“மெயி”லும் பார்ப்பனரும்
“மெயில்” பத்திரிகையானது ஐரோப்பியர்களுடைய உரிமைகளை காப்பாற்ற நடத்தப்படும் பத்திரிகை என்பது பொதுஜனங்களது அபிப்பிராயம். ஆனால் அது அவ்வளவோடு நிற்காமல் இப்போது பார்ப்பனர்கள் உரிமையைக் காப்பாற்ற தீவிரமாய் புறப்பட்டு விட்டது.
இதன் முக்கிய காரணம் இன்னது என்பது நமக்கு புலப்படவில்லை.
ஜெர்மன் ஹிட்லர் எப்படி தன்னை ஆரியர் எனக் கருதிக் கொண்டாரோ அதுபோல் மெயில் ஆசிரியர் தன்னையும் ஆரியர் சந்ததி என்று கருதிக் கொண்டாரோ, அல்லது தென்னாட்டுப் பார்ப்பனர்களை தங்கள் சந்ததியார் என்று கருதிக் கொண்டாரோ என்னவோ என்று தான் சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.
எப்படியிருந்த போதிலும் எதற்கும் ஒரு அளவு உண்டு. என்ன காரணத்தால் மெயில் தன் அளவைக் கூட மீறிவிட்டதோ தெரியவில்லை.
ஏனென்றால் 6ந் தேதி மெயில் பத்திரிகை உபதலையங்கம் ஒன்றில் “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை காங்கிரசுக்காரர் ஒப்புக் கொண்டால் ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசில் சேர்ந்து விடுகிறோம்” என்று தோழர் நடேச முதலியார் சொன்னதைக் கண்டித்து எழுதும் போது
“வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் இல்லை என்பது தானே அருத்தம்” என்று “மெயில்” எழுதியிருக்கிறது.
இந்தப்படி சொல்ல பார்ப்பனர்களுக்குக்கூட தைரியமில்லை, அப்படி இருக்க மெயிலுக்கு பார்ப்பனர்கள் இடம் இவ்வளவு கவலை வந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதற்கு இவ்வளவு பெரிய வியாக்கியானம் செய்ததுபற்றி ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
மற்றும் இந்த வியாக்கியானம் பார்ப்பனர்கள் இடம் அபிமானம் வைத்து மெயில் செய்ததோ அல்லது காங்கிரசும் ஜஸ்டிஸ் கட்சியும் ஒன்றாகிவிட்டால் தங்கள் நிலைக்கு ஆபத்து வரக்கூடுமோ என்று பயந்து இந்த பாஷ்யத்தில் புகுந்ததோ என்பது நமக்கு விளங்கவில்லை.
தோழர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் ஒரு சமயத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு வேறு ஒருமாதிரி வியாக்கியானம் தெரிவித்தார்.
“அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது நாட்டில் அறிவும் ஆற்றலும் உள்ள ஒரு கூட்டத்தாரைப் பின் தள்ளுவதாகும்” என்றார்.
மற்றும் தோழர் சீனிவாச சாஸ்திரியார் சமீபத்தில் ஒரு எழவு வீட்டில் அழும்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் மகா மேதாவியான தோழர் எம்.ராமச்சந்திரராவ் பெரிய பதவிக்கு வந்திருக்கக் கூடியது தவறிவிட்டது என்றார்.
“எழவு வீட்டில் தாயாரை பெண்டுக்கு இழுப்பவன் கல்யாண வீட்டில் மதினியாரை சும்மா விடுவானா?” என்று ஒரு பழமொழி உண்டு.
அதுபோல் எழவு வீட்டிலேயே பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை வைதவர் கல்யாண வீடாகிய மற்ற சமயங்களில் ஜஸ்டிஸ் கட்சிக்கு எவ்வளவு கேடு செய்திருப்பார் என்பதை நாம் தெரியப்படுத்த வேண்டியதில்லை.
எது எப்படி இருந்தாலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது பார்ப்பனர்களுக்கு கூற்றுவனாய் காணப்படுகிறது என்பதும், அதனாலேயே அவர்கள் அதை எதிர்க்கிறார்கள் என்பதும், வெளிப்படையாய் அந்த உண்மையைச் சொல்லி எதிர்க்க வீரமற்ற கோழைத்தனத்தாலேயே “வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தேசீயத்துக்கு விரோதம்” என்று கூறி அறிவற்ற மக்களை ஏய்ப்பது என்பதும், பார்ப்பனர் தயவில்லாமல் வாழமுடியாத மக்களும் பார்ப்பனர்களிடம் கூலி பெறும் அடிமைகளும் கூலிகளும் அதற்கு பின்தாளம் போடுகிறார்கள் என்பதும் உண்மை என்பது இதனால் விளக்கமாகிவிட்டது.
ஆனால் இதே மெயில் முன் ஒரு காலத்தில் வகுப்புவாரி பிரதி நிதித்துவத்தை ஆதரித்தும் உத்தியோகங்கள் எல்லாம் பார்ப்பனர்களே கொள்ளை கொண்டு வருகிறார்கள் என்றும், அப்படி கொள்ளை கொண்டும் அவர்களுக்கு நன்றி விஸ்வாசமில்லை என்றும், அது நன்றியற்ற ஜாதி என்றும் எழுதியதை மறந்து விட்டதானது நாம் ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியமடைய வேண்டிய விஷயமாகும்.
மெயில் எழுதியதற்கு ஆதாரம் வேண்டுமானால் காட்டத் தயாராய் இருக்கிறோம்.
அதாவது தோழர் சர். சி.பி. ராமசாமி அய்யரின் சட்ட மெம்பர் ஆயுள்காலம் தீர்ந்த உடன் தோழர் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியார் அந்த உத்தியோகத்துக்கு நியமிக்கப்பட்ட போது விஷப் பல்லை பிடுங்கியதுபோல் சட்ட மெம்பருக்கு அப்போது இருந்த போலீஸ் இலாகா நிர்வாகத்தைப் பிடுங்கி ஹோம் மெம்பராகிய சர். உஸ்மான் அவர்களுக்கு கொடுத்து விட்டவுடன் கோபித்துக் கொண்டு சி.பி. அய்யர் பேச்சைக் கேட்டு சாஸ்திரியார் ராஜினாமா கொடுத்துவிட்ட காலத்தில் மெயில் என்ன தலையங்கம் எழுதிற்று என்பதை ஞாபகப்படுத்திப் பார்த்தால் நன்றாய் விளங்கும் என்று சொல்லுவோம்.
பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டது முதல் பார்ப்பனர்களே அவ்வாட்சி நிர்வாகத்திலும் உத்தியோகங்களிலும் பெரிய பங்கு அனுபவித்து வந்திருக்கிறார்கள் என்றும், சென்னை அரசாங்கத்தில் நிர்வாக சபையில் இந்தியர்களை நியமிப்பது என்ற முறை ஏற்பட்டது முதல் சட்ட மெம்பர் ஸ்தானத்தில் பார்ப்பனர்களே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் இனி அப்படிச் செய்யாமல் பார்ப்பனரல்லாதாருக்கும் கொடுக்க வேண்டும் என்றும், அதற்கு ஆகவே பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்கிறார்கள் என்றும் மற்றும் பார்ப்பனர்களை கண்டித்தும் எழுதியது இன்றும் தேடிப் பார்த்தால் கிடைக்கும்.
அப்படிக்கு இருக்க வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால் பார்ப்பனர்களுக்கு உத்தியோகமில்லை என்பது தானே பொருள் என்று இப்போது மெயில் கூறுவது தர்மமா, யோக்கியமா என்று கேட்கின்றோம்.
வேண்டுமானால் இப்படிச் சொல்லட்டும். அதாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்றால் பார்ப்பனர்களுக்கு ஏகபோக ஆட்சி இல்லை என்று அருத்தம் என்று சொல்லட்டும். அதை நாம் ஒப்புக்கொள்கிறோம்.
முஸ்லீம்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுத்ததால் இந்துக்களுக்கு உத்தியோகம் இல்லை என்று ஆகிவிட்டதா? அல்லது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார்களுக்கு உத்தியோகத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பதாக இதுவரை 6, 7 வருஷ காலமாய் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கியதால் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் இல்லாமல்போய் விட்டதா என்றும் “தீண்டப்படாதவர்”களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்ததால் தீண்டக்கூடிய ஜாதியார்களுக்கு உத்தியோகம் இல்லை என்று ஆகிவிட்டதா என்பதையும் யோசித்துப் பார்த்தால் “மெயில்” தனது அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளும் என்றே நினைக்கிறோம்.
இந்தப்படியெல்லாம் மெயிலும் பார்ப்பனர்களும் கூடி பார்ப்பன ரல்லாதாரை பழி சுமத்துவதாலோ அல்லது இதை மாற்றி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத் துரோகம் என்றோ, தேசீயத்துக்கு விரோதமென்றோ கூறி பாமர மக்களை ஏய்க்கப் பார்ப்பதாலோ இனி வகுப்புவாரி பிரதிநிதித் துவத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதே நமது அபிப்பிராயம்.
அதை யார் தொட்டாலும் சீறிக் கடிக்கக்கூடிய பலத்தையும் தைரியத்தையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பெற்றுவிட்டது.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இவ்வளவு பலமும் செல்வாக்கும் ஏற்பட்டதெல்லாம் பார்ப்பனர்கள் அதை ஆட்சேபித்ததும், அவ்வுணர்ச்சியைக் கெடுக்க பல வித சூழ்ச்சிகள் செய்ததுமேயாகும். இனியும் கடசியாக நாம் ஒன்று சொல்லுவோம்.
அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை இனியும் பார்ப்பனர்கள் எதிர்ப்பார்களேயானால் கூடிய சீக்கிரத்தில் பார்ப்பனர்களே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்கும் படியான நிலைமை வந்து விடும் கட்டாயம் வந்துவிடும் இப்போதே சில இடங்களில் வந்து விட்டது என்பதேயாகும்.
ஏனென்றால் ஆட்சேபிக்க ஆட்சேபிக்க மக்கள் கவனம் அதிலேயே செலுத்தப்பட வேண்டியதாகி உத்தியோகப் போட்டியே அரசியலாகி பெருங் கூட்டத்தார் காரியம் நிறைவேறிவிடும். பிரித்தாளும் சூழ்ச்சி இது விஷயத்தில் மாத்திரம் இனி செல்லாது.
ஆதலால் உண்மையான பொதுநலப்பற்றும் நல்ல அரசாட்சியும் விரும்புகிறவர்கள் இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு முட்டுக்கட்டை போடுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு அரசியல் கிளர்ச்சி நடத்தாமல் யோக்கியமான காரியத்துக்கு நடத்தினால் நாமும் காலால் இடும் வேலையைக் கையால் தலையால் செய்யக் காத்திருக்கிறோம்.
அப்படிக்கில்லா விட்டால் இருதரப்புக்களிலும் அயோக்கியர்களும் சமய சஞ்சீவிகளும் ஒரு வேளை கூழுக்கு எதையும் விற்பவர்களும் தான் தலைவர்களாகி கொள்ளை அடிப்பதையும் பொதுநலத்தைப் பாழாக்குவதையும் பார்த்துக் கொண்டும் அப்படிப்பட்ட காரியத்துக்கு உதவி செய்து கொண்டும் வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடும் என்று சொல்ல வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.
மெயிலைப்பற்றி நாம் ஒன்றும் கவலைப்படவில்லை. அதன் கொள்கை நமக்கு தெரியாததல்ல. ஆல் பழுத்தால் அங்கு அத்தி பழுத்தால் இங்கு என்று சமயம் போல் நடந்து கொள்ள வேண்டிய கடமை உள்ளது.
ஆனால் மற்றவர்கள் அதாவது சிறிதாவது பொதுநல உணர்ச்சி உள்ளவர்கள், பொதுநலத்துக்கு ஆக உண்மையான தியாகம் செய்தவர்கள் இவ்விஷயத்தை யோசித்து ஒரு யோக்கியமான முடிவுக்கு வரும்படி வேண்டுகிறோம்.
குடி அரசு தலையங்கம் 14.06.1936