டாக்டர் சுப்பராயனும் C.R. ஆச்சாரியாரும்
சென்னை காங்கிரஸ் கட்டிடத்தில் ஜஸ்டிஸ் கட்சியை வரப்போகிற தேர்தலில் முறி அடிப்பதற்கு தீவிரப் பிரசாரம் செய்யவேண்டும் என்று யோசனை செய்து காங்கிரஸ்காரர்கள் 11736ந் தேதி தோழர் சத்தியமூர்த்தி தலைமையில் ஒரு கூட்டம் கூட்டினார்கள். அதற்கு முக்கிய பேச்சாளராக டாக்டர் சுப்பராயன் அவர்களும் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் பேசி இருக்கிறார்கள்.
தோழர்கள் சுப்பராயனும் ஆச்சாரியாரும் பிரிந்து பிரிந்து ஒன்றுகூடி இருப்பது இது ஒரு பத்தாவது தடவை ஆக இருக்கலாம். இருவரும் தலைக்கு ஒரு லட்சியத்தை பிடிவாதமாகக் கொண்டவர்கள். அந்த லட்சியங்கள் தான் அடிக்கடி அவர்களை பிரிக்கவும் கூட்டவும் செய்து வருகிறது.
அதென்ன வென்றால் தோழர் சுப்பராயனின் லட்சியமெல்லாம் எப்படியாவது மந்திரி பதவி பெறவேண்டும் என்பதேயாகும். தோழர் ஆச்சாரியார் லட்சியமோ எப்படியாவது பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்பதேயாகும்.
ஆகவே அரசியல் என்பது யோக்கியமற்றதும் நாணயமற்றதுமாகும் என மேல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறியதை மெய்ப்பிக்க இவ்விரு தோழர்களின் சேர்க்கையும் பிரிகையும் அவர்களது அரசியல் வாழ்க்கைகளுமே போதுமான ருஜுவாகும்.
தோழர் சுப்பராயன் அவர்கள் அரசியல் வாழ்க்கை ஆரம்பிக்கும்போது தோழர் ராஜகோபாலாச்சாரியரால் அக்ஷராப்பியாசம் செய்யப்பட்டவர். பிறகு ஜஸ்டிஸ் கட்சிக்கு பதவி கிடைக்கக்கூடும் என்று தெரிந்ததும் அதில் தாவி சட்டசபை புகுந்து ஜஸ்டிஸ் மந்திரிக்கு காரியதரிசியாய் இருந்தவர். பிறகு ஜஸ்டிஸ் கட்சி தோற்றுப் போகலாம் என்றும் வெற்றி பெற்றாலும் தனக்கு பெரும் பதவி கிடைக்காதென்றும் தோன்றிய உடன் அதிலிருந்து வெளிவந்து காங்கிரசை ஆதரித்தவர்.
1926ல் ஜஸ்டிஸ் கட்சிக்கு மந்திரி பதவி ஏற்க போதிய பலமில்லாதபோதும் காங்கிரசில் மந்திரி பதவி ஏற்க தங்களுக்குள் கட்டுப்பாடில்லாமல் கலகம் விளைந்தபோதும் காங்கிரசின் தயவால் தோழர்கள் சி. விஜயராகவாச்சாரியார், சி. ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்களால் மந்திரி ஆக்கப்பட்ட மூவரில் முதல்வராய் இருந்து கொண்டவர். பிறகு அந்த மந்திரி ஸ்தானங்களுக்கு பலம் குறைந்து சர்க்காரால் தாங்கள் வெளியாக்கப்படக் கூடும் என்று தெரிந்த உடன் சர்க்காருக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் நல்ல பிள்ளையாய் நடந்துகொள்ளுகிறேன் என்று உறுதி கொடுத்து காங்கிரசை வைது கொண்டும் சர்க்காரை ஆதரித்துக் கொண்டும் ஜஸ்டிஸ் கட்சிக்கு தாசராகவும் இருந்து முதல் மந்திரி பதவியை கடைசிவரை அனுபவித்து வந்தவர். இச்சமயத்தில் அவரால் பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு ஏற்பட்ட நன்மைகளை நாம் மறக்கவில்லை. அதற்கு ஆக அவருக்கு நாம் எப்போதும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். அக்காலத்தில் பார்ப்பனர்களின் எதிர்ப்பும் தொல்லையும் அவருக்கு அதிகமாய் இருந்தது என்றாலும் துணிந்து அநேக நன்மையான காரியங்களைச் செய்திருக்கிறார். ஆனால் அவை அவ்வளவும் கொள்கைக்கு ஆகச் செய்ததாக இல்லாமல் கூலிக்கு ஆகச் செய்ததாகவே பின்னால் காட்டிக் கொண்டதானது மிகவும் வருந்தத்தக்க காரியமாகும். அதன் பயனாகவே அடுத்த தேர்தலில் பலவித கஷ்டம் ஏற்பட்டு மந்திரி பதவி கிடைப்பதற்கில்லாமல் போனவுடன் மறுபடியும் பார்ப்பனர்கள் தயவைப் பெற அன்று முதல் இன்றுவரை பாடுபட்டு பழயபடி மறுபடியும் தோழர் ஆச்சாரியாரின் ஜோதியில் கலந்து கொண்டார். அதனால் முன்பு தான் ஜஸ்டிஸ் கட்சியின் தாசராய் இருக்கும்போது என்ன என்ன செய்தாரோ என்ன என்ன பேசினாரோ அதற்கு விரோதமாய் இப்போது பேச முன் வந்துவிட்டார்.
ஆச்சாரியார் தனக்கு ஆழம் பார்த்து சொல்வதற்கு தோழர் சுப்பராயனை பயன்படுத்திக் கொள்ளத்தக்க நிலைமைக்கு சுப்பராயன் அவர்கள் துணிந்து இறங்கிவிட்டார்.
ஆச்சாரியாரும் தோழர் சுப்பராயனை முன்னோடும் பிள்ளையாக ஏற்றுக்கொண்டுவிட்டார். இந்த நிலையில் இருவரும் ஒன்றுகூடி காங்கிரஸ் கூட்டத்தில் பேசி இருப்பது மிகவும் பரிகாசமான காரியமாகும்.
தோழர் சுப்பராயன் பேசியிருப்பது என்னவென்றால் “ஜஸ்டிஸ் கட்சி வகுப்பு உணர்ச்சி முறையில் வேலை செய்யும் அமைப்பை மாற்றிக் கொண்டது என்றாலும் வகுப்பு முறையிலிலேயே தான் வேலை செய்து வருகிறது. ஜனநாயக வளர்ச்சியை உத்தேசித்து வகுப்பு உணர்ச்சிகளை விட்டுவிட வேண்டும்”
“காங்கிரஸ் தேசத்துக்கு சேவை செய்திருக்கிறது என்றாலும் காங்கிரஸ் ஸ்தாபனங்களிலும் வகுப்பு உணர்ச்சி ஆரம்பித்திருக்கிறது. சுயேச்சைக்கு ஆக 20 வருஷ காலமாகப் போராடி வந்திருக்கும் காங்கிரஸ்காரர்கள் இந்த வகுப்புப் புண் பரவவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்” என்று பேசியிருக்கிறார். மற்றும்,
“தேசத்திற்கு தியாகம் செய்தவர் வரப்போகும் தேர்தலில் சலுகை பெறவேண்டியது நியாயமே. ஆனபோதிலும் காங்கிரசில் சேரவிரும்பும் தேசீயவாதிகளையும் காங்கிரஸ் வரவேற்குமென்று நம்புகிறேன். அவர்களுக்கும் தேச சேவை செய்ய சமயம் அளிக்க வேண்டும்”.
“மந்திரி பதவி ஏற்பதே நலம். மந்திரி பதவி ஏற்றாலொழிய நிர்மாணத் திட்டத்தை நடத்தி வைக்க முடியாது. புதிய சட்டசபையில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றிபெறும். உத்தியோகமேற்காவிட்டால் நம் கட்சியில் இருந்து சிலர் மாறிவிடுவார்கள். அதிகாரத்துக்கு வரும் கட்சி இவர்களில் சிலரை இழுத்துக்கொண்டு பலந்தேடிக்கொள்ளுவார்கள். ஆகவே காங்கிரஸ் மந்திரி பதவி ஏற்கவேண்டியது அவசியம்” என்று பேசியிருக்கிறார்.
அவருக்குப் பின் பேசிய தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் தனது பேச்சின் ஆரம்பத்தில் தோழர் சுப்பராயனை தட்டிக் கொடுக்கிறார். ஆனாலும் அவரை தேசபக்தர் என்று சொல்ல ஆச்சாரியாருக்கு நாவெழ வில்லை. இதுவிஷயத்தில் ஜாக்கிரதையாகவே பேசி தட்டிக்கொடுத்திருக் கிறார். அதாவது,
“சுப்பராயன் இப்போதுதான் முதல் தடவையாக அசல் காங்கிரஸ் மேடையில் பேசுகிறார். அவர் காங்கிரஸ் அபிமானியாகவும் காங்கிரஸ் மெம்பராகவும் இருந்திருந்தாலும் இப்போதுதான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்கிறார்”.
“அவர் தன்னைப்பற்றிப் பேசியதாக சிலருக்கு தோன்றி இருக்கலாம். (அதாவது தனக்கு ஒரு மந்திரி வேலை கொடுக்கவேண்டும் என்று பர்) ஆனாலும் அதையும் உறுதியாகவும் நியாயமாகவும் பேசி இருக்கிறார். ஆகவே இனி அவர் உறுதியான காங்கிரஸ்காரரென்று சொல்லலாம். மந்திரி பதவிக்கு ஆக சுப்பராயன் காங்கிரசில் சேர்ந்ததாக நினைக்காதீர்கள்.”
“ஜஸ்டிஸ், காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளேதான் இருக்க வேண்டும். மூன்றாவது கட்சி வேண்டியதில்லை. மூன்றாவது கட்சித் தலைவர் தோழர் எஸ். முத்தையா முதலியார் தேசபக்தரேயாவார். அவர் ஆரம்பித்த மூன்றாவது கட்சிக்கு பதவி ஏற்க சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை. இது எப்படியாவது ஒரு கட்சியுடன் கலந்துதான் தீரும்” என்று சொல்வதன் மூலம் தோழர் முத்தையா முதலியாரையும் காங்கிரசுக்கு கூப்பிடுகிறார்.
மேலும் பேசும்போது:
“ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்து ஆகவேண்டும். அக்கட்சி மீது கோபமுள்ளவர்கள் எல்லோரும் காங்கிரசில் சேருங்கள். காங்கிரசில் வகுப்புவாதம் நுழையக் கூடாதுதான். ஆனபோதிலும் காங்கிரசு கங்கா நதி போன்றதாகையால் எவ்வளவு வகுப்புவாதம் வந்தாலும் அதை சரிப்படுத்தி விடும் வகுப்புவாதம் இந்தியா எங்கும் இருக்கிறது. காங்கிரஸ் மந்திரி பதவி ஏற்றாலும் சில வாரங்களுக்குமேல் நீடிக்காது” என்று பேசி இருக்கிறார்.
ஆகவே இவர்கள் இருவரும் மற்றும் பலரும் பேசியிருப்பவைகளில் முக்கியமாய் காணப்படுவதெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியை எப்படியாவது ஒழிக்க வேண்டும், அதற்கு ஆக யாரை வேண்டுமானாலும் எப்படிப்பட்ட வகுப்பு வாதியையும் காங்கிரசில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதும், காரணம் என்ன வென்றால் ஜஸ்டிஸ் கட்சிக்கு வகுப்புவாதக் கட்சி என்பதும், அது அனுபவிக்கும் மந்திரி பதவிகளை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்பதுமல்லாமல் வேறொன்றும் காணப்படவில்லை.
ஆச்சாரியார் “வகுப்பு வாதம் இந்தியா முழுவதிலும் தான் இருக்கிறது” என்று ஒப்புக்கொள்ளுகிறார். டாக்டர் சுப்பராயன் அவர்களும் மற்றும் இரண்டொருவரும் வகுப்புவாதம் காங்கிரசிலுமிருக்கிறது என்று பச்சையாகச் சொல்லிவிட்டார்கள். தோழர் ஆச்சாரியாரோ காங்கிரசிலிருக்கும் வகுப்பு வாதம் ஒன்றும் கெடுதி செய்யாது என்கிறாரே ஒழிய வகுப்புவாதம் காங்கிரசில் இல்லையென்று சொல்ல அவருக்கே தைரியம் இல்லை.
இவை ஒருபுறமிருக்கட்டும். ஜஸ்டிஸ்கட்சியைப் பற்றி இவ்வளவு ஆத்திரமும், துவேஷமும் உள்ள இவர்களுடைய பேச்சுக்களை எவ்வளவுதான் நாம் துருவித் துருவிப் பார்த்தாலும் ஜஸ்டிஸ்கட்சியினால் தேசத்துக்கு ஏற்பட்ட கெடுதி இன்னது என்று ஒருவராவது ஒரு காரியத்தையாவது எடுத்துச் சொல்லவில்லை என்பது மிகவும் குறிப்பாய் கவனிக்க வேண்டிய விஷயமாகும். அன்றியும் வகுப்புணர்ச்சி என்பதன் தத்துவமும் வகுப்புவாதம் என்பதின் தத்துவமும் என்ன என்று பார்த்தால் பார்ப்பனர்களுடைய ஏகபோக ஆதிக்கம் குறைவுபடுகின்றதே என்பதல்லாமல் மற்றபடி அதனால் தேசீயமோ தேசாபிமானமோ எப்படிப் பாதிக்கப்படும் என்பதும் விளங்காத காரியமாகும். அதைக்கூட யாரும் இதுவரை விளக்கவுமில்லை.
இந்நிலையில் தோழர் சுப்பராயன் அவர்களின் தேசியவாதமெல்லாம் தனக்கு ஒரு மந்திரி உறுதி என்று சொல்லிவிட்டால் நாளையத் தினமே அவர் ஜஸ்டிஸ் கட்சியில் சேருவதில் ஆட்சேபணை சிறிதுகூட இருக்கவே இருக்காது. அதுமாத்திரமல்லாமல் சர்க்காரில் ஏதாவது 2, 3 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு குறைவில்லாத ஒரு உத்தியோகம் கொடுக்கப்படுவதா யிருந்தால் கூட 5 நிமிஷத்துக்குள் சர்க்காரின் மீது முன்பு கனம் சீனிவாச சாஸ்திரிகள் போன்றவர்கள் கவிபாடினது போல் கவிபாடுவதற்கும் ஆட்சேபணை இருக்காது. இவைகளை எல்லாம் தோழர் சுப்பராயன் அவர்களின் பழய ஜாதகங்களைப் பார்த்துச் சொல்லுகிறோமே ஒழிய கற்பனையாலோ ஆருடத்தாலோ சொல்லுவதல்ல. அதற்கு இணங்கவே தோழர் சுப்பராயன் அவர்கள் பிரசங்கத்திலும் தொனிப்பதை பார்க்கலாம். அதாவது “காங்கிரசுக்காக தியாகம் செய்தவர்களுக்கே காங்கிரஸ் தேர்தலிலும் பதவிகளிலும் பயன் அனுபவிக்க உரிமை உண்டு என்றாலும் காங்கிரசில் சேர விரும்பும் (தன்னைப் போன்ற பலர்) தேசீயவாதிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார். ஆச்சாரியாரும் இதை சுப்பராயன் அவர்கள் தனக்காக பேசிக் கொண்டது என்றாலும் ஜாக்கிரதையாக பேசி இருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார். இதிலிருந்து டாக்டர் சுப்பராயன் கொள்கையும் அவருடைய தெய்வமும் மந்திரி ஆவது என்பது ஒன்றைத்தவிர வேறு ஒன்றுமே இல்லை என்பது நன்றாய் விளங்கும். இப்படிப்பட்டவர் ஜஸ்டிஸ் கட்சியை அதுவும் ஜஸ்டிஸ் கட்சிக்கு 2, 3 தடவை தாசானுதாசராக இருந்து பயன் அனுபவித்தவர் இன்று ஜஸ்டிஸ் கட்சியை வகுப்புவாதம் என்று குறை கூறுவதும் பார்ப்பனர்களுடன் கூடிக்கொண்டு தனது சமூகத்தை காட்டி கொடுப்பதும் என்றால் இதைப்பற்றி நாம் என்ன எழுதக்கூடும்? அவரது பழைய புராணங்களை புரட்டவேண்டியது தவிர வேறு ஒன்றும் இல்லை.
தோழர் ஆச்சாரியார் வகுப்பு வாதத்துக்கு பரிகாரம் இன்னது என்று சொல்லாமல் காங்கிரசுக்குள் வந்து சேர்ந்துவிட்டால் வகுப்புவாதம் பறந்து ஓடிப்போகும் என்று சொன்னால் அதன் அருத்தம் என்ன? என்று கேட்கின்றோம்.
காங்கிரசில் தாங்களே தலைவர்கள் என்பதும் காங்கிரசுக்குள் ஒருவன் வகுப்புவாதம் பேசினால் அவனைத் தேசத் துரோகி என்று வைது அடக்கி விடலாம் என்பதுமல்லாமல் வேறு என்ன அருத்தம் என்று யோசித்துப் பாருங்கள்.
காங்கிரசில் ஆதியில் இருந்த எத்தனையோ பேர் இன்று ஏன் வகுப்புவாதிகளாய் இருக்கிறார்கள்? காங்கிரசில் இருந்த சி.ஆர். ரெட்டியார் ஏன் ஒரு உத்தியோகம் கிடைத்தவுடன் அடிக்கடி காங்கிரசை விட்டுவிட்டு வகுப்புவாதக் கட்சிக்கு போய்விடுகிறார்? காங்கிரசில் இருந்த தோழர் முத்தய்ய முதலியார் ஏன் வகுப்புத் தீர்ப்பு எழுதினார்? மற்றும் காங்கிரசில் அதி தீவிர காங்கிரஸ் வாதிகளாய் இருந்த ஆர்.கே. ஷண்முகம், வரதராஜுலு, ஈ.வெ. ராமசாமி முதலியவர்கள் எல்லாம் ஏன் வகுப்புவாதிகள் ஆனார்கள்?
ஆகவே காங்கிரசுக்குள் ஒருவன் வகுப்புவாதியானால் அவன் வீரனாகவும் சுயமரியாதைக்காரனாகவும் இருந்தால் தைரியமாய் வெளியில் வந்து தன் காலில் நிற்க முயற்சிப்பதும் வீரமும், மானமும் இல்லாத மக்களுக்கு வகுப்புணர்ச்சி ஏற்பட்டாலும் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்து அவர்கள் பின் கவிபாடி வயிறு வளர்க்க வேண்டியதும் தான் இதுவரை அனுபவமாய் இருந்து வருகிறது. அந்தக் காரணத்தாலேயே பதவி வேட்டைக்கோ வயிறு வளர்ப்புக்கோ காங்கிரசில் வந்து சேருகிறவன் எவ்வளவு வகுப்பு வாதியாய் இருந்தாலும் நமக்கு அடங்கித்தான் கிடக்க வேண்டும் என்கின்ற தைரியத்தின் மீதே தோழர் ஆச்சாரியார் எப்படிப்பட்ட வகுப்புவாதியும் காங்கிரசுக்கு வந்தால் அடங்கிவிடுவான் என்று பந்தயம் கட்டி கூறியிருக்கிறார்.
பொதுவாக தோழர் ராஜகோபாலாச்சாரியார் இடமாவது வகுப்புவாதம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா என்ற யோசித்துப் பாருங்கள். அவர் ஒரு “பிராமணர்” அவர் வாழ்க்கை, வேஷம், மனோபாவம் எல்லாம் அதை அனுசரித்தே இருக்கிறதா இல்லையா? என்று பாருங்கள்.
அவரைப் பொறுத்தவரையில் ஏதாவது ஒரு விஷயத்தில் “பிராமண”த் தன்மையை விட்டுவிட்டேன்” என்று சொல்வதானாலும் இந்த நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் எத்தனை பேர்கள் வகுப்புணர்ச்சியை விட்டிருக்கிறார்கள்? பார்ப்பனரல்லாதார்களிலும் எத்தனை பேர் தங்கள் ஜாதி உணர்ச்சியை, ஜாதி தர்மம் என்பதை விட்டிருப்பார்கள்?
அதுபோலவே தீண்டப்படாத மக்கள் என்போர்களை எத்தனை பார்ப்பனரும், எத்தனை பார்ப்பனரல்லாதாரும் வகுப்புணர்ச்சி இல்லாமல் நடத்துகிறார்கள்? என்று சொல்லக்கூடும்.
ஆகவே வெகு காலமாக வெகு பிரயத்தனமாக இருந்து வரும் வகுப்புணர்ச்சித் தொல்லையை ஒழிக்க வகுப்பு சமத்துவம் அரசியலிலாவது கொடுங்கள் என்று கேட்டால் அப்படி கேட்பதுவே வகுப்புணர்ச்சி ஆகி விட்டால் மற்று வேறு எந்த வழியில் தான் வகுப்புக் கொடுமைகளும் வகுப்பு இழிவுகளும் தீர்க்கப்படுவது என்று ஆச்சாரியார் அவர்களைக் கேட்கின்றோம்.
அல்லது காங்கிரசுதானாகட்டும் இந்த 50 வருஷகாலமாக இந்த வகுப்பு பேத உயர்வு தாழ்வு தொல்லையையும் கொடுமையையும் ஒழிக்க ஏதாவது ஒரு முயற்சி செய்ததா என்றும் வணக்கமாய் கேட்கின்றோம். வகுப்பினால் பெருமையும் லாபமும் அடையும் மக்கள் வகுப்பினால் சிறுமையும் இழிவும் நட்டமும் அடையும் மக்களைப் பார்த்து வகுப்பு உணர்ச்சி வேண்டாம் என்றால் அதில் சிறிதாவது நாணயமோ யோக்கியமோ இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்.
ஆகவே தோழர் ஆச்சாரியார் ஆகட்டும், வேறு யார் தானாகட்டும் வேறு எந்தப் பிரச்சினையின் மீதாவது ஜஸ்டிஸ் கட்சியை குறை கூறுவதானால் அதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று ஆராயப் புகலாம். அப்படிக்கு இன்றி வெறும் வகுப்புணர்ச்சி தான் ஜஸ்டிஸ் கட்சி மீது உள்ள குற்றம் என்றால் எப்பாடுபட்டாவது தமிழ் மக்கள் அந்தக் காரணத்துக்கு ஆகவே அதாவது ஜஸ்டிஸ் கட்சி வகுப்பு நீதி கொண்டிருப்பதற்கு ஆகவே ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்து அது வெற்றி பெறும்படி செய்யவேண்டியது கடமை என்று கூறுவோம்.
கடசியாக இன்றைய வகுப்புணர்ச்சி என்பது எந்த தேசீயத்தையும் தடைப்படுத்தி விடாது. எந்த சுயராஜ்யத்தையும் நிறுத்திவிடாது. தேசத்துக்கு பெரும் கேடாய் உளமாந்தை போன்று இருந்து வரும் பார்ப்பனீய ஆதிக்கத்தைத்தான் சமன்படுத்தும். ஆகையால் ஜாதியால் வகுப்பால் இழிநிலையில் தாழ்ந்த வகுப்பில் என்று இருக்கும் மக்கள் சுத்த ரத்த ஓட்டமும் மான உணர்ச்சியும் இருக்குமானால் பார்ப்பனீயத்தை தகர்த்தெரிய ஜஸ்டிஸ் கட்சியை ஆதரியுங்கள் என்று கூறி முடிக்கிறோம்.
குடி அரசு தலையங்கம் 19.07.1936