கிராமப் புனருத்தாரணப் புரட்டு
Back to Nature இயற்கை வழிக்குத் திரும்பு! Back to the Village கிராமத்திற்குப் போ!! Support village industries குடிசைத் தொழிலை ஆதரி! என்கிற பல்லவிகளைத் தேச பக்தர்களில் பலர் இதுபோது பாடி வருகிறார்கள். B.A., M.A. பட்டதாரிகளுக்கெல்லாம் கிராமத்துக்குப் போய் எளிய வாழ்க்கையை யேற்றுக் கொள்ளும்படி உபதேசம் செய்யப்படுகிறது. படித்தவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்கும் பாமரரின் தரித்திரத்தைப் போக்குவதற்கும் எல்லோரும் கிராமத்துக்குப் போய் எளிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது தான் சிறந்த மார்க்கம் என்று சொல்லப்பட்டு வருகிறது. கிராமப் புனருத்தாரணஞ் செய்வதற்காக தோழர் காந்தியார் அகில இந்திய கிராமக் கைத்தொழிற் சங்கம் என்பதாக (கூடஞு அடூடூ ஐணஞீடிச் ஙடிடூடூச்ஞ்ஞு ஐணஞீதண்tணூடிஞுண் அண்ண்ணிஞிடிச்tடிணிண) ஒரு சங்கத்தைத் தோற்றுவித்திருக்கிறார். கவர்ன்மெண்டாரும் இந்த வேலையைச் செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கிவைத்திருக்கின்றனர்.
ஆனால் நாம் இந்த சந்தர்ப்பத்தில் இயற்கை வழிக்குத் திரும்புவதும், கிராமத்திற்குப் போவதும், எளிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதும் நாட்டு மக்களுக்கு நலந்தரக் கூடிய காரியங்களா? நடக்கக் கூடிய காரியங்களா? கிராமத்திலா நமது கதி மோக்ஷம்? என்கிற விஷயங்களைச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம்.
~subhead
பட்டினமா கிராமமா?
~shend
கிராமந்தோறும் மின்சார சக்திகளையும், ரேடியோ நிலையங்களையும், நாடு முழுதும் ஆகாய விமானப் போக்குவரத்து மார்க்கங்களையும் ஏற்படுத்த முயற்சிக்கும் “சாத்தான்” அரசாங்கத்தின் கிராம புனருத்தாரண நோக்கத்திற்கும், முறைக்கும் ஒவ்வொருவனும் அவனவனுக்கு வேண்டிய உணவையும் உடையையும் அவனவனே தயார் செய்து கொள்ள வேண்டும் என்கிற “மகாத்மா” காந்தியாரின் கிராமப்புனருத்தாரண நோக்கத்திற்கும் முறைக்கும், யாதொரு சம்பந்தமும் இருக்க முடியாது. இருவர் கொள்கை களுக்கும், அடிப்படைத் தத்துவங்களிலேயே, மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போன்ற வித்தியாசங்கள் இருக்கின்றன. அரசாங்கத்தின் கிராமப் புனருத்தாரண வேலையைப் பற்றி நாம் கவனிக்க தேவையில்லை. நாம் விரும்பினாலும் வெறுத்தாலும் இன்றைய நிலையில், அரசாங்கம் இது விஷயத்தில் நம் அபிப்பிராயத்தை மதிக்கப் போவதில்லை. ஆகையால் இங்கே நாம் ஆராய எடுத்துக்கொண்டது தேசபக்தர் என்பவர்களின் (காந்தியாரின்) கிராமப் புனருத்தாரண கிராம சேவையைப் பற்றியேயாகும்.
காந்தியாரின் கொள்கைப்படி பட்டண வாசமும் நாகரீக வாழ்க்கையும் இயற்கைக்கு விரோதமானவை; மனிதனுக்கு கெடுதி செய்பவை; கிராம வாசமும் எளிய வாழ்க்கையும் இயற்கையோடொன்று பட்டவை; மனிதனுக்கு நன்மை செய்பவை; ஆகையால் எல்லோரும் கிராமங்களுக்குப் போனால் க்ஷேமம் அடையலாம் என்பது கருத்தாகும். கிராமவாசம் பட்டினவாசம் இரண்டில் எது சிறந்தது என்பதைக் கவனிப்பதற்கு முன் கிராம வாழ்க்கையின் மேன்மைக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படும் அதன் தத்துவ பீடமான இயற்கை வாழ்க்கையைப் பற்றி முதலில் ஆராய்வோம்.
~subhead
இயற்கை என்பது என்ன?
~shend
இயற்கை வாழ்க்கை, இயற்கை வழி, இயற்கைச் சக்தி, இயற்கைச் சட்டம் என்று தாராளமாய்ச் சொல்லப்படும் போது, இயற்கை என்ற வார்த்தையின் தெளிவான அர்த்தம் என்ன என்பது கவனிக்கப் படுவதில்லை. ஆனால் அதன் அர்த்தத்தைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்த வேண்டியது இயற்கை வாழ்கையைப் பற்றிய இந்த ஆராய்ச்சிக்கு மிகவும் அவசியமாகும். “இயற்கையைப் பின்பற்றி வாழ்க்கை நடத்து” என்று சொல்லும்போது சாதாரணமாய்க் கவனிக்கப்படாத அர்த்தத்தை முதலில் கவனிப்போம்.
~subhead
இயற்கையின் விரிந்த பொருள்
~shend
ஒரு பொருளின் தோற்றம், குணம் அல்லது சக்தி, செய்கை, ஆகியவை எல்லாம் சேர்ந்த அதன் முழுத்தன்மையை அப்பொருளின் இயற்கையென்று பொதுப்படச் சொல்லலாம். தீயின் இயற்கை சுடுதல், எரிதல், புகைதல், ஒளிவிடுதல் முதலியன. நீரின் இயற்கை பள்ளம் நோக்கிப் பாய்தல், தன் சமநிலைக்குப் பரவுதல் முதலியன. இம்மாதிரியே எல்லாப் பொருள்களுக்கும் அவைகளுக்குள்ள சக்திகளின் (மனிதனால் கண்டு பிடிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்படாதனவும்) தொகுதியை அப்பொருள்களின் இயற்கை என்னலாம். ஒவ்வொரு பொருளுக்கும் வேறு வேறான இயற்கை இருப்பினும், அவ்வப்பொருளின் இயற்கையானது, கால தேச வேறுபாட்டால் மாறுபாடடையாமல், எவ்விடத்தும் எக்காலத்தும் ஒரே தன்மைத்தாய் இருக்கிறது. பொருள்களுக்குள்ள இயற்கைச் சக்திகள் வெளிப்பட்டு இயங்கும் முறையை அதனதன் சுபாவத்தை இயற்கை விதி அல்லது சட்டம் என்று சொல்லலாம். சூடு விரியச் செய்கிறது. குளிர் இறுகச் செய்கிறது. இதுபோன்ற இயற்கை விதிகளும் காலதேச வேறுபாட்டால் மாறுபாடடையாமல், எங்கும் எப்போதும் ஒரே மாதிரி நிகழக் கூடியவை. காற்றும் தண்ணீரும் இல்லாமல் பிராணிகள் உயிர்வாழ முடியாது என்பதும் ஓர் இயற்கை விதி. இவ்வாறே உலகில் உள்ள எல்லாப் பொருள்களின் எல்லாத் தன்மைகளும் எல்லாச் சக்திகளும், அவை இயங்கும் எல்லா விதிகளும் சேர்ந்தது இயற்கையென்று விரிந்த பொருள்கொண்டு பார்க்கும்போது எப்பொருளையும், எச்செய்கையையும் செயற்கை என்று சொல்ல முடியாது. செயற்கை அனைத்தும் இயற்கையே யாகும். ஏனெனில் இயற்கைக்குப் புறம்பான சக்தி செயற்கைக்கு ஏது? இயற்கைச் சக்திகளை ஏவி, இயற்கை விதிகளின் படி இயங்கச் செய்யத்தான் மனிதனால் முடியுமே தவிர, இயற்கையில் இல்லாத புதுச் சக்தியைப் பொருள் களுக்கு ஊட்டவோ, இயற்கை விதிகளுக்கு மாறாக அச்சக்திகளை இயங்கச் செய்யவோ, மனிதனால் முடியாது.
~subhead
இயற்கையும் செயற்கையும்
~shend
இயற்கைப் பொருள்களையும் இயற்கைச் சக்திகளையும் கொண்டு ஓர் குறிப்பிட்ட நோக்கத்தையடைய மனிதன் செய்யும் முயற்சியும், அம்முயற்சியின் பயனும் செயற்கையெனப்படுகிறது. ஆனால், காவேரிக் கரையிலிருந்த மரம் வெள்ளத்தில் மிதந்து வருவதற்கும், கடல்களைக் கடக்கக் கட்டப்பட்ட கப்பல்கள் தண்ணீரில் மிதந்து செல்வதற்கும் ஆதாரமான இயற்கை விதி ஒன்றே. உலை மூடியை எழுப்பும் நீராவிச் சக்திக்கும், ரயில் என்ஜினை இயங்குவிக்கும் நீராவிச் சக்திக்கும், அளவிலும், அமைப்பிலும் அன்றித் தன்மையில் என்ன வித்தியாசம்? காட்டில், தானே உதிர்ந்து மண்ணில் புதைந்த மாங்கொட்டையும் தோட்டத்தில் குடியானவன் கொண்டுபோய் ஊன்றிய மாங்கொட்டையும் முளைத்தெழுவது ஒரே விதமான இயற்கைச் சக்தியைக்கொண்டல்லவா? ஆகையால் செயற்கையெனப்படும் எல்லா வற்றிலும் மனிதன் செய்யும் முயற்சிகள் இயற்கைக்கு மாறுபட்டனவாகா. இன்ன பொருளை இன்ன நிலையில் வைப்பது, இன்ன வகையில் சேர்ப்பது, அல்லது இன்ன அளவில் பிரிப்பது ஆகிய காரியங்களினால், இன்ன சக்திகள், இன்ன வகையில் தோன்றி இன்ன விதிகளின்படி இயங்கும் என்கிற உண்மைகளைக் கவனித்தறிந்து தனக்குச் சாதகமான பலனை அளிக்கும்படி, அப்பொருளை, அத்தன்மையில் நிறுத்தவோ,. சேர்க்கவோ, பிரிக்கவோ செய்யும் முயற்சிகளை இயற்கைக்குப் புறம்பானவை என்று எப்படிச் சொல்லக்கூடும்? இவ்வாறு முயற்சிக்கும் மனிதனுடைய எண்ணங்களும், மனோ முயற்சியும், இதற்காக இவன் எடுத்துக் கொள்ளும் தேக முயற்சியும் கூட, இயற்கை சக்திகளுக்கும், இயற்கை விதிகளுக்கும் கட்டுப்பட்டே நிகழ்தல் கூடும் என்றால், எது இயற்கை? எது செயற்கை? எனவே, இயற்கை என்பதன் விரிந்த பொருளில் எதுவும் செயற்கையாதல் இல்லையாதலால், ரயில் எஞ்ஜினும், காந்திக்குல்லாயும் இயற்கையேயாதலால், விவசாயமும், கைத்தொழிலும் இயற்கையேயாதலால், “இயற்கையைப் பின்பற்று; இயற்கை வழியைப் பின்பற்று” என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. இயற்கைக்குப் புறம்பாகவோ இயற்கைக்கு மாறாகவோ, ஒரு நிமிஷங்கூட நடக்க முடியாத ஒருவனை, “இயற்கையைப் பின்பற்று” என்று சொல்வது, “உயிர் வாழ வேண்டின் சதா சுவாசித்துக் கொண்டிரு” என்று சொல்வது போலிருக்கிறது!
~subhead
இரண்டாவது அர்த்தம்
~shend
“இயற்கை வழிக்குத் திரும்பு” என்று சொல்லும் போது தாங்கள் கொண்ட அர்த்தம், மேலே கூறிய விரிந்த எண்ணத்தில் அல்ல, வேறு அர்த்தத்தில் என்று தேச பக்தர்கள் சொல்லக்கூடும். மனிதனுடைய தூண்டுதல், ஏவுதல், முயற்சி முதலிய எவ்வித சம்பந்தமும் இல்லாமல், பொருள்கள் தாமாக இயங்குகின்ற தன்மை தான் நாங்கள் சொல்லும் இயற்கை. இந்தக் குறுகிய அர்த்தத்தின்படிதான், இயற்கை, நம் நடத்தைக்கும் வாழ்க்கைக்கும் வழி காட்டுகிறது, அதை அனுசரித்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று சொல்லுவதாகக் காந்தியார் சொல்லலாம். மனித சம்பந்தம் எதுவும் இல்லாமல், இயற்கையாக உள்ள நிலைமையும், மனித முயற்சியின்றித் தானாக நிகழும் நிகழ்ச்சிகளும், நியாயமும், காருண்யமும், தெய்வத் தன்மையும் வாய்ந்தவை யென்றும், பொருள்கள் தானாக இயங்கும் நெறி, உயர் நெறி, உண்மை நெறி, நீதி நெறி என்றும், மனிதனுடைய அறிவு கற்பிக்கும் நெறியும் ஒழுக்கமும், நீதியற்றவை, நேர்மையற்றவை யென்றும், ஆகையால் நாகரிக வாழ்க்கையும், விஞ்ஞான நெறியும், தள்ளத் தக்கவை யென்றும் சொல்லப்படும் வாதங்களை இனி ஆராய்வோம்.
~subhead
இயற்கை காட்டும் நியாயம்
~shend
மனித சம்பந்தமில்லாது தானாக நிகழும் காரியங்கள் எல்லாம், நியாயமானவை யென்றால், நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நியாய விரோதமானதாகு மல்லவா? பிறந்த மேனியை மறைத்து வேட்டி கட்டிக் கொள்வது மயிரைச் சிரைத்துக் கொள்வது உணவைச் சமைத்து உண்பது முதலான ஒவ்வொரு காரியமும் இயற்கைக்கு விரோதமாகின்றது. இயற்கை காட்டும் வழியைப் பின்பற்றுபவன், உணவைப் பச்சையாகவே தின்ன வேண்டும்; குளிருக்கும், மழைக்கும் ஒதுங்குவதற்கு வீடு கட்டிக் கொள்ளக்கூடாது; சட்டை போட்டுக் கொள்ளக் கூடாது. ஆனால் மனிதன் இவற்றைச் செய்வதிலிருந்து இந்த அளவில், இயற்கையைத் தன் போக்கில் போக விடாமல் கட்டுப் படுத்துகிறான் அல்லவா? ஆகையால், தானாக இயங்கும் இயற்கையின் போக்கு நியாயமானதல்ல என்பதை இந்த அளவுக்கு ஒப்புக் கொண்டாக வேண்டும். இயற்கையின் சக்திகள் தானாக இயங்கும் நிலையில், மனிதனுக்குச் சகாயம் செய்வதில்லை.
~subhead
இயற்கையின் கொடுமை
~shend
நமக்கு இன்றியமையாது வேண்டிய மழைத் தண்ணீரை ஆறுகள் அடித்துக் கொண்டு போய் சாகுபடிக்கு உபயோகமில்லாதபடி சமுத்திரத்தில் சேர்க்கிறது. ஆற்று வெள்ளத்தை அணை கட்டித் தேக்கிக் கால்வாய் மூலம் நிலங்களுக்குப் பாய்ச்சிக் கொள்ளும் முயற்சி இயற்கையின் போக்குக்கு விரோதமாயினும் சிறப்புக்குரியதல்லவா? பெருங் காடுகளில் தானாகத் தோன்றுங் காட்டுத் தீ பரந்த பிரதேசங்களை நாசப்படுத்துவதுடன் அப்பிரதேசத்தில் வாழும் அனேக ஜீவப் பிராணிகளையும் உடன்கட்டை ஏறச் செய்கிறது. யாருக்கும் முன் எச்சரிக்கை செய்யாமல் எல்லா ஜோஸ்யர் களையும் ஏமாற்றித் திடீரென்று தோன்றும் பூகம்பங்களால் ஏற்படும் துன்பங்கள் அளவிடக் கூடியதா? தானாக உற்பத்தியாகி மனிதனுடைய அடக்குமுறைக்கு மீறி பெருகி வரும் விஷப் பூச்சிகளும், வியாதிக்கிருமிகளும் துஷ்ட ஜந்துக்களும் மனிதனுக்குச் செய்யும் துன்பங்கள் கொஞ்சமா? மேற்கூறிய கொடுமைகளை ஒரு தனி மனிதன் செய்தால், அச்செய்கையை நியாயமான தென்றோ, காருண்யமானதென்றோ, யாராவது சொல்லத்துணிவார்களா? ஆனால் ஆஸ்திகர்களையும் நாஸ்திகர்களையும், நல்லவர்களையும், கெட்டவர்களையும், அறிஞர்களையும், மூடர்களையும் வித்தியாசமின்றி ஒரே நிலையில் வைத்துத் தன்னுடைய யதேச்சாதிகார ஆட்சி புரியும் இயற்கை நெறியை உயர் நெறியென்றும் நீதிநெறியென்றும் நாம் ஒப்புக்கொள்ள முடியுமா? இந்த இயற்கைப் போக்கைத் தழுவி நாம் நடந்து கொள்ள முடியுமா? அப்படியன்றித் தன் போக்கில் இயங்கும் இயற்கை மனிதனால் அடக்கி ஆளப்படத் தகுதியுள்ளதே யன்றிப் பின்பற்றத் தகுதியுடையதல்ல என்று சொல்வதில் என்ன குற்றம்?
~subhead
உணர்ச்சியா அல்லது அறிவா? எதைப் பின்பற்றுவது?
~shend
நம்முடைய செய்கைகளுக்கெல்லாம் கர்த்தா, நமது எண்ணங்கள். நம்முடைய எண்ணங்கள், இருவகைகளில் உருக்கொள்கின்றன. இயல்பாக எழும் உணர்ச்சி பற்றியும், ஆராய்ந்து பார்க்கும் அறிவு பற்றியும் என்று இரண்டு விதங்களில் நம் எண்ணங்கள் எழுப்பப்பட்டு செய்கைக்குத் தூண்டு கின்றன. இவற்றுள் எவ்வகை எண்ணங்களை நாம் பின்பற்ற வேண்டும்? உணர்ச்சி பற்றி ஏற்படுபவைகளையா? அறிவு பற்றி ஏற்படுபவைகளையா? உணர்ச்சி பற்றி எழும் எண்ணங்கள் இயற்கையானவையாகும். அறிவு பற்றி எழும் எண்ணங்கள் இயற்கையின் போக்குக்கு மாறுபட்டவையாகும். இதை ஒரு உதாரணங்கொண்டு விளக்குவோம்.
பாதையில் ஒரு பணப்பை இருப்பதை வழிப்போக்கன் ஒருவன் பார்க்கிறான். பணப்பையின் தோற்றம் வழிப்போக்கன் மூளையில் உடனே சில உணர்ச்சிகளை உண்டாக்குகிறது. “பெரிய பை நிறையப் பணம் எல்லாம் ரூபாய்கள் தானோ பணக்காரனாகி விடலாம் கஷ்டம் ஒழிந்தது” என்று இம்மாதிரி உணர்ச்சிகள் உதித்து வழிப்போக்கன் மனத்தை உணர்ச்சி வசமாக்குகின்றன. இயற்கையா யெழுந்த இவ்வுணர்ச்சிகளைப் பின்பற்றி உடனே ஓடிப் பாதையில் உள்ள பையை எடுத்துக் கொள்வது இயற்கையைப் பின் பற்றுவதாகும். ஆனால் இயற்கையுணர்ச்சியைப் பின்பற்ற வொட்டாமல் தடுக்கிறது மூளையின் மற்றொரு சக்தியாகிய பகுத்தறிவு. “பை நம்முடையதல்ல, சொந்தக்காரன் பக்கத்தில் இருக்கிறானா? ரோட்டில் யாராவது வருகிறார்களா? ஓரத்தில் உள்ள மரத்தருகில் ஒருவன் உட்காந்திருக்கிறானே பையைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் அவன்தான் பையைப் பாதையில் வைத்துவிட்டு மலஜலங் கழிக்கிறான் பைக்குடையவன் அவனாகத்தான் இருக்கலாம் அவசரப்பட்டு என்ன பைத்தியக்காரத்தனம் செய்ய நினைத்தோம்” என்ற எண்ணங்களைப் பகுத்தறிவு கிளப்புகிறது. முதலில் எழுந்த உணர்ச்சிகள் பகுத்தறிவின் நிதான புத்தியால் அடக்கப்பட்டு அவன் நடத்தையை நிர்ணயித்தது. முதலில் எழுந்த உணர்ச்சிகளைப் பின் பற்றி நடந்திருக்கலாமா? அல்லது அறிவைக்கொண்டு நிதானித்து நடந்தது சரியா? நிதானித்து அறிவைக் கொண்டு நடப்பது இயற்கை வழிக்கு மாறானதானாலும், உலகம் ஒப்புக் கொள்ளக் கூடியதல்லவா? இயற்கையுணர்ச்சிகளைப் பின்பற்றி நடப்பது எப்போதும் நியாயமானதாக இருக்காது. பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து இயற்கையுணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நடப்பதையே உலகம் எப்போதும் சிலாகிக்கிறது.
~subhead
செயற்கையின் பெருமை
~shend
இயற்கைக்கு மாறாக, இயற்கையின் போக்கைக் கட்டுப்படுத்தி, மனிதனுடைய சௌகரியத்தையும் நன்மையையும் கோரி மனிதன் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் புகழத்தக்கவைகளாக இருக்கின்றனவே யன்றி யாராலும் இழிவு படுத்தப் படுவதில்லை. பெரிய ஆறுகள் இயற்கையில் பிரித்த இரண்டு கரைகளைச் சேர்க்கும் பாலத்தைக் கட்டுவது இயற்கைக்கு விரோதமாயினும் சிறப்புக்குரியதாகும். நிலத்தின் கீழ் உள்ள நீர் ஊற்றுக்களைக் கிணறுகள் மூலம் மனிதன் பயன்படுத்திக் கொள்வதை யார் கூடாதென்று சொல்ல முடியும்? ஆழத்தில் இயற்கை மறைத்து வைத்துள்ள உலோக வகைகளையும், இரத்தினங்களையும் தோண்டி யெடுப்பது புகழ்ச்சிக்குரியதல்லவா? சிவ சமுத்திரம், பாய்கரை நீர் வீழ்ச்சிகளைத் தூரத்திலிருந்து அவற்றின் இயற்கைத் தோற்றத்தைக் கண்டு, ஆகாச கங்கை யென்றும், ஆஸ்ரம வாசத்திற்குத் தகுதியான இடமென்றும், வர்ணித்த கவியும், ரிஷியும் அந் நீர்வீழ்ச்சிகள் ஒளித்து வீணாக்கி வந்த பெருஞ்சக்தியைக் கட்டுப்படுத்தி மனிதன் இட்ட வேலையைச் செய்யும் பணிப் பெண்ணாக மாற்றிக் கொடுத்த இன்ஜினீயரை விட எப்படி மேலானவர் ஆவார்கள்? இராஜபுதனப் பாலைவனத்தில் பளிங்குப் பாறையாக இருந்த இயற்கைப் பொருள் வெட்டப்பட்டு நாடுகடத்தப் பட்டு பல்லாயிரம் கைகளால் அடுக்க ஒரு தாஜ்மஹாலாக மாறிக் காட்சியளித்த போது அவ்வியற்கைப் பொருளின் பெருமை செயற்கை நிலையில் குறைந்தாவிட்டது?
~subhead
ஆகையால்
~shend
தானாக, மனித சம்பந்தமில்லாமல், இயங்குகின்ற நிலைமையில், இயற்கை யென்பது மனிதனால் பின்பற்றுவதற்கு தகாதது, யோக்கியதையற்றது. மனிதனால் அடக்கப்பட்டு மாற்றிக் கொள்ளப் படவே தகுதியுள்ளது என்று இது வரை கூறியவற்றால் ஏற்படுகிறது. முதலில் எடுத்துக் கொண்ட விரிந்த அர்த்தத்தில் இயற்கையைப் பின் பற்றுவது அர்த்தமற்றது என்பதை மேலே விளக்கிக் காட்டினோம். மனிதன் இயற்கைப் பொருள்களையே யன்றித் தன்னுடைய இயற்கை இச்சைகளையும் உணர்ச்சிகளையும் கூடப் பின் பற்றக்கூடாது, அவற்றைத் தன் அறிவைக் கொண்டு அடக்க வேண்டு மென்றும், அறிவு கற்பிக்கும் நெறியே, ஞான நெறியே பின் பற்றத் தகுதி வாய்ந்தது என்றும் கண்டோம்.
இனி, இயற்கை வழியிலிருந்தும் அதிகம் மாறுபடாத கிராம வாழ்க்கைக்குப் போய் எளிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது நலம் தரும் என்று சொல்வதைக் கவனிப்போம்.
~subhead
மனிதன் இயற்கை
~shend
உடம்பெல்லாம் வாயாகவும், வயிறெல்லாம் பல்லாகவும் அமைந்து, உண்பதும் உறங்குவதும் தவிர்த்து வேறு தொழிலை யறியாத ஓரறிவு, ஈரறிவுப் பிராணிகள் கூடத் தனித்து வாழ்வதில்லை. தன் இனத்துடன் சேர்ந்து கும்பலாகவே வாழ்கின்றன. மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவுகளை யுடைய மிருகங்கள், பறவைகள் முதலான பிராணிகளும் தனித்து வாழ்வ தில்லை; கூட்ட வாழ்க்கையையே விரும்பி நடத்துகின்றன. மனிதரிலும், தலை சிறுத்து, உடல் பெருத்துப் புலன் உணர்ச்சியன்றிப் போத உணர்வில்லாத அஞ்ஞானச் செல்வங்கள் கூடத் தனித்து வாழப் பிரியப்படுவதில்லை. அறிவுள்ள மனிதனோ, என்றும் தன் இனத்தின் கூட்டுறவையும் சங்க வாழ்க்கையையுமே விரும்புகிறான். “இனிது இனிது ஏகாந்தம் இனிது” என்ற அபிப்பிராயத்தை நாம் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அன்பின் வழியது உயிர் நிலை யாகையால், மனிதன் எப்பொழுதும் பிறர்க்கு அன்பு காட்டவும், பிறர் அன்பைப் பெறவும் ஆசைப்படுகிறான். மரணத்தின் பயங்கரமெல்லாம், இனிமேல் பிறர் அன்புக்குப் பாத்திரமாகி பிறர் அன்பைப் பெறவும், பிறரிடம் அன்பைச் செலுத்தவும் வசதி யில்லாமற் போகிறதே என்கிற காரணத்தாலேயே, ஏற்படுவதாகச் சொல்லலாம். பிற உயிர்களின் சம்பந்தத்திலிருந்து முற்றிலும் நீங்கி, ஏகாங்கியாக இருக்க வேண்டு மென்ற பயத்தை நினைத்தே உடலை விட்டு நீங்கும் உயிர், மோக்ஷ உலகை விரும்பாது நில உலகிலேயே மீண்டும் இருக்க ஆசைப்படுகிறது. இறந்தவர்களுடைய “ஆவி” மறுபடியும் இவ்வுலக வாழ்வை விரும்பித் தாங்கள் முன் வாழ்ந்த இடங்களைச் சுற்றிக் கொண்டும், பிற உயிர்களைப் பற்றிக் கொண்டும் “பேய் பிசாசு”களாகித் தங்களுடைய ஆசைகளைத் தீர்த்துக் கொள்கின்றன என்ற கொள்கையும், மனிதனுக்கு இயல்பாகவுள்ள சங்க வாழ்க்கை விருப்பத்தைக் காட்டுகிறது. தாங்கள் ஏற்படுத்தியுள்ள தண்டனைகளில் எல்லாம் தனியறையில் சிறை வைப்பது (குணிடூடிtச்ணூதூ இணிணஞூடிணஞுட்ஞுணt) மிகவும் கொடியதென்று அரசாங்கங்கள் நினைப்பதிலும் உண்மையில்லாமலில்லை. இவற்றிலிருந்து மனிதன் எப்போதும் கூட்டமாக வாழவே விரும்புகிறான் என்கிற உண்மை விளங்குகிறதல்லவா?
~subhead
சமூக வாழ்வின் ஆரம்பம்
~shend
பிராணிகள் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாது வேண்டியவை (1) காற்று (2) தண்ணீர் (3) சாப்பாடு. இவற்றுள் காற்றில்லாமல் சில நிமிஷங்கள் கூட வாழ முடியாது. தண்ணீரில்லாமல் சில நாட்களுக்கு மேல் உயிரோடிருக்க முடியாது. இவ்விரண்டின் இன்றியமையாத் தன்மைக்குத் தக்கபடி, இவ்விரண்டு பொருள்களும் (காற்றும் நீரும்) எல்லாருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய விதத்தில், யாவர்க்கும் பொது உடமையாய், எந்தப் பலவானாலும் தன்னுடைய தனி உடமையாக்கிக் கொள்ள முடியாத வகையில், உலகமெங்கும் இயற்கையாய் அமைந்துள்ளன. மூன்றாவதான, “உணவு” முதல் இரண்டைப்போலப் பொது உடமையாயில்லாமல், மண்ணாசை கொண்ட மன்னராலும், பொன்னாசை கொண்ட மக்களாலும், ஆதியிலிருந்தே தனியுடமையாக்கிக்கொள்ளப் பட்டிருக்கிறது. உணவையும் பொது உடமையாக்கி எல்லார்க்கும் எளிதில் கிடைக்கும்படி செய்யவேண்டு மென்பது, அன்பின் வழிவந்த அறிவாளர் ஒவ்வொருவரும் ஆதி காலந் தொட்டுக் கொண்டுள்ள ஆசை கண்டு வந்த கனா. “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக உலகியற்றியான்” என்றும் “உறுபசியும் ஓவாப்பிணியும், செறுபகையும் சேராதியல்வது நாடு” என்றும் வள்ளுவர் கூறிப் போந்தார். “தனி ஒருவனுக்குணவிலையெனில் ஜகத்தினை அழிப்போம்” என்றார் பாரதி. கனவை நனவாக்கி, உணவையும் பொதுவுடமையாக்கிப் பசியையொழித்து, மக்களுக்குள் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் பகையையும் ஒழித்து ருஷ்யாவை, நாடாகச் செய்தார் லெனின்.
~subhead
நாடோடி வாழ்க்கை
~shend
ஓரிடத்திலிருந்து உழுது பயிர்செய்து தனக்கு வேண்டிய உணவுப் பொருள்களை உண்டாக்கிக் கொள்ளத் தெரியாத காலத்தில் மனிதன் எதைத்தின்று எப்படி வாழ்ந்தான்? காடுகள் இருந்த இடங்களில் காய்கனி களைத் தின்று மரப் பொந்துகளிலும், மலைக்குகைகளிலும் வாழ்ந்து வந்தான்.
காய்கனி கிடையாத போது, காட்டில் உள்ள மிருகங்களையும் பக்ஷிகளையும் வேட்டையாடிப் பிடித்துத் தின்றிருந்தான். இவைகளுக்காகக் காடு காடாக வனம் வனமாக அலைந்து திரிந்தான். நீர் நிலைகளை யடுத்துத் தங்கி வந்தான். இவை யொன்றுங் கிடைக்காத இடங்களில் நரமாமிச பட்சணியாகவும் இருந்தான்.
மிருகங்களைப் பிடித்துக் கொன்று தின்றவன், நாளடைவில் அம்மிருகங்களைப் பழக்கி வளர்த்து அவற்றைக் கொல்லாமல், அவற்றின் பொருள்களிலிருந்து உணவையும், உடையையும் பெற்றுக் கொள்ளத் தெரிந்தான். அக்காலத்தில் அவனுக்கு உணவையும், உடையையும் அளித்த மிருகங்களை வளர்க்க வேண்டி, மேய்ச்சல் காடுகளைத் தேடியலைந்து ஓரிடத்திலும் நிலைத்து வாழாமல் நாடோடி வாழ்க்கை நடத்தினான்.
~subhead
கிராமங்களின் தோற்றம்
~shend
பிறகு, உழுது பயிர்செய்யத் தெரிந்து கொண்டான். அக்காலத்தில் தான், மனிதன் ஒரு இடத்தில் நிலையாகத் தங்கி வாழ ஆரம்பித்தான். சாகுபடிக்குத் தகுதியான நிலவளமும், குடிப்பதற்கு தண்ணீர் எப்போதும் உள்ளதுமான இடத்தையே தான் தங்கி வசிப்பதற்கு ஏற்றதெனக் கண்டு, இவ்விரண்டு வசதிகளும் பொருந்திய இடங்களில் தங்கினான். மழைத் தண்ணீர் பள்ளம் படுகைகளில் தேங்கி நின்ற நீர்நிலைகளும், மேற்பரப்பில் ஓடும் ஆறுகளுமே, அந்தக்கால மனிதனுக்கிருந்த, தெரிந்த ஜலவசதிகள், நிலத்தின் கீழ் உள்ள ஊற்றுக்களை கிணறு தோண்டி உபயோகிக்க அவனுக்குத் தெரியாது. மழை நீரையும் ஆற்று வெள்ளத்தையும் குளங்களில் தேக்கி, மழையற்ற காலங்களில் உபயோகித்துக் கொள்ளவும் தெரியாது. வருஷ முழுவதும் வற்றாது ஒடும் ஆறுகளையே அவன் நம்பியிருந்தான். ஆகையால் தான் ஆறுகளை யடுத்தே மனிதன் குடியேறிப் பெருகினான். இப்போதுள்ள ஊர்களிலும், நகரங்களிலும் மிகப் பழமையானவைகள் எல்லாம் பெரிய ஆறுகளை அடுத்துள்ளவைகளாகும். காசி, பிரயாகை, பாடலிபுரம், காவிரிப் பூம்பட்டினம், உறையூர், மதுரை, கருவூர், நெல்லை, பேரூர் முதலிய பழைய ஊர்கள் எல்லாம் நதிக்கரை நகரங்களே யாகும். ஈரோடை, வெள்ளோடை, சிற்றோடை, பவானி, கீழ்வானி, மேல்வானி, ஆற்×ர், புனலூர், ஜலத்தூர், மதுக்கரை, மீன்கரை, ஓடத்துறை, நெல்லித்துறை முதலான ஊர்ப்பெயர்கள் அவ்வூர்கள் ஆதியில் தோன்றுவதற்குக் காரணமாயிருந்த ஜலவசதிகளைக் குறிக்கின்றனவல்லவா? இது போலவே, இப்போது ஊர்களாயிருந்த இடம் முன் பெருங்காடுகளாயிருந்து, மனிதன் அக்காடுகளை வெட்டி நாடாக்கின உண்மையையும், நமது நாட்டில் உள்ள பல ஊர்ப் பெயர்கள் தெரிவிக்கின்றன.
தென்னம்பாளையம், பனங்காட்டூர், புளியம்பட்டி, மாமரத்துப்பட்டி, விளாமரத்துப் பட்டி, வேலாம் பூண்டி, ஈஞ்சம் பள்ளி, எட்டிக் குட்டை, புங்கம்பாளையம், வேப்பம்பாளையம், முருங்கைத் தொழுவு, வாகைத் தொழுவு, நெரிஞ்சிப் பேட்டை, வாழைத் தோட்டம், முதலிய ஊர்ப்பெயர்கள் காடுவெட்டி நாடாக்கிய காலத்தில் அவ்விடங்களில் சிறப்பாய் இருந்த மரஞ்செடி தாவரங்களைக் குறிப்பிடுகின்றன. அது போலவே, புலியூர், சிங்கம் பேட்டை, நரிப்பட்டி, பன்றிமடை, கரடிமடை, மானுப்பட்டி முதலிய ஊர்ப்பெயர்கள் அக்காடுகளில் யதேச்சையாயிருந்த மிருகங்களை மனிதன் அழித்து ஊர் கட்டியதைக் குறிப்பனவாகும். நதிக்கரைகளில் ஊர்கள் உண்டாக்கிப் பெருகிய மனிதன், ஜனப்பெருக்கால், நதிகளை விட்டு மேட்டுப் பாங்கான நிலங்களிலும் குடியேறவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ஆறுகளைத் தவிர்த்து வேறு ஜலவசதியைக் காணமுயன்றான். நிலத்தைத் தோண்டிக் கீழ் உள்ள ஊற்றுக்களிலிருந்து நீர் எடுத்துக் கொள்ளத் தெரிந்தான். மேட்டுபாவி, பூலாங்கிணறு, வெள்ளக் கிணறு, கரடி பாவி, பருபாவி, கிணற்றுக்கடவு, பண்ணைக்கிணறு, அல்லிக் கேணி, கூவலூர் முதலிய ஊர்ப்பெயர்கள், மனிதன் கிணறு தோண்டத் தெரிந்து கொண்ட பின், ஆற்றங் கரைகளைவிட்டு, மேட்டுப் பிரதேசங்களில் குடியேறிய காலத்தில் தோன்றியவை என்று தெரிவிக்கின்றன. இவ்வாறு தோன்றிய குடியிருப்புகள் அங்குள்ள நீர்வளம் நிலவளத்திற்கேற்ப வளர்ந்து வந்தன. சிறு சிறு கூட்டங்களாய்ப் பரவி நாடெங்கும் குடியிருப்புகளை (கிராமங்களை) உண்டாக்கி வாழ்ந்த மக்களை, ஆட்பலமும், அறிவும் கொண்ட ஒருவன் அடக்கித் தலைவனாகித் தன் அதிகாரத்தையும், ஆட்சியையும் நிலைக்கச் செய்ய அங்கங்கே கோட்டை களைக் கட்டினான். இந்தக் கோட்டைகளையடுத்தும் ஊர்கள் தோன்றின. அரசனையண்டி அவனைக் காத்து, மற்றவர்களை அரசன் ஆணைக்கடங்கச் செய்யவும், மதத்தின் பெயரால் மக்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும் அங்கங்கே கோயில்கள் தோன்றின. இக்கோயில்களையடுத்தும் ஊர்கள் ஏற்பட்டன.
~subhead
கிராம சமூகம் பழைய நிலை
~shend
நாள் முழுதும் ஒரு முயலையோ, மானையோ பின் பற்றிக் காடு முழுதும் ஓடித்திரிந்து அதைக் கொன்று கொண்டு வந்து, காய்ந்த சுள்ளிகளைச் சேர்த்துச் சக்கிமுக்கி தட்டித் தீயுண்டாக்கி இறைச்சியை வாட்டித் தானும் தன் மனைவி மக்களும் தின்று மரத்தடியிலும், மலைக்குகையிலும் வாழ்ந்து வந்த மனிதன், விவசாயம் செய்யத் தெரிந்து கொண்ட பின் ஓரிடத்தில் தங்கி, விளைநிலத்திற்கருகில் வளைவு கட்டிக் கொண்டு வாழத் தொடங்கியபோது, இவனுக்கருகில் இவன் இனத்தார்களும் இவனைப்போலவே வளைவுகள் கட்டிக்கொண்டு வாழலாயினர்.
விவசாய வாழ்க்கையில் ஈடுபட்டு ஓரிடத்தில் நிலைத்து வாழ வாரம்பித்த போது, மனிதன் வாழ்க்கையில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. ஒரு குடியிருப்புக்குச் சுற்றிலுமுள்ள விளை நிலங்களை அக்குடியிருப்பில் தங்கிய பல குடும்பங்களும் தங்களுக்குள் பங்கிட்டு அவரவர் நிலத்திற்கு வரையறை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் வந்தது. ஆகையால் நிலம் தனி உடமையாக்கப் பட்டது. தனியுடமைக் கொள்கை ஏற்பட்ட பின் நாளடைவில் சிலர் அதிக நிலங்கள் பெறவும், சிலர் நிலம் இல்லாது போகவும் நேர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. பயிர்த்தொழில் செய்ய வேண்டியவன் வேறு தொழில்களைச் செய்ய போதிய சாவகாசமும் திறமையும், பயிற்சியும் பெற முடியாமற் போயிற்று. நிலம் இல்லாதவர்கள் வேலையற்றுப் போகவே, குடியானவனுக்கு வேண்டிய இதர பொருள்களையும் சௌகரியங்களையும் செய்து கொடுத்துக் குடியானவனிடமிருந்து தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரு கிராமத்தில் வசித்தவர்களில் பெரும்பாலானவர் பயிர்த்தொழிலைச் செய்தனர். இவர்களுக்கு வேண்டிய உடையைத் தயாரித்துக் கொடுக்கச் சேடன், சேணியன், கைக்கோளனும், உழவுக் கருவிகளைச் செய்து கொடுக்கத் தச்சன், கொல்லனும், பாத்திரம் செய்து கொடுக்கக் குயவன் கன்னானும், வீடு கட்டவும், கிணறு வெட்டவும் ஒட்டன், கொத்தனும், இலை தயாரித்துக் கொடுக்கவும், மாலை கட்டிக் கொடுக்கவும் ஆண்டி, பண்டாரமும், துணி வெளுத்துக் கொடுக்க வண்ணானும், க்ஷவரம் செய்து அழகு படுத்த நாவிதனும், அணிகலன் செய்து கொடுக்கத் தட்டானும், பண்ணை வேலைகளில் கடின வேலைகளைச் செய்யப் பள்ளர், சக்கிலியரும் என்று அவசியமான தொழில்களைச் செய்யச் சிலர் ஏற்படுத்தப் பட்டனர். கிராம வாழ்க்கை பின்னும் சிறிது நாகரிகப்பட்ட போது, குடியானவன் குடித்துக் களிக்கக் கள்ளும், மதுவும் தயாரித்துக் கொடுக்கச் சிலரும், கோவில்களும், பூசாரிகளும், தேவடியார்கள், சின்னமேளம், பெரிய மேளங்களும் தோன்றின. மேற்கூறிய அனைவரும் குடியானவன் தயவை எதிர்பார்த்து அவன் விளைவிப்பதில் பங்கு பெற்று வாழ்ந்து வந்தனர். இவ்வாறு சமூக வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாவற்றையும் தாங்களே தயாரித்துக் கொள்ளக் கூடிய வகையில் ஜனங்களும், தொழில்களும் ஏற்பட்டு, ஒவ்வொரு கிராமமும் ஒரு தனிப்பட்ட சமூகமாய் பிறர் தயவை எதிர்பாராமல் அக்காலத்திய கிராம வாழ்க்கை நடத்தப்பட்டு வந்தது. இன்றைய நிலையில் மீண்டும் இவ்வித கிராம வாழ்க்கைக்குத் திரும்புவது சாத்தியமான காரியமா? இவ்வித கிராமங்கள் பலவற்றால் ஆகிய ஒரு நாட்டை ஒருவன் கைப்பற்றி ஆட்சி செய்யும்போது, அவன் இந்தக் கிராம வாழ்க்கையின் அமைப்பைச் சீர்குலைக்காமல், மேலும் பலமாக்கி வைத்துத் தன் ஆட்சியை நிலை பெறுத்துவதற்குச் சாதகம் செய்து கொண்டான். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தலைவனை ஏற்படுத்தி அவன் மூலம் தனக்குத் தேவையான கப்பத்தை வாங்கிக் கொண்டு தன் கட்டளைப்படி நடந்து தனக்குதவிபுரிபவர்களுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் வரி நீக்கப்பட்ட விளைநிலங்களை ஊழிய இனாமென்றும், தேவதாயம், பிரம்மதாயம் என்றும் சாமிக்கும், பூசாரிக்கும், பிராமணருக்கும் கொடுத்து இவர்களைத் தன் ஆட்சிக்கு அரண்களாக்கிக் கொண்டான். கிராம அமைப்பு முடி ஆட்சிக்கும், கொடுங்கோன்மைக்கும் சாதகமான அமைப்பு என்பதைக் கண்டதினால், பழைய இந்து அரசர்கள் காலத்தில் இருந்த இவ்வமைப்புப் பின்னால் முகமதிய அரசர்களாலும், அதற்குப்பின் வந்த கிருஸ்தவ (இங்கிலீஸ்) அரசாங்கத்தாலும், அப்படியே காப்பாற்றப்பட்டு வருகிறது. மானியங்களும், இனாம்களும், பிரம்மதாயத்திற்கும் தேவதாயத்திற்கும் இன்றும் இருந்து வருகின்றன. சிறு சிறு கிராமங்களில் தனிப்பட்ட சமூகங்களாய் வாழ்ந்து வந்த மக்கள், இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன என்று கவலை கொள்ளாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை. கிராமவாசிகளுக்குத் தங்கள் கிராம எல்லைக்கு அப்பால் உள்ள எதைப்பற்றியும் அக்கரை இல்லை. விரிந்த மனப்பான்மையும், நாட்டுப் பற்றும், பொது உணர்ச்சியும் இவர்களுக்குள் ஏற்பட வசதிகள் இருக்கவில்லை. சண்டமாருதத்தால் கலக்கப்பட்டுக் கொந்தளிக்கும் கடலின் கரையோரங்களில், அலைகள் ஒதுக்கும் குப்பை கூளங்களும், பாசியும், நுரையும் படிந்து, சலனமற்றிருக்கும் உப்பங்கழிகளைப்போல, உலகில் நடக்கும் எவ்விதப் புரட்சிகளுக்கும் எட்டாது உணர்வற்று அசைவற்று இருந்து வந்தன நம் நாட்டுக் கிராமங்கள்.
~subhead
நிலைக்கச் செய்ய முடியுமா?
~shend
மிகப் பழமையானதும், எளிதில் உடைக்க முடியாததும், தொடர்ச்சியாக அரசாங்கங்களின் பாதுகாப்புப் பெற்று வந்ததுமான இந்தக் கிராம அமைப்பும், கிராம வாழ்க்கை முறையும், நாகரீக வளர்ச்சியால் நாளடைவில் சீர்குலைந்து சின்னா பின்னப்பட்டு இன்று அழிந்து ஒழிந்து போகும் நிலையில் இருக்கிறது. பலங்குன்றி, ஜீவநாடிகள் எல்லாம் அடங்கிக் குற்றுயிராயிருக்கும் இவ்வமைப்பையும் முறையையும், பலங் கொடுத்து உயிர்ப்பிக்கப் பல வைத்தியர்கள் முயற்சிக்கின்றனர். இந்த வைத்திய போர்டின் தலைவராக விளங்குகின்றார் தோழர் காந்தியார். தன்னுடைய உடலுக்கு தானே வைத்தியம் செய்து பல பல விதமான உணவுகளை உண்டு பட்டினி கிடந்தும் பரீக்ஷித்துப் பார்ப்பது போல், கிராமவாழ்க்கையைப் புனர் நிர்மாணம் செய்வதற்கும் பல மருந்துகள் பரீக்ஷிக்கப் படுகின்றன. “நூற்போர் சங்கம்” என்ற ஊசி வழியாகக் “கதர்” என்னும் மருந்து சென்ற பத்து வருஷங்களாக இஞ்செக்ஷன் செய்யப்பட்டு வருகிறது. கிராமக் கைத்தொழில் அபிவிர்த்தி சங்கம் என்கிற புது ஊசி ஒன்று இப்போது தயாரிக்கப்பட்டு, கருப்பட்டியும், விளக்கெண்ணெயும், இஞ்செக்ஷன் செய்யப்பட வேண்டும் என்று இப்போது தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. இந்த வைத்தியம் நோயைத் தீர்க்குமா?
~subhead
கிராம வாழ்க்கையின் தற்கால நிலை
~shend
கிராமங்களைப் பிடித்திருக்கும் நோய் என்ன? எங்கும் வேலையில்லாத் திண்டாட்டம். கூலி கிடைக்காத குறை. வேலையும், கூலியும் கிடைக்காததால், கிராமங்களில் உள்ளவர் கிராமங்களை விட்டுப் பட்டணங்களுக்கும் பிற நாடுகளுக்கும் போய் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் கிராமங்கள் நாளுக்கு நாள் மெலிந்து, சிறப்பிழந்து வருகின்றன. ஒவ்வொரு சென்ஸஸ் கணக்குப்படியும், கிராமாந்தரங்களில் வாழும் ஜனங்களின் தொகை குறைந்து கொண்டும், பட்டணங்களின் ஜனத்தொகை வளர்ந்து கொண்டும் வருகின்றன. கிராமங்களில் வசித்து வந்த உயர் ஜாதிக்காரர் என்பவர்களில் அநேகமாய் எல்லோரும் கிராமங்களை விட்டுப் பட்டணங்களில் குடியேறி விட்டனர். எங்கு பார்த்தாலும், கிராமங்களில் உள்ள அக்கிரகாரங்கள் எல்லாம் பாழடைந்து கிடக்கின்றன. பட்டணங்கள் ஒவ்வொன்றிலும் “எக்ஸ்டென்ஷன்ஸ்” என்கிற அக்கிரகாரப் புதூர்கள் ஏற்பட்டு வருகின்றன. கீழ் ஜாதிகள் என்போரிலும், விவசாயிகளைத் தவிர்த்த மற்றையோரில் பெரும்பாலோர், பெரிய ஆலைகள் உள்ள பட்டணங்களுக்குப் போய்க் கொண்டு வருகின்றனர்.
~subhead
பட்டணம் போவதேன்?
~shend
விவசாயத் தொழிலில் ஈடுபட்ட குடியானவர்களைத் தவிர, மற்ற ஜாதியார்கள் எல்லோரும், கிராமங்களை விட்டு பட்டணங்களுக்குப் போவதேன்? இன்றைய நிலையில், கிராமங்களில், விவசாயி ஒருவனுக்கே, தொழிலும், ஜீவனம் செய்ய மார்க்கமும் இருக்கிறது. மற்ற தொழிலாளி களுக்கும் சுக ஜீவனக்காரருக்கும் கிராமங்களில் பிழைக்கும் வழி இல்லை. வண்ணான், நாவிதன், புரோகிதன், பூசாரி, ஆண்டி, ஒட்டன், பள்ளன், சக்கிலியன் முதலானவர்களுக்கு ஓரளவு தொழில் இருக்கிறதாகச் சொன்னாலும், தச்சன், கொல்லன், தட்டான், கன்னான், குயவன், வாணியன், சேணியன், சேடன், கைக்கோளன் முதலான பலருக்குத் தங்கள் குலத் தொழிலைக் கிராமங்களில் நடத்தி அதன் மூலம் ஜீவனம் செய்ய இன்றைய நிலை இடம் கொடுப்ப தில்லை. குடியானவனுக்கு இவர்கள் உதவி தேவை இல்லை. ஆகையால் அவன் தன் விளைவில் இவர்களுக்குப் பங்கு கொடுப்பதை நிறுத்தி விட்டான்.
~subhead
கிராமக் கைத்தொழில் அழிவின் காரணங்கள்
~shend
சமீப காலம் வரை, குடியானவனுக்கு வேண்டிய சகல பொருள்களும் கிராமங்களில் உள்ள பரம்பரைத் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்டு வந்தன. இன்று இப்பொருள்கள் எல்லாம் அனேகமாய் இயந்திர சாலைகளில் தயாரிக்கப்பட்டு வியாபாரிகளால் கடைகளிலும் சந்தைகளிலும் விற்கப்படு கின்றன. உழவுத் தொழிலுக்கு இன்றியமையாது வேண்டிய கலப்பை, ஏர்ச்சட்டம், பரம்புச் சட்டம், நுகம், தடி, உழுகோல் முதலிய மரச்சாமான் களைப் பெரும்பாலும் இன்றைய குடியானவன் தன் ஊரிலுள்ள தச்சனிடம் போய் வாங்கிக் கொள்வதை நிறுத்திவிட்டான். அடுத்துள்ள பட்டணத்திற்குப் போய் மரக்கடையில் வாங்கிக்கொள்கிறான். கொழு, கொத்து, அரிவாள், மண்வெட்டி முதலிய இரும்புச் சாமான்களை பட்டணக்கரையிலுள்ள இரும்புக் கடையில் வாங்குகிறானேயன்றி உள்ளூரில் உள்ள கொல்லனிடம் பெற முடிவதில்லை. இயந்திரசாலைகளில் செய்யப்படும் இரும்புச் சாமான்கள் அதிக நயமாகவும் மலிவாகவும் கிடைக்கின்றன. மரச் சாமான்களும் இயந்திரசாலைகளில் அறுவை செய்து, ரயில் மார்க்கமாக இறக்குமதி செய்யப்பட்டு, மரக்கடைகளில் மொத்தமாகத் தயார்செய்யப்படுவதால் விலை குறைவாகவும், பொருள் நயமாகவும் கிடைக்கின்றன. உழவுத் தொழில் கருவிகளின் நிலைமையே இப்படியானால், மற்ற பொருள்களைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. மில் துணிகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதால், சேடன், சேணியன், கைக்கோளன் முதலியவர்களின் தொழில்கள் முடங்கிவிட்டன. ஷராப் கடைகளில், தேவையான பொன், வெள்ளி நகைகள் நாகரிகமாகத் தயாரிக்கப் பட்டு, எப்போதும் தயாரிலிருப்பதால், தட்டான் கிராமத்தை விட்டுப் பட்டணங்களில் உள்ள ஷராப்புக் கடைக்காரனிடம் கூலிக்கு வரவேண்டியதாயிற்று. பீங்கானும் அலுமினியப் பாத்திரமும், இயந்திரங்கள் மூலம் ஏராளமாய் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலைக்குக் கிடைப்பதால், குயவன், கன்னான் முதலியவர்களின் தனிப்பட்ட தொழிலுக்குத் தேவையில்லாது போயிற்று. கூரைகளுக்குப் போடும் ஓடுகள் கூட, மலையாளத்தில் இயந்திரங்கள் மூலம் பெருவாரியாக உற்பத்தி செய்யப்பட்டு நாடெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறே எந்தப் பொருளை எடுத்துக் கொண்ட போதிலும், தனிப்பட்ட ஒரு கைத்தொழில்காரன், முன்போல் அதைச் செய்து இயந்திர உற்பத்திப் பொருளுடன் போட்டியாக விற்க முடியாத நிலையில், தன் தொழிலை விட வேண்டியவனாகி விட்டான். கிராமக் கைத் தொழில்கள் அழிந்ததற்கு முக்கியமான காரணம், இயந்திரப் பெருக்கமும் இயந்திர உற்பத்தியும் என்று சொல்லலாம். இயந்தரங்கள் மூலம், பொருள்கள் பெரு வாரியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. பெருந்தொகையாகத் தயாரிப்பதில் விலை குறைகிறது. விலை குறைவாயுள்ள இயந்தர உற்பத்திப் பொருளை, வாங்குபவன், ஆதரிக்கிறான். இயந்தரமும் கிராமக் கைத்தொழிலாளியும் போட்டிபோட்டதில், ரயிலுடன் போட்டி போட்டு ஓடிச்செத்த குதிரையைப் போல, கைத்தொழில்காரன் தோற்றுத் தன் தொழிலை இழந்தான்.
~subhead
இரண்டாவது காரணம்
~shend
போக்கு வரவுக்குரிய வசதிகள் முன்காலத்திற்கு இப்போது மிகமிக அதிகரித்து விட்டதும் கிராமக் கைத்தொழிலின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாகும். முன் காலத்தில் ஒரு கிராமத்துப் பொருள் அடுத்த கிராமத்திற்குப் போவது கூட மிகுந்த கஷ்டமானதாயிருந்தது. மிகவும் விலை பெற்ற, அல்லது, இன்றியமையாத பொருள்களை ஒரு நாட்டிலிருந்து வேறுநாட்டிற்குக் கொண்டு போகப்பட்டன. இன்றைய தினம் சர்வ சாதாரணமாய்க் கிடைக்கும் உப்பு ஒருகாலத்தில், உள் நாட்டு ஜனங்களுக்கு (சமுத்திரக் கரையிலிருந்து அதி தூரத்தில் உள்ளவர்களுக்கு) கிடைத்தற்கரிய பொருளாயிருந்தது. போக்கு வரவு சாதனங்களின் குறைவும் கஷ்டமும், கிராமக் கைத்தொழிலாளியின் கரடு முரடான சாமான்களை அதிக விலைக்கு விற்கத் துணை செய்தன. தற்காலத்தில் போக்குவரத்துக்குள்ள மிகுந்த வசதிகள், இயந்திர உற்பத்திப் பொருள்களை மூலை முடக்குகளில் எல்லாம் பரப்பிக் கிராமக் கைத்தொழில் காரன் வாழ்க்கையைக் கெடுத்து விட்டது. அழுகிற குழந்தைக்கு விளையாட்டுச் சாமான் கொடுத்து சமாதானப்படுத்தும் அன்பு, தாய்க்கு அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது. ஆனால் அதற்காக அன்று போல, தச்சனைத் தேடி, மரம் தேடிக்கொடுத்து, அவன் கேட்கிற கூலியும் கொடுத்து, ஒருவாரம் பத்துநாள் அவனிடம் நடந்து ஒரு மரப் பொம்மை வாங்கிக் கொடுக்கிற தாயார் இன்றில்லை. சந்தைக்குப் போகிறபோது, முக்கால் துட்டுக்கு ஒரு ஜப்பான் பொம்மை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறாள். குழந்தையும் தச்சன் செய்த மரக்கட்டை பொம்மையை விடப் பகட்டான ஜப்பான் பொம்மையை அதிகப் பிரியமாக ஏற்றுக்கொள்கிறது.
~subhead
மூன்றாவது காரணம்
~shend
பண்டு தொட்டே, கிராமங்களில், கைத்தொழில்களுக்கும், தொழிலாளர் களுக்கும் இருந்து வந்த இழிவும், கிராமக் கைத்தொழில் க்ஷீணத்திற்கு ஒரு காரணமாகும். உழுதுண்டு வாழ்பவனே வாழ்பவன், மற்ற எல்லோரும் தொழுது உண்டு பின்னால் திரிபவர் என்கிற நிலைமைதான் கிராமங்களில் இன்றும் இருக்கிறது. பட்டணங்களில் எவன் எந்தத் தொழிலைச் செய்தாலும் கேட்பவன் இல்லை. சக்கிலியொருவன் காப்பிக்கடை வைப்பதைத் தடுக்க முடியாது. தற்போதுள்ள சமூக நிலையில், அவனுக்கு அது லாபகரமாக இருக்காது என்கின்ற பயத்தினால் அவன் வைப்பதில்லையே தவிர, நேர்முகமான தடையில்லை. ஆனால் கிராமத்தில், ஜாதியாசாரமும், குல ஆசாரமும் ஒருவன் தனக்கிஷ்டமான தொழிலைச் செய்வதற்குத் தடையா யிருக்கின்றன. கைத்தொழில்காரருக்கெல்லாம் பொதுவாகச் சில அவமரியாதை களும், இழிவுகளும் இருந்து வருகின்றன. சில ஜாதிகள் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்கக் கூடாது, குதிரையேறக் கூடாது, வண்டியேறக் கூடாது, வேஷ்டியை முழங்காலுக்குக் கீழே தொங்க விட்டுக் கட்டிக் கொள்ளக் கூடாது என்ற பல கொடுமைகள் இன்னும் அனேக கிராமங்களில் இருந்து வருகின்றன. இவ்வித நிர்ப்பந்தங்களுக்கடங்கித் தன் சுயமரியாதையை யிழந்து தொழில் செய்து கிராமங்களில் வாழ்வதை விடப் பட்டணங்களுக்குப் போவது மேல் என்று நினைத்து கிராமங்களை விட்டவர் பலர். பட்டணங்களில் தொழில் செய்வது லாபகரமும் ஆகும் என்று தெரிந்த பின் கிராமங்களில் இருக்க எந்தத் தொழிலாளியும் விரும்ப மாட்டான். ஈன ஜாதிகள் என்கிற இழிவைச் சுமந்து கொண்டு, ஈனத் தொழில் என்று ஏசப்படும் தொழிலைச் செய்து அரை வயிற்றுக்கும் போதாக் கஞ்சி குடித்துக் கிராமத்தில் வாழ்வதை விட, பட்டணம் வந்து, ஒரு சலவைச் சாலையையோ, “பார்பர் ஷாப்” அல்லது, “ஷேவிங் சலூன்” என்ற காரியாலயத்தையோ ஏற்படுத்திக் கொண்டு, சுயமரியாதையுடன் தொழில் செய்வது மேல் என்று கிராமத்து வண்ணானும், நாவிதனும் பட்டிணத்திற்கு வருவதை யார் ஆக்ஷேபிக்க முடியும்? எனவே, கிராமங்களில் இன்னும், பலம் பெற்றிருக்கிற ஜாதிக்கட்டுப்பாட்டின் கொடுமை களும், இழிவுகளும், அனேக தொழிலாளிகளைக் கிராமங்களிலிருந்து துரத்தி விட்டன என்று சொல்வது சிறிதும் மிகையாகாது.
~subhead
அடிப்படையான காரணம்
~shend
கிராம அமைப்பின் அஸ்திபாரம் அசைந்து, கிராம வாழ்க்கை என்ற பழய கோபுரம் இடிந்து விழுவதற்கு நான்காவதாக ஒரு முக்கிய காரணம் உண்டு. அது என்னவென்றால், மேற்கத்திய (ஆங்கில) கல்வியும், அக்கல்வி போதிக்கப்படும் முறையும். சாத்தான் அரசாங்கத்தின் கொடுமைகளில் எல்லாம் மிகக் கொடுமையானது மேற்கத்திய கல்வி (ஙிஞுண்tஞுணூண ஞுஞீதஞிச்tடிணிண) இங்கிலீஷ் படிப்பு, என்று காந்தியார் சொல்கிறார். ஆனால் இந்த நாட்டு மக்கள், சமதர்ம ஆட்சிக்கு லாயக்காவதற்கும், நாகரீக மடைந்த மற்ற நாடுகளைப் போல் உயரிய வாழ்க்கை நடத்துவதற்கும் வேண்டிய ஆசையைக் கிளப்பி, ஜனங்களின் கண்களைத் திறந்து, தங்கள் தரித்திர வாழ்க்கையில் அதிருப்தியை உண்டாக்கி, இன்ப வாழ்க்கையில் மோஹத்தைக் கொடுத்து அவ்வாழ்க்கையை விரைவில் அடையத்தக்க பயிற்சியையும் கொடுத்து வருவது, இங்லீஷ் படிப்பும், ஆண் பெண், ஜாதி, மத, வித்தியாசமின்றி அது போதிக்கப்படும் முறையுமே என்பது மறுக்க முடியாத உண்மை. கிராமவாசிகளான குடியானவனையும் தொழிலாளியையும், பட்டிக்காட்டு முட்டாள்கள், காட்டுமிராண்டிகள்” என்று இதுவரை ஏசி இழிவுபடுத்தி வந்த படித்த கூட்டத்தார், இன்றையதினம் “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று சொல்லியும் மேல் வரி எழுதிக் கொண்டு நடிக்கவும் ஏற்பட்ட நிர்ப்பந்த நிலைமை எப்படி வந்தது? இங்கிலீஷ் படிப்பும் அதன் விளைவாகிய சமத்துவ உணர்ச்சியும் பாமர ஜனங்களுக்குள் பரவியதா லல்லவா? சத்திரத்துச் சாப்பாடும் மடத்து நித்திரையும் தங்கள் பிறப்புரிமையாகக் கொண்டு வாழ்ந்த கூட்டத்தார்களே இன்றைய தினம் “வீணில், உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்” என்ற சமதர்ம தீர்க்கதரிசியாகிய பாரதியின் அதிதீவிரப் பொது உடமைத் தத்துவத்தை ஒப்புக் கொண்டவர்கள் போல் நடிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைமையும், மேற்கத்திய கல்வியின் விளைவால் அல்லவா?
ஒரு பட்டிக் காட்டில் தாழ்ந்த குலமென்பதிற் பிறந்த ஒரு சாமிக்கண்ணு, உலகம் மதிக்கத்தக்க ஒரு பேரறிஞராய் விளங்குவதற்கு இடமளித்தது, சாத்தான் அரசாங்கத்தின் மேற்கத்திய கல்வி முறையல்லவா? பழய தர்மப்படி, படிப்பதற்கு உரிமையில்லாத “சூத்திர” குலங்களிற்பிறந்த ஒரு சுப்பராயனும் ஒரு செங்கோடனும் ஷண்முகமும், முதல் மந்திரியாகவும், ஜில்லா கலெக்டராகவும், திவானாகவும் வர முடிந்தது தற்போதைய கல்வி முறையால் அல்லவா? நமது அம்பத்காரும், சிவராஜும், சீனிவாசனும், இழி குலங்கள் என்று சொல்லப்படும் ஜாதிகளில் பிறந்தும், புகழ் பெற்றுக் கண்ணியமான கனவான்களாகவதற்குத் துணை நிற்பதெது? இவர்களைப் போன்ற அறிவாளிகள், பண்டைக்காலத்தில், ஒரு சம்பூகனாகவோ, சாத்தானாகவோ இருந்து அரச தண்டனைக்கும், சமூக நிந்தனைக்கும், ஆளாகி ஒழியவும், அல்லது ஒரு பிண்ணாக்கு சித்தனாகவோ, ஒரு பாம்பாட்டிச் சித்தனாகவோ, கல்லுளி சித்தனாகவோ மாறிச் சந்நியாசி வாழ்க்கையை மேற் கொள்ளவும் தானே முடிந்தது? ஆகையால், இந்நாட்டில் சமத்துவ உணர்ச்சி பரவுவதற்கும், ஜாதி பற்றிய தொழில் முறைகள் கைவிடப்பட்டு, அறிவு பற்றியத் தொழிலை மாற்றிக் கொண்டு உயர்வடைவதற்கும் சௌகரியம் உண்டானதன் அடிப்படைக் காரணம், மேற்கத்திய (இங்கிலீஷ்) படிப்பும் அப்படிப்பு வித்தியாசமின்றி எல்லார்க்கும் போதிக்கப்படுவதுமேயாகும்.
மேற்கூறிய காரணங்களால் கிராமக் கைத்தொழில்கள் சீர்குலைந்தன. கொஞ்ச நஞ்சம் உள்ள தொழிலாளிகளும் கிராமங்களை விட்டுப் பட்டணங் களில் குடியேறி வருகின்றனர். கிராமங்களில் தொழிலாளர் நிலை இப்படியாக, உழவுத் தொழிலிலேயே ஈடுபட்டுள்ள குடியானவர்களைப் பற்றியும் விவசாயக் கூலிகளைப் பற்றியும் இனிக் கவனிப்போம்.
~subhead
கிராமக் குடியானவன் நிலைமை
~shend
கிராமங்களில் உள்ள உழு நிலங்களில் பெரும்பாகம் அவற்றைச் சாகுபடி செய்யும் குடியானவன் கையிலிருந்து பட்டணங்களில் உள்ள வக்கீல்களுக்கும், பெருஞ் சம்பளம் பெறும் உத்தியோகஸ்தர்களுக்கும், சௌகார்களுக்கும், முதலாளிகளுக்கும் மாறிவிட்டன. மாறிக்கொண்டு வருகின்றன. சொந்த நிலம் உடைய குடியானவன் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சொற்ப நிலம் உடையவனுக்கு உழவுத்தொழிலில் தன் குடும்பத்திற்குப் போதிய வருவாய் கிடைக்காததால், கடன் வாங்கி விரைவில் தனக்குள்ள சிறிது நிலத்தையும் இழந்து வருகிறான். குத்தகை அல்லது குடிவாரத்திற்குச் சாகுபடி செய்பவர் அதிகரித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் உழைப்பின் முழுப் பிரயோஜனத்தையும் அடைவதில்லை. பெரும் பகுதியை பட்டணங்களில், உண்டுகளித்திருப்போர்க்கு உரிமையாக்க வேண்டியவனாயிருக்கிறான். பெரிய மிராஸ்தார்கள் என்கிற குடியானவர்கள், கிராம வாழ்க்கையின் குறுகிய உணர்ச்சிகளால், தங்களுக்குள் குரோதங் கொண்டு கட்சி கட்டிக்கொண்டு, அற்ப விஷயங்களுக்கெல்லாம் வியாச்சியங்கள் தொடர்ந்து தங்கள் ஆஸ்திகளை வக்கீல்களுக்கும் நியாயஸ்தலத் தேவதை களுக்கும் கொட்டி ஆண்டிகளாகின்றனர். கட்சியில்லாத கிராமம் சாதாரணமாய் நமது நாட்டில் இல்லை யென்றே சொல்லலாம். தாராள நோக்கமும், விரிந்த மனப்பான்மையும், நமது பட்டணங்களில் உள்ள அளவில் ஒரு சிறிது கூடக் கிராமங்களில் இல்லை. குறுகிய நோக்கமும், அவசரப் புத்தியும், மூர்க்கத் தன்மையும், கிராம வாழ்க்கையின் இன்றியமையாச் சிறப்புக்களாயிருக்கின்றன. கிராமங்களில் இத்தன்மைகளோடு விளங்கும் குடியானவர்கள் இல்லாவிட்டால், பட்டணங்களில் உள்ள வக்கீல்களுக்கும், நியாயஸ்தலங்களில் உள்ள தேவதைகளுக்கும் அவசியம் இருக்காது என்று சொல்வதில் தவறு ஒன்று மில்லை. நிலங்களையுடைய குடியானவர்கள் தங்கள் அவிவேகத்தினாலும், பிடிவாதத்தினாலும், காலத்திற்கொப்ப மாற்றிக் கொள்ளுந் தன்மையில்லாத தாலும், நாளுக்கு நாள் க்ஷீணித்து வருகின்றனர்.
பண்ணையாட்கள், விவசாயக் கூலிகள் இவர்கள் நிலைமை இன்னும் பரிதாபகரமானது. காலை 5 மணிக்கெழுந்து பகல் முழுதும் உழைத்தாலும், இவர்கள் தரித்திரம் விடிவதில்லை. மூன்று பைசாவுக்கு சீமை யெண்ணெய் வாங்கி விளக்கேற்றிக் கொள்ளவும் வகையின்றி, அந்திப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் கஞ்சி குடித்து விட்டுப் பெண்டு பிள்ளைகளை விட்டு பண்ணாடியின் தோட்டத்துக் களத்திலும் பட்டிப் புழுதியிலும், பட்டி நாயுடன் படுத்துக் காவல் காக்க வேண்டியது பண்ணையாளின் வாழ்க்கை. பண்ணைகளில் சேராது, கண்ட கூலிக்குப் போகும் கூலியின் நிலை கொஞ்சம் மேலானது என்றாலும், இவனுக்கு வருஷ முழுவதும் கூலி கிடைப்பதில்லை. கூலி தேடிப் பத்துமைல் பதினைந்து மைல்களுக்கப்பாலுள்ள பட்டணங்களுக்கு வர வேண்டியிருக்கிறது. இவன் மனைவி, ஒரு சுமை புல்லோ, விறகோ சுமந்து வந்து பட்டணத்தில் ஓரணா, இரண்டணாவுக்கு விற்று, உப்புப்புளி வாங்கிக் கொண்டு போக வேண்டியவளாக இருக்கிறாள். கிராமங்களிலிருந்து காய்கறி, தயிர், பால் முதலியவற்றைக் கொண்டு வந்து பட்டணங்களில் விற்று ஜீவனம் செய்பவர்கள், பட்டணங்களை யடுத்துள்ள சுற்றுக்கிராமங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானவராயிருக்கின்றனர். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள குடியானவர்கள், பண்ணையாட்கள், கூலிகள் முதலியவர்களின் வாழ்க்கை நிலை இவ்வாறிருக்கும் போது, இவ்விதக் கிராம வாழ்க்கைக்குப் போவதன் மூலம் நமக்குக் கதி மோட்சம் ஏற்படும் என்று சொல்வது எவ்வளவு வஞ்சகம்!! எவ்வளவு புரட்டு!!!
~subhead
பட்டண வாழ்க்கையின் சிறப்பு
~shend
கிராமங்களில் என்னென்ன குறைகளும் கொடுமைகளும் இருக் கின்றனவோ, அவைகளில் ஒன்றும் பட்டணங்களில் இல்லை.
- ஜாதிக் கட்டுப்பாட்டின் கொடுமைகள் இல்லை. தனி மனிதன் சுதந்திரத்திற்கும், உரிமைக்கும் கிராமங்களில் உள்ள தடைகள் பட்டணங்களில் இல்லை.
- படிப்புக்கும், வைத்திய உதவிக்கும் வசதிகள் இருக்கின்றன.
- தொழில் முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் விரிந்த வசதியும், ஆதரவும் பட்டணங்களில் போல் கிராமங்களில் இல்லை.
- அறிவு வளர்ச்சிக்கும், இன்ப நுகர்ச்சிக்கும் ஏற்ற வசதிகளும் சாதனங்களும் இருக்கின்றன.
- உழைப்புக்குத் தக்க கூலி கிடைக்கிறது.
- அறிவின் திறமைக்குத் தக்கபடி உயர்வடைய வசதிகள் அதிகம்.
- எக்காரியத்துக்கும் எவனும் போட்டி போடலாம்.
மேற்கூறியபடி, சில கஷ்டங்கள் இன்மையும், பல சௌகரியங்கள் உண்மையும், பட்டணவாசத்தை மேன்மையுள்ளதாகவும், யாவரும் விரும்பத் தக்கதாகவும் செய்கின்றன. வாழ்க்கையில் முன்னேற்ற மடைய விரும்பும் ஒவ்வொருவனும், பெரிய பட்டணங்களில் தங்கி வாழவே விரும்புகிறான். நூறு காந்திகள் கூடிப் பிரசாரம் செய்த போதிலும், இவ்வுலக சுக போகங்களை விரும்புகிறவனையும், இன்ப வாழ்க்கையின் ருசியறிந்தவனையும், அறிவை வளர்க்க விரும்புபவனையும், கிராமத்திற்குப் போகச் செய்ய முடியாது. “கிராமத்திற்குப் போ” என்று உபதேசம் செய்கிறவன் எவனும் தன்னைப் பொறுத்தமட்டில் கிராமத்திற்குப் போய், பட்டிக்காட்டானாக, மங்கி, மழுங்கிப் போகச் சம்மதிக்கிறதில்லை. பிறர்க்கு மட்டும் உபதேசம் செய்ய முன் வருகிறான். காரணம் சுயநலம், பயம். பட்டிக்காட்டான் பட்டணத்திற்கு வந்து நாகரிக வாழ்க்கையின் ருசியறிந்து விட்டால், பிறகு அவன் திரும்பவும் பட்டிக் காட்டிற்குப் போய் வாழ விரும்ப மாட்டான். நாட்டுப்புற வாசிகளை இது வரை ஏமாற்றி வாழ்ந்து வந்த படித்த பட்டண வாசிகளின் சுகஜீவன வாழ்க்கைக்கு ஆபத்து வந்து விடும். ஏமாற்றப்படக் கூடியவர்களின் எண்ணிக்கை குறைந்தால், ஏமாற்றுகிறவர் வருத்தப்படுவது இயற்கை. எல்லோரும் நாகரிக வாழ்க்கைக்குப் போட்டி போட்டால் அவசியமான உணவுப் பொருள்களையும், உடைத்தாதுப் பொருள்களையும் உற்பத்தி செய்ய ஆட்கள் இல்லாமற் போய்விடும் என்ற பயமும் சிலருக்கிருக்கலாம்.
ஆனால், இந்த பயம் ஆதாரமற்றது. உழவன் வயற்புறத்தில், சேற்றிலும், வதியிலும் வசிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நகரங்களிலிருந்து கொண்டு நாகரிக வாழ்க்கை நடத்திக்கொண்டு, இப்போது செய்வதை விடச் சிறப்பாக விவசாயம் செய்ய முடியும்.
~subhead
ருசியறியாப் பூனைகள்
~shend
பாலுக்குச்சர்க்கரை போத வில்லை யென்பவனுக்கும், கூழுக்கு உப்பில்லை என்பவனுக்கும் உள்ள துக்கம் ஒரே தன்மையானது என்று சில பெரியோர்கள் சொல்லலாம். ஆனால் நாம் ஒப்புக் கொள்வதில்லை. அகில மெல்லாம் பிடித்து ஆகாயத்தையும் ஆட்கொள்ள முயற்சிக்கும் மேற்கத்தியவர் வருத்தமும், மண்ணிற் புழுவாய்க்கிடந்து வயிற்றுக்குண வில்லை யென்று அழுகின்ற நம் நாட்டவர் துக்கமும் ஒரே தன்மையது என்று எப்படிச் சொல்ல முடியும்? குடிக்கத் தண்ணீர் இல்லாதவன், சேறும் குப்பையும் நிறைந்த அழுக்குக் குட்டையைக் கண்டு பேரானந்தம் அடையலாம். ஏழ்மையின் இன்றியமையாப் பல ஜோலிகளையும் விட்டு, ஒரு குடம் தண்ணீருக்காக ஊர்ப் பொதுக் கிணற்றருகில் காத்துக்கிடந்து உயர்ஜாதிக்காரி யொருத்தி மனமிளகி ஒரு குடம் ஊற்றியதற்காக வாயார வாழ்த்திச் செல்லும் ஆதிதிராவிட சகோதரியின் திருப்திக்கும், பசியின் கொடுமையால் வைக்கோலையும் விரும்பிப் புசிக்கும் குதிரையின் திருப்திக்கும் வித்தியாச மென்ன? வேண்டுமென்றே மனிதப் பிறவியின் உயர் இலட்சியங்களையும், உரிமைகளையும் பறிமுதல் செய்து, மனிதனை மிருகத்தினும் கீழாக்கி வைத்துக் கொண்டு, எளிய வாழ்க்கையில் அவன் திருப்தியடைகிறான் என்று சொல்வதும், எளிய வாழ்க்கையே அவனுக்குப் பொருத்தமானது என்று உபதேசிப்பதும் யோக்கியமும் நியாயமும் ஆகுமா? ருசி யறியாத பூனை உரி உரியாய்த் தாண்டாது. தென்னாலிராமன் பூனை பாலைக் கண்டால் பயந்து ஓட்டம் பிடித்தது வாஸ்தவம். அதனாலேயே, பூனைகளுக்கெல்லாம் பால் ஆகாதென்று தீர்மானிப்பது நியாயமாகுமா? பாலின் ருசியையறிந்த பூனை, உரியில் பால் இருப்பதைத் தெரிந்து, பாலைக்குடிக்க முயலும் போது நாம் அதைத் தடுப்பது, பாலைப் பூனை குடிக்கக் கூடாது, நமக்கு வேண்டும் என்ற சுயநலத்தாலல்லவா? பூனை பால் குடிக்க வேண்டுமென்று நாம் நினைத்தால், அதற்குச் சிறிது ருசி காட்ட வேண்டும். தென்னாலி ராமனைப் போல சூடு போடக் கூடாது. பாமரர் நாகரிக வாழ்க்கை நடத்த வேண்டுமாயின், நாகரிக வாழ்க்கையின் சுகத்தை அவர்கள் ருசியறிய வேண்டும்.
~subhead
மூடுமந்திர மகிமை
~shend
பிரஞ்சு தேசத்தில் புரட்சி ஏற்படுவதற்கு முன், புரட்சிக்காரர்கள் இரகசியமாகக் கூடித் தங்கள் காரியாதிகளை நடத்தி வந்தனர். ஒரு சமயம், நாட்டுப் புறத்தில் கல் உடைத்து வாழும் ஒரு பாமரனைப் பாரிஸ் நகரத்திற்குப் புரட்சிக்காரர் கூட்டத்திற்குக் கூட்டிக்கொண்டு வர நேர்ந்தது. குறிப்பிட்ட ஒரு சம்பவத்தைக் குறித்து அப்பாமரன் விசாரிக்கப்பட்ட பின் அவனைத் திரும்பவும் நாட்டுப்புறத்தில் உள்ள அவன் கிராமத்திற்கு இரகசியமாகவே அனுப்பிவிடத் தீர்மானித்தார்கள். அப்போது அப்பாமரன், புரட்சிக்காரர் களிடம், தான் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் பாரீஸில் தங்கி அதன் காட்சிகளைக் காண விரும்புவதாகவும், மூன்றா நாள் நடைபெறப் போகும் அரசன் நகரப் பிரவேசக் காட்சியைக் காண விரும்புவதாகவும் அவர்களிடம் தெரிவித்தான். புரட்சிக்காரரில் ஒருவர், அப்பேதைக் கூலியின் ஆசையைத் தீர்த்து வைப்பதாகவும், தானே அவனை அம்மூன்று நாட்களும் வைத்துப் போஷிப்பதாகவும் ஒப்புக்கொண்டார். அப்போது மற்ற புரட்சிக்காரர் ஆக்ஷேபித்தனர். “இவன் ஒரு பாமரன். அரசனைப்பார்க்க ஆசைப்படுகிறான். அரசனும், பிரபுக்களும், அழகிய பெண்களும் அலங்காரமாக ஊர்வலம் வருவதை இவன் கண்டால் மதி மயங்கி விடுவான். ஏதாவது உளறிக்கொட்டி நம்மைக் காட்டிக்கொடுத்தாலும் கொடுத்துவிடுவான். இவனை இங்கே வைத்திருப்பது ஆபத்தானது” என்று சிலர் சொன்னார்கள். ஆனால் முதலில் ஒப்புக்கொண்ட புரட்சிக்காரர் சொன்னார்.
“நாய் முயலைப் பிடிக்கவேண்டுமானால், முதலில் அதற்கு முயலைக்காட்டி, ரத்தச் சுவையும் ஊட்டி, பின் உசுப்படுத்தியும் விட வேண்டும். அப்புறம் அது, தானே சென்று நாம் காட்டிய பொருளை வீழ்த்தி நம் காலடியில் சேர்க்கும். இம்மனிதன் நீங்கள் நினைக்கிற படி அவ்வளவு முட்டாளும் அல்ல. நம்மைக்காட்டிக்கொடுத்து விடுவான் என்று நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. வாயைத்திறந்தால், நமக்கு முன் இவனும் தூக்கு மேடையேற வேண்டுமென்பதை இவன் அறியாதவனல்ல. ஆகையால் இவனைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். என் வசம் ஒப்புவித்து விடுங்கள்” என்று சமாதானஞ் சொல்லி அப்பாமரனை தன்னுடன் அழைத்துச் சென்று பாரிஸ் நகரின் அற்புத அலங்காரங்களையும், நாகரிக வாழ்க்கையின் போக போக்கியங்களையும் இரண்டு நாள் சுற்றிக் காண்பித்து, மூன்றாம் நாள் அரசனும் அரசியும் நகர்ப்பிரவேசம் செய்யும் காட்சியையும் காண்பிக்க வேண்டி, அவனைக் கூட்டிக் கொண்டு போய் ஊர்வலம் வரும் பாதையோரத்தில் மேடான இடத்தில் வேடிக்கை பார்க்கக் கூடியுள்ள ஜனங்களுடன் நிறுத்தி, அரசர் பவனி வருவதைப் பார்க்கச் செய்தார். மின்னுகின்ற அங்கி தரித்த ராணுவ வீரர்களும், குதிரை வீரர்களும் முறுக்கிய மீசைகளுடனும் உறுவிய கத்திகளுடனும் சென்றனர். கில்ட் பூசிய கோச் வண்டிகளில் அலங்கார உடை தரித்த அழகிகளும், பிரபுக்களும், கொஞ்சிக் கொஞ்சிப் பேசிச் சென்றனர். ஜனங்கள் தங்கள் கஷ்டங்களை யெல்லாம் மறந்து சந்தோஷ ஆரவாரஞ் செய்தனர். நமது கூலிக்காரக் கொத்தனும், கண் குளிரக் கண்டு களித்தான். திறந்த கோச் வண்டியில் அரசனும், அரசியும் தோன்றியவுடன் எல்லோரும் “கடவுள் அரசனைக் காக்க. அரசி நீடூழி வாழ்க” என்று பெருத்த ஆரவாரஞ் செய்தனர். இந்த ஆரவாரத்தில் மெய் மறந்து சந்தோஷங்கொண்ட நாட்டுப் புறத்தான், கூடச் சேர்ந்து, “அரசன் வாழ்க, அரசி வாழ்க, அரசனும் அரசியும் என்றென்றும் வாழ்க. பிரபுக்கள் வாழ்க, சேனா வீரர்கள் வாழ்க, எல்லோரும் வாழ்க” என்று உறக்கக் கூவிக் கொண்டு கூத்தாடினான். அப்போது அவன் பக்கத்திலிருந்த புரட்சிக்கார நண்பர், புன்னகை செய்து, மெதுவாய் அவன் தோளைப் பற்றி அசைத்து “தம்பி அரசன் போய் விட்டான் நாம் வீட்டுக்குப் போகலாம் வா” என்று சாந்தமாகச் சொன்னார். கொத்தன் தன்னுடைய மித மிஞ்சிய உற்சாகத்தில் தன் நிலைமையை மறந்து கூத்தாடியதற்காகப் பெரிதும் வெட்கமடைந்தவனாய் “ஐயா மன்னிக்க வேண்டும். நான் மதி மயங்கிப் போனேன். இனி மேல் ஜாக்கிரதையாக நடந்து கொள்வேன்” என்று பணிவுடன் சொன்னான். அதற்கு அப்புரட்சிக்காரர் “நண்பா, நீ வெட்கப்பட வேண்டியதில்லை. உன்னிலும் மேலான அறிவாளிகள் பலர் இம்மாதிரி ஆடம்பரங்களில் மயங்கிவிடுகிறார்கள். நீ மயங்கியதில் ஆச்சரியமில்லை. அரசனையும் பிரபுக்களையும் வாழ்த்துவதற்கு உன்னைப் போன்ற ஆவேசங் கொண்ட பாமரர் கூட்டம் இருப்பது, எங்களுக்கும் அனுகூலமே.”
கொத்தன்: “என்னைப் போன்றவர் இருப்பது உங்களுக் கெப்படி அனுகூலம்?”
புரட்சிக்காரர்: “உங்கள் கூப்பாட்டைக் கண்டு, இது என்றென்றைக்கும் சாஸ்வத மென்றும், உண்மையிலேயே ஜனங்கள் கஷ்டமின்றிச் சந்தோஷப் படுகிறார்களென்றும், இவர்கள் நினைத்துக் கொள்ளுகிறார்கள். தங்களுடைய அக்கிரம வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துவதற்கு உங்கள் கூச்சல் இவர் களைத் தூண்டுகிறது. இப்பேதைகள் தங்கள் அந்திய காலம் சமீபத்தில் இருக்கிறதென்பதை உணர்ந்து கொள்ளாமற் போவதற்கும் உங்கள் ஆரவாரம் துணை செய்கிறது. ஆகையால் நீ வருத்தப்பட வேண்டியதில்லை. இப்போது நான் கேட்பதற்குப் பதில் சொல்.
அழகாகச் சிங்காரிக்கப்பட்ட பல பொம்மைகளை உன் முன்னால் வைத்து அவற்றில் உனக்கிஷ்டமானதை எடுத்துக் கொள்ளும்படி சொன்னால், நீ எதை எடுப்பாய்? எல்லாவற்றிலும் அதிக அழகுள்ளதும், அதிக அலங்காரம் செய்யப்பட்டிருப்பதையும் அல்லவா?
கொத்தன்: ஆம் அதிக அழகும் அலங்காரமும் உள்ளதைத்தான் எடுப்பேன்.
புரட்சிக்காரர்: பல வர்ணங்கள் கொண்ட தோகைகளையுடைய பறவைகள் சிலவற்றை அவற்றின் கால்களைப் பிணைத்து, உன் முன் வைத்து உனக்கிஷ்டமான இறகுகளைப் பிடுங்கிக் கொள்ளும் படி சொன்னால், எந்தப்பட்சியின் இறகுகளை விரும்புவாய்? காக்கையின் இறகையா, கொக்கின் இறகையா, மயிலின் தோகையையா?
கொத்தன்: மயிலின் தோகையைத்தான்.
புரட்சிக்காரர்: சரி. இன்று, அலங்கரிக்கப்பட்ட பல பொம்மைகளையும், கண்ணைக் கவரும் தோகைகளையுடைய மயில்களையும் நீ பார்த்தாய். காலம் வரும் போது இன்று நீ கண்ட காட்சி பயன்படும். மனதைக் கவரும் எதிலும் ஊக்கத்துடன் கலந்து கொள்ளும் மனப்பான்மை உனக்கிருப்பதை நான் கண்டு கொண்டேன். இன்று அரசனை வாழ்த்திய நீ நாளை அரசனை வெறுத்து ஒழிக்கும் கூட்டத்திலும் இதே ஆர்வத்துடன் கலந்து கொள்வாய் என்று எனக்குத் தெரியும்?” என்று சொல்லிக்கொண்டே அப் பட்டிக்காட்டுக் கொத்தனை அழைத்துச் சென்றார்.
பட்டிக்காட்டுப் பாமரரைப் பட்டணவாசம் செய்யும் பணக்காரர் மீதும், உயர் ஜாதிக்காரர் மீதும் உசுப்படுத்திவிடும் புரட்சிக்காரர் இன்று தமிழ்நாட்டில் இல்லை. ஆனால் பணக்காரருக்கும் உயர் ஜாதிக்காரருக்கும் காவலாளியாக விளங்கும் காந்தியாரின் காங்கிரஸும், தீண்டாமை விலக்குக் கமிட்டியும், இவ்வேலையைத் தாங்கள் அறியாமலே செய்து வருவது ஆச்சரியமல்லவா? மேடைகளில் சமத்துவ கீதங்கள் பாடி, சமத்துவம் பேசி, வாய்ச்சேவை செய்து வந்ததன் பலனாகக் காங்கிரஸ் கும்பலில் உள்ள பாமரர் மனத்தில் புதுப்புது உணர்ச்சிகள் எதிர்பாராவண்ணம் முளைத்து வேரூன்றிவிட்டன. காங்கிரஸ் மயில்களையும், அன்னங்களையும் மேடைக் கூட்டங்களில் கண்ட பாமரன் அவற்றின் தோகைமேல் மோகங்கொண்டு விட்டான். “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீணில் உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்வோம்” என்று தினமும் கொட்டை கொட்டையாய் மேல் வரிச்சட்டம் போட்டுக்கொண்டு வெளிவரும் தேசீயப்பத்திரிக்கைகளைப் படிக்கும் பாமரன் யோசிக்க ஆரம்பித்து விட்டான். ஆதிதிராவிட சந்நியாசிகள் இழிவுக்குத் தலைகுனிய மாட்டேன் என்கின்றனர். பூனை பாலின் ருசியறிந்து கொண்டது, நாய் ரத்தச்சுவை கொண்டு விட்டது. இனிமேல் பூனையைப் பாலிலிருந்தும் நாயை முயலிலிருந்தும் பிரித்து வைப்பது முடிகிற காரியமல்ல. வெள்ளாளன், பாலைக்குடித்து ருசியறிந்து விட்டால், பாலைக் கொடுக்க ஒப்ப மாட்டான் என்று தனக்குத் தேவை யில்லாத காலத்திற் கூட “வெள்ளாளன் பாலைப்பிடுங்கி வேலியில் ஊற்று” என்ற சாணக்கிய தர்மம் இனி நடக்காது. ஆனைமலை நீலகிரிக்கோ, கண்டி கொளும்புக்கோ, பினாங்கு சிங்கப்பூருக்கோ போய்ச் சிறிது பொருள் சேர்த்துக்கொண்டு வந்து, நாகரிக வாழ்க்கையின் ருசியையும் அறிந்துள்ள பறையன் தன் ஊருக்குத் திரும்பி வந்தவுடன், அவனைப் பழையபடி, பழைய சோற்றுத் தண்ணீர்க்கும், பாளைக்கம்புக்கும் நாள் முழுதும் பாடுபடும்படி செய்ய எந்தக் கவுண்டனாலும் இக்காலத்தில் முடியாது. நாகரிக வாழ்க்கையின் ருசியறிந்தவன், அநாகரிக வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டான். இவனைப் பார்த்து இவன் சுற்றமும் சமூகமும் முன்னேற முயல்கிறது. காலச் சக்கரத்தின் வேகத்தால் நாகரிக வாழ்க்கை இவ்விதம் நாட்டுப் புறங்களிலெல்லாம் பரவும் போது, கிராமப்புனருத்தாரணம் கிராம நிர்மாணம் செய்வது என்று சொல்லிக்கொண்டு, அநாகரிக வாழ்க்கைக்கு மக்களைத் தூண்டி எளிய வாழ்க்கையை ஏற்கும் படி பிரசாரம் செய்வது நலம் தரும் காரியமாகுமா?
~subhead
வருங்காலம்
~shend
வருங்கால வாழ்வில், கிராமங்களுக்கு இடமே இல்லை. பெரியவர்கள் சம்பாதித்த தென்று, ஓட்டைக் குச்சுகளைக் காப்பாற்றுவது பேதமை. பழைய மண் சுவரின் மேல் மச்சுக் கட்டுவதும் முடியாத காரியம். பழைய குச்சுகளைத் தரைமட்டமாக்கி விட்டுப் புதிய மாளிகைகளுக்கு அஸ்திவாரம் போடவேண்டும். யார் என்ன முயற்சி எடுத்துக்கொண்ட போதிலும், கிராமங்கள் வெகு சீக்கிரத்தில் நசித்து ஒழிந்து போவது நிச்சயம். பெரிய நகரங்கள் தான் எங்கும் பெருகும்.
~subhead
ருஷியாவைப் பார்
~shend
புரட்சிக்குப் பின் ருஷியாவில் ஏற்பட்ட மகத்தான மாறுதல்களில் மிக முக்கியமானது, பட்டிக்காட்டு வாழ்க்கையை ஒழித்து நாடெங்கும் நகர வாழ்க்கையை ஏற்படுத்தியதாகும். இலட்சம் இரண்டு லட்சம் ஜனங்கள் வசிக்கக் கூடிய பெரிய பட்டணங்களை நாட்டின் பலபாகங்களில் நிர்மாணித்து, அவ்வப் பிரதேசத்தின் வசதிகளுக்கேற்ற இயந்திர சாலை களையும் ஏற்படுத்தி, சுற்றுப் பக்கத்தில் குக்கிராமத்தில் வசித்து வந்த மக்களை யெல்லாம் நகரங்களில் குடியேற்றி, இயந்திர சாதனங்களைக் கொண்டு தொழில் செய்யவும், நாகரிக வாழ்வின் நன்மைகளைப் பெறவும் செய்திருக் கின்றனர். இதன் பலனாக 100க்குப் பத்து பேர் கூட படிக்காதிருந்த நாட்டில் 10 வருஷங்களில் 100க்கு 99 பெயர் படித்தவர்களாகவும், அதற்கேற்ப வாழ்க்கை நிலைமை எல்லாத் துறைகளிலும் உயரவும் முடிந்தது கூட்டுப் பண்ணைகளில், இயந்திரக் கருவிகளைக் கொண்டு விவசாயம் செய்யப் படுவதன் மூலம் முன் இருந்ததை விடப் பத்து மடங்கு அதிகமான உணவுப் பொருள்களும், மற்ற பொருள்களும் விளைவிக்கப் பட்டு மக்களுக்குப் பஞ்சம், பசி யின்னதென்பது மறந்து போய்விட்டது. இயந்திர வாகனங்கள் ஏராளமாக இருப்பதால், 10, 15 மைல்களுக்கப்பால் உள்ள பண்ணைகளுக்குச் சிறிதும் கஷ்டமில்லாமற் போய் வேலை செய்து விட்டு மாலையில் நகரங் களுக்குத் திரும்பி வந்து நாகரிக வாழ்க்கையின் சகல சௌகரியங்களையும் அனுபவிக்கின்றனர். உழவன் மண்ணைக் கவ்விக் கொண்டு காத்துக்கிடக்கும் அநாகரிக நிலை மாறி விட்டது.
~subhead
இயந்திர சகாப்தம்
~shend
விஞ்ஞானத்தின் வெற்றிக் கொடியை ஏந்திச் செல்லும் இயந்திர யுகத்தின் சக்தியை எதிர்க்க யாரால் முடியும்? மனித சமூகத்திற்கு விஞ்ஞானம் அளித்துள்ள நன்மைகள் அளவிறந்தன. இயந்திரங்களால் மனிதன் அடையும் சௌகரியங்கள் எண்ணிறந்தன. சுருங்கச் சொல்லின், முன் யுகங்களில் அரசன் முதலான ஒரு சிலர் அனுபவித்து வந்த சுகங்களை இன்று பாமரர் பலரும் எளிதில் அனுபவிக்க முடிகிறது. ஆனால் விஞ்ஞான வளர்ச்சி சிறந்தோங்கும் மேற்கு நாடுகளில் இப்போது வேலையில்லாத் திண்டாட்டம் பொருளாதார நெருக்கடி முதலிய கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன வென்றும், இயந்திரப் பெருக்கத்தினால் க்ஷேமம் இல்லை என்றும் சிலர் சொல்லக்கூடும். இவர்கள் மேற்கு நாடுகள் தற்போது அனுபவிப்பதாகச் சொல்லப்படும் கஷ்டங்களின் தன்மையையும் அதன் மூலகாரணத்தையும் சரியாக அறிந்து கொள்ள வில்லை என்று தான் நாம் சொல்லுவோம். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் உள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டம் நம் நாட்டிற் போல் வயிற்றுக் கில்லாத பட்டினிக் கஷ்டமல்ல. கூழுக்கு உப்பு இல்லை என்ற துக்கமல்ல. பாலுக்குச் சர்க்கரை போதவில்லை! என்ற கஷ்டந்தான். அதுவும் சிலருக்குத்தான் ஏற்பட்டிருக்கிறது. அங்கே ஏற்பட்டுள்ள இந்தச் சிறு கஷ்டமும், அந்நாட்டில் பழைய காலத்திலிருந்து வரும் சில பொருளாதாரக் கொள்கைகளினால் ஏற்பட்டனவே யன்றி வேறு காரணங்களினாலன்று. இயந்திர காலத்திற்குத் தக்கபடி இங்கிலாந்திலும், அமெரிக்கா முதலிய தனி உடமை நாடுகளிலும், அந்நாடுகளின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளில் போதுமான அளவு மாறுதல்கள் செய்து கொள்ளாததனாலேயே, மேற்கூறிய கஷ்டங்கள் இருக்கின்றன. இயந்திர காலத்திற்கேற்ற வகையில், சமூக, பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துக் கொண்டிருக்கும் ருஷியாவில் இவ்விதத் துன்பங்கள் தோன்றவில்லை. விஞ்ஞான வளர்ச்சியினாலும் இயந்திரப் பெருக்கத்தாலும் அந்நாட்டில் இன்பமேயன்றித் துன்பமில்லை. ஆகையால் ஆராய்ந்தறியாமலும், நாடுகளின் வேறுபட்ட நிலைமைகளை ஒப்பிட்டுப் பாராமலும், இயந்திரங் களையும், விஞ்ஞானத்தையும் குறை கூறுவது புத்திசாலித்தனமாகாது.
செல்வநிலை யென்பது, வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் நேரமும் குறைந்து ஓய்வுக்கும் கலைப்பயிற்சிக்கும், இன்ப நுகர்ச்சிக்கும் வசதியும் நேரமும் மிகுந்துள்ள நிலைமையாகும். நாள் முழுதும் வேலை செய்ய வேண்டிய நிலை அடிமை நிலை. ஏழ்மை நிலை. அநாகரீக நிலை. குறிப்பிட்ட சிறிது நேரம் மட்டும் உழைத்து அதன் பயனாகத் தனக்கு வேண்டிய அனைத்தையும் அடையும் நிலைமை, நாகரிக நிலை எஜமான் நிலை. விஞ்ஞானமும், இயந்திரமும், மனிதனை இவ்வுலகின் எஜமானனாக்கு கின்றன. ஆகையால் பழமையான நம் நாட்டில் விஞ்ஞானம் வளரவும் இயந்திரங்கள் பெருகவும் முயற்சிப்பது அறிவுடமையாகும்.
பட்டிக்காட்டு முட்டாளும், நாட்டுப் புறத்துக் காட்டுமிராண்டியும் முன்னேற்றமடைய ஒரே மார்க்கந்தான் உண்டு. இவர்கள் எல்லோரும் பட்டண வாசம் செய்ய வேண்டும். கிராம வாழ்க்கையை விட்டு நாகரிக நகர வாழ்க்கை நடத்த வேண்டும்.
இன்று கிராமவாசிகளுக்கு வேண்டிய தென்ன? இவர்களிடை எவ்வித பிரசாரம் தேவை? என்று பார்ப்போமானால், இந்நாட்டு மக்களிடை தொன்று தொட்டிருந்து வரும் “நற்குணங்கள்” எனப்படும் அடிமைக் குணங்களும், பழக்க வழக்கங்கள் எனப்படும் பைத்தியக்காரத் தன்மைகளும் ஒழிய வேண்டும். மேல் நாட்டவர்களிடம் இருக்கும் “துர்க்குணங்கள்” எனப்படும் சுதந்தர புத்தியும், உலோகாயத குணங்களும் ஏற்பட வேண்டும். வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம் என்று இவ்வுலக வாழ்வை இழிவு செய்யும் ஞானம் கூடாது. உள்ளது போதும் என்று எளிதில் வரும் திருப்தியும், தம்மின் மெலியாரைப் பார்த்து, தங்கள் செல்வம் எவ்வளவோ பெரிது என்று எண்ணியடையும் மகிழ்ச்சியும், முயற்சியைக் கொல்லும் கொடிய நற்குணங்களாதலால் கைவிடப் பட வேண்டும். மூட நம்பிக்கையால் ஏற்படும் பக்தியும், பக்திப் பெருக்கால் வரும் பயமும் மக்களை விட்டு ஓட்டப்பட வேண்டும். தன் சொந்த உரிமைகளைப் போற்றாத ஆண்மையற்ற சாந்தம் கூடாது. நம்முடைய கிராம ஜனங்களுக்குத் தங்கள் எளிய வாழ்க்கையில் அதிருப்தி வேண்டும். தங்களுடைய வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள ஆசை வேண்டும். தங்கள் முன்னேற்றத்துக்குள்ள தடைகளை உடைத்தெறிய தைரியம் வேண்டும். தாங்கள் யார்க்கும் தாழ்ந்தவர் அல்ல என்னும் தன்மதிப்புணர்ச்சி வேண்டும். இவ்வாறு தைரியமாகப் பிரசாரம் செய்யும் கிராம சேவகர்களே இப்போது தேவை. யானை பிடிக்க எண்ணி வேட்டைக்குப் போனவன் யானையே கொண்டு வருவான். குருவி வேட்டைக்குப் போனவன் வெறும் கையாகவும் வருவான். ரொம்ப அதிர்ஷ்ட மிருந்தாற்கூடக் குருவிக்கு மேல் ஒன்றும் கொண்டு வரமாட்டான்.
பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை மே 1936