கோவை கேசும் பார்ப்பனீயமும்
இந்தியாவில் குறிப்பாக தென்னாட்டில் இந்த 20வது நூற்றாண்டிலும், பார்ப்பனர்களின் ஆதிக்கம் மத இயலிலும், சமூக இயலிலும், அரசியலிலும் தலைதூக்கி விளங்குவதற்குக் காரணம் பார்ப்பனர்கள் பத்திரிகை உலகத்தை முற்றுகை போட்டு வெற்றியடைந்து சுவாதீனப்படுத்தி அடிமை கொண்டதேயாகும்.
இத்தென்னாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரிடையாக எவராலும் பத்திரிகை நடத்துவது என்பது கொஞ்சமும் முடியாத காரியமாகவே ஆகிவிட்டது. ஏதாவது ஒன்று அரை பத்திரிக்கைகள் பார்ப்பனர்களை எதிர்த்து இருக்குமானால் அவற்றின் நிலையும் உயிருக்கு ஊஞ்சலாடும் தன்மையதாகவே இருந்து வரவேண்டியிருக்கிறது.
பத்திரிகை நடத்துவதில் கொடுமையையும், கல் நெஞ்சையும், நாணயக் குறைவையும், அதர்மத்தையும் காட்டுவதில் பார்ப்பனர்கள் சிறிது கூடத் தயங்குவதில்லை. உண்மையிலேயே இத்தமிழ்நாட்டில் இந்த 10 வருஷ காலமாய் குடி அரசு என்னும் பத்திரிகை ஒன்று இல்லாமல் இருந்திருக்குமானால் இன்று இத்தென்னாட்டு நிலை, ஏன்? இந்திய காங்கிரஸ் நிலை, அரசியல் சீர்திருத்த நிலை கூட வேறு விதமாகவே இருந்திருக்கும் என்று சொல்லுவதற்கு நாம் சிறிதும் பின்னடையவில்லை. உதாரணமாக இன்று காங்கிரஸ் கொள்கைகளில் உள் கருப்பொருள்களையும், தலைவர்களின் உள் எண்ணங்களையும் அவற்றால் மக்களுக்கு ஏற்படும் கெடுதிகளையும் குடி அரசு விளக்கமாக, நிர்வாணமாக தைரியமாய் எடுத்துக்காட்டி வருவதால் அவர்கள் குடி அரசுக்கு சமாதானம் சொல்லித் தீரவேண்டிய முறையில் தங்கள் கொள்கைகளையும் திட்டங்களையும் தந்திரமாய் அமைத்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது.
அதுமாத்திரமல்லாமல் சில சமயங்களில் ஒரு அளவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதாகவும் ஏற்பட்டுவிடுகிறது. இதன் பயனாய் நிலைமைகள் எத்தனையோ விஷயங்களில் மாறுதலடைய வேண்டியதாகி விட்டதென்றாலும் அநேக விஷயங்களில் நமது நிலை மோசமாகிக்கொண்டு வருகிறது என்பதையும் மறைக்கவில்லை. ஏனென்றால் பார்ப்பனர்களால் நடத்தப்படும் பத்திரிகை மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் என்பவர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளும் 100க்கு 95க்கு மேலாக பார்ப்பனர்களையும் பார்ப்பனப் பத்திரிக்கைகளையும் தங்கள் வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்களுக்கு பின் தாளம் போடும் முறையிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. மற்றும் “பார்ப்பனர்கள் குறை கூறினால் நம்மால் வாழ முடியாதுநமக்கு பத்திரிகை உலகில் இடம் கிடைக்க மாட்டாது” என்கின்ற மன உறுதியுடனேயும் இருந்து வருகின்றன. இந்த நிலைமைதான் தென்னாட்டில் இன்னமும் பார்ப்பன ஆதிக்கம் இருந்து வர ஆக்கம் அளித்து வருகிறது.
அநேக மேடைகளிலும் மகாநாடுகளிலும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் இந்த நாட்டில் பார்ப்பனரல்லாதார் வாழ்க்கை சுயமரியாதையுள்ள வாழ்க்கையாக ஆவதற்கு ஏதாவது ஒரு அறிகுறி காணவேண்டுமானால் அது முதலில் “இந்து” “சுதேசமித்திரன்” பத்திரிக்கைகளின் வீழ்ச்சியைப் பொறுத்த தேயாகும்” என்று பல தடவை சொல்லி வந்திருப்பது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். மற்றும் நாமும் எத்தனைக்கு எத்தனை அப்பத்திரிகைள் வீழ்ச்சி அடைகின்றனவோ அத்தனைக்கு அத்தனை பார்ப்பனரல்லாத மக்கள் நிலை மேல்நோக்கி விட்டதென்பதும், எத்தனைக்கு எத்தனை அப் பத்திரிகைகள் செல்வாக்கடைகின்றனவோ அத்தனைக் கத்தனை பார்ப்பன ரல்லாதார் சமூக நிலை இழிவு அடைய கீழ் நோக்கி விட்டதென்றும் அறியலாம் என்று சொல்லுவதுடன் இதுதான் இப்பரீக்ஷைக்கு நிர்ணயமான அளவு கருவி என்றும் பல தடவை சொல்லி வந்திருக்கிறோம். இவற்றிற்கு நாம் பல உதாரணங்கள் கூறலாம். தேர்தல் காலங்களில் அப்பத்திரிக்கைகள் எவ்வளவு கேவலமான முறைகளைக் கையாண்டு வந்திருக்கின்றன என்பதும் பார்ப்பனரல்லாத பிரமுகர்களைப்பற்றி சந்தர்ப்பா சந்தர்ப்பம் இல்லாமல் எவ்வளவு தூரம் வீண்பழி சுமத்தி தொல்லை விளைவித்து தலையெடுக்க வொட்டாமல் செய்து வந்திருக்கின்றன என்பதும் மற்றும் பொது நடப்புகளையும் அவை திரித்தும், பழித்தும், மறைத்தும், கற்பித்தும் பிரசுரித்து வந்திருக்கின்றன என்பதும் போதுமான உதாரணங்களாகும்.
இன்று உள்ள அரசியல், சமுதாய இயல் பிரச்சினைகளில் எந்தக்கட்சி மேலானது என்றோ எந்தக் கட்சி தீவிரமானதென்றோ, எந்தக் கட்சி பிற்போக்கான தென்றோ, அவ்வக்கட்சி கொள்கைகளை எடுத்துக்காட்டி வித்தியாசம் காட்ட முடியுமா என்று பார்த்தால் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை நன்றாய் அறிந்திருந்தும் பார்ப்பனப் பத்திரிகைகள் பிரசாரமே ஒரு கட்சி மேல் என்றும் மற்றொரு கட்சி கீழ் என்றும் மக்கள் கருதும்படி செய்து வருகிறது.
மற்றும் தனிப்பட்ட மக்கள் விஷயத்தையே எடுத்துக்கொள்வோம். பொப்பிலி ராஜா, பனகால் ராஜா, சர்.பி. தியாகராய செட்டியார் போன்ற மாபெருந் தலைவர்களைப் பற்றி இந்து மித்திரன் பத்திரிக்கைகளும் அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டிய பத்திரிக்கைகளும் எப்படி எழுதி வந்தன. ஆனால் அதே பத்திரிகை அவர்கள் சமீபத்தில் கூட நிற்க தகுதியும், நாணயமும் அற்ற தோழர்கள் சத்தியமூர்த்தி சாஸ்திரியார், ஸ்ரீனிவாச சாஸ்திரியார் போன்றவர்களை எப்படி உயர்த்தி புகழ்ந்து கூறி விளம்பரம் கொடுத்து பெரிய மனிதர்களாக்கி வருகின்றன என்பது கொண்டும் உணரலாம்.
தோழர் சீனிவாச சாஸ்திரியாருக்கு என்ன கொள்கையென்று யாராவது சொல்ல முடியுமா? அவரது நாணயம் இன்னது என்று யாரும் அறிய முடியாதா? காந்தியாரை கைதி செய்ய இடம் கொடுத்து பட்டம் பதவி பெற்றதும், தன்னை மிதவாதி என்று சொல்லிக்கொண்டு அரசாங்கத்துக்கு கவிபாடி மகாகனம் ஆனதும், நாட்டுக்கோட்டை ராஜாவுக்கு உதவி செய்து வெகுமானம் பெற்று வாழ்க்கை நடத்துவதும், இப்போது காங்கிரசை ஆதரிப்பதும், பார்ப்பனரல்லாதார் கட்சி முன்னுக்கு வருவதைப் பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது என்று சொல்வதும், கடசியாக இழவு வீட்டில் இருந்து கொண்டும் பார்ப்பனரல்லாத கட்சியைப்பற்றி விஷமத்தனாய்ப் பேசுவதும் ஆகிய காரியங்கள் அவர் செய்து வந்ததையும் வருவதையும் இந்து, மித்திரன் முதலியவை அறியாது என்று யாராவது சொல்லிவிட முடியுமா?
அதுபோலவே தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியாரின் தன்மையைப் பற்றியும் சொல்லிக்காட்ட வேண்டியதில்லை. எவரும் அறியாததல்ல. இப்படி இருக்க இவ்விரு சாஸ்திரிகளுக்கும் “இந்து”, “மித்திரன்” பத்திரிகைகளில் தினம் தினம் கலம் கலமாய் இடம் கொடுத்து விளம்பரம் தருவதல்லாமல் அவர்களால் கக்கப்படும் விஷங்களை பாமரமக்களுக்குள் புகுத்துகின்றன. அனேக பல முக்கியமான விஷயங்களையும் உண்மையான விஷயங்களையும் தைரியமாய் மறைக்கின்றன. மறைக்க முடியாவிட்டால் திரித்துக் கூறி விடுகின்றன.
இவைகள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும், சமீபத்தில் இவ்வாரத்தில் நடந்த ஒரு விஷயத்தை வெளிப்படுத்த ஆசைப்படுகிறோம். அதை வெளிப்படுத்தவே தான் இவ்வளவு எடுத்துக்காட்டினோம். அதென்னவெனில் தோழர் கோவை ரத்தினசபாபதி கவுண்டர் கேசில் பார்ப்பனர்கள் நடந்து வந்த மாதிரியும், இன்று நடந்து வரும் மாதிரியும் இந்து அவற்றை ஆதரித்துச் செய்யும் அநீதியையும் பத்திரிகை ஒழுக்கக் கேட்டையும் எடுத்துக் காட்ட ஆசைப்படுவதேயாகும். தோழர் இரத்தினசபாபதி கவுண்டர் கேசானது அது பொய்யா மெய்யா அல்லது தப்பா சரியா என்பதைப் பற்றி நாம் இந்த சந்தர்ப்பத்தில் பேசுவதில்லை. ஆனால் அக்கேஸ் நடத்தப்பட்டதில் பார்ப்பனர்கள் எப்படி நடந்து கொண்டார்கள், அது முடிந்த பிறகும் பார்ப்பனர்கள் எவ்வளவு விஷத்தைக் கக்குகிறார்கள் என்பதைத் தெரிவிக்கவே எழுதுகிறோம்.
அக்கேசு கோயமுத்தூர் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் போர் அல்லது கோயமுத்தூர் காங்கிரஸ் ஜஸ்டிஸ் கட்சி போர் என்கிற தலைப்பிலேயே நடந்து வந்தது. உதாரணம் வேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சியார் அதாவது பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் தீவிரமாய் வேலை செய்து வந்தப் பிரமுகர்கள் ஒருபக்கமும் பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகள் ஒரு பக்கமுமாக இருந்து கேஸ் நடத்தப்பட்டு வந்தது என்பதற்கு அந்த விவகாரத்தில் இருதரப்பிலும் சம்பந்தப்பட்ட சம்பந்தப்படுத்தப்பட்ட பெயர்களைக் கொண்டு அறியலாம்.
அக்கேஸ் மூலமாக கோவை பார்ப்பனரல்லாத தலைவர்கள் எல்லோரையும் அழுத்திவிடப் பெருமுயற்சி செய்யப்பட்டது. சிலர் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து கூட போலீஸ் தயவை சம்பாதிக்க வேண்டியவர்களானார்களாம்.
கடைசியாக செஷன் ஜட்ஜி அவர்களே கேசை விடுதலை செய்வதற்கு அனுகூலமாகவே ஜூரிகளுக்கு விஷயங்களை எடுத்துச் சொன்னதாகவும் தெரிகிறது. அப்படியெல்லாம் இருந்தும் வகுப்பு உணர்ச்சி முதலிய காரணமாகவே ஜூரிகளால் தண்டிக்கப்படலாயிற்று.
தண்டிக்கப்பட்டவர் விடுதலையாவதற்கு முயற்சி செய்தார். இந்நிலையில் தண்டனை போதாதென்றும் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியில் போராடப்பட்டது. அது பயன்படாமல் போயிற்று. பின் இந்த கட்சி பிரதி கட்சி காரணத்தாலேயும் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் வகுப்பு துவேஷம் காரணமாயும் தான் தண்டனை அடைய நேரிட்டது என்று கருதிய தோழர் ரத்தினசபாபதி கவுண்டர் அவர்கள் தன்னை நிரபராதி என்று வைசிராய்க்கு தான் கண்ட உண்மையைக் காட்டி விண்ணப்பம் செய்து கொண்டார். வைஸ்ராய் அவர்கள் உண்மையை கண்டுபிடிக்க ரகசிய ஏற்பாடு செய்து விண்ணப்பத்தில் கண்ட விஷயத்தின் தன்மையை அறிந்தார். கவுண்டரை மன்னிக்க வேண்டும் என்று தோன்றிற்று. கவுண்டரை விடுதலை செய்து விட்டார். இதில் யாருக்கு என்ன முழுகிப் போய்விட்டது என்பது நமக்கு விளங்கவில்லை.
இந்து, சுதேசமித்திரன், தினமணி முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாம் கவுண்டரை விடுதலை செய்தது தப்பு என்று தலையங்கம் எழுதின.
தோழர்கள் T.R. வெங்கிட்டராம சாஸ்திரியார், வி.வி.சீனிவாசய்யங்கார் முதலிய பார்ப்பன பிரமுகர்கள் எல்லோரும் கவுண்டரை விடுதலை செய்தது தப்பு என்று பத்திரிகைகளுக்கு தினம் தினம் கலம் கலமாக வியாசங்கள் எழுதினார்கள்.
இக்கேசு விஷயத்தில் பார்ப்பனக் கொடுமை அவ்வளவோடு நின்று விடவில்லை. இவர்கள் வியாசங்களுக்கு பதிலாக எழுதப்பட்ட மற்றவர்கள் கட்டுரைகளை பிரசுரிக்கவும் மறுத்துவிட்டன.
அதாவது சிக்கந்திராபாத்தில் இருந்து ஒரு பார்ப்பனரல்லாத வக்கீல் திவான்பகதூர் ஏ.வேணுகோபால் அவர்கள் தோழர் வி.வி.சீனிவாசய்யங்கார் கூற்றுக்குச் சரியான பதில் எழுதி அதுவும் அய்யங்காருடைய வெறும் சட்ட சம்மந்தமான பிரச்சினைகளுக்கு மாத்திரம் சமாதானம் எழுதி அனுப்பப்பட்ட கட்டுரையை இந்து பத்திரிகை லட்சியம் செய்யவே இல்லை. பிறகு தோழர் ஏ. வேணுகோபால் அவர்கள் மறுபடியும் அக்கட்டுரை நகலை வைத்து ரிஜிஸ்டர் கடிதம் மூலம் இந்துவுக்கு அனுப்ப இந்து அதைப் பெற்றுக் கொண்டு அக்கட்டுரைக்கு இடமில்லை என்று சொல்லி அவற்றை வாப்பீசு செய்து விட்டது. இந்த கடித வர்த்தமானத்தையும் கட்டுரையையும் வேறுபக்கம் பிரசுரித்திருக்கிறோம். இந்து பத்திரிகையில் கவுண்டர் விடுதலைக்கு விரோதமாக தலையங்கம் எழுதவும் பல கட்டுரைகள் பல கலங்களில் பிரசுரிக்கவும் இந்துவுக்கு இடம் இருந்து வந்திருக்கிறது.
ஆனால் விடுதலைக்கு அனுகூலமாக வைசிராய் தீர்ப்பை நியாயப்படுத்தி எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்கு இடம் இல்லை என்றால் இந்துவுக்கு பத்திரிக்கையில் இடமில்லையா மனதில் இடமில்லையா என்பதை பொது ஜனங்கள் உணரவேண்டுமென்பதற்கு ஆகவே இதை எடுத்துக் காட்டுகிறோம்.
கட்டுரையாளரான திவான் பகதூர் வேணுகோபால் அவர்கள் தனது கட்டுரையை ஒரு தடவையில் போட இடமில்லையானால் இரண்டு தடவையாக பிரசுரிக்கலாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்படி இருந்தும் அக்கட்டுரை திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்றால் இந்து பத்திரிகையின் பத்திரிகை தர்மமும் அவர்களது பொதுநல நடு நிலைமையும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
எந்த விஷயத்தையும் பிரசுரிக்கவும் மறுக்கவும் பத்திரிகை ஆசிரியருக்கு உரிமை உண்டு என்பதை நாம் மறுக்கவில்லை. அதற்கு எந்தக் காரணம் வேண்டுமானலும் சொல்லிக்கொள்ள ஆசிரியருக்கு உரிமை உண்டு. காரணம் சொல்லாமல் இருக்கவும் உரிமை உண்டு.
ஆனால் இப்படிப்பட்ட பத்திரிக்கைகள் தங்களை பொது நலத்துக்காக பாரபட்சமின்றி நடந்துகொள்ளும் பத்திரிக்கைகள் என்று சொல்லிக் கொள்ளும் உரிமையைக் கூட பொது ஜனங்கள் நம்பவேண்டுமா ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பதுதான் நமது கேள்வியாகும்.
திவான்பகதூர் வேணுகோபால் வியாசம் இந்துவில் சுமார் 2லீ கலம் அல்லது 2லு கலம் வரலாம். இதற்கு இந்து பத்திரிக்கையில் 2 தடவையாகக்கூட பிரசுரிக்க இடமில்லையாம். ஆனால் தோழர் வி.வி. சீனிவாசய்யங்காருடைய கட்டுரைக்கு 11 கலங்கள் செலவழிக்கப்பட்டிருக்கிறது. தோழர் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியார் கட்டுரை 2 கலம் வரை செலவழிக்கப் பட்டிருக்கிறது. இந்துவின் தலையங்கத்துக்கு ஆகவும் ஒரு கலம் கொடுத்து நீண்ட தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. இந்தப்படியான சுமார் 13, 14 கலம் கொண்ட அதுவும் ஒரு மனிதன் தண்டனையில் இருந்து விடுதலையானதை ஆட்சேபித்து வன்மம் காட்டும் வியாசங்களுக்குப் பதிலாக “குற்றவாளி” பக்கம் வெறும் சட்ட சம்பந்தமான சமாதானத்தை பிரசுரிக்கக்கூட இடம் இல்லை என்று இந்து பத்திரிகை சொல்லிவிட்டால் இந்த வழக்கு பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியில் நடந்திருக்கிறது என்றும் வகுப்பு உணர்ச்சி காரணமாகவே தண்டனை அடைய நேரிட்டது என்றும் கவுண்டர் நினைத்ததிலும் அதை காட்டி தான் விடுதலை அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டதிலும் என்ன தப்பு இருக்கமுடியும் என்பதோடு என்ன ஆட்சேபணை இருக்க முடியும் என்று கேட்கிறோம்.
நாளைக்கு நமக்கு சுயராஜ்ஜியம் கிடைத்து இவர்கள் கைக்கு அதிகாரம் வந்து அப்போதும் இந்த பத்திரிக்கைகளே தேசீயப் பத்திரிக்கை களாக இருந்து வந்து இந்த தோழர்கள் டி.ஆர்.வியும், வி.வி.எஸ்.சும் நீதிபதிகளாகவோ நீதிவாதிகளாகவோ இருந்து விடுவார்களேயானால் நமது கதி என்ன ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஆகவே இந்து பத்திரிகை பார்ப்பனரல்லாத மக்கள் பலர் தேசீயப் பத்திரிகை என்றும் உண்மை சேதிப் பத்திரிகை யென்றும் சொல்லுவார் களேயானால் அவர்கள் எவ்வளவு மடையர்களாகவும் இல்லாவிட்டால் பார்ப்பன அடிமைகளாகவும் இருக்க வேண்டும் என்று கேட்கின்றோம்.
பார்ப்பனப் பத்திரிக்கைகள் சரசமாய் கிடைப்பதால் வாங்கி வாசிப்பதாக பல பார்ப்பனரல்லாதார் சொல்லுகிறார்கள். இவர்களை நாம் ஒன்று கேட்கின்றோம். அதாவது விஷம் சரசமாய் கிடைத்தால் வாங்கி சாப்பிடுவார்களா என்பதேயாகும். இந்து பத்திரிக்கையில் நமக்கு எப்படி கேடு வருகிறது என்றால் அதை நடுநிலைமை பத்திரிகையென்றும் தேசீயப்பத்திரிகை என்றும் அதில் காணப்படுவததெல்லாம் உண்மை என்றும் கருதுவதாலேயே நமது சமூகத்துக்குக் கேடு உண்டாகின்றது.
ஜஸ்டிஸ், விடுதலை, குடி அரசு முதலிய பத்திரிக்கைகளை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்களா? வாங்கிபடிக்கிறார்களா? வேறு ஒருவர் படிப்பதையாவது பொறுத்துக் கொண்டிருக்கிறார்களா என்று துருவிப் பார்க்கும்படி பார்ப்பனரல்லாதாரைக் கேட்கின்றோம். அதற்கு எவ்வளவு கெட்டபேர் சூட்டுகிறார்கள் என்பதையும் யோசித்துப்பாருங்கள்.
கடைசியாக இந்த அநீதிக்கு இந்த கொடுமைக்கு திவான் பகதூர் வேணுகோபால் அவர்கள் ஒரே ஒருபதில் தான் தன்னால் செய்ய முடிந்ததை செய்திருக்கிறார். அதாவது இந்து பத்திரிகை வாங்கிப் படிப்பதை நிறுத்தி விட்டார். இதனால் இந்து பத்திரிகைக்கு யாதொரு நட்டமும் ஏற்பட்டுவிடாது என்பது அதற்கு தெரிவதற்கு முன் நமக்குத்தெரியும். ஆனால் திவான்பகதூர் வேணுகோபாலுக்கு ஏற்பட்ட அவமானமும் தோழர் ரத்தினசபாபதிக் கவுண்டருக்கு ஏற்பட்ட கஷ்டமும் மற்ற மக்களுக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இந்து பத்திரிகை வாங்கி படிக்கும் மற்ற பார்ப்பனரல்லாதாரும், சுயமரியாதை பெற்று திவான்பகதூர் போலவே நடந்து கொண்டால் பார்ப்பனப் பத்திரிகைகள் ஒழிந்து போகா விட்டாலும் சிறிதாவது திருத்த மடைந்து அவற்றின் கொடுமைகளும், தொல்லைகளும் குறையாதா என்று கேட்கின்றோம்.
குடி அரசு தலையங்கம் 07.06.1936