காங்கிரசும் ஜவஹர்லாலும்
பொது உடமையும்
இன்று காங்கிரசினுடைய முக்கிய வேலை வரப்போகும் தேர்தலில் காங்கிரசுக்காரர்கள் வெற்றி பெற வேண்டுமென்கின்ற ஒரே வேலைதான் என்பதைப் பற்றி யாருக்கும் சந்தேகம் இருக்குமென்று நாம் கருதவில்லை. ஆனால் வெற்றி பெற்ற பிறகு என்ன செய்வது என்பதில் காங்கிரஸ் கொள்கை இன்னது என்பதாக ஒருவருக்காவது விஷயம் விளங்கி இருக்கும் என்றோ, அல்லது மக்களுக்கு விளங்கும்படி காங்கிரஸ்காரர்கள் விளக்கி வருகிறார்கள் என்றோ சொல்லுவதற்கில்லை. கட்டுப்பாடாகவே பொது மக்கள் இவ் விஷயத்தில் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.
தேர்தல்களின் போது தேர்தல் பிரச்சினையாக இருப்பது “காந்தி பெரியவர்” என்பதும் அவர் “மகாத்மா” என்பதும் ஒரு அத்தியாயமாகவும் “காங்கிரஸ்காரர்கள் ஜெயிலுக்குப் போனார்கள், அடிபட்டார்கள்” என்பதும் “பாரத மாதாவுக்கு ஜே” என்பதும் இரண்டாவது அத்தியாயமாகவும், “ஆதலால் காந்திக்கு ஓட்டுப்போடுங்கள், காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்பது மூன்றாவது அத்தியாயமாகவும் இருந்து எலக்ஷன் பிரசாரம் செய்து வெற்றி உண்டாக்க முயற்சிப்பதாய் இருக்கிறதே ஒழிய வேறில்லை. இவ்வளவோடு தேர்தல் வேலையும் பதவி வேலையும் முடிந்து விடுகிறது.
உதாரணமாக காங்கிரஸ் சென்ற வருஷம் முன் இந்திய சட்டசபைக்குப் போட்டி போடும்போது வேறுவேறு பல விஷயங்களும் எலக்ஷன் பிரச்சினையாக சொல்லப்பட்டன என்றாலும் எலக்ஷன் நடந்து வெற்றி ஏற்பட்ட பிறகு அவை பொது ஜனங்களுக்குக்கூட ஞாபகமில்லாமல் போகும்படி பல்வேறு விஷயங்களைப்பற்றி ஜால வேடிக்கை செய்து “இந்திய சட்டசபையில் காங்கிரசுக்கு வெற்றிமேல் வெற்றி” என்று சொல்லி பிரசாரம் செய்து அந்தப்படியே பாமர மக்களை நம்பும்படியும் செய்தாய்விட்டது.
~subhead
ஸ்தல ஸ்தாபனம்
~shend
இவை ஒரு புறமிருந்தாலும் ஜில்லாபோர்டு, முனிசிபாலிடி ஆகிய விஷயங்களிலும் இதுபோலவே காங்கிரஸ் வெற்றி பெறவேண்டும் என்று பிரசாரம் செய்து காங்கிரசுக்கு வெற்றி ஏற்பட்டதாக ஆகியும், சுமார் 6, 7 ஜில்லா போர்டுகளும் 1, 2 முனிசிபாலிடிகளும் காங்கிரஸ் வசப்பட்டன என்று சொல்லப்பட்டும் இன்று உண்மை நிலையை பார்ப்போமானால் “பழயபடியே தான் நிர்வாகம் நடக்கின்றது” என்று சில போர்டுகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா செய்வதும்,
“மெம்பர்கள் மோசம் செய்துவிட்டார்கள். நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள்” என்று சில போர்டுகளில் போர்டு காங்கிரஸ் அங்கத்தினர்கள் ராஜீனாமா செய்வதும்,
“போர்டு தலைவர்கள் யோக்கியமாய் நடந்து கொள்ளவில்லை” என்று சில போர்டு மெம்பர்கள் காங்கிரஸ் கட்சி பதவியை ராஜினாமா செய்வதும்,
“சில போர்டை கலைத்துவிடவேண்டும்” என்று போர்டிலுள்ள காங்கிரஸ் மெம்பர்களே தீர்மானம் செய்வதும்,
சில போர்டு காங்கிரஸ் பிரசிடெண்டு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் போர்டு மெம்பர்களே முயற்சிப்பதுமான காரியங்கள் நடந்து வருகின்றன.
~subhead
வேலூர்
~shend
இவற்றில் எல்லாவற்றையும் விட அதிக விசேஷமானதும் குறிப்பிடத்தக்கதுமான காரியம் என்னவென்றால், வேலூர் ஜில்லா போர்டு தேர்தலில் காங்கிரசின் பேரால் வெற்றி பெற்ற மெம்பர்கள் 26. பிரசிடெண்டு தேர்தலில் காங்கிரஸ் பேரால் நிறுத்தப்பட்ட பிரசிடெண்டுக்கு ஓட்டுக்கொடுத்தவர்கள் 15 பேர்கள், பாக்கி 11 பேர்கள் எதிர்கட்சிக்கு ஓட்டு செய்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த நடத்தையை கண்டிப்பதற்கு அறிகுறியாய் ராஜினாமா கொடுத்தவர்களோ 21 பேர்கள். இந்த 21 பேர்களில் காங்கிரஸ் பிரசிடெண்டுக்கு ஓட்டு செய்த 15பேர்கள் போக எதிர்கட்சிக்கு ஓட்டு செய்யப்பட்ட 11 பேர்களில் 6பேர்களும் கண்டிப்பதில் கலந்து ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
ஆகவே காங்கிரசுக்காரர்களின் நாணயத்துக்கு யாராலும் ஆட்சேபிக்க முடியாததும் பிரத்தியட்ச அனுபவமானதுமான உதாரணம் இதைவிட வேறு என்ன வேண்டும் என்பதும், இப்படிப்பட்ட நாணயக்குறைவான காரியங்கள் காங்கிரசுக்கு சகஜமாக இருக்கின்றது என்பதும் இதனால் நன்றாய் விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்.
இது போலவே மற்ற போர்டுகளிலும் காங்கிரசின் பேரால் வெற்றி பெற்றவர்கள் என்று சொல்லப்பட்டவர்களில் சில பேர்களில் பலரும் பல பேர்களில் சிலரும் இம்மாதிரியாகவே “துரோகம்” செய்து வந்திருக்கிறார்கள்.
இவற்றை எதற்காக எடுத்துக்காட்டுகிறோம் என்றால் காங்கிரஸ் ஒன்றுதான் நியாயமான உண்மையான ஜனப்பிரதிநிதி ஸ்தாபனம் என்றும், நாணயமான ஸ்தாபனம் என்றும் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும் காங்கிரசுக்கு வந்துவிட்டால் அவன் உடனே யோக்கியனாகவும் நாணயஸ் தனாகவும் ஆகிவிடுவான் என்றும் சொல்லி அயோக்கியர்களாகவே பொறுக்கி எடுத்து காங்கிரசில் சேர்த்த குணமும், அயோக்கியர்களுக்கு இன்று புகலிடம் காங்கிரசு தான் என்று சொல்லி பாவமன்னிப்பு டிக்கட்டு கொடுத்து வந்த தன்மையும் என்ன ஆயிற்று என்பதை விளக்குவதற்காகவும் உலகிலுள்ள விகிதாச்சார அயோக்கியர்கள் காங்கிரசிலும் இருக்கிறார்களே ஒழிய ஒரு அளவுக்காவது மற்ற ஸ்தாபனங்களை விட குறைந்த யோக்கியமான ஸ்தாபனம் அல்ல என்றும் மெய்ப்பிப்பதற்கு ஆகவே எடுத்துக் காட்டினோம்.
~subhead
காங்கிரஸ் கொள்கை
~shend
இவை நிற்க, இன்று காங்கிரஸ் மறுபடியும் ஸ்தல ஸ்தாபனங்களையும் சட்டசபைகளையும் கைப்பற்ற ஆசைப்படுவதற்கும் முயற்சிப்பதற்கும் ஆக செய்யும் காரியங்களில் காங்கிரசின் திட்டம் என்ன என்பது பற்றி இப்போது யோசித்துப் பார்ப்போம்.
காங்கிரஸ்காரர்களுக்குள்ளாகவே அதாவது சட்டப்படிக்கு அதிகாரம் பெற்ற தலைவர்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஆளுக்கு ஒரு அபிப்பிராயமும் தினத்துக்கு ஒரு அபிப்பிராயமும் சொல்லப்பட்டுவருவதும் அவர்களுக் குள்ளாகவே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு வருவதும் மற்றவர்களிடம் சமயத்துக்குத் தகுந்தபடி பேசிவருவதும் இன்று யாராவது இல்லையென்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
எல்லா இந்திய காங்கிரஸ் தலைவர் பண்டித நேரு பொது உடமை அபேதவாதம் ஆகியவைகளே தனது கொள்கை என மக்கள் நம்பும்படி பேசுகிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரோ “அபேதவாதம் பொது உடமை ஆகியவைகளை அடியோடு ஒழிக்க வேண்டும்” என்கின்றார்.
ஆனால் “காங்கிரசின் லக்ஷியம் பூரண சுயேச்சை” என்று தீர்மானத்தில் இருக்கிறது. “பூரண சுயேச்சைக்கு அருத்தம் பிரிட்டிஷாருடைய ஆதிக்கம் தொடர்பு இந்தியாவின் மீது இருக்கக்கூடாது என்பது தான்” என்று எல்லா இந்திய காங்கிரஸ் தலைவர் ஜவார்லால் பண்டிதர் வியாக்யானம் சொல்லுகிறார். மற்றொரு பக்கம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி சாஸ்திரியாரோ “பார்லிமெண்டு கமிட்டி சட்டப்படி பூரண சுயேச்சை என்பதற்கு குடியேற்ற நாட்டு அந்தஸ்து” என்று பாஷ்யம் சொல்லுகிறார், அதோடு கூட “பிரிட்டிஷாரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு பிரிட்டிஷ் ஆதிக்கத்தை அனுமதிப்பதும் அதில் அடங்கும்” என்று பூரண சுயேச்சை என்பதற்கு வியாக்கியானம் சொல்லுகிறார்.
வட்டமேஜை மகாநாட்டுக்கு இந்தியாவின் “ஏகப் பிரதிநிதி”யாகச் சென்ற தோழர் காந்தியாரோ, “பூரண சுயேச்சையென்றால் அதன் சாரம் இருந்தாலும் போதும்” என்பது அருத்தம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
மற்றும் பழய காங்கிரஸ் வாதிகளில் முக்கியமானவரான தோழர்கள் விஜயராகவாச்சாரியார் மாளவியா போன்றவர்கள் “பிரிட்டிஷ் சம்மந்தம் அடியோடு அறவே ஒழித்துவிடுவது என்பது இன்றைக்குக் கூடாத காரியம் என்றும் இன்னும் கொஞ்ச நாளைக்கு அவர்கள் இருக்கவேண்டும்” என்றும் அபிப்பிராயம் காங்கிரசில் சொல்லுகிறார்கள்.
~subhead
வெற்றி பெற்றபின் என்ன செய்வது?
~shend
இந்த வியாக்யான பேதங்கள் ஒருபுறமிருக்க இவ்வளவையும் லட்சியம் செய்யாமல் பொது ஜனங்கள் ஏமாந்து போவதன் மூலம் தேர்தல்களில் காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற்று சட்டசபைகளை கைப்பற்றி விட்டால் பிறகு என்ன செய்வது என்பதிலும் இன்று மறைக்க முடியாத மூன்று வித அபிப்பிராயங்கள் இருந்து வருகின்றன.
- சட்ட சபையை கைப்பற்றி, மந்திரி பதவியை ஏற்காமல் முட்டுக் கட்டை போட்டு சீர்திருத்தம் நடக்காமல் பார்க்க வேண்டும் என்பது.
- சட்டசபையை கைப்பற்றி, மந்திரி சபையையும் கைப்பற்றி சீர்திருத்தங்களை உடைத்தெறிய வேண்டும் என்பது.
- சட்டசபையைக் கைப்பற்றினால் மந்திரி சபையையும் கைப்பற்ற வேண்டும், மந்திரி பதவியை கைப்பற்றினால் சீர்திருத்தத்தை நடத்திக் கொடுத்தாக வேண்டும் என்பது.
இதைத் தவிர சில சாதாரண காங்கிரஸ்காரர்களும் காங்கிரஸ் பிரமுகர்களும் சட்ட சபைக்குள் போவதே சீர்திருத்தம் நடத்துவதுபோல் தான் ஆகும். ஆதலால் மந்திரி பதவி மறுப்பது என்பதோ சீர்திருத்தத்தை உடைப்பது என்பதோ பயன்படாததும் முடியாததுமான காரியமாகும் என்கிறார்கள்.
இவ்வளவு குளறுபடியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியார் “நான் மந்திரி ஆய்தீருவேன்” என்றும் “நான் மந்திரியானால் இன்ன இன்ன காரியம் உங்களுக்கு (ஜனங்களுக்கு ) செய்கிறேன். எனக்கு மந்திரியாக யோக்கியதை இல்லையா?” என்றும் தினந்தோறும் சொல்லிக் கொண்டே வருகிறார்.
காங்கிரசோ இவைகளுக்கெல்லாம் ஒரு விளக்கமான தீர்மானம் செய்யாமல் வழ வழா முறையில் “ஸ்தானங்களை கைப்பற்றிய பின்பு மாகாண காங்கிரஸ் கமிட்டிகளைக் கலந்து பிறகு மந்திரி பதவியைப்பற்றி பேசலாம்” என்று தீர்மானித்து இருக்கின்றது. அடுத்தாப்போல் தலைவர் பட்டத்துக்கு வரப்போகும் ஆச்சாரியார் “அதற்கு இப்போது என்ன அவசரம். ஸ்தானங்களை முதலில் கைப்பற்றுங்கள்” என்கின்றார்.
மாகாணங்களோ ஒவ்வொன்று ஒவ்வொரு விதமாகவும் ஒரே மாகாணம் பல விதமாகவும் அபிப்பிராயம் கூறுவதோடு மகாநாடுகளிலும் பலவித தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன.
ஆகவே இன்று தேர்தல்களுக்கு காங்கிரசினிடம் அரசியல் பிரச்சினை என்பது இன்னது என்பதாக இல்லாமலே ஸ்தானங்களையும் ஸ்தாபனங் களையும் கைப்பற்ற வேண்டும் என்கின்ற காரியம் மாத்திரம் பிரச்சினையாகவும் அதற்கு ஆதாரமாக “காந்தி பெரியவர், பட்டினி கிடந்தவர், காங்கிரசுக் காரர்கள் ஜெயிலுக்குப் போனவர்கள், அடிபட்டவர்கள், பாரத மாதாவுக்கு ஜே” என்கின்ற விஷயங்கள் மாத்திரமே பிரச்சினையாக இருக்கின்றன.
~subhead
அபேதவாதம்
~shend
தேர்தல் விஷயம்தான் இப்படி என்றாலோ மற்ற முக்கிய கொள்கைகள் விஷயத்திலாவது காங்கிரஸ் ஒரு கொள்கையில் இருக்கின்றதா என்று பார்த்தால் அதுவும் இன்று சிரிப்பாய் சிரிக்கும் விதமாகவே இருந்து வருகின்றது.
காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் காங்கிரசின் லட்சியம் பூரண சுயேச்சை என்றும், பூரண சுயேச்சை பெற்ற பின் அபேதவாதமே தனது கொள்கை என்றும் சொல்லுகிறார். அவருடைய கவுன்சிலுக்கு முக்கால் வாசிப்பேர்களை அபேதவாதத்துக்கு எதிரிகளாகவே பார்த்து நியமித்துக் கொண்டிருக்கிறார்.
மற்ற காங்கிரஸ் தலைவர்கள் தோழர்கள் ராஜேந்திர பிரசாத், பட்டேல், ஆனே, மாளவியா, விஜயராகவாச்சாரியார், ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் இன்று அபேதவாதம் முட்டாள்தனமானது என்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.
அப்படியானால் அபேதவாதக்காரரை காங்கிரஸ் தலைவராக ஏன் நியமித்தீர்கள் என்று கேட்டால் “அது அவருடைய (ஜவஹர்லாலுடைய) கொள்கைக்கு ஆக அல்ல, அவர் பெரிய மனிதனுடைய மகன் என்பதற்கு ஆகவும் அவர் செய்த தியாகத்துக்கு ஆகவும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரே பதில் சொல்லுகிறார்.
இந்த நிலையில் இன்னம் 4, 5 மாதம் கழிந்தால் காங்கிரசுக்கு வேறு தலைவர் வரப்போகிறார். அது அனேகமாக தோழர் ராஜகோபாலாச்சாரியாராக இருக்கலாம். அவரது அபிப்பிராயம் எல்லோரும் அறிந்ததே.
தோழர் காந்தியாரும் இது விஷயத்தில் அபேதவாத எதிரிகளுக்கு உதவியாகவே இருந்து வருகிறார். ஆகவே எலக்ஷன், பதவி ஏற்பு, அபேதவாதம் ஆகியவை ஒன்றுக்கொன்று தம்மில் முரண்பட்டு ஒன்றோ டொன்று போர் புரிகின்றன. இது ஒரு புறமிருக்க தோழர் மாளவியா கூட்டத்தார் காங்கிரசில் இருந்து பிரிந்து வகுப்பு உணர்ச்சி காரணமாக வேறு கக்ஷி ஆரம்பித்து இருக்கிறார்கள். காங்கிரசுக்காரர்களோ வகுப்பு தீர்ப்பைப் பற்றி பேசினால் முஸ்லீம்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போய்விடும் என்கின்ற பயத்தினால் அதை (வகுப்பு தீர்ப்பை) அனுமதித்துக் கொண்டு சமயம் போல் நடக்க இடமிருப்பதாக காட்டி வருகிறார்கள்.
காங்கிரஸ் தலைவரோ “வகுப்புத் தீர்ப்பைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் வங்காளத்துக்கு செய்த வகுப்புத் தீர்ப்பு மாத்திரம் அதீதமான” தென்றும் அதனால்தான் மிகவும் வருத்தப்படுவதாகவும் கூறுகிறார்.
இந்த நிலையில் பொது ஜனங்களிடையில் காங்கிரசில் பிளவு இருக்கிறது என்கின்ற அபிப்பிராயம் குடி கொண்டிருப்பதை மாற்ற வேண்டி தோழர் ஜவஹர்லால் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தனது அபேதவாதத்தின் உண்மை வேஷம் வெளிப்பட்டு விட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
“ருஷியாவின் பொருளாதாரக் கொள்கையை நான் நம்புகிறேன், ருஷியா அனேக விஷயங்களில் ஆச்சரியமான முன்னேற்றமடைந்திருக் கிறது, ஆனால் குருட்டுத்தனமாக ருஷியாவை நான் பின்பற்ற மாட்டேன், பொதுவுடமை என்ற ருஷிய சம்மந்தமான வார்த்தையை விட்டு அபேதவாதத்தை நான் வற்புறுத்துகிறேன்”.
“கதர் நமது பொருளாதாரப் பிரச்சினைக்கு முடிவான பரிகாரமாகாது.”
“நான் கூறும் அபேதவாதம் இந்தியாவுக்கு எப்படிவரும் என்று சொல்ல முடியாது. ஆனால் அபேதவாதத்தாலன்றி நமது ஏழ்மையை போக்க முடியாது.”
“ஆனால் அபேதவாதம் ஏற்படுவதற்கு முன் நமக்கு சுயேச்சை வேண்டும்.”
“எனக்கு பூரண ஜனநாயகத்தில் தான் நம்பிக்கை. இப்போது நான் ராஜீய ஜனநாயகத்துக்கே பாடுபடுகிறேன்.”
“நமது பிரச்சினைகளை ஜனநாயகத்தின் மூலம் தீர்ப்பதற்காக இந்த விஷயங்களை (அபேதவாத விஷயங்களை பர்) நான் ஜனங்கள் முன் எடுத்துக் கூறுகிறேன். இதை ஒரு குற்றமாகக் கருதக் கூடாது.”
“நான் அபேதவாதத்தை ஜனங்களிடம் பிரசாரம் செய்யவில்லை”
அது இந்தியாவுக்கு வரும்படி செய்ய என்ன செய்வது என்று சொல்ல முடியாது என்பதாக முதலிலேயே சொல்லிவிட்டார்.
இந்த வாக்கியங்கள் 13636ந் தேதி சுதேசமித்திரன் பத்திரிகையில் 21வது பக்கத்தில் 1,2,3,4 நெம்பர் கலங்களில் இருக்கின்றன.
ஆகவே காங்கிரஸ் அபேதவாதமோ, ஜவஹர்லால் நேருவின் அபேதவாதமோ என்ன என்பதை இதிலிருந்து வாசகர்களையே விளங்கிக் கொள்ள விரும்புகிறோம்.
நிற்க, “பொதுவுடமையோ அபேதவாதமோ சுதந்திரம் பெறுமுன் முடியாது (என்றும்) ஆதலால் முதலில் சுதந்திரம் பெற முயற்சிப்போம்” என்றும் கூறுபவர்களின் கூற்றையும் சிறிது கவனிப்போம்.
இந்தியாவுக்கு சுதந்திரமில்லாமல் எப்படிப் பொதுவுடைமை வராதோ, அதுபோலவே இந்தியாவில் பார்ப்பானும் பறையனும் மேல் ஜாதியும் கீழ்ஜாதியும் ஒழியாமல் அழியாமல் சுதந்திரம் வரமுடியுமா என்று கேட்கின்றோம்.
பார்ப்பன ஆதிக்கம் அழியாமல் இருக்க சுயராஜ்யம் வருவதாய் இருந்தால் கீழ்ஜாதிக்காரர்கள் என்பவர்கள் அப்படிப்பட்ட சுதந்திரம் இந்தியாவுக்கு வர அனுமதிக்க முடியுமா? அனுமதிக்கலாமா? என்று கேட்கின்றோம்.
“கீழ் ஜாதிக்காரர்கள் சம்மந்தம் கேட்டுக்கொண்டு ரஷ்யாவுக்கு பொதுவுடமை வரவில்லை” என்று நமது சமதர்ம வீரர்கள் பதில் சொல்லக் கூடும். இது குதிரைக்கு குர்ரம் என்று தெலுங்கு பெயர் சொன்னவுடன் ஆனைக்கு அர்ரம் என்று சொல்லி தனக்கு தெலுங்கு வந்துவிட்டதாக பாவித்துக் கொண்ட பையனையே ஒக்கும். ரஷியாவில் ஏற்பட்ட நிலைமை இந்தியாவில் ஏற்படும் என்று நினைப்பது பெரியதொரு அறியாமையே ஆகும். இந்தியாவுக்கு ஏற்பட்டாலும் போதாது. இங்கிலாந்துக்கும் ஏற்பட வேண்டும். இங்கிலாந்துக்கு ஏற்பட்டாலும் போதாது. நேச தேசங்களுக்கும் ஏற்படவேண்டும். இதற்கு ஒரு உலக யுத்தம் வந்தாக வேண்டும். அப்படி ஒரு உலகயுத்தம் ஏற்பட்டாலும் அதில் பிரிட்டிஷûக்கு வெற்றி ஏற்படுத்திக் கொடுக்க இந்தியாவிலேயே 6 கோடி மக்கள் மாத்திரமல்ல 15 கோடி மக்களுடைய உயிரும் பல ராஜாக்களினுடையவும், ஜமீன்தார்களினுடையவும், முதலாளிகளினுடையவும் செல்வமும் காத்துக்கொண்டு இருக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.
பொதுஉடமை என்கிற வார்த்தை ஏழைகள் காதுக்கு இனிமைதான், அபேதவாதம் பேச்சுக்கு சிங்காரம் தான்.
ஆனால் “அது எப்படி வரும் என்றும் அதற்கு என்ன செய்வது என்றும் தெரியவில்லையே” என்று ஜவஹர்லாலே சொல்லுவதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அதோடு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பலத்தையும் தந்திரத்தையும் இந்தியர்களின் பிரிவினையையும் பலமற்ற தன்மையையும் மடமையையும் கூட சேர்த்து யோசித்துப்பாருங்கள், நம் நாட்டில் மற்ற ஸ்தாபனங்களையும் சுயராஜ்யம், சுதந்திரம் என்கின்ற வார்த்தைகளையும் எப்படி சில சோம்பேறிகளும் வேலையற்றோர்களும் தங்களது வாழ்க்கைக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் பயன்படுத்திக் கொள்ளுகிறார்களோ அதுபோல் பொதுஉடமை என்கிற வார்த்தையையும், சமதர்மம் என்கின்ற வார்த்தையையும் பல ஆள்கள் பயன்படுத்திக்கொண்டு இந்நாட்டு செல்வமும் இந்நாட்டு பெண்களும் இப்பொழுதே எல்லோரும் பொது என்று கருதிவிடுவதன் மூலம் அந்தக் கொள்கைக்கே கேடு உண்டாக்கி வருகிறார்கள். இதனால் பணமுள்ளவன் என்று கருதிக் கொள்ளுகிற ஒவ்வொருவனும் தன் பணத்துக்கு சர்க்கார் தயவையும் காவலையும் எதிர்பார்க்கவும், நம் பெண்களுக்குக் கல்வியும் சுதந்திர சக்தியும் வாழ்வுக்கு சொந்த தொழிலும் இல்லாததால் அவர்கள் இன்னமும் ஒருவனுடைய சொத்தாகவே இருந்து வரவேண்டி யிருப்பதால் சுதந்திரக்காதல் என்கின்ற கொள்கைக்கு கேடு உண்டாகக் கூடியதாகவும் இருந்துவர வேண்டியதாகின்றது. இந்தக் காரணங்களினாலேயே பொதுவுடமை, சமதர்மம் என்னும் விஷயமாக வெறும் பிரசாரம் செய்வது கூட குற்றம் என்றும் அபாயம் என்றும் கருதுகிறவர்களுக்கு இடம் ஏற்பட்டு விடுகிறது. சர்க்காருக்கும் இதை அடக்க வேண்டும் என்று போலிச்சாக்கு உண்டாகிவிடுகிறது.
இன்றைய தனி உடமை உலகில் வெறும் ஆட்கள் என்பவர்கள் இதற்காகக் கோபித்துக் கொள்வதால் பயனில்லை. ஒரு தாசி சுதந்திர கற்பைப்பற்றிப் பேசினால் மக்கள் என்ன சொல்லுவார்கள். ஆளுக்கொரு கல்லெடுத்துப் போடுவார்களே ஒழிய பொறுமையாய் கேட்கக்கூட மாட்டார்களல்லவா? அதுபோலவே ஜீவனத்துக்கும் தொழிலுக்கும் மார்க்கமில்லாதவர்கள் பொதுஉடமைப் பிரசாரம் செய்தால் இன்றைய நிலைமையில் அதிகம் எதிர்ப்பு ஏற்படுவது என்பதிலும் கஷ்டம் ஏற்படுவது என்பதிலும் மக்கள் அபிப்பிராயத்தை சரியானபடி மதிக்கமாட்டார்கள் என்பதிலும் ஆச்சரியமில்லை.
எப்படி இருந்தாலும் எலக்ஷன் போட்டி காலத்தில் பதவியையும் அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று தேசீயத்தின் பேராலும் சமுதாயத்தின் பேராலும் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு பொது உடமைப் பிரசாரமோ, சமதர்மப் பிரசாரமோ செய்வது என்பது ஒருநாளும் அறிவுடமையான காரியம் என்றோ, யோக்கியமான காரியம் என்றோ சொல்லிவிட முடியாது.
கைப்பற்றியதற்கு அப்புறம் என்ன செய்வது என்பதில் விளக்கமோ தெளிவோ இருந்தால் தான் எலக்ஷன் பிரசாரங்களில் இவற்றை கலக்கிக் கொள்வது ஒரு அளவுக்காவது இப்போது ஒப்புக்கொள்ளலாம். அப்படிக்கு இல்லாமல் இப்போது சட்டசபை ஓட்டு பெறுவதற்குச் செய்யப்படும் ஜவஹர்லால் போன்றவர்களின் அபேதவாதப் பிரசாரத்தை யாரும் கண்டிக்காமல் இருக்கமாட்டார்கள்.
அபேதவாதம் குற்றமென்று நாம் ஒருநாளும் சொல்லமாட்டோம். அதனால்தான் மனித சமூகத்துக்குள் ஒரு அளவாவது சாந்தியும் சமாதானமும் ஏற்படும் என்பதையும் நாம் வலியுறுத்துவோம். அது பிரசாரம் செய்யப்பட வேண்டிய காலம் எது என்பதையும் நாம் அறிவோம்.
ஆனால் அது சமூக விஷயத்தில் உள்ள கொடுமைகளைக் களையாமலோ களைய முயற்சி செய்யாமலோ ஏற்பட்டுவிடும் என்பதை நாம் ஒருநாளும் ஒப்புக்கொள்ளமாட்டோம். அபேதவாதம் மாத்திரமில்லாமல் சுதந்திரம், சுயராஜியம் என்கின்ற வார்த்தைகளுக்கும் என்ன அருத்தம் இருந்தபோதிலும் கூட சமுதாயக் கொடுமைகள் அதுவும் பிறவி காரணமாய் இருந்துவரும் கொடுமைகள் நீக்கப்படாமல் அவ்வார்த்தைகளை உச்சரிப்பது கூட யோக்கியமான காரியம் என்று நாம் சொல்ல மாட்டோம்.
குடி அரசு தலையங்கம் 21.06.1936