“இரணியன் அல்லது இணையற்ற வீரன்”
இன்று நாடகம் நடத்திய தோழர் அர்ஜுனன் வெகுவீரமுடன் நடந்து கொண்டதைக் காண எனக்கும் இரணியனாக வேஷம் போடலாமா என்ற ஆசை என்னை அறியாமல் ஏற்படுகிறது. ஆனால் தாடி இருக்கிறதே என்று யோசனையைக் கைவிட்டேன். நாடகங்கள் எல்லாம் குறைந்தது 2மணி நேரத்தில் முடிவு பெறவேண்டும். மத்தியில் பாட்டுக்களைக் கொண்டு வந்து நுழைப்பதால் கதையின் ஸ்வாரஸ்யம் குறைந்துபோகிறது; உணர்ச்சி மத்தியில் தடைப்படுகிறது. நாடகங்களில் இரண்டுவிதமுண்டு. ஒன்று பாட்டாக நடத்திக் காண்பிப்பது; மற்றொன்று வசன ரூபமாய் நடத்திக் காண்பிப்பது. வசன ரூபமாய் காண்பிப்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். பல உபந்யாசங்கள் செய்வதைவிட இத்தகைய நாடகம் ஒன்று நடத்தினாலும் மக்களுக்கு உணர்ச்சியையும், வீரத்தையும் மனமாற்றத்தையும் ஏற்படுத்தி ஓர் கவர்ச்சியை உண்டாக்குகிறது. நம் எதிரில் நடந்த மாதிரிதான் ஆதியில் இரணிய நாடகம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை பார்ப்பனர்கள் தமக்குச் சாதகமாக திருத்தி உபயோகப் படுத்திக்கொண்டார்கள். பழைய நாடகங்களை நாம் சீர்திருத்திப் புதிய முறையில் நடத்திக் காண்பிக்க வேண்டும். நாடகங்களில் பல சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். இந்த பழைய நாடகங்கள் மக்களை மூடர்களாயும், அர்த்தமற்ற கொள்கையுடை யவர்களாயும் செய்து இருக்கின்றன. நாடகத்தின் மூலம் அறிவு வளர இடமிருக்கிறது. நல்லதங்காள் கதை உலகம் அறிந்தது. நல்லதங்காள் மிகவும் கற்புடையவள் என்று கூறப்படுகிறது. வாழைப்பட்டையை விறகாய் வைத்து எரித்ததாகவும், மணலை அரிசியாகச் சமைத்ததாகவும், உயரத்தில் இருந்த மாங்கனியை கைக்கு கீழே தருவித்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அவ்வளவு பதிவிரதைத் தன்மை வாய்ந்த ஒருவர் வாழ்ந்த நாட்டிலே 12 வருடகாலம் தொடர்ச்சியாய் மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்பட்டதென்றால் அவருடைய பதிவிரதத் தன்மை எவ்வளவு ஒழுக்கத்தில் இருந்து இருக்க வேண்டும் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். (கூட்டத்தில் ஒரே சிரிப்பு; ஆரவாரம்) அதே போன்று குசேலர் சரித்திரம் பிரமாதமாய் நடத்திக் காண்பிக்கப்படுகிறது. பார்ப்பனர்கள் தாங்கள் பிச்சை ஏற்பதற்குச் சாதகமாய் அதை தெய்வீக கதையாய் சிருஷ்டித்துவிட்டு பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்துங்கூட அவன் தரித்திரனாய் இருந்தான் என்றால், பகுத்தறிவு உள்ளவன் எவனாவது நம்பமுடியுமா? வருடத்திற்கு ஒரு குழந்தை பெற்றால்கூட முதல் குழந்தைக்கு 27 வருடமாகிறது. 20 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 67 இருக்கலாம். (கூட்டத்தில் ஒருவர் ஒரு முறைக்கு 4 குழந்தை பெற்று இருக்கலாம்) அப்படி இருந்தாலும் வயது வந்த பிள்ளைகள் கூலி ஜீவனம் செய்தாவது மேற்படி குடும்பத்தை ரக்ஷித்து இருக்காதா? இதை எல்லாம் யோசித்துப் பார்த்தால் ஏதாவது பொருள் இருக்கிறதா? இப்படியாக ஒவ்வொரு கதையும் பாமர மக்களின் அறிவை மழுங்கச் செய்வதாய் இருக்கின்றது.
ஆகையால், நாடகங்களை புதிய முறையிலே திருத்தி மக்களுக்குப் பயன்படும்படி செய்ய நாடகாசிரியர்கள் முன்வரவேண்டும். வெறும் சங்கீதமும், பாட்டும் வேண்டியதில்லை. கருத்து இருந்தால் போதும். இந்த நாடகம் சென்னையில் இரண்டுமுறை காண்பிக்கப்பட்டது. இந்த மாகாணத்தில் இதுவே மூன்றாம் முறை. இனி இம்மாதிரி நாடகங்களை நாடெங்கும் நடத்தினால் மக்கள் உணர்ச்சி பெற்று மூட நம்பிக்கைகளையும், அர்த்தமற்ற கொள்கைகளையும் உடைத்தெரிவார்கள். தோழர் அர்ஜுனன் தலைமையில் நடந்த இந்த நாடகத்தை நான் பாராட்டுகிறேன்.
குறிப்பு: வாணியம்பாடியை அடுத்த அம்பலூரில் 04.07.1936 இரவு பாரதி சபையாரால் நடத்தப்பெற்ற “இரணியன் அல்லது இணையற்ற வீரன்” நாடகத்துக்கு தலைமையேற்று ஆற்றிய உரை.
குடி அரசு சொற்பொழிவு 19.07.1936