பார்ப்பனர் யோக்கியதை
ஒடுக்கப்பட்ட மக்களின் சிவில் உரிமை சம்பந்தமான சில குறைபாடுகளை நீக்கும் பொருட்டு தோழர் எம்.ஸி. ராஜா இந்தியச் சட்ட சபையில் ஒரு மசோதா கொண்டு வந்திருக்கிறார். அது மிகவும் மிதமான ஒரு மசோதா. பொதுஜன அபிப்பிராயம் அறியும் பொருட்டு அது பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. ஜில்லா கலைக்டர்களும் தமது ஜில்லாக்களிலுள்ள பொது ஸ்தாபனங்களுக்கு அந்த மசோதாவை அனுப்பி அபிப்பிராயமறிய முயன்று வருகிறார்கள். திருநெல்வேலி, மதுரை வக்கீல் சங்கத்தார் அந்த மசோதாவை ஆதரிக்க முடியாதென்று அபிப்பிராயம் கூறிவிட்டதாகத் தெரிகிறது. தென்னாட்டு வக்கீல் சங்கங்களில் பார்ப்பனர் ஆதிக்கம் பெற்றிருப்பது உலகப்பிரசித்தமான விஷயம். தேவகோட்டை வக்கீல் சங்கத்தில் பார்ப்பன வக்கீல்களுக்கென தனியாகத் தண்ணீர்ப் பானை வைத்திருப்பதையும், அந்தப் பானையில் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று தடையேற்படுத்தி யிருப்பதையும் நாம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். தேசீயக் கொடியேற்றுவதைப் பற்றியோ பள்ளிக்கூடங்களில் ஹிந்தி போதனை செய்வதைப்பற்றியோ தீர்மானங்கள் வந்திருந்தால் இந்தப் பார்ப்பன வக்கீல்கள் ஆதரித்துத் தமது “தேசபக்தியை”க் காட்டிக்கொள்ள தயங்க மாட்டார்கள்.
ஒடுக்கப்பட்டவர்கள் குறைகளை நீக்கும் மசோதாவை ஆதரிப்பது தான் இந்தப்பார்ப்பன தேச பக்தர்களுக்கு முடியாத காரியமாயிருக்கிறது. இப்பேர்ப்பட்ட பார்ப்பனர்களின் ஆதிக்கம் மிகுந்த காங்கிரசையும் ஒடுக்கப்பட்டவர்களில் ஒரு சாரார் நம்பிக்கொண்டு இருக்கிறார்களே! “தினமணி” “சுதேசமித்திரன்” போன்ற தேசீயப் பத்திரிகைகளும் இந்த வக்கீல் பார்ப்பனர் செயலைக் கண்டிக்க முன்வரக் காணோமே.
குடி அரசு தலையங்கம் 05.07.1936