விருதுநகரில் ஜஸ்டிஸ் கட்சிப் பொதுக்கூட்டம்
அரசியல் பித்தலாட்டம்
ஒரு நாட்டு மக்கள் முன்னேற வேண்டுமானால் அரசியலில் கட்சி, பிரதிகட்சி இருக்க வேண்டியதும், அவை ஒன்றுடன் ஒன்று போராட வேண்டியதும் நியாயமும் இயற்கையுமேயாகும். ஆனால் அவ்வித போராட்டமானது நியாயமான முறையிலும் ஒருவரை ஒருவர் துஷ்பிரசாரம் செய்யாமலும் இருப்பதே வரவேற்கத்தக்க விஷயமாகும். ஒரு கட்சியை மற்றொரு கட்சி தாக்குவதும் துஷ்டப் பிரசாரம் செய்வதும் ஒரு நிமிஷமும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாத காரியமாகும். நமது மாகாணத்தைப் பொறுத்த வரையில் காங்கிரசானது ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்வதையே தன் தொழிலாகக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சென்ற இந்திய சட்டசபை தேர்தலுக்குப் பின் ஜஸ்டிஸ் கட்சி அழிக்கப்பட்டு விட்டதாகவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒன்றுதான் இருப்பதாகவும் உண்மைக்கு மாறாக தோழர் சத்தியமூர்த்தி முதல் சாதாரணத் தொண்டர் வரை தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால், புதியதாக ஜனக்கட்சி ஆரம்பிக்கப்பட்டவுடன் தமிழ்நாட்டில் ஜஸ்டிஸ் காங்கிரஸ் என்ற இரண்டு கட்சிகள் இருப்பதாகவும், இந்நிலையில் மூன்றாவது கட்சிக்கு அவசியமில்லை என்று ஜஸ்டிஸ்கட்சியை ஒப்புக்கொண்டும் ஜனக்கட்சியை எதிர்த்தும் பேசுகிறார்கள். 500 கஜ ஆழத்தில் புதைக்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சி இன்று எப்படித் தோன்றிற்று? இதைத்தான் காங்கிரசின் அரசியல் பித்தலாட்டம் என்று கூறுகிறேன்.
~subhead
காங்கிரஸ் மந்திரி சபை நிலைக்குமா?
~shend
ஜஸ்டிஸ் கட்சியார் சென்ற 14 வருஷகாலமாக நிர்வாக பதவிகளை ஏற்று அரசியல் பொறுப்புதாரிகளாக இருந்து வருகிறார்கள். அரசாங்கத்தை ஏற்று நடத்தும் எந்தக் கட்சியாருக்கும். மற்றக் கட்சிகளை விட பொறுப்பு அதிகம். அவர்கள் பேசுவதும் செய்வதும் மிகவும் ஜாக்கிரதையுடன் செய்யவேண்டும். அவர்கள் கூறும் வாக்குறுதி எல்லாம் கூடுமான வரை அவர்களால் நிறைவேற்ற முடிந்தவைகளாக யிருக்கவேண்டும். அப்படி யில்லாமல் ஜனங்களைக் கவர்ச்சி செய்வதற்காக வேண்டி வானத்தை வில்லாய் வளைப்போம், மணலைக் கயிறாய்த் திரிப்போம் என்று கூறினால் நாளடைவில் அக்கட்சியின் நிலைமைக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும். ஆகையால், நிர்வாகத்தை நமது மாகாணத்தில் நடத்த வந்த ஜஸ்டிஸ் கட்சியும் தன்னால் கூடிய வரையில் சாதிக்கக் கூடிய திட்டங்களைக் கூறி நிறைவேற்றிக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால் புதிதாக தேர்தல் பிரசாரம் நடத்திவரும் காங்கிரசானது தான் போகுமிடங்களில் எல்லாம் ஸ்தலத்தில் உள்ள குறைபாடுகளுக்கெல்லாம் ஜஸ்டிஸ் கட்சிதான் காரணம் என்று கூறுகிறது. காலரா உள்ள ஊருக்குப் போனால் காலராவுக்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சி என்றும், தண்ணீர்க் கஷ்டம் இருந்தால் அதற்கும் காரணம் ஜஸ்டிஸ் கட்சி என்றும் கூறுகிறார்கள். இயற்கையாக ஏற்படும் காலராவுக்கும் ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லாவிட்டாலும், இரண்டையும் பிணைத்துத் திரித்துக் கூறுவதில் காங்கிரஸ் பின் வாங்குவதில்லை. தோழர் சத்தியமூர்த்தி அய்யர் மானா மதுரையில் பிரசங்கம் செய்யும்போது காங்கிரசுக்கு ஓட்டுச் செய்தால் வானத்திலிருந்து மழையை வருவித்து விடலாம் என்றும், சேலத்தில் பேசும்போது, காங்கிரசுக்கு ஓட்டுச் செய்தால் மேட்டூர் தண்ணீரைக் கொண்டு வந்து விடுவோம் என்றும் பேசுகிறார். இது சாத்தியமா? மேட்டூரை விட சேலம் உயர்ந்திருக்கும் போது மேட்டூரிலிருந்து எவ்வாறு கொண்டு வருவது? இது போல் பல சாத்தியமில்லாத வாக்குறுதிகளை பாமர ஜனங்களிடம் காங்கிரஸ்காரர் கூறிவருகிறார்கள். ஜஸ்டிஸ் மந்திரிகள் இதே விஷயங்களைப் பற்றி பேசுவதாயிருந்தால், பணமிருந்தால் வாய்க்கால் வெட்டி மானாமதுரைக்கு ஜலம் கொண்டு வருவோமென்று சொல்லுவார்கள். இதுதான் சாத்தியமாயிருந்தாலும், காங்கிரசின் வாக்குறுதியைப் போல் அவ்வளவு கவர்ச்சியுடையதாகத் தோன்றாது.
ஆகவே, மக்களின் ஆதரவு ஒரு வேளை காங்கிரசுக்கு அதிகமாகி, அவர்கள் சட்டசபைகளில் மெஜாரிட்டி கட்சியினராக வந்தாலும் அவர்களுடைய மந்திரி சபை அல்லது அவர்களுடைய ஆதரவைப் பெறும் எந்த மந்திரி சபையும் ஆறுமாத காலத்திற்கு மேல் நிலைத்திருக்க முடியாது என்று உறுதியாய்க் கூறுகிறேன். அவர்கள் அதிகாரத்திற்கு வந்த சில நாட்களிலெல்லாம் தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன என்பது நிதர்சனமாகிவிடும். அவர்கள் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதை அவர்களே உணர்வார்கள். ஆகவே ஜனங்களின் ஆதரவை இழந்து மந்திரிசபையும் கவிழ்க்கப்படவேண்டிய நிலைமை வந்துவிடும். இப்பொழுதே அவர்கள் வெற்றி பெற்றுள்ள ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களில் அழுகல் நாற்றம் வீச ஆரம்பித்துவிட்டதே இதற்குப் போதிய சாட்சி.
~subhead
அவர்களின் திட்டம் என்ன?
~shend
1920 முதல் 1936 வரை காங்கிரஸ் அனுசரித்து வந்த கொள்கை என்ன? ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கை என்ன என்பதை நீங்கள் ஆராய்ச்சி செய்து பார்த்தால் இந்தப் பதினாறு வருடங்களில் ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளையே காங்கிரஸ் காப்பியடித்துக் கொண்டு வருவது புலனாகும். இந்தக் காலவரைக்குள் எந்தக் கட்சி கொள்கைகளை சமயோசிதம் போல் மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். செம்ஸ்போர்டு சீர்திருத்தம் அமுலுக்கு வந்த காலத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் வீதாச்சாரப்படி உரிமை வழங்க அரசாங்கத்தாருடன் போராடுவதே தங்கள் பிரதம கொள்கை என பிரசாரம் செய்து தேர்தலில் வெற்றியும் பெற்று மந்திரிசபையும் அமைத்தார்கள். அதன் மூலமாக ஜஸ்டிஸ்கட்சிக்கு ஒடுக்கப்பட்டவர்களின் உதவியும் முஸ்லீம்களின் உதவியும் கிடைக்க காங்கிரஸ்வாதிகள், தீண்டாமை ஒழிப்பும், இந்து முஸ்லீம் ஒற்றுமையும் தங்கள் திட்டங்களில் சேர்த்துக்கொண்டனர். அதற்கு மேலும் ஜஸ்டிஸ் கட்சிக்கு மக்களின் உதவி பெருகிக்கொண்டு பிராமணரல்லாதார் எல்லாத் துறையிலும் முன்னேறி வருவதைச் சகிக்க முடியாமல் காங்கிரஸ் பிராமணர்கள் பகிஷ்கார இயக்கத்தைத் தங்கள் திட்டத்தில் சேர்த்துக் கொண்டனர். பள்ளி பகிஷ்காரம், கோர்ட் பகிஷ்காரம், சட்டசபை பகிஷ்காரம் என்றனர். இதன் மூலம் பிராமணரல்லாதாரின் முற்போக்கைத் தடைப்படுத்தலாமென்று எண்ணி அதில் சிறிது வெற்றியும் பெற்றார்கள். அதை நம்பி ஜனங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டினர். தங்கள் தொழில்களையும், படிப்பையும் விட்டுவிட்டனர். என் சொந்த அனுபவத்தில் தெரிந்த வரை பலர் தங்கள் வாழ்க்கையையே பாழாக்கிவிட்டார்கள். முடிவு என்ன? காங்கிரஸ் நாளடைவில் தன் கொள்கையைத் தளர்த்திவிட்டது. 1923ல் நடந்த தேர்தலில் எங்களுக்கு ஓட்டுக்கொடுங்கள் என்று கழுதையில் எழுதித் தொங்கவிட்டார்கள். அரசாங்கத்தார். இன்ன இன்ன காரியங்களைச் செய்து கொடுக்காவிட்டால், அவர்களுடன் ஒத்துழைக்க முடியாது என்று டம்பமாய் பிரசாரம் செய்தனர். இதைக் கண்டு அரசியல் ஞானமுள்ள ஜஸ்டிஸ் கட்சியினர் இவைகள் எல்லாம் சாத்தியமில்லாதவை என்று அப்பொழுதே கூறிக்கொண்டே வந்தனர். இப்பொழுது ஜஸ்டிஸ் கட்சியார் கூறியவை உண்மை என்று வெளிப்பட்டுவிட்டது. புதிய சீர்திருத்தம் அமுலுக்கு வரவிருக்கும் இப்பொழுது காங்கிரசார், சட்டமறுப்பைக் கைவிட்டுவிட்டோம் என்றும் அரசாங்கத்தாரை எதிர்ப்பதில்லை என்றும், சட்டசபைகளைக் கைப்பற்றித் தீரவேண்டும் என்றும், அதிலும் மந்திரிசபையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வரவேண்டியதாயிற்று. இந்த நிலைமையில் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களை பதவி வேட்டைக்காரர் என்றும் சர்க்கார் தாசர்கள் என்றும் கூறுவதில் அர்த்தம் என்ன?
~subhead
வட்டமேஜை மாநாட்டு அலங்கோலம்
~shend
முதலாவது வட்டமேஜை மகாநாடு நடந்துவந்தபோது அதைக் குலாம்கள் மகாநாடு என்று கூறி, அதற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து ஜெயிலுக்கும் போனார்கள். அப்பேற்பட்டவர்கள் இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டில் தோழர் காந்தியே ஜெயிலுக்குப் போனவர்களை விடுவித்தால், தான் வட்டமேஜை மகாநாட்டுக்கு வரத் தயாராயிருப்பதாயும் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்தார். அந்த ஒப்பந்தத்தில் இனி காங்கிரஸ்வாதிகள் சட்ட மறுப்பு செய்வதில்லை என்றும், மறியலும் செய்வதில்லை என்றும், வட்டமேஜை மகாநாட்டில் இதுவரை செய்ததைப் பற்றிப் பேசுவதில்லை என்றும் தோழர் காந்தி கை எழுத்திட்டார். இதையும் காங்கிரஸ்வாதிகள் தோல்வியென்று ஒப்புக்கொள்ளாமல் வெற்றி என்றே பிரமாதப்படுத்தி வந்தனர். இவ்வித இழிவான ஒப்பந்தத்தை ஜஸ்டிஸ் கட்சியார் செய்திருந்தால் காங்கிரஸ்வாதிகள் அரசியல் உலகத்தையே ஒரு கலக்கு கலக்கிவிடுவார்கள்.
~subhead
அம்பேத்காரிடம் சரணாகதி
~shend
வட்டமேஜை மகாநாட்டிற்கு முன் பொறுப்பற்ற அரசியல் கிளர்ச்சியை தோழர் காந்தி நடத்தி வந்த காலத்தில், தீண்டாமை ஒழிந்த பின்னும், இந்து முஸ்லீம் ஒற்றுமையேற்பட்ட பின்பும் வரும் சுயராஜ்யம்தான் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று சொன்னார். ஆனால் வட்டமேஜை மகாநாட்டில் அம்பேத்கார் சார்பாக தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளையும் ஜின்னா மூலமாக முஸ்லீம்கள் பிரச்சினையையும் தீர்த்துக்கொள்ள முடியாத காந்தியார், தீண்டாமை, இந்து முஸ்லீம் வேற்றுமை முதலியவைகள் குடும்ப விவகாரங்கள் என்றும், சுயராஜ்யம் முதலில் வந்துவிட்டால் இவைகளை எளிதில் தீர்த்துவிடலாம் என்றும் கூறி இந்தியாவிற்கு வெறுங் கையுடன் திரும்பினார்.
வட்டமேஜை மகாநாட்டில் அம்பேத்காரை தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ள மறுத்த காந்தியார், இந்தியா வந்தவுடன் அவரிடம் சரணாகதியடைந்து, அவருடன் பூனாவில் ஒப்பந்தமும் செய்துகொள்ள நேரிட்டது. முஸ்லீம்கள் சார்பாக ஜின்னாவின் சார்பான கோரிக்கைகளை காங்கிரஸ் எதிர்க்க சக்தி அற்று வகுப்புத்தீர்ப்பு விஷயத்தில் சுவரின் மேல் பூனைபோல் இருந்து கொண்டிருக்கிறது. முஸ்லீம்கள் என்றால் காங்கிரசுக்குப் பயம். முஸ்லீம்கள், தாழ்த்தப்பட்டவர்களும் தங்கள் உரிமையைப் பாதுகாக்கக் கோரியது போலவே பிராமணரல்லாதார் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று தோழர் பாத்ரோவும் தோழர் ராமசாமி முதலியாரும் வட்டமேஜை மகாநாட்டில் விரும்பினர். இதில் என்ன குற்றமிருக்கிறது? பிராமணரல்லாதார் விஷயத்தில் மட்டும் காங்கிரஸ் வழவழாவாயிருப்பதற்குக் காரணம் என்ன?
~subhead
உத்தியோக மேற்பு
~shend
காங்கிரஸ்காரர்கள் தங்கள் லட்சியம் பூரண சுயராஜ்யம் என்கிறார்கள். ஜஸ்டிஸ்கட்சியார் குடியேற்ற நாட்டந்தஸ்து என்று சொல்லுகிறார்கள். பூரண சுயராஜ்யம் என்றால் குடியேற்ற நாட்டந்தஸ்தைப் போன்றது தான் என்று சமீபத்தில் தோழர் சத்தியமூர்த்தி தமது ஆனைமலைப் பிரசங்கத்தில் கூறிவிட்டார். ஆகவே காங்கிரஸின் சுயராஜ்யத்திற்கும் ஜஸ்டிஸின் சுயராஜ்யத்திற்கும் என்ன வித்தியாசமிருக்கிறது?
உத்தியோகம் ஏற்கும் விஷயத்தில் நமக்கும் அவருக்கும் வித்தியாச மில்லை. ஆனால் காங்கிரஸ் உத்தியோகம் ஏற்பது என்றால் சீர்திருத்தத்தை உடைத்தெரிவதற்கு என்றும் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பது சீர்திருத்தத்தை நடத்துவதற்கு என்றும் கூறுகிறார்கள். இது முற்றிலும் ஏமாற்று. உத்தியோகம் ஏற்றுக் கொண்டுவிட்டால் சீர்திருத்தத்தை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. தோழர் சத்தியமூர்த்திக்கும் இது தெரியும். மந்திரி ராஜனின் வாடிப்பட்டிப் பிரசங்கத்திற்கு சிம்லாவிலிருந்து அவர் அனுப்பியிருக்கும் பதிலை, சீர்திருத்தத்தின் மூலமாக கூடுமானவரை ஜனங்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பதற்காகவே நாங்கள் உத்தியோகம் ஏற்கவேண்டும் என்று கூறுகின்றோம் என்று கூறுவதிலிருந்து, அவர் சீர்திருத்தத்தை நடத்தத் தயாராகவிருப்பது புலனாகும். ஆகவே முட்டுக்கட்டை என்பதெல்லாம் ஹம்பக் என்பதுடன், உத்தியோக ஏற்பிற்கு காங்கிரசின் அனுமதியைப் பெறச் செய்யும் சூழ்ச்சியே யாகும்.
~subhead
ஜஸ்டிஸ் கட்சிக்குத் திட்டமில்லையா?
~shend
ஜஸ்டிஸ் கட்சிக்கு எந்தவிதமான வேலைத்திட்டமும் இல்லை என்றும், அது உத்தியோக வேட்டையாளர்களின் மண்டலம் என்றும் துஷ்டப்பிரசாரம் செய்யப்படுகிறது. அதே சமயத்தில் என்னுடைய திட்டத்தை விருதுநகர் மாநாட்டில் ஜஸ்டிஸ்கட்சியார் ஒப்புக்கொண்ட உடன் அவர்கள் காங்கிரசின் கராச்சித் திட்டத்தை திருடிவிட்டார்கள் என்று தோழர் ராஜகோபாலாச்சாரி புகார் கூறினார். உண்மையில் நாங்கள் எதையும் திருடவில்லையானாலும், திருடிக் கொண்டதாக வைத்துக்கொண்டால், அவர்களுடைய திட்டமும் எங்களுடைய திட்டமும் ஒன்று என்றும், எங்களுக்கு ஏதாவது திட்டம் இருக்கிறது என்றும் தானே அருத்தமாகிறது. அப்படியிருக்கையில் ஜஸ்டிஸ் கட்சி பிற்போக்கானது என்றும், அதற்கு எவ்வித திட்டமும் இல்லை என்றும் எப்படிக் கூறுவது?
~subhead
கட்சிக் கட்டுப்பாடு
~shend
காங்கிரஸில் கட்டுப்பாடு இருப்பதாகவும், வேறு கட்சிகளில் அவ்விதம் இல்லை என்றும் கூறப்படுகிறது, புதிய சீர்திருத்த விஷயத்தில் மாகாணங்கள் தோறும் காங்கிரசில் அபிப்பிராய பேதங்கள் இருப்பதும் ஒவ்வொரு மாகாணத்திலும் தலைவர்களிடத்தில் அபிப்பிராய பேதமிருந்து வருவதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பண்டித ஜவஹர்லால் நேரு சமதர்மப் பிரசாரம் செய்கிறார். அவரைத்தவிர மற்றவர்களெல்லாம் அதை எதிர்க்கிறார்கள். நமது மாகாணத்தில் தோழர் சத்தியமூர்த்தி, தோழர் ஜவஹர்லாலின் தியாகத்தை ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை. பண்டித மோதிலால் நேருவின் தியாகத்திற்காகவே தோழர் ஜவஹரை காங்கிரஸ் தலைவராக்கினதாகக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலைமையில் தோழர் ஜவஹர்லால் நேருவை காங்கிரசின் தலைவராக தோழர் சத்தியமூர்த்தி அய்யர் ஒப்புக் கொள்ளுகிறாரா?
~subhead
திலகர் நிதி
~shend
திலகர் நிதி திருட்டைப்பற்றி விபரம் கேட்டால், தோழர் ஜவஹர்லால் நேரு, தேர்தலில் காங்கிரசை முறியடிப்பதற்காகவே இவ்வித துஷ்டப் பிரசாரம் செய்யப்படுவதாகவும். ஆகையால் திலகர் நிதிக்கு உதவி செய்யாதவர்கள் இதைப்பற்றி புகார் செய்ய உரிமையில்லை என்றும், அவ்விதம் செய்தால் கோர்ட்டுக்கு போக நேரிடுமென்றும் பயமுறுத்துகிறார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே வீழ்த்திவிடவேண்டும் என்று கூறும் வீரர், இவ்விதம் பயமுறுத்துவதானது அவர்களுடைய பலஹீனத்தையே காட்டுகிறது. திலகர் நிதிக்கு உதவி செய்யாதவர்கள் அதன் நிர்வாகத்தைப் பற்றி கேட்பதற்கு அருகதையற்றவர்கள் என்றால், அரசாங்கத்திற்கு ஒரு பைசா கந்தாயமும் செலுத்தாதவன், அரசாங்கத்தின் தீமையை எடுத்துச் சொல்ல எந்த வகையில் அருகதையாவான்? அதேபோல், ஜஸ்டிஸ் கட்சியைச் சேராத காங்கிரஸ்காரன், ஜஸ்டிஸ் கட்சியை குறைகூறித் திரிவது நியாயமா?
இவ்வாறு காங்கிரஸின் சரித்திரமானது முன்னுக்குப் பின் முரணான திட்டங்களையுடையதாகவும், அரசியல் நிர்வாக அனுபவமில்லாத அழிப்பு வேலையைக் கைகொண்டத் தலைவர்களை உடையதாகவும் இருக்கிறது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியானது, தான் செய்த எல்லா வேலையிலும் காங்கிரஸின் தீவிர எதிர்ப்புகளுக்கிடையே பல நன்மைகளைச் செய்திருக் கிறது. காங்கிரஸ்வாதிகள் சட்டசபையில் தங்களுடைய வேலைத்திட்டம் என்ன என்பதை இன்னும் அறிவிக்க முடியாமல் தவிக்கின்றனர். பொதுஜனங்களின் மூலதார விஷயத்தில் சுதந்தரமளிப்பதற்கு ஏதுவாய் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உள்பட சகலஜாதி மதத்தினருக்கும் ஸ்தல ஸ்தாபனத்திற்குச் சொந்தமான ரோடு, கிணறு, பள்ளிக்கூடங்களில் சம அந்தஸ்தளிக்கும் அரசாங்க உத்தரவைப் போன்ற சீர்திருத்தங்களை, சட்டசபைகளில் செய்ய காங்கிரசுக்கு தைரியம் உண்டா? உத்தியோக ஏற்பு விஷயத்திற்கு அனுகூலமாக, கிராம மகாநாடுகளில் எல்லாம், பிரதானமாய் தீர்மானம் செய்யும் காங்கிரஸ், இந்திய சட்டசபையில் வரவிருக்கும் எம்.ஸி. ராஜா, தேஷ்முக் இவர்களின் சீர்திருத்த மசோதா விஷயங்களில் தங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிக்காமல் இருப்பதின் மர்மம் என்ன?
காங்கிரஸின் புரட்டுகளைப் பற்றியும், ஜஸ்டிஸ் கட்சியின் ஆக்க வேலைகளைப் பற்றியும் பிரசாரம் செய்வது எங்கள் கடமையென உணர்ந்து எங்கள் வேலையை நடத்தி வருகிறோம். இதை உணராமல் ஜனங்கள் இன்னும் காங்கிரசை நம்பி, காங்கிரஸ்வாதிகளைச் சட்ட சபைக்கு அனுப்பினால், அதன் பலா பலன்களையும் ஜனங்களே அனுபவிக்க நேரிடும். வேலூர் ஜில்லா போர்டு தேர்தலில் நடந்த விபத்து, சட்டசபைத் தேர்தலிலும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பொது ஜனங்கள் கடமையாகும்.
“விடுதலை”
குறிப்பு: 26.07.1936 ஆம் நாள் விருதுநகர் தென் இந்திய நல உரிமைச் சங்கத்தின் ஆதரவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு சொற்பொழிவு 09.08.1936