கடவுள் கதை
உலக உற்பத்தி “சந்தேகந்தெளிய” சம்பாஷணை
– சித்திரபுத்திமன்
கதை சொல்லுகிறவன்: ஒரே ஒரு கடவுள் இருந்தார்.
கதை கேட்கிறவன்: ஊம், அவர் எங்கே இருந்தார்?
க.சொ: ஆரம்பத்திலேயே அதிகப் பிரசங்கமாய் கேட்கிறாயே. நான் சொல்லுவதை ஊம் என்று கேட்டால் தான் இந்தக் கதை சொல்ல முடியும்.
க.கே: சரி, சரி சொல்லு, ஒரே ஒரு கடவுள். அப்புறம்?
க.சொ: ஒரு நாள் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார்.
க.கே: சரி, எப்போ?
க.சொ: பாரு மறுபடியும், இரட்டை அதிகப் பிரசங்கமாய் கேட்கிறாயே.
க.கே: சரி, சரி. தப்பு சொல்லப்பா சொல்லு.
க.சொ: உலகத்தை சிருஷ்டிக்கலாம் என்று முடிவு கொண்டார்.
க.கே: (அதற்கு முன் உலகம் இல்லை போல் இருக்கிறது. உலகம் இல்லாமலே ஒரு நாள் உட்கார்ந்து கொண்டு யோசித்திருக்கிறார் போல் இருக்கிறது. அந்தரத்தில் உட்கார்ந்திருப்பார் பாவம்! என்று நினைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் பொறுத்து) சரி அப்புறம் (என்று சொன்னான்)
க.சொ: என்ன இந்த மாதிரி நான் சொல்லுவதைக் கவனமாய்க் கேட்காமல் எங்கெங்கயோ யோசனையாய் இருக்கிறாயே.
க.கே: இல்லை. நீ சொல்லுகிறபோதே சில சந்தேகம் தோன்றியன. அதைக் கேட்டால் கோபித்துக் கொள்ளுகிறாய், அதிகப்பிரசங்கி என்று சொல்லி விடுகின்றாய். ஆதலால் மனதிலேயே நினைத்து சமாதானம் செய்து கொண்டேன்.
க.சொ: அப்படி யெல்லாம் சந்தேகம் கூட தோன்றக்கூடாது. கதை பாட்டி கதையல்ல; கடவுள் கதையாக்கும். இதை வெகு பக்தி சிரத்தையுடன் கேட்கவேண்டும். தெரியுமா?
க.கே: சரி அப்படியே ஆகட்டும். சொல்லு பார்ப்போம்.
க.சொ: எதிலே விட்டேன்? அது கூட ஞாபகமில்லை, உன் தொந்திரவினால்.
க.கே: சரி, கோபித்துக்கொள்ளாதே. நீ விட்டது எதிலே என்றா கேட்கிறாய்? இரு, யோசனை பண்ணிச் சொல்லுகிறேன்.
ஒரே ஒரு கடவுள் அவர் ஒரு நாள் உட்கார்ந்துகொண்டு என்ன செய்வது என்று யோசித்தார். உலகத்தை சிருஷ்டிக்கலாம் என்று எண்ணினார் என்பதில் விட்டாய். அதில் தொட்டுக்கொள். என்னை அதிகப்பிரசங்கி என்கிறாய் எனக்காவது ஞாபகமிருக்கிறது. மகா பக்தனாகிய உனக்கு மறந்து போகிறது பாவம். அப்புறம் சொல்லு.
க.சொ: பாவம் என்ன எளவு, உன்னுடைய தொல்லையில் எதுதான் ஞாபகமிருக்கிறது. அப்புறம் என்ன பண்ணினார் என்பதுகூட மறந்து போய் விட்டது. யோசனை பண்ணி சொல்லுகிறேன் பொறு. (சற்று பொறுத்து) முதலில் வெளிச்சம் உண்டாகக் கடவது என்று சொன்னார்.
க.கே: இருட்டில் உட்கார்ந்து கொண்டா இவ்வளவும் நினைத்தார்? பாவம் கடவுளுக்கு எவ்வளவு பிரயாசை நம்மால்? அவர் கருணாநிதி என்பதற்கு இதைவிட என்ன ருசுவு வேண்டும்.
க.சொ: அதையெல்லாம் நீ தெரிந்து கொள்வதற்குத்தானே இந்தக்கதை சொல்லுறேன். இந்த மாதிரி கவனமாய்க் கேள்.
க.கே: சரி, சரி சொல்லு, உடனே வெளிச்சம் உண்டாய் விட்டதாக்கும். கடவுளுக்கு ஏதோ போட்டி இருக்கும்போல் இருக்கிறது.
க.சொ: என்ன போட்டி?
க.கே: இல்லையப்பா, வெளிச்சத்தைத்தான் கடவுள் சிருஷ்டித்தார். அதற்குமுன் இருந்த இருட்டை எவனோ அயோக்கியப்பயன் கடவுளுக்குத் தொந்திரவு கொடுக்க வேண்டுமென்று போட்டிக்காக சிருஷ்டித்து விட்டு ஓடிப்போய் விட்டான் போலிருக்கிறது. கண்டால் நான் அவனை என்ன செய்வேன் தெரியுமா?
க.சொ: தொலைந்து போகுது, அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாதே; சொல்வதைக் கேளு.
க.கே: சரி சொல்லு.
க.சொ: அப்புறம் மேடு பள்ளம் எல்லாம் சமன் ஆகவேண்டும் என்று கருதினார்; அதுபோலவே ஆயிற்று.
க.கே: கடவுளுக்கு முன்னால் இருந்த மேடு பள்ளங்களை யெல்லாம் சமன் ஆகவேண்டும் என்ற சொன்னாராக்கும், அதெல்லாம் சமனாய் விட்டதாக்கும். கடவுள் நல்ல கடவுள். எவ்வளவு ஞானமும், கருணையும் உடைய கடவுள். மேடு பள்ளம் இருந்தால் நம்ம கதி என்ன ஆவது? இன்று போல் சமுத்திரமும், மலையும், குழியும், குன்றுமாகவல்லவா ஆகி இருக்கும். ஆதலால் கடவுள் நல்ல வேலை செய்தார்.
ஆனால் அப்புறம் எவனோ புறப்பட்டு மறுபடியும் பழயபடி இருட்டும், மேடும் பள்ளமும், குழியும், குன்றும் ஏற்படும்படி செய்து விட்டான் போலிருக்கிறது. இருக்கட்டும், அதைப்பற்றி கவலை இல்லை. கடவுள் செய்த நன்மைகளை நினைத்து மகிழ்ந்து அவருக்கு நன்றி செலுத்துவோம். அப்புறம் என்ன செய்தார்?
க.சொ: அப்புறம் அதாவது வெளிச்சம் உண்டாகி மேடு பள்ளம் நிரவப்பட்ட பிறகு மறுபடியும் யோசித்தார்.
க.கே: சரி, யோசித்தார்.
க.சொ: அதற்குள் ஒருநாள் முடிந்து போய்விட்டது. அடுத்த நாள் அதாவது இரண்டாவது நாள் காற்று உண்டாகக் கடவது என்று சொன்னார்; உடனே காற்று உண்டாய் விட்டது.
க.கே: பிறகு என்ன செய்தார்?
க.சொ: அதற்கும் ஒரு நாள் ஆகிவிட்டது. பிறகு மூன்றாம் நாள் பூமி உண்டாகக் கடவது என்று நினைத்தார், பூமி உண்டாயிற்று. அன்றே சமுத்திரம், செடிகள் உண்டாகக் கடவது என்று நினைத்தார், உடனே சமுத்திரம் செடிகள் உண்டாயின.
க.கே: பிறகு?
க.சொ: இதற்குள் மூன்று நாள் முடிந்து விட்டது. நான்காம் நாள் உட்கார்ந்துகொண்டு யோசித்தார் யோசித்தார், ரம்ப கஷ்டப்பட்டு என்ன செய்வது என்று யோசித்தார்.
க.கே: அய்யோ பாவம்; கடவுள் நமக்காக எவ்வளவு பாடுபட்டார், மனிதர்களுக்கு நன்றி விஸ்வாசம் இருக்கிறதா? போனால் போகட்டும், அப்புறம் என்ன செய்தார்? சொல்லு சீக்கிரம்.
க.சொ: அப்புறம் நான்காம் நாள் ஒரு முடிவுக்கு வந்தார். என்ன முடிவுக்குத் தெரியுமா? சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் ஆகியவைகள் உண்டாக வேண்டும் என்று கருதி ஒரே அடியாய் இவ்வளவும் உண்டாகக் கடவது என்று சொன்னார், உடனே உண்டாகிவிட்டன.
க.கே: சரி, சரி. இப்போது புரிந்தது; அந்தக் கடவுளின் பெருமை. நான் முன்பு சந்தேகப்பட்டதும், குறுக்கு கேள்வி போட்டதும் அதிகப் பிரசங்கித்தனம் என்பது வெளியாயிற்று.
க.சொ: பார்த்தாயா, நான் அப்பொழுதே சொல்லவில்லையா? கடைசிவரை பொறுமையாய்க் கேட்டால், எல்லா சந்தேகமும் விளங்கிவிடும் என்று. எப்படி விளங்கிற்று? சொல்லு பார்ப்போம்.
க.கே: அந்தக் கடவுளின் பெருமை எனக்கு எப்படி விளங்கிற்று என்றால், பூமி உண்டாவதற்கு முன்பே மேடு பள்ளத்தை யெல்லாம் சமன் செய்தது ஒன்று, மற்றும் சூரியன் பூமி ஆகியவை உண்டாவதற்கு முன்பே நாள்கள் கணக்கு எண்ணவும், முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் கண்டுபிடிக்கவும் முடிந்ததுபார். இது எவ்வளவு அற்புதமான செய்கை. அப்புறம் மேலே சொல்லு. மிகவும் ருசிகரமாகவும் மஹிமை பொருந்திய தாகவும் இருக்கிறது இந்தக் கடவுள் கதை.
க.சொ: அதற்குள் என்ன தெரிந்துகொண்டாய்? இன்னம் கேள். எவ்வளவு அதிசயமாயும் ருசியாயும் இருக்கும் பார். அப்புறம் ஐந்தாவது நாள் ஆயிற்று. மீன்களும் பட்சிகளும் உண்டாகக் கடவது என்றார்; உடனே ஆகிவிட்டன.
க.கே: இத்தனை கோடி கோடி கோடி மீன்களும் ஒரே நாளில் ஆய்விட்டன என்றால் கடவுள் சக்தியும் பெருமையும் எப்படிப்பட்டது பார். அப்புறம்?
க.சொ: அப்புறம்தான் விசேஷமான வேலை செய்கிறார். அதாவது ஆறாவது நாள் உட்கார்ந்து யோசித்து யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து மிருகங்களும் மனிதர்களும் உண்டாகக் கடவது என்றார். உடனே மிருகங்களும் மனிதர்களும் உண்டாகிவிட்டார்கள்.
க.கே: அப்பாடா! கடவுள் வெகு பிரயாசைப்பட்டிருக்கிறாரே ஒரு வாரம் போல் 6 நாள் விடாமல் கஷ்டப்பட்டு வெளிச்சம், சமம், காற்று, பூமி, சமுத்திரம், செடிகள், சூரியன், நக்ஷத்திரம், சந்திரன், மீன்கள், பட்சிகள், மிருகங்கள், மனிதர்கள் ஆகிய எவ்வளவு பண்டங்களையும், ஜீவன்களையும் சிருஷ்டித்திருக்கிறார். என்ன கஷ்டம்? இதற்கு ஆக அவருக்கு களைப்பு இளைப்பு ஏற்படவில்லையா?
க.சொ: ஓடாதே சொல்லுகிறேன் கேள். நமக்கு இருக்கிற புத்தி கடவுளுக்கு இருக்காதா? ஏழாவது நாள் ஓய்வு எடுத்துக்கொண்டார். அதனால் தான் இப்போது கூட ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள் ஆகக் கருதப்படுகிறது.
க.கே: சரி புரிஞ்சது. கடவுள் தயவினால் வேலை செய்யாதவன் கூட இப்பொழுது ஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுத்துக் கொள்ளுகிறான். கடவுள் எவ்வளவு கருணை உடையவர்? சரி. அப்புறம்.
க.சொ: மனிதரை கடவுள் சிருஷ்டித்தாரென்றால் எப்படி சிருஷ்டித்தார் தெரியுமா?
க.கே: அதை கேட்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். நீ அதை அதிகப் பிரசங்க கேள்வி என்று சொல்லிவிடுவாயே என்று விட்டு விட்டேன். ஆனாலும் நல்லவேளையாய் நீயே சொல்லப் புறப்பட்டுவிட்டால் அதுவும் அந்தக்கடவுள் செயலாகத்தான் இருக்கவேண்டும். சொல்லு, சொல்லு.
க.சொ: முதல் முதலில் ஒரே ஒரு மனிதனை சிருஷ்டித்தார். பிறகு அவனுடைய விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்து அந்த எலும்பிலிருந்து ஒரு பெண்ணை சிருஷ்டித்து இரண்டுபேரையும் ஷோக்காய் ஒரு நந்தவனத்தில் உலாவச் சொன்னார். அந்த நந்தவனத்தில் சில பழச்செடிகள் இருந்தன. அந்த பழச்செடிகளில் ஒரு பழச்செடியின் பழத்தை சாப்பிடக் கூடாது என்று கடவுள் அந்த ஆண் பெண் இருவருக்கும் சொல்லி வைத்தார். கடசியாக அந்த ஜோடி கடவுள் வார்த்தையைத் தட்டிவிட்டு பிசாசு வார்த்தையைக் கேட்டு அந்தப் பழத்தை சாப்பிட்டு விட்டது.
க.கே: நில்லு, நில்லு. இங்கே எனக்கு கோபம் வருகிறது. அந்தக் கோபம் ஆறினால் தான் மேல்கொண்டு கதை கேட்க முடியும்.
க.சொ: என்ன கோபம்?
க.கே: அதெப்படி? அங்கே சாத்தான் வந்தான். அவனை யார் சிருஷ்டித்தது? மேல்படி 6நாள் வேலையிலும் கடவுள் சாத்தானை சிருஷ்டிக்கவே இல்லையே. அந்தப்பயலை வேறு எந்தப் பயலோ சிருஷ்டித்தல்லவா கடவுளுடன் போட்டி போட அந்த நந்தவனத்துக்கு அனுப்பி யிருக்கவேண்டும்? அந்த பயலைக்கண்டு பிடித்து அவனுக்கு தகுந்த புத்தி கற்பிக்க வேண்டாமா? ஒரு சமயம் கடவுளும் தனது பெருந்தன்மையில் அந்த சாத்தானையும் அவனை சிருஷ்டித்த மற்றொரு சாத்தானையும் சும்மா விட்டிருப்பார். நமக்கு புத்தியும் ரோசமும் வேண்டாமா? அந்த சாத்தானையும் அவனைச் சிருஷ்டித்தவனையும் கண்டு பிடித்து தகுந்தபடி புத்தி கற்பிக்கா விட்டால் நமக்கும் மற்ற மிருங்களுக்கும் என்ன வித்தியாசம்? இதுதான் என்னுடைய ஆத்திரம். இதற்கு ஒரு வழி சொல்லு. எனக்கு கோபம் வந்து வந்து போகிறது.
க.சொ: ஆத்திரப்படாதே. நான் சொல்வதை பூராவும் கேள். பிறகு அதைப் பற்றி யோசிக்கலாம்.
க.கே: சரி, சொல்லித்தொலை, நமக்கென்ன மானமா, வெட்கமா, அறிவா என்ன இருக்கிறது? எவன் வந்து என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டு சாமி மாடுமாதிரி தலையை ஆட்ட வேண்டியது தானே. அப்புறம்?
க.சொ: அந்தப்பழத்தைச் சாப்பிட்ட இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.
க.கே: ஆளுக்கு ஒரு குழந்தையா?
க.சொ: இரண்டுபேருக்கும் சேர்ந்து இரண்டு குழந்தைகள் பிறந்தன.
க.கே: சரி அப்புறம் என்ன ஆச்சுது?
க.சொ: என்ன ஆவது? பிசாசு பேச்சைக் கேட்பதால் பிறந்த பிள்ளை யோக்கியமாக இருக்குமா? அவைகள் ஒன்றோடொன்று சண்டை இட்டுக் கொண்டு இளையது மூத்ததைக் கொன்று விட்டது.
க.கே: காலம் கலிகாலமல்லவா? மூத்தது மோளை, இளையது காளை. கொல்லாமல் இருக்குமா? அப்புறம்?
க.சொ: இளையவனைக் கடவுள் உன் அண்ணன் எங்கே என்று கேட்டார். இளையவன் எனக்குத் தெரியாது என்று சொன்னார். உடனே கடவுள் கோபித்துக்கொண்டு அந்த ஆதி ஆண் பெண் ஆகியவர்களிடத்தில் மறுபடியும் ஒரு குழந்தை உண்டாகும்படி செய்தார்.
க.கே: எப்படியோ செய்தார், அப்புறம்?
க.சொ: இதற்குள்ளாக கொச கொசவென்று குழந்தைகள் பெருகி விட்டன. இவைகள் எல்லாம் அயோக்கியர்களாக இருந்தன. இவைகளில் ஒன்று தவிர மற்றவைகள் எல்லாம் இறந்து போயின.
க.கே: ஐயையோ! அப்புறம் கடவுள் என்ன செய்தார்?
க.சொ: என்ன செய்தார். மிஞ்சின குழந்தையை ஒரு கப்பல் தயார் செய்யச் செய்து அதில் கடவுள் முன் உற்பத்தி செய்த பொருள்களையெல்லாம் ஏற்றிக்கொண்டு தண்ணீரில் மிதக்கச் சொன்னார். அந்தப்படியே மிதங்கினான். இந்த சந்தர்ப்பத்தில் பெரிய மழை பெய்து எங்கும் பிரளயமாக ஆகி உலகமே அழிந்து விட்டது. இந்தக் கப்பல் மாத்திரம் மிஞ்சிற்று. மீதியான கப்பலினாலும் அதிலிருந்தவர்களாலும் இப்பொழுது காணப்படுகிற உலகமும் அதிலுள்ள சகலமும் உண்டாயின.
க.கே: அந்தக் கப்பலில் சந்திரன், சூரியன், நட்சத்திரம் முதலிய எல்லாம் ஏற்றப்பட்டு எல்லாம் முழுகிப் போச்சாக்கும்.
க.சொ: ஆம் எல்லாம் அடியோடு முழுகிவிட்டன.
க.கே: போதுமப்பா, இன்னம் இதற்கு மேல் சொன்னால் என்னால் கேட்க முடியாது. நல்ல தங்கமான கதை இது.
க.சொ: சரி. அப்படியானால் இப்போது நிறுத்தி விட்டு மற்றொரு நாளைக்கு இன்னொரு கடவுளுடைய கதையை நான் சொல்லுகிறேன் நீ கேளு.
பகுத்தறிவு (மா.இ.) உரையாடல் மே 1936
~cstart
இராமனுக்கு சீதை தங்கை
இராவணனுக்கு சீதை மகள்
இராமனுக்கு நான்கு பெண்டாட்டிகள்
~cmatter
இராமாயணம் என்பது சூரிய குல அரசர்களின் சரித்திரங்களில் ஒன்று என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இராமாயணம் என்னும் பெயரால் பல நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் இருந்ததாகவும், நூறு கோடிக்கணக்கான சுலோகங்கள் இருந்ததாகவும், அவைகள் காலப் போக்கில் பல “தெய்வீக காரணங்களால் மறைந்து போய் விட்டன” வென்றும், ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றை தோழர் கோவிந்ததாஸ் அவர்கள் வட இந்தியாவிலுள்ள ஒரு மடத்தில் தாமே நேரில் பார்த்ததாகவும் தாம் எழுதிய “இந்து மதம்” என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
அதை அனுசரித்தே சென்னை மைலாப்பூர் “ராமாயண விலாசம்” என்னும் கிருகத்தில் உள்ள இராமாயணப் பிரசுர கர்த்தாவாகிய திரு. சி.ஆர். சீனிவாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப்பட்டு 1928ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தியிருக்கும் “இதர ராமாயணங்கள்” என்னும் புஸ்தகத்தில் மேல்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு முதல் தடவையாக நான்கு இராமாயணங்கள் அதில் விவரிக்கப்பட்டு வெளியிடப் பட்டிருக்கின்றன. (அப்புத்தகத்தின் விலை ரூ 1.) அவையாவன: ஜைன ராமாயணம், பௌத்த ராமாயணம், யவன ராமாயணம், கிறைஸ்த ராமாயணம் என்பவைகளாகும்.
இவற்றுள் யவன ராமாயணம், கிறைஸ்த ராமாயணம் ஆகியவைகள் பெரும்பாலும் இராமாயணக் கதையைப் போன்ற போக்கில் இருந்தாலும் கதைகளில் வரும் பாத்திரங்களின் பெயரும் மற்ற சில்லறை விஷயங்களும் பெரிதும் மாறுபட்டு அந்தந்த பாஷைக்கு ஏற்ற பெயர்களாக இருப்பதால் அதை நாம் இதில் எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு உபயோகித்துக் கொள்ள விரும்பவில்லை.
ஆனால் மற்ற இரண்டும் அதாவது ஜைன பௌத்த ராமாயணங்கள் பெரிதும் கதைப் போக்கிலும் பெயர்களிலும் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. ஆனால் சில்லறை விஷயத்தில் மாத்திரம் பல விஷயங்கள் மாறுபட்டிருக்கின்றன.
அதில் ஜைன ராமாயணம் என்பது இப்போதும் அடையாற்றுப் புத்தகசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக பதிப்பாசிரியரே எழுதியிருக்கிறார். அதில் தசரதன், ராவணன் முதலியவர்களுடைய சந்ததிக்கிரமம், பிறப்பு, வளர்ப்பு முதலியவைகளும் சிறிது வித்தியாசப்பட்டாலும், மூல புருஷனாகிய தசரதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும், அவர்களின் பெயர்கள் 1. அபாரஜிதை, 2. சுமத்ரை, 3. கைகேயி, 4. சுப்ரபை என்றும் குறிப்பிட்டு விட்டு கைகேயிக்கு தசரதன் கொடுத்த இரண்டு வரத்தையும் அப்படியே குறித்திருப்பதுடன், அபராஜிதைக்கு ராமன் பிறந்ததாகவும், சுமத்திரைக்கு லக்ஷ்மணன் பிறந்ததாகவும், கைகேயிக்கு பரதன் பிறந்ததாகவும், சுப்ரபைக்கு சத்துருக்கன் பிறந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.
இது போலவே சீதையை ஜனகராஜனுடைய மகள் என்றும், வில்லை வளைப்பவனுக்கு ஜனகன் சீதையைக் கொடுப்பதாக நிபந்தனை வைத்திருந்தானென்றும், ஆகவே, வில்லை வளைத்தே ராமன் சீதையை மணந்தான் என்றும், லக்ஷ்மணனுக்கு 18 பெண்சாதிகள் என்றும், பரதனுக்கு ஜனகனுடைய சகோதரரின் குமாரத்தி கொடுக்கப்பட்டா ளென்றும் சொல்லப் பட்டிருக்கின்றது.
மற்ற பட்டாபிஷேகக் கதையும் வால்மீகி ராமாயணத்தைப் போலவே இருந்தாலும் சிறு சிறு மாறுதல்களுடன், தபசு செய்ததற்காக சம்பூகன் வதைக்கப் பட்டதும் குறிக்கப்பட்டிருப்பதோடு இராமனுக்கு நான்கு பெண்சாதிகள் என்றும், அவர்களின் பெயர் 1 சீதை, 2 பிரபாவதி, 3 ரதினிபா, 4 ஸ்ரீ தாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரம் வால்மீகி இராமாயணத்திலும் கூட இருக்கிறது.
~subhead
பௌத்த ராமாயணம்
~shend
பௌத்த ராமாயணத்திலும், தசரத ராஜனுக்கு பதினாயிரம் மனைவிகள் என்றும், அவர்களில் மூத்தவளுக்கு ராமன் லக்ஷ்மணன் என்பவர்களான இரண்டு ஆணும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும் அடுத்த மனைவிக்கு பரதன் என்கின்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும், அரசன் பரதனுக்குப் பட்டங் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்தான் என்றும், ஆனால் அரசன் அந்தப்படி செய்யாமல் ராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான் என்றும், இளைய மனைவி கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்து விட்டு ராமன், லக்ஷ்மணன், சீதை ஆகிய சகோதர சகோதரிகளை பரதன் கொன்று விடுவான் எனப் பயந்து காட்டுக்கனுப்பி விட்டான் என்றும், பரதன் தமயனைத் தேடிக் காட்டுக்குப் போய் ராமனையே பட்டத்தை ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் தான் நாட்டுக்குத் திரும்பி வர முடியுமென்றதாகவும், அதுவரை அவனது பாதரட்சையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி பரதன் கேட்டு வாங்கி அழைத்துவந்ததாகவும், பன்னிரண்டு வருஷமான பின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர்ஜனங்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவளது தமையனாகிய ராமனுக்குக் கலியாணம் செய்வித்து பட்டங் கட்டினதாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
இவைகளை மெய்ப்பிக்க தோழர் அய்யங்கார், அந்தக்காலத்தில் அண்ணனும் தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும், எகிப்து தேச ராஜதர்மமே சகோதரியை மணப்பது தான் என்றும் இதை அறிந்து தான் ரிக்வேதம் 10வது மண்டலத்தில் 10, 12 சுலோகங்களில் சகோதரியை மணப்பது கண்டிக்கப் பட்டிருக்கிறதென்றும், அதற்கு முன் அவ்வழக்கமிருந்து வந்ததற்கும் மேலும் ஆதாரமாக சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எழுதியிருக்கின்றார்.
தோழர் சி.ஆர். சீனிவாசய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வால்மீகி ராமாயணம் பின் பகுதிக் குறிப்பு 431ம் பக்கத்தில், சீதை தசரதனுடைய மகள் என்றும், அவளை தசரதன் ஜனகனுக்குத் தானம் கொடுத்தார் என்றும், அவள் பூமியில் பட்டால் பூமி இழுத்துக்கொள்ளும் என்றும், ஆதலால் பூமியில் விடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் தசரதன் கொடுத்தான் என்றும், தசரதன் இல்லாதபோது ஒரு நாள் சீதை பூமியின் மீது நின்றுவிட்டாள் என்றும், அதனால் அவள் பூமிக்குள் மறைந்து போய்விட்டாள் என்றும், பிறகு கொஞ்ச காலம் பொறுத்து ஜனகன் பூமியை உழும்போது சீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டு ஜனகனால் எடுத்து வளர்க்கப்பட்டாள் என்றும், ஆனால் ஜனகனுக்கு அவள் தான் முன் வளர்த்து வந்த சீதை என்று தோன்றவில்லை யென்றும், ஆகவே அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டு விட்டு, இந்த விஷயம் வசிஷ்ட புராணத்திலும், ஸ்கண்டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அன்றியும் இதே தோழர் சீனிவாசய்யங்கார், “எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவனது மனைவியைத் தூக்கிக்கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு” என்று ராவணனுக்கும் ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்திருந்ததாகவும், அந்தச் சாபத்தின் பலனாய் ராவணனானவன் ராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்து கொண்ட விஷயம் தெரியாமல் சீதையை தூக்கிக்கொண்டு போனதாகவும், அதனாலேயே ராவணன் ராமனால் கொல்லப்பட்டதாகவும், ராவணனுக்கு உண்மையில் ராமன் தன் தங்கையைக் கட்டிக்கொண்டது தெரியாதென்றும், தெரிந்திருந்தால் சீதையைத் தொட்டிருக்க மாட்டான் என்றும், இந்த உண்மைகள் பார்க்கவ புராணத்தில் இருப்பதாகவும் மேற்கண்ட 431ம் பக்கத்திலேயே குறிப்பிட்டிருக்கின்றார்.
மற்றும் இதே தோழர் சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே சீதை ராவணன் மகள் என்றும், அவள் பிறந்த காலதோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னதாகவும் அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டுபோய் எறிந்து விட்டதாகவும், அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக்கொண்டு வரப்பட்டதாகவும், அதை ஜனகன் கண்டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததாகவும், ராமனும் சீதையும் வனத்திலிருக்கும்போது ராவணன் சீதையைத் தன் மகள் என்று தெரியாமல் எடுத்துக்கொண்டு வந்து விட்டதாகவும், குறிப்பிட்டு விட்டு இந்த உண்மை மவுட்கலிய ராமாயணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவைகள் உண்மையாய் இருக்கலாம் என்பதற்கு அவர் ஒரு யுக்தி காரணமும் சொல்லுகிறார். அதாவது, “சீதையின் பிறப்பைப் பற்றியோ, அவளுடைய பழைய சந்ததியைப் பற்றியோ வால்மீகர் எங்கும் ஒரு வரிகூட எழுதவில்லை. ஆதலால் இந்தக் கூற்றுக்கள் உண்மையாக இருக்கலாம்” என்கின்றார்.
எனவே சீதை தசரதனுக்கு மகள் என்பதற்கும், ராமனுக்குத் தங்கை என்பதற்கும் இதுவரை 4, 5 ஆதாரங்களும், ராவணனுக்கு மகள் என்பதற்கு இரண்டு ஆதாரங்களும் கிடைக்கின்றன. இன்னமும் மற்ற ராமாயணங்களில் என்னென்ன பந்தத்வங்களும் இருக்குமென்பது ஊகிக்கக்கூட வில்லை.
(இக்கட்டுரை “ஆனந்த விகடன்” அனுபந்தத்திற்கு எழுதப்பட்டதாகும்.)
பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை மே 1936