மருதையா பிள்ளைக்கும் மார்க்க சகாய தீக்ஷதருக்கும் சம்பாஷணை

– கோமாளி யெழுதுவ�து

மருதையாபிள்ளை: வாங்கய்யா தீக்ஷதரே! சௌக்கியமா? ரொம்பநாளாக காணமே.

மார்க்க சகாய தீக்ஷதர்: ஆமாம், என்ன செய்கிறது? பிழைக்கிறவழி பார்க்கவேண்டாமா?

மருதையா: நீங்கள் என்ன பாடுபடவா போகிறீர்கள், யாரோ சம்பாதிக்கிறான், எப்படியோ உங்கள் காரியம் நோகாமல் நடந்து விடுமே, என்ன குறை?

மார்க்க: பூர்வீகம் போல் எண்ணிக்கொண்டு ஒன்றுந் தெரியாதவர் போல் பேசறீர்களே.

மருதையா: பூர்வீகமென்ன? நவீனமென்ன? எப்போதும் போலவேதான் உதயம் அஸ்தமனம் ஆகிக்கொண்டே வருகிறது. உமக்கு மாத்திரம் என்ன வித்யாசப்பட்டு காண்கிறதோ? எனக்கு ஒன்றும் தோணவே இல்லையே.

மார்க்க: ஆமாம், உமக்கென்ன தெரியவேண்டி இருக்கிறது? எங்களைப்போல தூங்கி விழித்ததும் எங்கு கல்யாணம், எங்கு கருமாதி என்று வீடுவீடாக அலைந்தாலல்லவோ தெரியும். அப்படித்தான் அலைந்தாலும் முன் போல ஏதாவது மரியாதையுண்டா? இல்லாவிட்டாலும் தக்ஷணையாவது அணாக்கணக்கில் உண்டா? எல்லாம் வர வரக் கெட்டுப் போய்விட்டது. அந்த வயித்தெரிச்சலைக் கிளப்பாதேயும். வேறு ஏதாவது பேச்சிருந்தால் பேசுங்கோ.

மருதையா: என்ன தீக்ஷதரே, மிக வருத்தமாகவும் சலிப்பாகவும் பேசுகிறீர்கள். ஏதாவது உங்களுக்கு வரவேண்டிய கடனை இல்லை என்று மறுத்து விடுகிறார்களா? அல்லது யாசிப்பது தவறு என்று அறிந்துகொள்ளுமாறு செய்கிறார்களா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

மார்க்க: கடனாவது இழவாவது ஏதோ சுபா சுபங்களில் பிராமணனாயிற்றே என்று கொஞ்சமும் தற்கால ஜனங்கள் கவனிக்கிறதே இல்லை. தர்ம மில்லை; தக்ஷணை இல்லை; தாம்பூலமில்லை. வர வர மிகவும் கேவலமாகி விட்டது. என்னமோ விருதா செலவாக நினைத்து வருகிறார்களே ஒழிய இதற்கெல்லாம் பலாபலன் கிடைக்கு மென்பது தோணுகிறதே இல்லை. மகா மோசம். அதைக் கேட்க வேண்டாம்.

மருதையா: அவனவன் வீட்டு நல்ல காரியம் கெட்ட காரியங்களில் உமக்கென்ன பங்கு? யார் முதலை யாருக்கு இல்லை என்கிறார்கள்? இதில் வரும் பலா பலனென்ன? மிகவும் வருத்தப்படுகிறீர்களே விபரம் விளங்கும்படிதான் சொல்லுங்களேன்.

மார்க்க: அவர் காரியங்களில் பங்கில்லா விட்டாலும் என்னய்யா தான தர்மமில்லையா, புண்ய பாபமில்லையா? அவர் முதலானாலும் ப்ராம்மணா சூத்ராள் இல்லையா, மேல் கீழில்லையா? பெண் பிள்ளைகள் கூட கேவலமாக துச்சமாக நினைத்து பேசற காலம் வந்துட்டதே! உமக்கொன்றும் தெரியாது போல் பேசரேளே, வயித்தெரிச்சலைக் கிளப்பரேளே.

மருதையா: இன்னொருவனுடைய பாப புண்யத்தில் உமக்கென்ன கவலை, நீர் பிராமணனானால் மற்றவர்களுக்கென்ன, அவர் சூத்திரனானால் உமக்கென்ன? மனித வர்க்கத்தில் மேல் கீழ் என்ன? “பெண் பிள்ளை கூட” என சொல்கிறீர்களே, பெண்ணென்றால் கேவலமாக நினைத்துக் கொண்டீரா? இவ்வளவு வயித்தெரிச்சலை நீரே ஏன் உண்டாக்கிக் கொள்ள வேண்டும்? உம்ம அலுவலை நீர் கவனித்துக்கொண்டு போனால் உமக்கேன் இவ்வளவு வருத்தம் வருகிறது? இதற்கெல்லாம் காரணமே புலப்படவில்லை.

மார்க்க: நீர் வயசானவராகவிருந்தும் நவீன ஜனங்களைப்போல பேசரேளே ஒழிய கொஞ்சமும் சாஸ்திர ஞானத்தோடு பேசறதில்லையே.

மருதையா: எனக்கு சாஸ்திரக் கியானமுமில்லை; அதை நான் நம்புகிறதுமில்லை. உமக்கு எதாவது þ ஞானம் இருந்தால் விபரமாகவும் பகுத்தறிவுக்குப் பொருந்துமாறும் சொன்னால் நான் தெரிந்து கொள்ளுகிறேன்.

மார்க்க: அப்படியானால் விபரமாக சொல்வதைக் கேளும். பிராமண க்ஷத்திரிய வைசிய சூத்திரரென்கிற நான்கு வருணங்களுண்டு. அதில் பிராமணனுக்கு ஆறு தொழில் உண்டு. அவைகளாவன: வேதம் வாசித்தல், வாசிப்பித்தல், யாகம் செய்தல், செய்வித்து வைத்தல், தானம் கொடுக்கல், யாசித்தல் என்கிறவைகளாகும். ஆகையால் அவர்களுக்கு யாரிடமாவது சென்று யாசிக்க நேரும் சமயங்களில் மற்றவர்கள் அப்பிராமணர்களுக்கு உபசாரத்துடன் அவர்களுக்கு வேண்டியவைகளை உதவ வேண்டும். பெண்கள் முதலிய துச்சமானவர்களை விட்டு பதில் சொல்லும்படி செய்யக்கூடாது.

மருதையா: ஓஹோ! யாசிப்பவர்க்கு மரியாதையோடு உபசரிக்க வேண்டுமா? சரி சரி பெண்களை தாழ்மையாக நினைக்க வேண்டுமா பேஷ்! நன்றாக இருக்கிறது.

மார்க்க: உமக்கிதெல்லாம் கேலியாக் காணலாம், அப்படி நினையாதேயும். சாஸ்திரத்தில் அதிதிகளை தெய்வமாக பாவித்துபசரிக்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களை மிகவும் கேவலமாகச் சொல்லி யிருப்பதாகச் சொன்னால் நம்பமாட்டீர். அதை வேணுமானால் அப்படியே சொல்லி விடுகிறேன் கேளும்.

“நண்ணருங் கடுவெங் கூற்றரு கரகேழ்

பிறப் பிறப்புறு புலி நாகம்

திண்கரியரி மாவலகை திண்குறளி தீவளி

கோடி வெந்தேட்கள்

விண்ணிடியேறுகழு புழு குளவி வேதை செய்வன

வெலாந் திரண்டு

பெண்ணுருவெடுத்த…..” என்றும்,

ஆயிரநான்கு நூறொரு நான்கு பத்தொரு நான்(கு)

எட்டாவறையும்

நோய் கொளவரினுமமையுமந்தோவோர் நுண்

ணிடைப் பெண்ணலம் வேண்டேம்”

என்றும் இன்னும் இதைப்பற்றி பலவாறாகச் சொல்லி இருப்பதை யெல்லாம் அறியாதவராகப் பேசறளே; என்ன சொல்கிறது.

மருதையா: இவைகளெல்லாம் தன்னலக்காரரால் எழுதிவைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றி வருவதற்கு உபயோகப்படுத்தி வருகிற வழக்க மென்று எனக்குத் தெரிந்தது தான். இம்மாதிரி எல்லாம் இனி சொல்லாது ஒழுக்கமுள்ளவைகளைக் கைப்பற்றி அவைகளிலுள்ளதை மனதில் வைத்து நடந்து வாரும்.

மார்க்க: ஆனால் ஒழுக்கமுள்ளதையும் பொதுநலக்காரர் அனுஷ்டிப் பதையும் நீர் தான் சொல்லுமே பார்ப்போம்.

மருதையா: ஆனால் சொல்லுகிறேன் கேளும். அதாவது அழையாமல் கண்ட இடங்களுக்குச் செல்லக்கூடாது.. அப்படிப்போனால் *”திறந்து கிடக்கும் வாசல்தோறும் நுழைந்து திரியும் பதார்த்த”மாக பாவிக்கப்படுவீர். யாரிடமும் ஒன்றும் யாசிக்கக்கூடாது. அப்படி செய்வீர்களானால் உம்மை திருடனுக்குச் சமானமாக பாவிப்பார்கள். எப்படி எனில் திருடனும் தனக்குப் பாத்தியமில்லாத மற்றொருவன் முதலை தான் பெற இச்சிக்கிறான். யாசகனும் தனக்கு பாத்தியப்படாத மற்றொருவன் முதலை அடைய இச்சிக்கிறான். இதில் இன்னொருவன் முதலை இச்சிப்பதில் இருவருக்கும் பேதமென்ன விருக்கிறது? நீர் சொன்ன பெண்ணைப்பற்றி இழி சொற்களுக்கும் ஒரு பதில் சொல்லி விடுகிறேன்.

“கண்டு கேட்டுண்டுயிர்த்து ற்றறியுமைம் புலனும்

ஒண்டொடி கண்ணே யுள”

“உலகின் வாழ்க்கை செவ்வனே நடைபெறுதற்குத் தாயகமான பெண்கள் என்பவர்கள் இன்றியமையாதவர்கள்” என்னும் சீரிய பொன்னுரைகளைக் கேட்டிலர் போலும்.

ஆகையால் இன்று முதல் ஏதாவது ஒரு நல்ல தொழிலைக் கடைப் பிடித்துச் ஜீவித்து வாரும். இந்தப் பழய சோம்பேறி வாழ்க்கைகளை இனி கனவிலும் நினையாதீர். உம்முடன் பழகின தோஷத்திற்கு இவைதான் நான் உமக்குச் சொல்லக்கூடும். நான் போய்வருகிறேன் நேரமாகிவிட்டது.

பகுத்தறிவு (மா.இ.) உரையாடல் சூலை 1936

~cstart

கற்பொழுக்கம்

~cmatter

நமது முன்னோர்கள் வாழ்ந்ததைவிடச் சிறப்பாக வாழக் கற்றுக் கொள்வதே நாம் நமது முன்னோர்களுக்குச் செய்யக் கூடிய மரியாதை என ஒரு பெரியார் கூறியிருக்கிறார். சமூக முன்னேற்றத்தைப் பற்றிய கருத்துக்கள் பலதிறப்பட்டனவாயிருக்கின்றன. முன்னோர்கள் முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. மேனாட்டாரைப் போலவே கீழ்நாட்டாரும் முன்னேற்ற விஷயத்தில் அலட்சியமாகவே இருந்து வந்தனர். உண்பது உடுப்பது போன்ற புறத் தேவைகளிலே அவர்கள் அதிக கவனம் செலுத்தி வந்தனர். சீர்திருத்த உணர்ச்சியும் முன்னேற்ற உணர்ச்சியும் மிகச் சமீப காலத்திலே தோன்றின.

இப்பொழுதும் மிக்க ஆர்வமுடைய சீர்திருத்தவாதிகளும் கூட சில குறிப்பிட்ட துறைகளிலே சீர்திருத்தம் செய்ய விரும்புகின்றனர். சர்வ வியாபகமான சீர்திருத்தங்களை விரும்புவோர் மிகச் சிலரே.

உலக முழுதும் பொதுவாக இருந்து வரும் சமூக லட்சியம் என்னவெனில் நமது முன்னோர்களைப்போல வாழ்க்கை நடத்துவதே.

ஆனால் சமூக ஸ்தாபனங்கள் எல்லாம் குறைபாடுடையனவாகவே இருக்கின்றன. சீர்திருத்தம் தேவையில்லாத ஸ்தாபனங்களே இவ்வுலகத்தில் இல்லையென்று ஒப்புக்கொள்வதே உயர்வான லட்சியம். ஒழுக்கம் மக்களால் ஏற்படுத்தப்பட்டது என்பதை இப்பொழுது அநேகமாக எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள். பழமை விரும்பிகள் எப்பொழுதும் சீர்திருத்தத்தை எதிர்த்தே வருகிறார்கள். கற்பு அல்லது ஆண் பெண் ஒழுக்க விஷயமாகத் தற்காலம் இருந்து வரும் ஏற்பாடுகளே சரியானவை என்றும், அவைகளை மாற்றினால் சமூகமே அழிந்து விடுமென்றும் அவர்கள் வாதிக்கிறார்கள்.

எனவே, தற்காலம் அமலில் இருந்து வரும் ஆண் பெண் ஒழுக்க சம்பந்தமான ஏற்பாடுகளைச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம்.

~subhead

பலதிறப்பட்ட ஒழுக்கங்கள்

~shend

ஆனால் கற்புணர்ச்சி உலக முழுவதும் ஒரே சீராக இருக்கவில்லை. ஒரு தேசத்தில் நல்லொழுக்கமென மதிக்கப்படுவது வேறொரு தேசத்து கூடா வொழுக்கமாக எண்ணப்படுகிறது. எனவே முக்கியமான சிலவற்றைப் பற்றி மட்டும் இங்கு ஒரு சிறிது ஆராய்வோம். பொதுவாக பெண் புருஷனின் அடிமை என்றும், போகப்பொருள் என்றும், அவளைப் புருஷன் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றும் உலக மக்கள் எல்லாம், ஒரு காலத்து நம்பியே வந்திருக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவிலே பெண்கள் அடிமைகளிலும் கடையராகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். புருஷர்கள் பெண்களை மிகக் கொடுமையாக நடத்தினார்கள்; மிருகத்தனமாக ஹிம்சித்தார்கள். பெண்கள் சுந்தரிகளாக இருந்து விட்டாலோ அவர்கள் பாடு அதோ கதிதான்.

ஆப்பிரிக்கப் பெண்கள் நிலைமையும் மிக்க பயங்கரமாகவே இருந்து வந்திருக்கின்றது. பெண் புருஷன் சொத்தாகவே இருந்து வந்திருக்கிறாள். தன்னிஷ்டப்படி அவளை உபயோகித்துக்கொள்ள புருஷனுக்குப் பூரண சுதந்தரம் இருந்து வந்திருக்கிறது.

ஹிமாலயப் பிரதேசத்திலுள்ள ஒரு ஜாதியார் திபெத்தியர் வழக்கத்தைப் பின்பற்றி வருகிறார்கள். பண்டங்களை விற்பது போல் அவர்கள் பெண்களை விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு பெண்ணுக்கு ஏக காலத்துப் பல புருஷர்கள் கணவன்மாராயிருந்து வருகிறார்கள். தகப்பன் புத்திரிகளை தாராளமாக விற்கிறான். அம்மட்டோ அவர்கள், தங்கள் மனைவிகளை யாருக்கு வேண்டுமானாலும் வாடகைக்கும் விடுகிறார்கள்.

நியூஜீலந்து வழக்கம் கொடியதாயிருப்பதுடன் விநோதமாகவும் இருக்கிறது. தந்தை தன் மகளையும், சகோதரன் தன் சகோதரியையும் வேறொருவனுக்கு விவாகம் செய்து கொடுக்கும்போது “அவள் உனக்கு திருப்தியளிக்க வில்லையானால் அவளை நீ விற்றுவிடு, அல்லது கொன்றுவிடு, அல்லது தின்றுவிடு, நீயே அவளுக்கு எஜமான், அவளை உன் இஷ்டப்படி என்னவேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறுவார்களாம்.

காட்டாள ஜாதியார் பழக்க வழக்கங்கள் இவ்வாறாக, நாகரிக மக்கள் நிலைமை எவ்வாறு இருந்திருக்கிறதெனப் பார்ப்போம்.

ரோமாபுரியில் ஆதி காலத்திலே பெண் கணவன் குடும்பத்தின் பொதுச்சொத்தாக, பொது அடிமையாக மதிக்கப்பட்டுவந்தாள். காட்டோ என்ற நல்லொழுக்கமுடைய பெரியார் தன் மனைவி மரேஷியாவைத் தன் நண்பன் ஹார்ட்டன்சியக்கு இரவலாகக் கொடுத்து அவன் இறந்த பின்பு அவளைத் திரும்பப் பெற்றுக்கொண்டாராம். ரோமர் கலியாண முறை ஒரு அடிமை ஒப்பந்தமாகவே இருந்து வந்தது. பெண் தன் ஆயுட்காலம் முழுதும் கணவனது அடிமையாகவே மதிக்கப்பட்டு வந்தாள்.

ஆங்கிலப்பெண்கள் நிலைமையும் ஆதியில் மிக மோசமாகவே இருந்து வந்தது. புருஷன் தன் மனைவியை மனங்கொண்ட மட்டும் அடிக்கலாம்; ஆனால் பெருவிரலைவிடப் பருமனான தடியால் அடிக்கக் கூடாது. இந்தப் புராதன கொடிய வழக்கம் சில இடங்களில் இப்பொழுதும் வெகு அபூர்வமாக இருந்தே வருகிறது. பெண்களின் துயரத்தைக் குறைக்கும் சட்டங்கள் தோன்றிய போதெல்லாம் பழமைவிரும்பிகள் மிக வன்மையாக எதிர்த்தே வந்தனர். அத்தகைய எதிர்ப்பு நெடுங்காலம் மிக வன்மையாக இருந்து வந்ததாயினும் காலஞ் செல்லச் செல்ல மாற்றங்கள் எற்பட்டே வந்தன.

தகப்பன் மகளைத் தீண்டுவதும் சகோதரன் சகோதரியைத் தொடுவதும் பயங்கர அநாசாரமான பாபச் செயலாக இப்பொழுது மதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கி.மு.66ல் அராபியாவிலே சகோதரர் சகோதரிகளையும், புத்திரர் தாய்மாரையும் பெண்டாண்டு வந்ததாக ஸ்ட்ராபோ என்பார் கூறுகிறார். வமிச விருத்திக்காக முறை கேடான புணர்ச்சி உலக முழுதும் அனுமதிக்கப்பட்டே வந்திருக்கிறது.

பிரம்மா தன் புத்திரியான சரஸ்வதியை மணஞ்செய்துகொண்டானாம். எகிப்திய தேவனான அம்மன் தன் தாயை மனைவியாக்கிக் கொண்டானாம். ஒடின் என்ற தேவன் தன் புத்திரி பிரிக்காவை மனைவியாக்கி கொண்டானாம். ஜனு பிட்டர் தன் சகோதரி ஜூனோவை விவாகம் செய்து கொண்டான். இந்தியாவிலும் சில ஜாதியாருக்குள் சகோதரர் சகோதரிகளை மணந்து கொள்ளும் வழக்கம் இப்பொழுதும் இருந்தே வருகிறது.

ஒரு காலத்திலே ஆணும் பெண்ணும் தம் இஷ்டப்படி கண்டபடி புணர்ந்தே வந்தார்கள். “ஒரு புருஷன் ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளலாம். ஆனால் அவளைச் சேர எல்லாப் புருஷர்களுக்கும் உரிமையுண்டு” என ஹாரடாட்டஸ் கூறியிருக்கிறார். லீசியார், எட்ரூஸ் காளர், சீரிட்டர், அத்தீனியர், லெஸ்பெயின்கள், எகிப்தியர் முதலியவருக்குள் பண்டு ஆண்களும் பெண்களும் தத்தம் இஷ்டப்படி வரையறையின்றிப் புணரும் வழக்கம் இருந்து வந்தது என பாச்சோபின் என்பார் தக்க ஆதாரங்களுடன் விளக்கிக் காட்டியிருக்கிறார். பெண்கள் பருவமடைந்த பிறகு ஏதேனும் ஒரு ஆலயத்துக்குச் சென்று ஏதேனும் ஒரு இளைஞனைத் தேடிப்பிடித்துக் கூடி கன்னிகழித்துக் கொள்ள வேண்டியது பாபிலோன் நகரத்திலே ஒரு புனிதமான மதச்சடங்காக மதிக்கப்பட்டு வந்தது. மெம்பிஸ், அர்மீனியா, டயர், சிடொன் முதலிய பிரதேசங்களிலும் இந்த அநாச்சாரம் இருந்து வந்திருக்கிறது. லிபியன் கன்னிப்பெண்கள் தனக்கு இஷ்டமானவரைக் கூடி சீதனத்துக்கு வேண்டிய பணத்தைச் சம்பாதித்தார்கள். விவாகத்துக்கு முன் அவர்களுக்கு புணர்ச்சி சுதந்தரம் இருந்து வந்தது. எனவே பல பேரைக் கூடி அதிக பணம் சம்பாதித்தவளையே எல்லோரும் மணக்க விரும்பினர். தாரசிய ஜாதியாருக்குள்ளும் இவ்வழக்கு இருந்து வந்ததாக ஹெராடாட்டஸ் கூறுகிறார். எகிப்திய ராஜகுமாரி ஒருத்தி விபசாரம் செய்து பணம் சம்பாதித்துத் தனக்கென ஒரு கோபுரம் 7(கதூணூச்ட்டிஞீ) கட்டிக் கொண்டதாகவும் தெரியவருகிறது.

மார்குஸாஸ், பிலிப்பையன், பொலினீஷியத் தீவுகளிலுள்ள சில பிரதேசங்களிலும் ஆபிரிக்காவில் சில ஜாதியாருக்குள்ளும் பெண்களுக்கு இப்பொழுதும் புணர்ச்சிச் சுதந்தரம் இருந்தே வருகிறது. கலியாண தினத்தன்று பெண்ணின் பந்துக்களான புருஷர்கள் எல்லாம் அப்பெண்ணைக் கூடும் வழக்கம் பாலியரித் தீவுகளில் மிகச் சமீப காலம் வரை இருந்து வந்தது. சில ஜாதியார், எல்லாப் புருஷர்களுக்கும் ஒரு பெண்ணைச் சேர உரிமையுண்டென்பதற்கு அறிகுறியாக எல்லாருக்கும் பொதுவான ஜாதித்தலைவனோ குல குருவோ அப்பெண்ணைக் கூட அனுமதிக்கிறார்கள். மலையாளத்திலே ஒரு ஜாதியார் தம் மனைவிமாரின் கன்னி கழிக்க மத குருமாரை ஏற்படுத்துகிறார்கள். இந்தியாவின் அநேக பிரதேசங்களிலும் பெசிபிக் மகா சமுத்திரத்திலுள்ள சில தீவுகளிலும் இவ்வழக்கம் இப்பொழுதும் அநுஷ்டானத்திலிருந்து வருகிறது. செனிகாப்பியாவிலே ஜாதித் தலைவன் அந்தப் புண்ணிய கருமத்தை நடத்தி வருகிறான். சில பிரதேசங்களிலே கன்னி கழிக்க விக்கிரகங்களை உபயோகப்படுத்து கிறார்கள். இவ்வழக்கங்களைப் பின்பற்றியே, ஐரோப்பாவிலும் மத்திய காலம் வரை முதலில் புணரும் உரிமை குறிப்பிட்ட சிலருக்கு இருந்து வந்தது.

ஆண், பெண் ஒழுக்க ஏற்பாடுகளை நாம் நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் அவை யாவும் ஏதேனும் ஒரு முறையில் ஒரு மதக் கொள்கையைத் தழுவி நிற்பதைக் காணலாம். எனவே ஆண் பெண் ஒழுக்கக் கொள்கை களையும் ஆசாரங்களையும் நாம் பரிசீலனை செய்யும்போது அந்த விஷயம் மிகவும் சிக்கலான தென்பதையும் விசாலமான தென்பதையும் நாம் முக்கியமாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்; நம்முடைய ஒழுக்க முறையே மேலானதென்று கண்ணை மூடிக்கொண்டு முடிவு கட்டி விடலாகாது. மற்றக்கால ஆசாரங்களை நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் தான் நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய முறை புலனாகும்.

~subhead

பழைய ஏற்பாட்டு ஒழுக்கங்கள்

~shend

தற்காலக் கிறிஸ்தவ கற்பொழுக்கத் திட்டங்களுக்கு புதிய ஏற்பாட்டைத் தழுவிய பழைய ஏற்பாட்டு ஒழுக்க முறைகளும் அவைகளின் பாஷ்யங்களுமே ஆதாரமாகும். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை பழைய ஏற்பாடு ஆதரிக்கிறது. “புருஷன் தனிமையாக இருப்பது நல்லதல்ல. நான் அவனுக்கு ஒரு வாழ்க்கைத் துணையை உண்டு பண்ணுவேன்” என்று சொல்லி ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்து கடவுள் ஜோடி சேர்த்ததாகப் பழைய ஏற்பாடு கூறுகிறது. மற்றும் ஆணையும் பெண்ணையும் கடவுள் ஆசீர்வதித்து “நீங்கள் பெற்றுப் பெருகி உலகத்தை நிரப்புங்கள்” என்று கட்டளையிட்டானாம். கிறிஸ்தவ ஒழுக்கங்களை வகுத்த ஆதிக்கிறிஸ்தவ ஞானிகள் பிரம்மச்சாரியத்தைப் பாராட்டிப் பேசியிருந்தாலும் கிறிஸ்து மதத்துக்கு ஆதாரமான ஹிப்ரு மதம் பிரம்மச்சரியத்தை ஆதரிக்கவில்லை. ஒருபுருஷன் பல பெண்களை மனைவியாகக் கொள்வதை பழைய ஏற்பாடு ஆதரிக்கிறது. ஆதாமின் ஏழாம் தலைமுறையானான லாமெத்து இரண்டு பெண்களை மணந்திருக்கிறான். தலைமைப் பூசாரி ஒரே பெண்ணைத்தான் மணக்க வேண்டுமென்று பழைய ஏற்பாடு வற்புறுத்தியிருக்கிறது. அரசன் பல பெண்களை மணத்தல் கூடாதென்றும் கட்டளையிட்டிருக்கிறது. எனினும் பல அரசர்கள் அதை மதிக்கவில்லை. தாவீது அரசன் பல பெண்களை மணந்தான். சாலோமன் அரசனுக்கு 700 மனைவிமாரும் 300 வைப்பாட்டிகளும் இருந்தார்கள். ஆபிரகாம் தன் சிற்றப்பன் மகளை கலியாணம் செய்து கொண்டான். ஒருவன் இறந்தால் அவனது விதவையை அவன் தம்பி கலியாணம் செய்து கொள்ள வேண்டு மென்று லெவியட் சட்டம் வற்புறுத்துகிறது. ஆபிரகாம் தன் மனைவியின் வேலைக்காரியைக் கூடிப் பிள்ளை பெற்றான். ஜேக்கப் இரண்டு சகோதரிகளை மணந்து கொண்டதுடன் அவர்களுடைய வேலைக்காரிகளையும் வைப்பாட்டியாக வைத்துக்கொண்டான்.

~subhead

பெண்கள் நிலைமை

~shend

ஹிப்ரு சட்டப்படி மனைவி கணவனுக்கு அடிமையாகவே இருந்தாள். கணவன் மனைவியை ஹிம்சித்தால் சட்டப்படி அவளுக்குப் பரிகாரமில்லை. கணவனுக்கு மட்டும் விவாக விடுதலை உரிமையளிக்கப் பட்டிருந்தது. புருஷனுக்குப் பிடிக்காத பெண்ணை அவன் வீட்டை விட்டு விரட்டலாம். அவள் அப்பால் விருப்பமுள்ளவனைக் கூடி வாழலாம். கணவன் மனைவியை நீக்கும்போது தன் கைப்பட ஒரு அறிக்கை எழுதிவெளியிட வேண்டும்.

தந்தைக்குத் தன் குழந்தைகள் மீது பூரண அதிகாரம் இருந்து வந்தது. குழந்தைகளைக் கொல்லவும் கூட அவனுக்கு உரிமை இருந்தது. புத்திரிகள் மீதும் பூரண சுதந்தரம் இருந்து வந்தது. அவன் புத்திரிகளை விற்பனை செய்யலாம். விபசாரம் செய்யக்கூடாதென்று பத்துக் கற்பனையில் ஒரு விதி இருக்கிறது. மனைவி கணவன் சொத்தாகையினால் அவளைப் பிறர் உபயோகப்படுத்தக் கூடா தென்பதே அத்தடையின் கருத்து. “ஒரு மனிதன் தன் அயலான் மனைவியோடாவது பிறன் மனைவியோடாவது விபசாரம் செய்தால் விபசாரம் செய்த ஆணுக்கும், பெண்ணுக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு கன்னிப்பெண் வேறொரு பெண்ணின் கணவனோடு சேர்ந்தால் அவளுக்கு தண்டனை வழங்குவதைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை. விபசாரம் ஒரு குற்றமென பழைய ஏற்பாடு விதித்திருந்தாலும் அக்காலத்து விபசாரம் தாராளமாக நடைபெற்றே வந்திருக்கிறது.

லாட் என்பான் வீட்டுக்கு இரண்டு விருந்தாளிகள் வந்தனர். அவர்களை வரவேற்று அவன் உபசாரம் செய்தான். ஆனால் அவ்விருந்தாளிகளை வெளியேற்ற வேண்டுமென்று ஊரார் கேட்டுக் கொண்டார்கள். எனினும் லாட் இணங்கவில்லை. அதிதிகளை விரட்டுவது மகா பாபமென எண்ணினான். எனவே அதிதிகளை ஊரார் தொந்தரவு செய்யாதிருந்தால் தன் இரண்டு புத்திரிகளையும் ஊராருக்கு வழங்கி விடுவதாக லாட் கூறினான். தன் புத்திரிகளின் கற்பை விட அதிதி சத்காரமே அவனுக்குப் பெரிதாகத் தோன்றிற்று. இதனால் அக்காலத்துப் பெண்களின் நிலைமை எவ்வளவு இழிவாக இருந்ததென்று விளங்கவில்லையா?

~subhead

புதிய ஏற்பாட்டு ஒழுக்க முறைகள்

~shend

கிறிஸ்துவின் உபதேசங்களைக் கேட்டால் நாம் கனவுலகத்தில் இருப்பது போலவே தோன்றும். “ஒரு பெண்ணை காமக் கண்ணால் நோக்குபவன் மனத்தினால் வியபிசாரம் செய்கிறான்” என்று கிறிஸ்து கூறுகிறார். ஆனால் இது அனுபவசாத்தியமான உபதேசமல்ல. மனத்தினால் விபசாரம் செய்கிறவர்களுக்கெல்லாம் சர்க்கார் தண்டனையளித்தால் உலக மக்கள் எல்லாம் சிறையில் அடைபடவேண்டியதுதான். விவாக விடுதலையைப் பற்றி கிறிஸ்துவின் உபதேசம் மிகவும் கண்டிப்பானதுதான். “விபசார தோஷத்துக்கு ஆளாகாத பெண்களை விவாக விடுதலை செய்பவன் அவள் விபசாரம் செய்யும்படி தூண்டுகிறான். விவாக விடுதலைபெற்ற பெண்களை விவாகம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாகிறான்” எனக் கிறிஸ்து கூறுகிறார். இது உயர்வான லட்சியந்தான். ஆனால் அக்கால மக்களுக்கு அது பொருத்தமானதல்ல. இன்றும் ஆண்களும் பெண்களும் அதைப் பின்பற்ற முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள். மணவினைகள் சுவர்க்கத்தில் நடைபெற்றால் அவைகளை ரத்து செய்ய நமது நீதிஸ்தலங் களுக்கு ஒருகால் அதிகாரமில்லாது இருக்கலாம். ஆனால் மண்ணுலகத்தில் நடைபெறும் கலியாணங்களை ரத்து செய்ய நமது நீதி ஸ்தலங்களுக்கு அதிகாரமிருந்துõன் ஆகவேண்டும்.

மேலும் கிறிஸ்துவின் போதனை பழைய ஏற்பாடு முதல் ஆகமத்துக்கு முரணானதாகவே இருக்கிறது. இல்லறத்தை கிறிஸ்து பாராட்டவில்லை. எல்லாரும் இல்லற வாழ்க்கை நடத்த வேண்டுமென்று அவர் கூறவில்லை. பிரமச்சரியத்தையே அவர் ஆதரிக்கிறார். கிறிஸ்து உபதேசப்படி எல்லாரும் பிரமச்சாரிகளாயிருந்தால் வெகு சீக்கிரத்தில் உலகம் காலியாகிவிடுமென்று நாம் கூறவும் வேண்டுமா?

அது ஒரு பயங்காளித்தனமான போதனை. எனினும் அது உலகம் முழுதும் பரவியிருக்கிறது; அது பெண்ணுலகத்தை அவமதிக்கிறது; காதலைக் கேவலப்படுத்துகிறது. மனோ கற்பிதமான சுவர்க்கத்தையடையும் பொருட்டு ஆண்கள் எல்லாம் ஆண்மையை இழந்துவிட வேண்டுமென்று வற்புறுத்துகிறது. பெண்கள் எல்லாம் தேவாலயத்தில் மௌனமாக இருக்க வேண்டுமென்றும், புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டுமென்றும் கணவன்மார் கட்டளைகளை மீறக்கூடா தென்றும் பால் கூறுகிறார். ஏனெனில் கிறிஸ்து ஆத்மாவின் ரக்ஷகனாயிருப்பது போல கணவன் மனைவியின் உடலின் ரக்ஷகனாயிருக்கிறானாம். ஆகவே, ஆதிக் கிறிஸ்தவர்கள் பெண்ணுலகத்தை அவமதித்தே வந்தார்கள். பிரம்மசரியத்தையே மேலானதாக மதித்தார்கள். இல்லறம் இரண்டாம் பக்ஷமாகவே மதிக்கப்பட்டது.

மற்றும், பெண் அசுத்தமானவள் என்றும், ஆண்களைத் தப்பு வழியில் செலுத்துகிறவள் என்றும், மக்கள் வீழ்ச்சிக்குக் காரணமானவள் என்றும் பழைய ஏற்பாடு கூறுகிறது. “பெண்ணே! நீ நரகத்தின் வாயாய் இருக்கிறாய்” என டெர்ட்டுலியன் கூறியிருக்கிறார். கலியாணம் ஒரு சாபத்தீட்டு என வேறொரு ஞானி கூறிகிறார். பெண் விரைவாக வளரும் ஒரு களையென்றும் அசுத்தமானவள் என்றும் 13வது நூற்றாண்டில் வாழ்ந்த வேறொரு கிறிஸ்தவ ஞானி கூறியிருக்கிறார்.

பெண்ணுலகத்தை கிறிஸ்து மதம் மட்டும் இழிவாகக் கூறவில்லை. “பெண்கள் அவமானத்துக்கு, இருப்பிடமானவர்கள் அவர்களைப் பார்க்கவும் கூடாது” என ஹிந்துக்களின் மனுதர்மம் கூறுகிறது.

தத்துவமுறையில் பார்த்தால் தற்கால கிறிஸ்தவ ஒழுக்கத் திட்டங்கள் மிகவும் உயர்வானவை தான். ஆனால் அது அனுபவசாத்தியமானதல்ல. சுவர்க்க போகத்துக்காக ஆண் தன்மையை இழந்தவனே கிறிஸ்து மதக் கொள்கைப்படி மேலானவனாகக் கருதப்படுகிறான். இல்லறம் இரண்டாம் பக்ஷமாகவே கருதப்படுகிறது. விபசாரதோஷம் ஏற்பட்டால் தான் விவாக விடுதலையுண்டு. விபசாரத்துக்கு கிறிஸ்து மதத்திட்டத்தில் இடமே இல்லை. சுமார் 19 நூற்றாண்டுகாலம் இந்த ஒழுக்கத்திட்டம் அமலில் இருந்தே வருகிறது. ஆனால் அந்தத் திட்டத்தினால் ஏற்பட்ட பலன் என்ன என்பதையே நாம் இப்பொழுது முக்கியமாக கவனிக்க வேண்டும். சரியாக வேலை செய்யும் திட்டங்கள் எல்லாம் உத்தமமானவை என்று கூறப்படுவதுண்டு. கிறிஸ்தவ ஒழுக்கத்திட்டப்படி நடக்க கிறிஸ்தவர்கள் ஒரு சிறிதாவது முயன்றிருந்தால் அந்த திட்டத்துக்கு ஒருவாறு மதிப்புக்கொடுக்க வேண்டியது தான். ஆனால் அந்த லக்ஷ்யத்தையடைய நாம் முயலவே செய்யாது இருந்தால் அந்த லக்ஷ்யத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று தான் முடிவு கட்டவேண்டும்.

அந்த லக்ஷ்யத்தை உயர்ந்த அறிவாளிகள் எல்லாம் எதிர்க்கிறார்கள். இந்திரிய நிக்கிரகம் அவ்வளவு உயர்வான சீலமல்லவெனக் கூறுகிறார்கள். ஏக பத்னி விரதம் விபசாரத்துக்கும் மற்றும் எண்ணற்ற முறைகேடான புணர்ச்சிக்கும் இடமளிக்கிறது. கிரியாம்சையில் அதனால் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறதென இனி ஆராய்ந்து பார்ப்போம்.

பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை சூலை 1936

~cstart

யந்திரங்கள் வேண்டாமா?

~cmatter

“மனிதவர்க்கத்திற்கு யந்திரங்கள் விரோதி” என்று நாம் கருதி இருந்த காலமும் அந்தப்படியே யந்திரங்களை எல்லாம் “பிசாசு” என்று பிரசாரம் செய்த காலமும் உண்டு. மனிதனின் இயற்கை முற்போக்கினுடையவும், அறிவு ஆராய்ச்சி வளர்ச்சியினுடையவும் தத்துவத்தை அறிந்த பிறகும் அவ்வளர்ச்சியை மேலும் மேலும் விரும்புகின்ற நிலையிலும், மக்களின் சரீர கஷ்டத்தை உணர்ந்து அதைக் குறைக்க வேண்டும் என்கின்ற ஆசையில் முயற்சி கொண்டிருக்கும் போதும் எந்த மனிதனும் யந்திரத்தை வெறுக்க முடியவே முடியாது. அன்றியும் கண்டுபிடித்தும் வரவேற்றுமே ஆகவேண்டும்.

ஏன் என்றால் மனித அறிவின் சுவாப அனுபவத்தைக் கொண்டும் ஆராய்ச்சியைக் கொண்டும் நாளுக்கு நாள் சுருக்க வழியை கண்டு பிடிப்பதே இயற்கையாகும். அது மாத்திரமல்லாமல் ஜீவன் சரீரப் பிரயாசையை குறைத்துக்கொள்ள ஆசைப்படுவதும் இயற்கையாகும். இந்த இரண்டு சுபாவ குணங்களும் யந்திரங்களைக் கண்டு பிடித்து கையாடித்தான் தீரும். ஆகவே அறிவும், ஆராய்ச்சியும் இல்லாத இடங்களில் தான் யந்திரங்கள் அருமையாய் இருப்பதும், அலட்சியமாய்க் கருதுவதுமாய் இருக்குமே தவிர, மற்ற இடங்களில் அதாவது பகுத்தறிவு, ஆராய்ச்சி முன்னேற்றமுள்ள இடங்களில் யந்திரத்தாண்டவமே அதிகமாயிருக்கும்.

வியாச ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டதாகிய “மனித வர்க்கத்திற்கு யந்திரங்கள் விரோதி” யந்திரங்கள் “பிசாசு” என்று நாம் கருதியதாகக் குறிப்பிட்டதானது அறிவும், ஆராய்ச்சியும் கூடாது என்கின்ற எண்ணத்தின் மீதோ, இயற்கையோடு போராடவேண்டுமென்றோ, அல்லது மனிதன் சரீரத்தால் கஷ்டப்பட்டு, இம்சைப்பட்டுத்தான் ஆகவேண்டுமென்றோ கருதியல்ல. ஆனால் மற்றெதைக் கருதி அவ்வபிப்பிராயம் கொண்டோம் என்றால் “யந்திரங்கள் பல பேர் பல நாள் செய்யும் காரியத்தை வெகு சில பேர் சில நாளில் செய்து விட்டால் மற்ற ஆள்களுக்கும் மற்ற நாள்களுக்கும் ஜீவனத்திற்கு கூலிக்கு மார்க்கம் எங்கே? அதன் மூலமாய் ஏற்படும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு என்ன சமாதானம்?” என்று சொன்னவர்களின் வார்த்தைகளை நம்பினதாலேயே தவிர வேறில்லை.

இந்தப்படியே இன்றும் இன்னும் அனேகர் நினைத்துக்கொண்டும், நம்பிக்கொண்டும் யந்திரங்களை ஆட்சேபித்து வெறுத்துப் பேசிக்கொண்டு மிருக்கின்றார்கள் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இந்தப்படி எண்ணிக் கொண்டிருப்பதை நாம் அந்தக்காலத்திலும், இந்தப்படி இப்போது எண்ணிக்கொண்டிருக்கின்ற அநேகர் இப்போதும் தங்கள் தங்களைப் பொறுத்தவரை தங்கள் தங்கள் காரியத்திற்கு மனித சரீர வேலையை விட யந்திர வேலையையே விரும்பி அதை உபயோகித்தே தான் வந்தோம், மற்றும் வந்தார்கள், வருகிறார்கள்.

உதாரணமாக கால்கள் இருக்க, கட்டை வண்டிகள் இருக்க (கட்டை வண்டியும் இயந்திரம்தான். இருந்தாலும்) யந்திரத்தின் மூலமாய்த்தான் அதாவது ரயிலில் பிரயாணம் செய்தோம். யந்திரத்தின் மூலமாய்த்தான் மோட்டாரில் பிரயாணம் செய்தோம். யந்திர மூலமாய்த்தான் கப்பலிலும் பிரயாணம் செய்தோம். யந்திர மூலமாகவே ஆகாயக் கப்பலில் பிரயாணம் செய்தோம். அதையே இன்றும் எல்லா மக்களுடைய போக்குவரத்து சாதனமாக ஆக்கவும் ஆசைப்படுகின்றோம்; மற்றவர்களும் ஆசைப்படு கின்றார்கள். ஆகவே இவற்றையெல்லாம் மனிதத் தன்மையுடன் கூடிய குற்றமற்ற இயற்கை உணர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர இது எவ்வித குற்றமுள்ளதும் அநியாயமானதும் அநேக ஆயிரக்கணக்கான பேரைப் பட்டினி போடக் காரணமான அக்கிரம காரியமென்றும் யாரும் சொல்லி இதற்காக யாரையும் கண்டிக்கவும் இவைகளை ஒழிக்கவும் முடியாது. ஜீவ சுபாவமே ஆசையின் உருவமாகும்.

ஆகவே யந்திரம் வேண்டாம் என்பது இயற்கையோடும் முற்போக்கோடும் அறிவு வளர்ச்சியோடும் பேராடும் ஒரு அறிவீனமான பிற்போக்கான வேலையாகுமே தவிர மற்றபடி பயனுள்ள வேலையாகாது.

உதாரணமாக 10 மூட்டைகளை ஒரு வண்டியில் ஏற்றி முன்னே நான்குபேர் இழுத்துக்கொண்டும் பின்னே நான்கு பேர் தள்ளிக்கொண்டும் உடல் வெயர்க்க நெஞ்சொடிய மணிக்கு மூன்று மைல் தள்ளாடித் தள்ளாடி இழுத்துக்கொண்டு போவதும், அதே மாதிரியான 25 மூட்டைகளை ஒரு மோட்டார் லாரியில் ஏற்றி ஒரு மனிதன் நோகாமல் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போல் உட்கார்ந்து கொண்டு சுக்கானை மாத்திரம் பிடித்துத் திருப்பிக் கொண்டு மணிக்கு 25 மைல் போவதுமான இரண்டு வேலைகளையும் எடுத்துக் கொண்டால் இவற்றுள் சுயமரியாதைக்கு, ஜீவகாருண்யத்திற்கு மனித சமூகத்திற்கு முற்போக்கிற்கு மற்ற ஜீவன்களை விட மனிதனுக்கு பகுத்தறிவு என்பதாக ஒரு குணம் அதிகமாக உண்டு என்கின்ற “உயர்” குணத்திற்கு எது ஏற்றது என்று கேட்கின்றோம்.

மற்றும் பாஷைகள் ஆதியில் எழுத்துக்கள் கூட இல்லாமல் சப்த ரூபமாய் இருந்ததும், பிறகு எழுத்துக்கள் ஏற்படுத்தப்பட்டதும், அவை கூரிய ஆணிகளால் ஏடுகளில் எழுத்தப்பட்டதும், பிறகு காகிதம் ஏற்பட்டதும், அதில் நாணலில் எழுதினதும், உருக்குத் தகடுகளில் எழுதினதும், பிறகு பௌண்டன் பேனாவில் எழுதினதும், டைப்பில் அடிப்பதும், அச்சடிப்பதும், அந்த அச்சும் மணிக்கு 100 பிரதிகளாக இருந்து இப்போது 10000 பிரதிகள் வீதம் அச்சு அடிக்கும்படியானதும் அதுவும் 12 து 8க்குமாயிருந்த அகல காகிதத்தில் மாத்திரம் அடிக்கும்படியாயிருந்து இப்போது 60 து 40க்குமாக உள்ள பெரிய காகிதத்தில் அச்சடிக்கக் கூடியதானதுமான காரியங்கள் படிப்படியாய் விருத்தி ஆகியிருக்கின்றதை பார்த்துக் கொண்டும், அதன் பலன்களை அனுபவித்து கொண்டும், ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவரும் அதைச் செய்து கொண்டும் இருக்கின்றோம். இவையெல்லாம் யந்திர பலன்கள் அல்லவா? என்றும், இவற்றில் எது தள்ளுவதற்குரியது? என்றும், இவை இல்லாதிருந்தால் அவ்வளவு பேருக்கு எவ்வளவு நாளைக்கு வேலையிருக்கும் என்றும் கேட்கின்றோம்.

இது தவிர மற்றொரு உதாரணத்தைக் கவனிப்போம். சங்கராச்சாரி மடாதிபதி என்று சொல்லப்படும் ஆட்கள் ரயிலில் ஏறுவது நீசத்தனமென்றும், மாட்டு வண்டி, குதிரை வண்டி ஆகியவைகளில் ஏறுவது ஜீவ இம்சை யென்றும், கருதிக்கொண்டு மரக்கட்டையில் பல்லக்கு செய்து அதற்குத் தந்தம், வெள்ளி, தங்கம் முதலிய தகடுகள் போட்டு அதன் மீதுதான் ஏறி உட்கார்ந்து கொண்டு தண்டு 1க்கு 4 பேர் வீதம் 4 தண்டுக்கு 16 பேர் ம்கு ம்கு என்று முக்கிக் கொண்டு மணிக்கு 4 மைல் வீதம் தூக்கி ஓடுவதைப் பார்க்கின்றோம். இது யந்திர சம்மந்தமில்லாதது என்று வைத்துக்கொண்டாலும் (கண்டிப்பாய் பார்த்தோமானால் பல்லக்கு என்பதும் ஒரு யந்திரமேயாகும்) இந்த வாழ்வு காட்டுமிராண்டி உலக வாழ்வா? அல்லது நாகரிக உலக வாழ்வா? என்பதை யோசித்துப் பாருங்கள். மனிதன் தூக்குவதை விட்டு மாடோ, கழுதையோ, குதிரையோ, ஒட்டகமோ, யானையோ சுமப்பதாக வைத்துக் கொண்டாலும், அதுவும் அதற்கு சற்று அடுத்த காட்டு மிராண்டி வாழ்வா அல்லது நாகரீக ஜீவகாருண்ய வாழ்வா என்றும் கேட்கின்றோம்.

ஆகவே இவைகளிலிருந்து யந்திரம் மனிதனுக்கு அவசியமென்றும், சௌகரியமான தென்றும், ஜீவகாருண்யமுடையதென்றும், முற்போக்குக்கும் நாகரீகத்திற்கும் ஏற்றதென்றும், இயற்கை உணர்ச்சியில் பட்டதென்றும், அறிவு ஆராய்ச்சியின் பயனென்றும் ஒப்புக்கொண்டுதானாகவேண்டும்.

~subhead

ஆனால்

~shend

ஆனால் முன் சொல்லப்பட்ட அதாவது “யந்திரங்கள் பெருகுவதால் தொழிலாளிகளுக்கு வேலையில்லாமல் போய் ஜீவனத்திற்குக் கஷ்டப்பட வேண்டியதாகுமே?” என்பதற்குச் சமாதானம் சொல்லியாகவேண்டும். இதற்கு பதிலாக நாம் அவர்களைக் கேட்பதென்னவென்றால்,

தொழிலாளி என்று ஒரு கூட்டம் ஏன் இருக்கவேண்டும்? முதலாளி என்று ஒரு கூட்டம் ஏன் இருக்க வேண்டும்? இது யாருடைய கட்டளை? என்ன அவசியத்தைப் பொறுத்தது? என்று அவர்களை நாம் முதலில் கேட்கிறோம்.

பிறகு பாடுபடுபவன், சோம்பேறி, கஷ்டப்படுபவன், சுகப்படுபவன், வேலை செய்பவன், வேலையின் பயனை அனுபவிப்பவன், ஏமாறுகிறவன், ஏமாற்றுகிறவன் என்பன போன்ற பிரிவுகள் மனித சமூகவாழ்க்கையில் இருக்கும்படியாகவே வாழ்க்கைத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது அவசியம் ஆதாரமுமுண்டா என்பது நமது இரண்டாவது கேள்வியாகும்.

மனிதன் தொழில் செய்வது என்பது மனித வாழ்க்கையின் சௌகரியம் அல்லது தேவையின் அவசியம் என்பதிற்காகவா? அல்லது முதலாளி மிராசுதாரன், சோம்பேறி ஆகியவர்கள் வேலை செய்யாமல் சம்பாதிக்கவோ, பணம் சேர்க்கவோ வேண்டிய அவசியத்திற்காகவா என்பது மூன்றாவது கேள்வியாகும்.

இம்மூன்று கேள்விகளுக்கும் பதில் அறிந்தோமானால் வேலை என்பதும், வேலை இல்லாத் திண்டாட்டம் என்பதும் ஒருவனை ஒருவன் கொடுமைப்படுத்துவதுதான் இந்த முறைகள் என்பதும் விளங்கிவிடும்.

இவை ஒருபுறமிருக்க, வேலைகளின் கூலிகளை உயர்த்தி வேலை நேரத்தை குறைத்து, முதலாளிகளின் லாபத்தையும் குறைத்து, ஒரு வரையறை ஏற்படுத்தி, உள்ள நேரத்தையும் கூலியையும் எல்லா வேலைக்காரர் களுக்கும் பங்கு வரும்படியான ஒரு திட்டம் போடுவோமேயானால் அதாவது மோட்டார் பஸ்காரர்கள் யூனியன் வைத்து வருகின்ற பிரயாணிகள் சத்தத்தை உயர்த்தி கிடைத்த வாடகையை எல்லோரும் பங்கிட்டுக்கொள்வது போலச் செய்தால் வேலையில்லாத் திண்டாட்டம் தானாகவே ஒருவாறு ஒழிக்கப்பட்டு விடுமா இல்லையா என்று கேட்கின்றோம்.

நிற்க, இன்றைய வாழ்க்கை நிலைமையைப் பார்த்தால் மனிதன் வேலை செய்வதற்காகவே பிறருக்கு அடிமையாய் உழைப்பதற்காகவே பிறந்திருக்கிறானே யொழிய சுகப்படுவதற்கில்லை என்றும் ஆதலால் அவன் வேலை செய்வதற்காக ஒரு தொழில் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்றும்தான் ஏற்படுகின்றது. இதுவும் தன் வயிற்றுக்கு வேண்டிய அளவு கூட கிடைக்க முடியாத கூலிக்கு முழு நேரத்தையும் செலவு செய்து பாடுபடவேண்டும் என்பதாகக் காணப்படுகிறது. இது பகுத்தறிவில்லாத மிருக வாழ்வை விட மிக மோசமான வாழ்வே யாகும். எப்படி எனில் அவற்றிற்காவது உத்திரவாதம் (ஒரு காரண்டி) இருக்கின்றது. அதாவது அதன் எஜமான் வயிறு நிறைய அதற்கு வேண்டிய ஆகாரம் கொடுக்கக் கட்டுப்பட்டிருக்கிறான். மனித வேலைக்காரனுக்கோ உத்திரவாதமே கிடையாது. இன்னும் பட்சிகள், காட்டுமிருகங்கள் ஆகியவைகளில் எதற்கும் எவ்வித வேலையும் செய்யாமல் வாழும் சௌகரியமிருக்கின்றது.

இப்படியிருக்க பகுத்தறிவு இருக்கும் காரணத்திற்காக மனிதன் 100க்கு 90 பேர் ஆகாரத்திற்கே வேலை செய்ய வேண்டியது என்பதும், அதுவும் காரண்டி இல்லாத அடிமையாயிருந்து வேலை செய்வது என்பதும், அதுவும் சரியாய் கிடைக்காமல் பட்டினியாய் கஷ்டப்படுவது என்பதும் இயற்கைக்கு மாறுபட்ட ஒரு பெரிய அக்கிரமமாகும். ஆகவே வேலையில்லாக் கஷ்டம் ஏற்பட்டு ஜனங்கள் பட்டினி கிடந்து பரதவிக்க ஆரம்பித்தால்தான் “தங்களுக்கு பகுத்தறிவும் வன்மையும் இருந்தும் தாங்கள் முட்டாள் தனமாய் பாடுபடுவதும் தங்களைப்போன்ற பிறரால் ஏய்க்கப்படுவதும் ஏன்? என்கின்ற காரணத்தை உணர முடியும். உணர்ந்து சமநிலையை அடைய முயற்சிக்கவும் முடியும்.

அதை விட்டு விட்டு “முதலாளி, தொழிலாளி நிலைமையும், மிராஸ்தாரர், உழவன் நிலைமையும் உலக வாழ்க்கையின் சௌகரியத்திற்கு அவசியம்” என்பதாகச் சொல்லி அதுவும் “கடவுள் செயலால் முன்ஜன்மத்தின் கர்ம பயனால், தலை விதியால் ஏற்பட்டது” என்று சொல்லிக்கொண்டு அவற்றை நிலை நிறுத்திக்கொண்டே எவ்வளவு கூலி வாங்கிக்கொடுத்தாலும் மனித வர்க்கத்தினரில் பெரும்பான்மையானவர்களின் கவலையும், தொல்லையும், கொடுமையும் ஒழியவே ஒழியாது. எப்படியெனில் ஜாதி வித்தியாசத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு சமத்துவம் கொடுத்தாலும் அது எப்படி பயன்படாதோ, அதுபோலவே முதலாளி தொழிலாளி முதலிய பாகுபாடு களை வைத்துக்கொண்டு அவர்களுக்குக் கொடுக்கும் எவ்வித சுதந்தரமும் பயன்படாமலே போய்விடுவதோடு கீழ்நிலை மேல் நிலை என்பதும் மாற்றவே முடியாததாகிவிடும். ஏனெனில் தொழிலாளி, முதலாளி, உழவன், ஜமீன், மிராஸ்தாரன் என்பவைகளும் ஒருவித வருணாச்சிரம தர்மமே தவிர வேறல்ல. ஆச்சிரமங்கள் என்றாலே படிகள் நிலைகள் என்பதுதான் கருத்தாகும்.

நமது நாட்டில் பிறவியிலேயே பல படிகள் இருப்பதாலும், அதனாலேயே நாம் சதா கஷ்டப்படுவதாலும் தொழில் வாழ்க்கையில் உள்ள படிகளை நாம் கவனிக்கவே நேரமும் ஞாபகமும் இல்லாதவர்களாய் இருக்கின்றோம். மனிதன் உண்மையான சமத்துவமடைய வேண்டுமானால் பிறவிப்படிகளையும் தொழில்படிகளையும் கடந்தவனாகத்தான் இருக்க வேண்டும். அவ்விரண்டு படிகளையும் ஒழித்த அவ்விரண்டு படிகளும் ஒழிந்த நிலைதான் சமதர்ம நிலை என்று சொல்லப்படுவதாகும்.

நிற்க, இவற்றிற்கெல்லாம் முக்கியமாக இன்னொரு விஷயம் உண்டு. அதைச் சரியாக உணர்ந்து கவனித்தோமானால் மேல் கண்ட கஷ்டங் களைப்பற்றிய கவலைகள் கூட நாம் அதிகம்படவேண்டிய அவசியமிராது. அதென்னவெனில், யோசனையில்லாமல் கண்ட கண்டபடி ஜனத்தொகையை விர்த்தி செய்வதாகும். பிள்ளைகளைப் பெறுவதாகும். 2 ஏக்கர் பூமியுள்ளவன் 100 மாடுகளை வாங்கி வளர்ப்பானேயானால் எப்படி அவனால் அந்த மாடுகள் போதிய தீனி கிடைத்து ரக்ஷிக்கப்பட முடியாதோ அதுபோலவே மனித சமூகமும் தேவைக்கும் தன்னால் தாங்குவதற்கும், அதாவது காப்பாற்றக் கூடியதற்கும் அதிகமாகவும், தேசத்தின் கால நிலைமைக்கு மேலாகவும் பிள்ளைகளைப் பெற்று கஷ்டப்பட்டு தனது ஆகாரத்தில் பங்கு கொடுத்து கடைசியில் இருவருக்கும் போதுமான ஆகாரமில்லாமலும், போதுமான ஆதரிப்பு இல்லாமலும் கஷ்டப் பட்டுக்கொண்டு இருப்பதை ஒழிக்காமல் வீணாய் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் என்ன பயன் என்பது முக்கியமாய் கவனிக்கத் தக்கதாகும்.

இந்திய நாட்டு நிலைமை நமக்குத் தெரிய சுமார் 40, 50 வருஷ காலமாகவே மக்களுக்கு “வேலையில்லாமல்” வெளிநாடுகளுக்குக் கூலியாகச் செல்வதே வழக்கமாக இருந்து வந்திருக்கின்றது. இது மாத்திரமல்லாமல் அடிக்கடி பஞ்சமும் கொள்ளை நோயும் வந்திருக்கின்றன. இது இந்த நாட்டு சுயமரியாதைக்கே மிகவும் கேடானதாகும். அளவுக்கும் சக்திக்கும் மீறி பிள்ளைகளைப் பெறுவதால் யாருக்கு என்ன லாபம்? என்று யோசிக்க வேண்டும்.

“உலகம் விருத்தியாக வேண்டாமா” என்கின்ற சொல் சுத்த முட்டாள் தனமானதும் சிறிதும் பொருளற்றதுமான சொல்லே ஒழிய அது ஒரு கவனிக்கத்தகுந்த சொல் அல்ல வென்பதே நமது அபிப்பிராயம். சம்போக விஷயங்களில் கவலையற்றும் முறட்டுத்தனமாயும் அளவுக்கு மீறியும் நடந்து கொள்வதால் மனிதர்களுக்கு ஏற்படும் வியாதிகளைப் போலவேதான், குழந்தைகள் ஏற்படுவதும் என்பதே தவிர அதற்கும் இதற்கும் சிறிதும் வித்தியாசமேயில்லை. சம்போக உணர்ச்சி இந்த உலகத்தில் உள்ள ஜீவ ஜந்துக்களில் மனிதனைத் தவிர வேறு எந்த ஜீவனுக்கும் குழந்தை பெறுவதற்காக என்கின்ற எண்ணத்தின் மீது தோன்றுவதே கிடையாது. மனிதன் பகுத்தறிவுக்காரன் என்கின்ற ஆணவத்தால் அவனுக்கு ஏற்படும் அனேக முட்டாள் தனமான செய்கைகளைப்போல் குழந்தைபெற வேண்டும் என்கின்ற முட்டாள்தனமும் ஏற்பட்டு அது ஒரு ஆசையாகி பிறகு அது ஒரு சொத்தாகி பிறகு “மோக்ஷத்திற்கு” உதவும் காரியமாகவுமாகி கடசியாய் வீண் கஷ்டமும் தொந்திரவும் பட்டு மற்றவர்களுக்கும் தொந்தரவு கொடுப்பதைத் தவிர வேறு ஒரு பயனும் இல்லாததாய் முடிந்து விடுகிறது.

மேலும் பிள்ளை பெறுவதினாலேயே மொத்த ஜன சங்கியையில் பகுதியான பெண்கள் சமூகம் அடிமையாகி அனேக ஆபத்துக்களுக்கும் வியாதிக்கும் உள்ளாகி அற்ப ஆயுளுடன் கஷ்டமும் படவேண்டியதாகி அவர்களது வாழ்வே மிக்க பரிதபிக்கத்தக்க வாழ்வாக முடிகின்றது. பெண் அடிமைக்கு காரணமே அவர்கள் பிள்ளை பெறுவதும், அதிலும் அதிகமான பிள்ளைகளைப் பெறுவதும், அதனால் உடல் நலிந்து பலவீனமுடையவர்கள் ஆவதும், பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்கே என்று கருதுவதால் சுதந்தரமும் வீரமும் இன்றி அடிமையாவதுமான காரியங்களுக்கு ஆளாக வேண்டியவர்களுமாகிறார்கள். பெண்கள் விஷயம் இப்படி இருப்பதோடு பொதுவில் வேலையில்லா கஷ்டத்தை நீக்கவும், மக்கள் கவலையும் தொல்லையும் கஷ்டமும் இல்லாமல் இருக்கவும் பிள்ளைப் பேற்றைக் குறைப்பது என்பது ஒரு தக்க வழியாகும்.

ஒரு சமயம் இவையெல்லாம் யாருக்காவது பிடித்த மற்றதாகுமே யானால் வேறு இன்னம் ஒரே ஒரு வழிதான் உண்டு என்று சொல்லுவோம். அதென்ன வெனில் எவனொருவன் தன் தேவைக்கு மேல் சொத்தும் ஸ்திதியும் வைத்திருக்கின்றானோ அவனைக் குற்றவாளியாக்கி திருடனுக்கு உண்டான தண்டனையைக் கொடுப்பது என்கின்ற ஆட்சியை ஏற்படுத்துவதுதான்.

இந்த ஆட்சி ஏற்பட்டு விட்டால் பிறகு யாருக்கு வேலை இருந்தாலும் யாருக்கு வேலை இல்லாவிட்டாலும் ஜீவனம் சரியாகும். இதற்காக அதிக கவலையும் பட வேண்டியதில்லை. இந்தப்படிக்கெல்லாம் இல்லாமல் நாட்டுச் செல்வத்தையெல்லாம் ஒருவன் தன்னிடமே வந்து சேரும்படியான முறையை மனித வாழ்க்கைக் கொள்கைகளாக வைத்துக் கொண்டு பல பேர்கள் பட்டினி இருந்து கொண்டு இருப்பதும் ஏன் பட்டினியாய் இருக்கிறார்கள் என்று கேட்டால் வேலைகள் கிடைக்காததால் பட்டினியாய் இருக்கின்றார்கள் ஆதலால் யந்திரங்களையெல்லாம் ஒழித்து விட்டு கடப்பாறையும் சம்மட்டியும் வாங்கிக் கொடுத்து வேலை வாங்கவேண்டுமென்றும் சொல்வதானால் இது எவ்வளவு அக்கிரமமானதும் அயோக்கியத்தனமானதும், திருட்டுத்தனமானது மான காரியம் என்பது யோசித்தால் விளங்காமல் போகாது. ஆகையால் நாட்டுக்கும் முற்போக்குக்கும் மனித சமூக நாகரிக வளர்ச்சிக்கும் யந்திரங்கள் மிகவும் முக்கியமானது என்று சொல்வதோடு அவற்றின் மூலம் மக்கள் சரீரப்பிரயாசையில் இருந்து விடுதலையாக நினைப்பதுவும் இயற்கையும் அவசியமும் ஆனதென்றும் சொல்லுவதோடு எஜமான், வேலைக்காரன், முதலாளி, தொழிலாளி, ஜமீன்தாரன், குடியானவன் என்பவைகளான படிகள் நிலைத்திருக்க வேண்டுமானால் மாத்திரம்தான் ஒரு நாட்டுக்கு யந்திரம் எதிரியே ஒழிய மற்றபடி சமதர்மம் விரும்பும் நாட்டுக்கு யந்திரமே சரியான அவிழ்தமாகும் என்றும் தைரியமாய்ச் சொல்லுவோம்.

பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை சூலை 1936

~front

குடி அரசு – 1936

 

You may also like...