சேலம் காலித்தனம்
சேலத்தில் 18536ந் தேதியில் நடந்த பொதுக்கூட்டமொன்றில் சில காங்கிரஸ் தொண்டர்கள் ஜஸ்டிஸ் கட்சியையும், சுயமரியாதைக் கட்சியையும் ஈனத்தனமாய் வைது பிரசங்கம் செய்ததை சுயமரியாதைக்காரர்கள் பொறுமையுடன் கேட்டுக் கொண்டு நின்றிருக்கிறார்கள்.
அதற்கு காரணம் அத்தொண்டர்கள் மீது குற்றமில்லை என்றும், அவர்களை கூலி கொடுத்து ஏவி விட்டவர்கள் காரணம் என்றும், இந்தியாவின் வறுமை நிலைமையானது இம்மாதிரி இழிவான தொழிலாவது செய்து வயிறு வளர்க்க வேண்டி இருப்பதால் அதைப் பொறுத்துத்தான் ஆக வேண்டும் என்றும் கருதியிருந்ததேயாகும் என்று தெரிகிறது.
ஆனால் அதே மாதிரி தன்மையில் தோழர் சத்தியமூர்த்தி அவர்களும் பேசியதால் அவரை சில தோழர்கள் கேள்வி கேட்க வேண்டியவர்களானார்கள். காரணம் ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்றும், அதன் தலைவர்கள் தேசத் துரோகிகள் என்றும் மற்றும் கேவலமாகவும் பேசியதேயாகும்.
இந்நிலைமையில் தோழர் சத்தியமூர்த்தியோ அல்லது அவர்களது கூலிகளோ ஆண்மையும், சுயமரியாதையும், வீரமும் உடையவர்களானால் கேள்விகளுக்கு தக்க விடையளித்திருக்க வேண்டும். விடையளிக்காவிட்டால் அம்மாதிரியான பேச்சுக்களை பேசாமலாவதிருந்திருக்க வேண்டும்.
அப்படிக்கில்லாமல் கூட்டத்தில் கேட்பவர்களுக்கு கொதிப்பு ஏற்படும்படியாக பேசிவிட்டு கேள்வி கேட்பவர்களை பலாத்காரத்தால் அடக்கிவிடுவது என்று நினைத்துக் கொண்டு காங்கிரஸ்காரர்கள் காரியம் நடத்துவார்களானால் இவர்களது சுயராஜ்யத்தில் உள்ள மோசடியும் துரோகமும் இன்னது என்று தெரிந்து கொள்ள வசதி ஏற்படுவதோடு, அந்த ஸ்தாபனமே அடியோடு மறைந்துபோகும்படி செய்ய ஒவ்வொருவனுக்கும் உரிமை உண்டு என்றே கருதுகிறோம்.
சேலத்தில் முன் இரண்டொருமுறை காங்கிரஸ்காரர்கள் செய்த கலவரத்துக்கு புத்தி கற்பிக்க ஏற்பட்ட சமயங்களில் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் பஹிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டு தப்பித்துக் கொண்டது யாவரும் அறிந்ததேயாகும். இது போலவே மதுரை, வேலூர் முதலிய இடங்களிலும் காங்கிரஸ்காரர்களின் காலித்தனத்திற்கு புத்தி கற்பிக்க ஏற்பட்ட சமயங்களில் எல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டதும் யாவரும் அறிந்ததேயாகும். இதே சத்திய மூர்த்தியாரும் ஒரு மன்னிப்பு அறிக்கை விட்டதும் யாவரும் அறிந்ததாகும்.
அப்படி இருக்க இப்போது மறுபடியும் அதே மாதிரி பேசுவதும், கேள்வி கேட்டவர்களைத் தாக்குவதும், காலித்தனம் செய்வது என்பதும் மகா கேவலமான கோழைத்தனமும் அயோக்கியத்தனமுமான காரியமுமாகும்.
காங்கிரஸ்காரர்கள் முன்னைய காலித்தனங்களின் போது மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கவில்லையானால் கேள்வி கேட்பவர்கள் ஜாக்கிரதை யுடனேயே வந்து கேள்வி கேட்டிருப்பார்கள்.
அப்படிக்கில்லாமல் இனி அப்படிச் செய்யமாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்து செய்ததற்காக வருத்தமும் தெரிவித்துக்கொண்டதால் இவர்கள் யோக்கியர்கள், சொன்னபடி நடந்து கொள்வார்கள் என்று கருதி ஜாக்கிரதையில்லாமலே வந்துவிட்டார்கள். இந்த நிலைமையை உணர்ந்த பேடிகள் கேள்விக்கு பதில் பலாத்காரம் தான் என்பதைக் காட்டிக் கொண்டார்கள். நாம் இதற்கு ஆக சிறிதும் வருத்தப்படவில்லை. கொள்கையில் நாணயத்தில் பலம் இல்லாமல் காலிகளின் உதவியால் அயோக்கிய பிரசாரம் எத்தனை நாளைக்கு நடக்கும் என்பது நமக்குத் தெரியும். பலாத்காரத்தால் வெற்றிபெற்றுவிடக்கூடுமானால் அது பார்ப்பனரல்லாதாருக்குத்தான் முடியும். பார்ப்பனரால் ஒருநாளும் முடியாது. கூலிகளுக்கு ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்குப் புத்தி வந்துவிடும் என்பதை நாம் அனுபவத்தில் பார்க்கிறோம்.
ஆனால் காங்கிரசுக்காரர்களின் யோக்கியதையை சுயமரியாதைக்காரர்கள் உணர்ந்து இருந்தும் அவர்களது மன்னிப்பு வேண்டுகோளையும் வாக்குத் தத்தத்தையும் நம்பினதுதான் பைத்தியக்காரத்தனமாக ஆகிவிட்டது என்று கருத வேண்டியிருக்கிறது.
சுதேசமித்திரன்
சேலம் கூட்ட நடவடிக்கையைப்பற்றி மே மாதம் 20ந் தேதி சுதேசமித்திரன் பத்திரிகையில் “நமது நிருபர்” பேரால் வெளியிடப் பட்டிருக்கும் சேதியில் அதாவது 6வது பக்கம் 4வது கலம் கடசி வாக்கியத்தில்,
“சீமான் சத்தியமூர்த்தி பேசி முடிந்ததும் அக்கிராசனர் பேச ஆரம்பித்ததும் ஸ்ரீமான் சித்தய்யன் என்ற சுயமரியாதைக்காரர் ஒருவர் சில கேள்விகள் கேட்க எழுந்தார். அச்சமயம் 945 மணி இருக்கும். இவ்வளவு நேரத்துக்கு பின் கேள்விகேட்டு கூட்டத்தை இன்னும் நீடிப்பதை ஜனங்கள் ஆதரிக்கவில்லை. அச்சமயம் கூச்சல் ஏற்பட்டதைக்கண்டு அக்கிராசனர் கூட்டத்தை கலைத்துவிட்டார்.
கூட்டம் முடிந்ததும் சிலர் சீமான் சித்தையனையும் இன்னும் சிலரையும் தாக்கி அடித்தார்கள். போலீஸ்காரர்கள் வந்து இவர்களை வெளியேற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.
வெளியேற்றிய போலீஸ்காரர்களுக்கும் சில இடங்களில் அடி விழுந்தது” என்று பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி
மற்றும் 20536 தேதி தினமணி 2ம் பக்கம் 4வது கலம் மத்தியில் “சத்தியமூர்த்திக்குக் கேள்விகளடங்கிய கடிதம் கொடுக்கப்பட்டது. தலைவர் கேள்வி கேட்பவனை மேடைக்கு வரும்படி அழைத்தார். அவரை பலமாகத் தாக்கினார்கள்” என்று எழுதி இருக்கிறது.
இதிலிருந்து என்ன விளங்குகிறது என்பதை வாசகர்கள் அறிய வேண்டுகிறோம்.
அதாவது காங்கிரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியையும், சுயமரியாதைக் கட்சியையும் பற்றி பொய்யும் புளுகும் கூறி வசைபாடும் போதெல்லாம் பொறுமையாகவே கேட்டுக் கொண்டிருந்து யாதொரு கலவரமும் இல்லாமல் கூட்ட முடிவில் கேள்விகளை எழுதிக்கொடுத்து கேட்டு இருக்கிறார்கள் என்பதும், அதற்கு பதில் சொல்லாமல் கூட்டத்தை அக்கிராசனர் முடிவுரை கூட கூறாமல் முடித்துவிட்டு பலாத்காரத்தில் ஆரம்பித்துவிட்டார்கள் என்பதும் நன்றாய் புலப்படுகிறதா இல்லையா என்று கேட்கிறோம்.
ஆகவே தோழர் சித்தய்யனை வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தோடு மேடைக்கு அழைத்து அடித்து இருக்கிறார்கள் என்பது நன்றாய் விளங்குகிறது. இது ஆண்மையுள்ள மனிதர்கள் செய்யும் காரியமா? பேடி நாய்கள் செய்யும் காரியமா? என்பதை யோசிக்கும்படியும் இதை அனுமதித்த தலைவர் சத்தியமூர்த்தியார் எவ்வித தண்டனைக்கு யோக்கியதை உடையவராவார் என்பதையும் யோசித்துப் பார்க்கும்படி விரும்புகிறோம்.
இதற்கு முன்னும் இப்படி நடந்த பல செய்கைகளை நாம் பார்த்த பிறகே “காலித்தனமும் பலாத்காரமும் காங்கிரஸ் கூலிகளுக்கு மாத்திரம் சொந்தமல்ல” என்று எழுதி இருந்தோம். அதன் பிறகே காங்கிரஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டதும் தோழர் சத்தியமூர்த்தி மேடையேறிப் பேச சவுகரியமும் ஏற்பட்டதுமாகும்.
ஆனால் அது காங்கிரஸ்காரர்களுக்கு உடனே மறந்து போய்விட்டது. இனியொரு தரமும் காலித்தனமும் பலாத்காரமும் காங்கிரசுக்காரர்களுக்கு மாத்திரம் சொந்தமல்ல என்று காட்டினால் தான் அவர்களுக்கு புத்திவரும் என்கின்ற நிலையை சேலத்தில் சத்தியமூர்த்தியார் கொண்டுவந்து விட்டுவிட்டார்.
சேலம் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமலோ, அல்லது இனி சுயமரியாதைக் கட்சியையும், ஐஸ்டிஸ் கக்ஷியையும் பற்றி பேசிக்கொண்டோ இருக்கும்படியாக தோழர் சத்தியமூர்த்தியாரை அனுமதிக்கக்கூடாது என்றுதான் கருதவேண்டி இருக்கிறது.
பலாத்காரம் ஏற்பட்டாலும் அடிதடி நடந்தாலும் சத்தியமூர்த்தியாருக்கு ஒன்றும் ஏற்பட்டு விடாது என்றும், அவர் ஓடிவிடுவார் என்றும் அவர் மீது ஒரு அடி கூட படாது என்றும் நம்மவர்களே,,……. பார்ப்பனரல்லாத வாலிபர்களேதான் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாகவேண்டிவரும் என்றும் நமக்குத் தெரியும்.
இம்மாதிரி கஷ்ட நிலையை பார்ப்பனர்கள் உண்டாக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இதனாலேயே பொதுமக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். நாம் ஆரம்ப முதல் பலாத்காரம் கூடாது என்றும், கூட்டங்களில் குழப்பம் கூடாது என்றும், நம் கட்சியைப்பற்றி பேசும் சமயங்களில் மாத்திரம் அதுவும் கூட்டம் முடிவில் கேள்வி கேட்கலாம் என்றும் எழுதி வருகிறோம்.
அந்தப்படியே சுயமரியாதைத் தோழர்கள் நடந்து வருகிறார்கள். அப்படி இருந்தும் காங்கிரசுக்காரர்கள் பலாத்காரம் செய்தால் இனி நாம் என்ன செய்வது? பலாத்காரத்துக்கு அதுவும் பார்ப்பன கூலிகளின் பலாத்காரத்துக்கு வெற்றி ஏற்படும்படி விட்டுவிட்டு ஓடிப்போவதா? அல்லது இனி இப்படி நடவாதபடி அவர்களுக்குப் புத்தி கற்பிப்பதா? என்பதே முக்கிய பிரச்சினையாக ஆகிவிட்டது.
பொதுவாக சர்க்கார் இம்மாதிரி விஷயங்களில் தலையிட்டு இப்படிப் பட்டக் காரியங்கள் நடக்காதபடி தகுந்த எச்சரிக்கையான காரியங்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இதைப்பற்றிப் பலதடவை எழுதியிருக்கிறோம்.
இது விஷயத்தில் சர்க்கார் பொறுப்பற்றவர்களாய் போய்விட்டதால் புதுச்சேரி மாதிரி கையில் வலுத்தவன் காரியமாக ஆக இடம் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள். கையில் வலுத்தவன் காரியம் என்று ஆகுமானால் பார்ப்பனப் பூண்டு சித்திரத்தில் கூட இருப்பதற்கு அருகதையற்றதாகிவிடும் என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லுவோம்.
போலீஸ் நீதி முதலிய இலாக்காக்களில் பார்ப்பன ஆதிக்கம் தலை சிறந்து விளங்குவதாலும், பார்ப்பனரல்லாத அந்த இலாக்காத் தலைவர்கள் நாட்களையும், பணங்களையும் எண்ணுகிற வேலையிலேயே ஈடுபட்டு இருப்பதாலும் பதிலுக்கு பதில் செய்யும் கைபலம் பயன்படாமல் போனாலும் போகலாம் என்று சிலர் கருதலாம். ஆனாலும் பார்ப்பனரல்லாதார் இதையே ஒரு பிரச்சினையாகக் கொண்டு விட்டால் கண்டிப்பாகப் பார்ப்பனப்பூண்டு மறைந்துவிடும் என்று பந்தயங் கூறுவோம்.
சகல மக்களுக்கும் சம நியாயம் வழங்க வேண்டும் என்று கருதுகின்ற நாம் சுயநலத்திற்கும் தன்னல ஆதிக்கத்திற்கும் பங்கம் வரும் என்று கருதுகின்ற மக்களால் ஏமாற்றப்படும் தொல்லையை சமாளித்துத்தான் ஆகவேண்டும் என்றும், அவர்கள் தொல்லை கொடுப்பது இயற்கைதான் என்றும் நாம் கருதுவதாலேயே இவைகளை சகித்துக்கொண்டே வருகிறோம்.
தோழர் ஈ.வெ. ராமசாமி எந்தக் கூட்டத்திற்கு சென்றிருந்தபோதும் அவரைக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தே வந்திருக்கிறார். கேள்விகளை வரவேற்று பதில் சொல்லியே கூட்டங்கள் ஒழுங்காய் முடிவு பெற்றிருக்கின்றன.
“மடியில் கனமிருந்தாலொழிய வழியில் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என்பது போல் யோக்கியமாக உண்மை நிலையை பேசுகிறவர்கள் எந்தக் கேள்விக்கும் பயப்பட வேண்டியதில்லை. பாமர மக்களை ஏமாற்றக் கருதி கண்டபடி உளறுகிறவர்களும் பொறுப்பில்லாமல் முட்டாள் தனமாய் பேசுகிறவர்களுமேதான் கேள்விக்குப் பயந்து கோழைகளாய் பேடித்தனமாக கூட்டத்தை முடித்துக் கொண்டு ஓடுவதும் பலாத்காரம் செய்வதுமான காரியத்தில் இறங்குவார்கள். எப்படி இருந்தாலும் இதன்பயனை காங்கிரஸ் தலைவர்கள் அனுபவித்துத்தான் தீருவார்கள்.
குடி அரசு தலையங்கம் 24.05.1936