கொச்சி மதம் மகாநாடு
தலைவரவர்களே! தோழர்களே!!
இன்று இங்கு கூட்டப்பட்டிருக்கும் மதம் மகாநாடு என்பதற்கு என்னையும் அபிப்பிராயம் கூறும்படி அழைத்திருக்கிறீர்கள்.
பல மதங்களைப் பற்றிய பல அபிப்பிராயக்காரர்கள் இப்போது இங்கு தங்கள் அபிப்பிராயங்களைச் சொல்லிவிட்டார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதத்தைப்பற்றி அதன் தலைவர்களால் உபதேசிக்கப்பட்ட தர்மங்களின் பெருமைகளை உங்களுக்கு விளக்கினார்கள். இந்த நிலையில் நான் பேசுவது உங்களுக்கு அவ்வளவு திருப்தி அளிக்குமோ என்று பயப்படுகிறேன். நான் எந்த மதத்தையும் ஆதரிப்பவனல்ல, எந்த மதத்தைப் பற்றியும் அதிகம் பாடுபட்டுப் படித்தவனுமல்ல. நான் எல்லா மதங்களையும், அந்தந்த மதக்காரர்களின் வாழ்க்கை நிலை மூலம் வெளியிலிருந்து அறிந்து அதைப்பற்றி மாத்திரமே அபிப்பிராயம் கொண்டிருக்கிறவன்.
இப்போது நமக்கு மதத்தைப்பற்றிய கவலையும், மத மகாநாடு கூட்டி யோசிக்க வேண்டிய அவசியமும் எதனால் ஏற்பட்டது? எதற்காக மதத்தைப் பற்றி பேசுகிறோம்? என்பவைகளை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். நாம் மத மகாநாட்டில் எந்த மதத்தில் மோக்ஷம் சமீபத்தில் இருக்கிறது என்றோ, எந்த மதத்தில் நமது கொடிய அக்கிரமங்கள் சுலபத்தில் மன்னிக்கப்பட்டு விடும் என்றோ, எந்தக் கடவுள் நல்ல கடவுள் என்றோ பார்க்கப்போகிறோமா? அப்படியானால் எனக்கு இங்கு பேச்சே இல்லை. ஏனெனில் எனக்கு மோக்ஷத்திலோ, பாவ மன்னிப்பிலோ, கடவுள் ஆட்சியிலோ சிறிதும் நம்பிக்கை கிடையாது. ஆத்மா என்பதோ, ஜீவன் என்பதோ ஒன்று இருப்பதாக நான் நம்புபவனே அல்ல. அது விஷயத்தில் எல்லா மதமும் ஒன்றுபோல் தான் இருக்கிறது. உலகில் உள்ள சகல மதத்துக்கும் ஒரு சர்வ சக்தியுள்ள கடவுளும், மோட்சமும், நரகமும், ஆத்மாவும், ஜீவனும் உண்டு. பிரார்த்திப்பதின் மூலம் எல்லா மதத்திலும் பாவ மன்னிப்பு உண்டு. இவற்றில் ஒன்று பெரிது மற்றது சிறிது என்று சொல்வதற்கில்லை.
பாவ மன்னிப்பில் இந்துமதமே அதிக மேலான மதமாகும். எவ்வளவு அயோக்கியனானாலும், கொடுமைக்காரனானாலும் ஒரு தடவை ராமா என்றோ, சிவா என்றோ சொல்லிவிட்டால் சகல பாபமும் போய்விடும் என்று சொல்லப்படுகிறது. அதுகூட வேண்டாம். ஒரு சிடுக்கை சாம்பல் நம்மை அறியாது நம்மீது பட்டிருந்தாலும் போதும். அதைவிட சீக்கிரமாகவும் சுலபமாகவும் மற்ற மதத்தில் பாவ மன்னிப்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆதலால், ஆத்மார்த்தம், பாவமன்னிப்பு என்பதற்காக நமக்கு இப்போது மத விசாரணை தேவையில்லை.
பொதுவாக மதங்கள் யாரால் சிருஷ்டிக்கப் பட்டிருந்தாலும் அதனால் என்ன பலன் இருந்து வந்தாலும் இனி நாம் அவற்றை ஆதரிக்க முடியாது. அதை உண்டாக்கினவர்கள் பெரியவர்களாய், விவேகிகளாய், பரோபகாரிகளாய் இருந்திருக்கலாம். அவர்களிடத்திலும் எனக்கு சண்டையில்லை. அவரவர்கள் அவ்வக்கால நிலைமைக்கு ஏற்றபடி அனுகூலித்தவர்களாய் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு அவை ஒருவிதத்திலும் பிரயோஜனப்பட மாட்டா.
உலகப் பிரயாணத்தில் அந்தந்த காலத்துக்கு ஏற்ற கால அட்டவணையை (டைம் டேபிள்) பார்க்க வேண்டும். போன மாசத்து ரயில்வே கால அட்டவணையை (டைம் டேபிள்) கொண்டு மணி பார்த்து ரயிலுக்குப் போனால் ரயில் தவறிவிடும். இப்போது மாதத்துக்கு ஒரு கைட் ஏற்படுகிறது.
கிறிஸ்து நாதர் தான் ஆகட்டும், மகமது நபிதான் ஆகட்டும், ஸ்ரீ நாராயண குருஸ்வாமி தானாகட்டும் அந்தந்த காலத்துக்கு அவரவர்கள் சரியானவர்களாயிருக்கலாம்.
எப்போதைக்கும் எந்தெந்த காலத்துக்கும் அவர்கள் தான் வழிகாட்டிகள், அவர்கள் சொன்னதுதான் எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் என்றால் அதை நான் ஒத்துக்கொள்ள முடியாது. காலம் மாறி வருகிறது, அறிவும் ஞானமும் பெருகிவருகிறது. இனியும் அபாரமாய் மாறி வருகிறது. இந்த சமயத்தில் 5000 வருஷம் 2500 வருஷம் 2000 வருஷம் 1500 வருஷம் முந்திய விஷயங்களைப் பார்த்துக்கொண்டு அப்போது இருந்தவர்கள் சொன்னதை கேட்டுக்கொண்டு அவைகளில் எது மேல் எது கீழ் யார் பெரியவர் என்று பார்ப்பது பயனற்ற வேலை.
இந்து மதம் என்பது ஒன்று இல்லையானாலும் அதற்கு ஆக சொல்லப்படும் கொள்கைகள் மகா புராதனமானது. அதைவிட புத்தர் உபதேசம் சிறந்ததாக இருக்க நியாயம் உண்டு. ஐயாயிர வருஷத்து நிலையை விட 2500 வருஷத்து நிலை மேலானது தானே. அதைவிட கிறிஸ்து மதம் 2000 வருஷத்துக்கு முன் ஏற்பட்டது மேலானதாய் இருக்க நியாயமுண்டு. புத்தரை அனுசரித்தே சில கற்பனைகளை கிறிஸ்து அப்போதைக்கு அனுபவ சாத்தியமாய் சொல்லிப் போனார். அதைவிட மகம்மது மதம் 1500 வருஷங்களுக்கு முன் ஏற்பட்டது மேலானதாக இருக்கக்கூடுமல்லவா? மகமது நபி பாலைவன அக்கிரமங்கள் சகிக்க மாட்டாமல் புத்தர் சொன்னதையும் கிறிஸ்து சொன்னதையும் அலசிப்பார்த்து கால தேசத்துக்கு ஏற்ற மாதிரி திருத்தினார். இவர் அவர்கள் இருவரையும் விட மேலானவராய் இருக்கலாம்.
கால்நடை வயதுக்கும் கட்டை வண்டி வயதுக்கும் ரயில் மோட்டார் வண்டி வயதுக்கும் ஒன்றுக்கொன்று மேலானதுதான். ஆனால், இன்று ஆகாயக் கப்பல் வயதில் நாம் இருந்து கொண்டு அதற்கு மேலான வழி தேடிக் கொண்டு இருக்கையில் கால்நடை நல்லதா கட்டை வண்டி நல்லதா என்று பார்ப்பது அறிவுடமையாகுமா? அந்தக்காலத்தில் அவர்கள் மேதாவிகளாய் இருந்திருக்கலாம். அந்தக்கால புத்திக்கும் மேதாவித்தனத்துக்கும் தக்கபடி வாழ்க்கைத்திட்டங்கள் ஏற்படுத்தி இருக்கலாம். அவ்வளவோடு அம் மதங்களுக்கும் அம்மதத் தலைவர்களுக்கும் மதிப்புக் கொடுப்பதுதான் சரி.
ஸ்ரீ நாராயண குரு சுவாமி போதனை கூட 1929 வருஷத்தோடு சரி. இப்போது அவர் இறந்து 6, 7 வருஷம் ஆகின்றது. இன்றைக்கும் ஒருவர் வந்து ஸ்ரீ நாராயணகுரு சுவாமி சொன்னபடிதான் நடக்க வேண்டும், அந்த மதம் தான் சிரேஷ்டம் என்றால் அதை என்னால் ஒப்புக்கொள்ளமுடியாது.
அவர் ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு கடவுள் இருக்க வேண்டியதுதான் சரி என்று சொல்லிப்போனார். அன்று அதுவும் இந்துக்களுக்குத்தான் அது சரியாய் இருக்கலாம்.
ஏனெனில் பல மதம் பல ஜாதி பல கடவுள்களை உடையவர்களா யிருந்ததால் அவை மாறி ஒன்றாகட்டும் என்று சொல்லியிருக்கலாம்.
இன்று ஜாதியும், மதமும், கடவுளும், அடியோடு போகவேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிற காலத்தில் ஒரு ஜாதிக்கும் ஒரு மதத்துக்கும் ஒரு கடவுளுக்கும் தான் இங்கு என்ன வேலை? ஆதலால் நாராயணகுரு சுவாமி கொள்கையை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? இதற்கு ஆக நாராயண குருசுவாமியை குற்றஞ்சொல்லவில்லை. அந்தக் காலத்துக்கு அந்த கைட் செல்லும். இப்போது செல்லாது. அதன்படி பார்த்துப்போனால் ரயில் தவறிப்போகும் என்று தான் சொல்லுகிறேன்.
பல மதக்காரர்களும் இங்கு வந்து பேசியதைப் பார்த்து இரண்டொருவர் பரிகாசம் செய்தார்கள். மதக்காரர்கள் பேசியதில் என்ன தவறு இருக்கிறது?
ஈழவ சமுதாயம் என்பது ஒரு அழகான புத்தியுள்ள பணமுள்ள வாலிப பெண்போல் இருக்கிறது. அது இந்துமதம் என்னும் கொடிய துஷ்ட அயோக்கிய புருஷனால் அடித்து துன்புறுத்தி வெளியில் துரத்தப்பட்டு இப்போது தெருவில் நின்று தியங்குகிறது.
இந்த நிலையில் இப்படிப்பட்ட பெண்ணைப் பார்த்த ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறார்கள். இது இயற்கைதானே. ஒருவனுடைய பெண் ஜாதியாய் இருக்கும் பெண்ணைப் பார்த்தே மக்கள் ஆசைப்படுகிறார்கள் என்றால் கிடைத்தால் அனுபவிக்கலாம் என்று கருதுகிறார்கள் என்றால் வெளியில் அடித்து துரத்தப்பட்ட நிர்க்கதியான பெண்ணைப் பார்த்து ஒருவர் ஆசைப்படுவதில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்கிறேன்.
நான் கிழவனாக 60 வயது கழிந்தவனாக இருந்தாலும் நல்ல புத்தி, பணம், அழகு, வாலிபம் இருந்தால் கவுரவத்திற்காவது நமக்கு பாரியாள் இருக்கட்டும் என்று தோன்றும். இது இயல்புதானே. அதுபோல் 25 லக்ஷம் ஈழவ சமூகம் இந்து மதத்தில் இருந்து வெளிப்பட்டுவிட்டால் அவர்கள் அத்தனைபேரும் நம் நம் மதத்துக்கு வரட்டும் என்று ஒவ்வொரு மதக்காரரும் கருதுவதில் என்ன பிழை இருக்கிறது?
இன்று சீக்கியரும், கிறிஸ்தவரும், மகமதியரும், புத்தரும் தங்கள் தங்கள் மதத்துக்கு வரும்படி கூறுகிறார்கள். நீங்களோ இந்து மதத்தை விட்டு விடுவது என்று தீர்மானித்தும் விட்டீர்கள்.
இனி என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டும். உங்களில் சிலர் ஒருமதமும் வேண்டியதில்லை சுயமரியாதைக்காரராய் இருப்போம் என்கிறார்கள். மற்றும் சிலர் கிறிஸ்து மதத்தை ஆதரிக்கிறார்கள். சிலர் முஸ்லீம் மதத்தை ஆதரிக்கிறார்கள். சிலர் பவுத்த மதத்தையும், சிலர் சீக்கிய மதத்தையும் ஆதரிக்கிறார்கள். சிலர் மதம் மாறுவது அவமானம் என்கிறார்கள்.
இவற்றையெல்லாம் அடியோடு சரி என்றோ, தப்பு என்றோ சொல்லி விடமுடியாது. இவைகளை நாம் யோசித்துத்தான் ஆகவேண்டும். அதற்காகத்தான் நாம் இன்று இங்கு கூடி இருக்கிறோம்.
ஒரு மதமும் வேண்டாம் என்பது சரியான பேச்சு. நானும் அந்தக் கருத்துக் கொண்டவன். எனக்கு மதத்திலும், தெய்வத்திலும், தனத்திலும் கூட நம்பிக்கை இல்லை.
ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கின்ற நான்கு தத்துவமும் அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்கு சாந்தியும், திருப்தியும், சுகமும் கிடையாது, அந்த நிலை அடைந்துதான் ஆகவேண்டும். அதுவே எனது கொள்கை.
மதம் மக்களுக்கு அபினி (மது) என்றார் ஒரு பெரியார். ஆனால் நான் மதம் மக்களுக்கு விஷம் என்கின்றேன். மதக்காரனுக்கு சுயமரியாதையும் சுய அறிவும் இல்லை. மனிதனின் முற்போக்கையும் ஒற்றுமையையும் தடுத்து நிற்பது மதம். மனிதனுக்கு மற்ற ஜீவன்களைவிட அதிக புத்தி இருந்தும் மனிதன் அடிமையாய் இருப்பதற்குக் காரணம் மதம்.
ஆகையால் நான் எந்த மதத்திற்கும் விரோதிதான். மதங்கள் அழிய வேண்டும் என்கின்ற கருத்துடையவன் தான். ஆனால் இன்றைக்கு ஈழவருக்கு எது சாத்தியம், எது அவசியம், எதற்காக இங்கு கூடியிருக்கிறோம் என்பவைகளை யோசித்து பிறகு நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
ஈழவர்கள் இன்று இந்து மதத்தை விட்டு விட்டதாகத் தீர்மானித்ததும், வேறு மதத்தைப்பற்றி யோசிக்க முன் வந்ததும் ஆத்மார்த்தத்துக்கும் மோக்ஷத்துக்கும் அல்ல. கண்டிப்பாய் அல்ல. அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் தீண்டாமை என்னும் கொடுமையில் இருந்து நீங்கி மனித சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கேயாகும். இதைப் பொறுத்தவரையில் தான் இப்போது பேசவேண்டும்.
அப்படி வாழ்வதற்கு சுயமரியாதை சமூகமாக மதம் இல்லாமல் ஜாதி இல்லாமல் இருக்கலாம் என்று சிலர் சொல்லுகிறார்கள். தலைவர் அய்யப்பன் அபிப்பிராயமும் அதுவேயாகும். அது சாத்தியமானால் எனக்கும் அதுவே சம்மதம். அது சாத்தியமில்லை என்று காணப்படுவதானால் அதற்கும் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டாமா?
மதம் இல்லாமல் கடவுள் இல்லாமல் ஒரு சமுதாயம் இன்று ரஷ்யாவில்தான் இருக்கிறது. வேறெங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மற்ற இடங்களில் ஆங்காங்கு எங்கோ ஒன்று இரண்டு பேர் இருக்கலாம். ஆனால் மதம், தெய்வம் இல்லாமல் இருப்பவர்களுக்கு இன்று ரஷ்ய நாட்டைத் தவிர வேறு நாட்டில் சௌகரியம் இருக்காது.
இன்றைய பெரும்பான்மையான நாடுகள் தனி உடைமை நாடுகள். தனி உடமை முறை ஆட்சி உள்ள நாடுகளாகும். தனி உடமை முறையை ஆதரிக்கவே ஆட்சிக்கு மதமும் தெய்வமும் ஆதிக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசாங்கம் மதத்தையும் தெய்வத்தையும் காப்பாற்றி அதன் அஸ்திவாரத்தின் மீதே ஆட்சி முறை கட்டப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் வாழ்க்கை போட்டியில் இருக்கிறது. மனித வாழ்க்கைப் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருக்க ஈழவ சமுதாயம் ஒட்டுக்கும் சம்மதிக்கும் என்பதாக நான் நினைக்க முடியாது. ஏனெனில் மக்கள் எல்லோருமே தனி உடமைக்காரர்களாய் இருக்கிறார்கள். இன்று மதம் இல்லாதவனுக்கு சட்டசபையில் சாதாரண நிலையில் இடமில்லை. சில உத்தியோகங்கள் கூட இல்லை. ஒன்று இரண்டு இருக்கலாம். கொச்சி ராஜாவோ, திருவாங்கூர் ராஜாவோ கடவுள், மதம் இல்லாதவன் என்றால் பெரிய பாவியாக கருதுவார்கள். மக்களும் அப்படியே கருதுகிறார்கள். இவற்றையெல்லாம் லட்சியம் செய்யாதவர்கள் சுயமரியாதைக்காரர்களாய் இருக்கலாம்.
மதமும், கடவுளும் இல்லாததால் எனக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பது எனது நிலையை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். நானும் ஒரு அளவுக்குத் துறவியாயிருக்கத் தயாராயிருப்பதால் தான் முடிகிறது. அதுவும் அடியோடு பச்சையாய்ச் சொல்லிவிட முடிவதில்லை.
இன்னும் என்னைப்பற்றிய ஆதாரங்களில் மதம், ஜாதி, கடவுள் எல்லாம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அடியோடு இல்லாமல் செய்வதற்கு வெகுதூரம் வாதாட வேண்டியிருக்கிறது.
இவை ஒருபுறமிருக்க உங்களுக்கு தீண்டாமை கொடுமை ஒழிய வேண்டும். அதற்காகவே இங்கு மதப்பேச்சு பேசுகிறோமே அல்லாமல் மற்றப்படி பகுத்தறிவு தன்மையை உத்தேசித்தோ, சுயமரியாதையை உத்தேசித்தோ, உலகப்பொது நலத்தை உத்தேசித்தோ இப்போது இங்கு பேச வில்லை.
ஆகையால் இந்தப் பிரச்சினையில் யுக்தி வாதத்தையும், பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கையையும், பொது உடமைத்தத்துவத்தையும் ஒன்றாகப் போட்டு குழப்பக்கூடாது என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
இன்று ஈழவர்கள் என்ன செய்தால் அவர்கள் தீண்டப்படக் கூடியவர்கள், தெருவில் நடக்கக்கூடியவர்கள், பள்ளியில் சேர்ந்து படிக்கக் கூடியவர்கள், மற்றவர்களைப் போல் மனிதத்தன்மையுடையவர்கள் ஆவார்கள் என்பதே முக்கிய பிரச்சினை. ஆதலால் அதற்கு ஒரு வழி வேண்டும். இந்து மதத்தை விட்டுவிடுவதாலேயே இன்று மேல்கண்ட நிலைமை ஏற்பட்டு விடாது. சுயமரியாதைக்காரர்கள் ஆகிவிட்டதாலேயே தீண்டாமை, நெருங்காமை போய்விடாது.
ஒரு மதவேஷம் பூண்டால்தான் தீண்டாமையும், தெருவில் நடக்காமையும் ஒழிகிறது. பள்ளிக் கூடங்களில் சேர்த்துக் கொள்ளப்படு கிறது. அதுவும் எல்லா மத வேஷத்துக்கும் ஆவதில்லை. இஸ்லாம் மதவேஷத்துக்குத்தான் இன்று இந்திய நாட்டில் தெருவும் பள்ளிக்கூடமும் திறந்து விடப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தில் தீண்டாமை இருக்கிறது. சீக்கியமதம் எனக்குத் தெரியாது. இந்த நாட்டில் அதன் செல்வாக்கு எவ்வளவு இருக்க முடியும். பௌத்தமதம் தீண்டாமையை ஒழித்து விடவில்லை. ஆதலால் ஏதாவது ஒரு மதம் வேண்டுமானால், அடியோடு தீண்டாமை ஒழிய வேண்டுமானால் இஸ்லாம் மத வேஷம் போட்டுக் கொள்வது மேல் என்று கருதுகிறேன்.
மத நம்பிக்கைக்காக நான் சொல்ல வரவில்லை. வேறு காரியங்களைப் பொறுத்துப் பார்த்தால் அதிலும் சில அசௌகரியங்கள் இருக்கலாம். என்றாலும் இந்தியாவில் 8 கோடி முஸ்லீம்கள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் அரேபியா, பாலஸ்தீனம், துருக்கி, ஆப்கானிஸ்தானத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. நம்பிக்கை பிரதானமாகி முஸ்லீம்கள் ஆனவர்களும் அல்ல. கால தேச வர்த்தமானத்தால், கட்டாயப்படுத்தப்பட்டு முஸ்லீம்கள் ஆகி இந்த நாட்டில் சமூக சுதந்திரத்தோடு வாழுகிறார்கள்.
கிறிஸ்தவர்களும் அப்படித்தான் என்றாலும் மகமதியரை விட அதிகம் பேர் மனிதத்தன்மை இல்லாமல் கிறிஸ்தவ மதத்தில் வாழ்கிறார்கள். ஏனென்றால் வேஷக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவ மதத்தில் அதிகம் உண்டு. தீண்டாமை அனுசரிக்கிறவர்கள் வேஷக் கிறிஸ்தவர்கள் சுயநலக் கிறிஸ்தவர்களே ஆவார்கள். தீண்டாமையை அனுபவிக்கும் கிறிஸ்தவர்களும் வேஷக் கிறிஸ்தவர்கள் சுயமரியாதையற்ற கிறிஸ்தவர்களே ஆவார்கள். கிறிஸ்துவ மதத்தையோ இந்து மதத்தையோ சீர்திருத்தம் செய்து விடலாம் என்று எதிர்பார்க்க முடியாது. மார்ட்டின் லூதர் காரியம் 100க்கு 90 கிறிஸ்தவரிடம் பலிக்கவில்லை.
கிறிஸ்தவ மதத்திலும் இந்து மதத்திலும் மதத்தின் பேரால் வயிறு வளர்க்க ஏற்பாடு செய்துகொண்ட சுயநல மக்கள் கூட்டம் உண்டு. அவர்கள் பூண்டு உள்ளவரை அந்த மதங்கள் சீர்திருத்தமடைய முடியாது.
பார்ப்பனர்களும் பாதிரிகளும் மதத்தினால் பெருமை அடைந்து பாடுபடாமல் குடும்பத்தோடு வயிறு வளர்க்கிறவர்கள். இவர்களது பெருமையும் சோம்பேறி வாழ்க்கையும் ஒழிய அவர்கள் சம்மதித்தால் ஒழிய அம் மதங்கள் சீர்திருத்தமடைய முடியாது. ஆனால் இப்போது அவர்கள் சாவு நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். மேல்நாட்டில் மதம் எப்படி இருக்கிறது என்கின்றதை அறிந்தவர்களுக்குத்தான் நான் சொல்வது புரியும். கூலிக்கும் சுயநலத்துக்கும் பிரசாரம் செய்யும் புரோகிதர்களுக்கு இது புரியாது. புரிந்தாலும் அவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
ஆதலால் தீண்டாமை ஒழியவும் இன்னமும் காலத்துக்குத் தகுந்த மாதிரி சீர்திருத்தமடையவும் சமூக வாழ்வில் சுயமரியாதையுடனும் வீரத்துடனும் வாழவும் இஸ்லாம் மதவேஷம் எவ்வளவோ மேலானது.
மத தர்மம் உண்மையான மத நம்பிக்கை என்பது அவரவர்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. அவனவன் பகுத்தறிவை பொறுத்தது. அதில் நான் இப்போது பிரவேசிக்கவில்லை. அன்றியும் “சகல கஷ்டங்களையும், வாழ்க்கை அசவுகரியங்களையும் சகித்துக்கொண்டு சுயமரியாதையுடன் இருக்கிறேன்” என்பவர்களையும் நான் வேறு மத வேஷம் போடும்படி சொல்வதில்லை. அவர்களை நான் பாராட்டுகிறேன். அவர்கள் அப்படியே இருக்கட்டும்.
எப்படியானாலும் இன்று ஒரு விஷயத்தில் அபிப்பிராய பேதமில்லாமல் ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம். அதாவது இந்து மதம் ஈழவ சமுதாயத்துக்கு கேடான மதம் என்றும், அம்மதத்தில் இனி இருப்பதால் யாதொரு பயனும் இல்லையென்றும், மனிதன் மானத்தோடு மனிதத் தன்மையோடு வாழ முடியாது என்றும், ஆதலால் இந்து மதத்தை விட்டு விலகிவிட வேண்டும் என்றும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம். அது வரையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.
இதை நான் 1926ல் சொல்லி இருக்கிறேன். குடி அரசில் எழுதி இருக்கிறேன். 1926ல் “நான் இந்துவாய் இறக்கப் போவதில்லை” என்று கூட்டத்தில் சபதம் செய்துமிருக்கிறேன். 1922ல் நான் இந்துமத சாஸ்திரங்களை கொளுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மேடையிலேயே பேசினேன். 1927ல் மனுதர்மம் முதலிய சாஸ்திரங்களை கொளுத்தினேன்.
அவைகளையெல்லாம் இப்போது 10வருஷம் பொறுத்து இந்திய தீண்டாத சமூகத் தலைவர்களும் தீண்டாமைக்கு ஆட்பட்ட சமூகமும் சொல்லி அவற்றை தீர்மான மூலமாக செய்யும் காலம் வந்துவிட்டது.
அதே மாதிரியாக கடவுள் நம்பிக்கையும் சமீப காலத்தில் ஆட்டம் கொடுக்கப் போகின்றது என்கின்ற விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பிறகு பணம் தனி உடமை விஷயத்திலும் இந்த கதியே ஏற்படும்.
ஆதலால் பிற்கால வாழ்வில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் மனிதன் புத்திசாலித்தனமாய் கால தேச வர்த்தமானத்துக்குத் தகுந்தபடி படிப்படியாய் அனுபவ சாத்தியமாய் நடந்து கொள்ள வேண்டும்.
காந்தி மதம் இங்கு பேசப்பட்டது. அது துருப்பு பிடித்த கொள்கையாக ஆகிவிட்டது. இனி அதற்கு யோக்கியதை உண்டாகப்போவதில்லை. அவர் கிறிஸ்துவுக்கு முந்தின காலத்துக்கு போகப் பார்க்கிறார்.
ஜவஹர்லால் நேரு விஷயமும் வெறும் அரசியலேயாகி விட்டது. தனக்கென்று கொள்கை இல்லை. எலும்புக்கு மோக்ஷம் கொடுக்கப்பார்க்கிறார். எப்படியாவது விளம்பர உலகில் காந்திக்கு அடுத்த பிரைஸ் வாங்க பார்க்கிறார். அந்தக் காரியங்களுக்கும் இன்று நாம் எதற்கு ஆக மத “விசாரணை”ப் பேச்சு பேசுகிறோமோ அதற்கும் சம்பந்தமில்லை. ஆகையால் எதற்காக இந்துமதம் விடுகிறோம்?
மதம் இல்லாமல் தனி உடைமை உலகில் தனி உடமை ஆட்சியில் வாழமுடியுமா? முடியாவிட்டால் என்ன செய்வது? எது நல்லது? என்கின்ற காரியங்களை பிரத்தியட்ச அனுபவத்தையும் பகுத்தறிவையும் உபயோகித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். நான் சொன்னவற்றை கண்மூடித்தனமாக நம்பி விடாதீர்கள்.
குறிப்பு: 23, 24.05.1936 நாள்களில் கொச்சி மட்டாஞ்சேரி கேசவன் அரங்கில் நடைபெற்ற கொச்சி தீயர் சமுதாய மாநாடு, பெண்கள் மாநாடு, எல்லா மத மாநாடு இவற்றில் ஆற்றிய உரை.
குடி அரசு சொற்பொழிவு 31.05.1936