டாக்டர் அன்சாரி மரணம்
டாக்டர் அன்சாரி பிரிவு பொதுவாக தேசத்துக்கு பெரிய நஷ்டமே. சட்டமறுப்பு மூலம் சுயராஜ்யம் பெற முயல்வது முட்டாள்தனமென உணர்ந்த பின்னரும் நேர் வழியைப் பின்பற்ற காங்கிரஸ் தலைவர்கள் தயங்கிக் கொண்டிருந்தனர். தவறை ஒப்புக்கொள்வது அகௌரவமாகாதென உணர்ந்த டாக்டர் அன்சாரியோ துரபிமானத்துக்குக் கட்டுப்பட்டுப் பின்னடையவில்லை. தைரியமாக முன் வந்து சட்ட மறுப்புக் கொள்கையை மாற்றி சட்டசபை மூலம் வேலை செய்யப் பிரசாரம் செய்தார். காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு ஸ்தாபனத்துக்கும் அவரே காரணம். பார்லிமெண்டரி போர்டின் முதல் தலைவராயிருந்தவரும் அவரே. அசௌக்கியம் காரணமாக அரசியல் வாழ்வைத் துறந்ததாகக் கூறப்பட்டாலும் சுயநலக்காரர் சூழ்ச்சிகளினால் காங்கிரஸ் அலங்கோலப்பட்டு வருவதை யுணர்ந்தே அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க வேண்டும். வகுப்புத் தீர்ப்பு உடைபடாமலிருப்பதற்கும் அவரே காரணம். காங்கிரஸ் ஹிந்து மெம்பர்கள் வகுப்புத் தீர்ப்பை ஆதரிக்கா விட்டாலும் டாக்டர் அன்சாரிக்குப் பயந்தே நடுநிலைமை வகித்து வருகின்றனர். முஸ்லீம்கள் க்ஷேமத்தை அவர் கண்ணும் கருத்துமாய்க் காப்பாற்றி வந்தார். வகுப்புத் தீர்ப்பை ஹிந்து மகா சபையாரும், வங்காள ஹிந்துக்களும் கட்டுப்பாடாக எதிர்த்து வரும் இக்காலத்து டாக்டர் அன்சாரி மறைந்தது வருந்தத்தக்கதே. அன்னார் சுற்றத்தாருக்கு நமது ஹிருதய பூர்வமான அநுதாபம் உரித்தாகுக!
குடி அரசு இரங்கற் செய்தி 24.05.1936