வேண்டும் என்பவர்களுக்கும் வேண்டு மானால் சத்தியமூர்த்திக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும் பெரிய வித்தியாசமிருப்பதாக தோன்றலாம். ஆனால் சுத்த ரத்த ஓட்டமுள்ள சுயமரியாதை வாலிபர்களை நாம் இன்னம் ஒருமுறை கேட்கின்றோம். சத்தியமூர்த்திக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்றும், எதற்காக ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க சத்தியமூர்த்தியார் ஜெயிலுக்கு போகவேண்டுமென்றும் யோசித்து பார்க்கும்படியும் அதற்கு யோக்கியமான சுயமரியாதை உள்ள பார்ப்பனரல்லாத வாலிபர்கள் என்ன பதில் செய்யவேண்டுமென்றும் கேட்கிறோம். ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்கு ஜெயிலுக்கு போவதென்றால் பலாத்காரம் செய்துவிட்டு ஜெயிலுக்குப் போவதாகத்தானே அருத்தம்.

தேர்தல் சமீபம் ஆக ஆக சத்தியமூர்த்திக்கு மூளைக் கொதிப்பு அதிகமாகின்றது. கூலிகளுக்கு அதிக உற்சாக மூட்டுகிறார். தலை, கால், கண் தெரியாமல் நடந்து கொள்ளுகிறார்கள். எப்படியானாலும் இதன் பயனையும் அனுபவிப்பார்கள் என்பதில் நமக்கு சந்தேகமில்லை.

குடி அரசு துணைத் தலையங்கம் 24.05.1936

You may also like...