நத்தானியல் தம்பதிகள் பிரலாபம்
வேலூர் ஜில்லாபோர்டு உபதலைவர் டாக்டர் நத்தானியேலும் அவரது மனைவியாரும் ஜில்லாபோர்டு மெம்பருமான தோழர் ஜுலியா நத்தானியேல் அம்மாளும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவருக்கு அனுப்பிய ராஜிநாமாக் கடிதம் வேறிடத்து வெளிவருகிறது. அதைப் படித்துப் பார்ப்பவர்களுக்கு டாக்டர் நத்தானியேல் தம்பதிகள் உள்ளம் எவ்வளவு தூரம் புண்பட்டிருக்கிறதென்பது விளங்காமல் போகாது. ஆரஅமர யோசியாமல் அவசரப்பட்டு காங்கிரசில் சேர்ந்து விட்டதைப் பற்றி டாக்டர் நத்தானியேல் வருந்துவதுடன் காங்கிரசில் சேர்ந்த அந்தப் பொல்லாத காலம் முதல் தான் மன அமைதியுடன் வாழ்ந்ததில்லையென்றும் கூறுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் என்போர் ஆசை வார்த்தை கூறி மயக்கித் தம்மை காங்கிரசில் சேர்த்ததையும் பிறகு ஒரு உதவியும் செய்யாது கை விட்டதையும், சிரமத்தையும், செலவையும், தொழில் நஷ்டத்தையும், கஷ்டத்தையும் மதியாது ஒரு மாத காலம் சுயமாக வேலை செய்து தேர்தலில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் டாக்டர் நன்கு விளக்கியிருக்கிறார்.
வேலூர் ஜில்லாபோர்டு தேர்தலில் துரோகம் செய்தவர்களைக்கண்டு பிடிப்பது அசாத்தியமென்றும், எனவே காங்கிரஸ் பேரால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எல்லாம் ராஜிநாமாச் செய்துவிட வேண்டுமென்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் தீர்மானம் செய்திருந்தாலும், துரோகம் செய்தவர்கள் யாராயிருக்கக்கூடுமென்பதையும் டாக்டர் நத்தானியேல் குறிப்பாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஜில்லாபோர்டு தலைவர் பதவிக்கு அபேக்ஷகரைத் தேர்ந்தெடுக்க கூடிய கூட்டத்தில் சென்னை மேயர் தோழர் அப்துல் ஹமீத்கான் பிரசன்னமாயிருந்து கூட்டத்தலைவர் கட்டளைப்படி தோழர் அப்துல் ஹக்கீம் ஸாஹிபுக்காகப் பரிந்து பேசியதையும் தோழர் ராஜகோபாலாச்சாரி அதை ஆதரித்ததையும், தாம் மட்டும் ஜில்லா போர்டு மெம்பராயிருந்தால் தோழர் அப்துல் ஹக்கீமுக்கே வோட்டுக் கொடுப்பேனெனக் கூறியதையும் டாக்டர் நத்தானியேல் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தோழர் ராஜகோபாலாச்சாரி அவ்வாறு கூறியதாக பலர் ஏற்கெனவே பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள். அவைகளை மறுக்க தோழர் ராஜகோபாலாச்சாரியார் இதுவரை முன் வரவில்லை. அக்கூட்டத்தில் பிரசன்னமாயிருந்த டாக்டர் நத்தானியலே இப்பொழுது அதைப் பகிரங்கப் படுத்திவிட்டார். எனவே காங்கிரஸ் “துரோகத்து”க்கு முதன் முதல் வித்துப் போட்டவர் தோழர் ராஜகோபாலாச்சாரியார் என்பதற்கு சந்தேகமே இல்லை.
அப்பால், தோழர் ராஜகோபாலாச்சாரியார் சிபார்சையும் மதியாமல் அபேட்சகரைத் தேர்ந்தெடுக்கும் நாடகம் நடந்ததையும் தோழர் கண்ணப்ப முதலியாரும் வேறு ஒரு பார்ப்பனரும் போட்டி போட்டதையும் தோழர் முதலியாருக்கு 13ம் அவரது எதிரிக்கு 12ம் வோட்டுகள் கிடைக்க, ஒரு வோட்டு மிகுதியினால் தோழர் கண்ணப்ப முதலியார் தேர்ந்தெடுக்கப் பட்டதையும் உடனே அதைப் பலர் பகிரங்கமாக ஆட்சேபித்ததையும், ஜில்லாபோர்டு தலைவர் பதவிக்குத் தேவையான யோக்கியதாம்சங்கள் அவருக்கில்லையென்று பலர் வெளிப்படையாகக் கூறியதையும் டாக்டர் நத்தானியேல் விசதமாக விளக்கியிருக்கிறார். இந்நிலையில், தோழர் அப்துல் ஹக்கீமை ஆதரித்த காங்கிரஸ் மெம்பர்கள் தோழர் கண்ணப்ப முதலியாருக்கு எதிரிடையாக வோட்டுக் கொடுத்த அந்த 12 பேரில் தான் இருக்க வேண்டுமென்பதற்கு சந்தேகமே இல்லை. பத்துப்பேர் செய்த துரோகத்துக்கு அந்தப் பத்துப் பேரை நிர்ணயம் செய்யப் போதுமான தகவல்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியாரிடம் இருக்கும்போது 26 பேரும் கும்பலாக ராஜிநாமாச் செய்ய வேண்டுமென்று கூறுவது பெரிய அக்கிரமமாகும்.
நத்தானியேல் தம்பதிகள் கூறுவனவற்றைப் பார்த்தால் அவர்கள் ராஜிநாமாச் செய்யக் கடமைப்பட்டவர்களுமல்ல. எனவே அவர்களை காங்கிரஸ்காரர் தூற்றுவதும் பழிப்பதும் கண்டிக்கத்தக்க செயல்களாகும். “இந்த துராத்மாக்கள் உதவியின்றி காங்கிரசுக்கு உயிர்வாழ முடியாதா?” என்று தோழர் ஜுலியா நத்தேனியேல் அம்மையார் மனமுடைந்து கேட்கிறார். தோழர் ஜுலியா அம்மையார் எழுதிய ஆங்கில ராஜிநாமாக் கடிதத்தில் தம்மை ஹிம்சிக்கும் காங்கிரஸ்காரரை Miscreant என அம்மையார் அழைக்கிறார். Miscreant என்ற ஆங்கில பதத்துக்கு a Vile Wreatch (இழிவான பாதகன்) a detestable scoudrel (வெறுக்கத்தக்க போக்கிரி) என சேம்பரின் இருபதாவது நூற்றாண்டு ஆங்கில அகராதி பொருள் கூறுகிறது. பொதுவாக மாதர்கள் சாந்தகுணமுடையவர்கள். சாந்தகுணமுடைய மாதுக்கே வேலூர் காங்கிரஸ்காரர் Miscreant எனத் தோன்றவேண்டுமானால், அவர்கள் எவ்வளவு கேவலமாக நடந்திருக்க வேண்டுமென்பதை நாம் விளக்கத் தேவையில்லை. ராஜினாமாச் செய்தவர்களை, சென்னை அரை அணா, காலணா கந்தல் பத்திரிகைகள் பயமுறுத்துவதைப் பார்த்தால் இன்னும் என்ன என்ன கொடுமைகள் விளையுமோ தெரியவில்லை.
“காங்கிரஸ் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக உறுதி மொழியில் கையெழுத்துப் போட்ட பின்பு, காங்கிரசை அலட்சியம் செய்வதென்றால் அதனால் ஏற்படும் பலன்களை அநுபவிக்காமல் தப்பிவிடமுடியாது. கடைசிவரையில் ஏமாற்றிவிடலாமென்று நினைப்பவர்களை காங்கிரஸ் சும்மாவிட்டுவிடாது. இதை அவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளட்டும்” என ஒரு சென்னை அரையணாக் கந்தல் பூச்சாண்டி காட்டுகிறது.
நத்தானியல் தம்பதிகள் ராஜிநாமாவைக் கண்டித்தெழுதும் ஒரு சென்னை காலணா கந்தல் “இந்த இருவர்கள் (நத்தானியில் தம்பதிகள்) தொகுதியில் உள்ள வோட்டர்கள் இவ்விருவர்களையும் அஹிம்சா தர்ம முறையில் பகிஷ்காரம் செய்து பொது ஜன வாக்குக்குத் தலைவணங்கும்படி செய்ய வேண்டும்” எனப் பாமர மக்களைத் தூண்டுகிறது. ஆனால் இந்தக் கந்தல் பத்திரிகைகளின் பூச்சாண்டிக்கு பயப்படுவ தென்றால் தென்னாட்டில் ஒருவருக்குமே உயிர் வாழ முடியாது.
எனவே காங்கிரஸ் “Miscreant” மூலம் யோக்கியர்களுக்குத் துன்ப முண்டாகாமல் பார்த்துக் கொள்வது சர்க்காருடையவும் யோக்கியப் பொறுப்புடையவர்களுடையவும் நீங்காக் கடமையாகும். அஹிம்ஸா முறை பகிஷ்காரத்தினால் காங்கிரஸ் மானம் கொஞ்சம் கூட கெடுமேயன்றி காங்கிரஸ் மதிப்பு உயர்ந்து விடாதென்பதையும் காங்கிரஸ்வாலாக்கள் உணர்ந்திருப்பார்களாக!
நத்தானியேல் தம்பதிகளைக் கண்டிக்கும் காங்கிரஸ் பத்திரிகைகளும் காங்கிரஸ் தலைவர்களும் அவர்களது ராஜிநாமாக் கடிதத்தில் காட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஏன் பதிலளிக்கவில்லை? எந்த அரசியல் கட்சிக்கும் கௌரவமளிக்காத பல விஷயங்கள் அந்த ராஜிநாமாக் கடிதங்களில் அடங்கியிருக்கின்றன. அவைகளை மறுக்க ஏன் இந்தப் பத்திரிகைகளும், தலைவர்களும் முன்வரவில்லை. நான் ஜில்லா போர்டு மெம்பராயிருந்தால் தோழர் அப்துல் ஹக்கீமுக்கே வோட்டுக் கொடுப்பேன் என்று கூறி காங்கிரஸ் கட்சி மெம்பர்களைத் தப்பு வழியில் திருப்பிய தோழர் ராஜகோபாலாச்சாரியாரை இந்தப் பத்திரிகைகளும் தலைவர்களும் ஏன் கண்டிக்க வில்லை? இவ் விஷயத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரியார் மௌனம் சாதிப்பதேன்? தேச மகா ஜனங்களே இதை நீங்கள் கவனியுங்கள்!
குடி அரசு துணைத் தலையங்கம் 17.05.1936