ஸ்ரீனிவாச சாஸ்திரியார்

தி ரைட் ஹானரபிள் சாஸ்திரியார் என்று பெயர் வழங்கப்பெறும் தோழர் ஸ்ரீனிவாச சாஸ்திரியார் இப்போது காங்கிரஸ்காரர்களுடன் வெளிப்படையாய் சேர்ந்து கொண்டு பார்ப்பனரல்லாதார் இயக்கம் பிற்போக்கானதென்றும், அதை அடுத்தத் தேர்தலில் எப்படியாவது தோற்கடிக்கச் செய்யவேண்டும் என்றும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு நாட்டில் இடம் கொடுத்தால் பார்ப்பனர்கள் நிலை மிக மோசமாகிவிடும் என்றும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தாலேயே பல பார்ப்பனர்கள் பெரிய பதவிக்கும் அந்தஸ்துக்கும் போக முடியாமல் போய்விட்டதென்றும் கூறி பார்ப்பனர்களை நமக்கு எதிரியாக கிளப்பிவருகிறார்.

மற்றும் காங்கிரஸ் கொள்கைகளைப் பற்றி தனக்கு ஆட்சேபனை இல்லையென்றும், வேலைத்திட்ட நிபந்தனைகளில் மாத்திரம் சிறிது தளர்த்தி தன் போன்றவர் அதில் வந்து சேரும்படி செய்யவேண்டும் என்றும் காங்கிரசுக்கு விண்ணப்பம் போடுகிறார்.

இப்படிப்பட்ட சாஸ்திரியார் யார்? அவரது பூர்வோத்தரமென்ன? அவரது கொள்கை என்ன என்பவை முதலியவைகளை பொது ஜனங்கள் உணரவேண்டுமென்பது நமது ஆசை.

சாஸ்திரியார் ஒரு சாதாரண உபாத்தியாயராய் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர், ஆங்கிலம் பேசுவதில் நல்ல உச்சரிப்பை உச்சரிக்கக்கூடியவர், பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளுவதில் முந்துபவர், பார்ப்பன பத்திரிகைகளின் விளம்பரங்களால் பிரபலப்படுத்தப்பட்டவர். இந்த நிலையில் வடநாட்டு பிரபலஸ்தரும் அரசாங்கத்தாராலும், மக்களாலும் நன்கு மதிக்கப்பட்டவருமான கோகலே அவர்கள் தென்னாட்டுக்கு வந்த சமயத்தில் அவருடைய அறிமுகத்தை சம்பாதித்து அவரை வசப்படுத்தி, அவரது செல்வாக்கில் மதிப்புப் பெற்று, கடைசியாக அவரது மடமாகிய இந்திய ஊழியச் சங்க மடத்துக்கு தம்பிரானாகி சர்க்காருக்கு பிரதம சிஷ்யனாகி பிரிட்டிஷ் சர்க்காரின் சமஸ்தான கவிராயராகி உலகத்தின் மற்ற பாகங்களுக்கும் பிரிட்டிஷ் பிரசாரகராய்ச் சென்று மகாகனமாகி பல பதவிகள் அடைந்து, பணமும் ஒரு அளவுக்கு சம்பாதிக்கப் பெற்று அவற்றையெல்லாம் ஆதாரமாய்க் கொண்டு இன்று பச்சையாகப் பார்ப்பனப் பிரசாரம் செய்வதோடல்லாமல் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தையும் குறைகூறி வெள்ளைக்காரர்கள் உள்ளத்திலும் பார்ப்பனரல்லாதார் மீது துவேசம் ஏற்படும்படி விஷமப் பிரசாரமும் செய்து வருகிறவர். காங்கிரஸ் பார்ப்பனர்கள் இவரது பிரசாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவருக்குப் பெரியதொரு விளம்பரம் கொடுத்து பெருமைப்படுத்தி வருகிறார்கள்.

இவருடைய அரசியல் கொள்கை என்பது பெயருக்கு மிதவாதம் என்று சொல்லப்படும் என்றாலும், நல்லதொரு சமயத்தில் காந்தியாரை தேசத்துரோகியென்பதாகச் சொல்லி அவரை கைதி செய்வதற்கு அரசாங்கத்துக்கு யோசனை சொல்லி அரசாங்கம் காந்தியாரை கைதி செய்தது சரி என்று பொதுஜனங்களுக்கு படும்படி பிரசாரமும் செய்தார்.

அதற்குப் பிறகே அரசாங்கத்தார் அவருக்கு தென்னாப்பிரிக்கா ஏஜண்டு வேலை கொடுத்து மாதம் பல ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுத்து வந்தார்கள். அது மாத்திரமல்லாமல் இவருக்கு மகாகனம் பட்டம் வருவதற்கே இந்த காரியங்கள் போன்றதே பெரிதும் உதவி அளித்தன.

மற்றும் இவருடைய யோக்கியதையைப் பற்றி தோழர் ஜவஹர்லால் அவர்கள் நன்றாய் விவரிக்கிறார். எப்படியெனில்,

“தோழர் ஸ்ரீனிவாச சாஸ்திரியார் அடிமைப்புத்தியை கற்பிப்பதிலும் கோள்மூட்டச் செய்வதிலும் சிறந்தவராவார்.”

“1917ல் சாஸ்திரியார் பல வீரப்பேச்சுகள் பேசினார். பெசண்ட் அம்மையாரை சிறைப்படுத்திய உடன் ஆசாமி இருக்குமிடம் தெரியாமல் மறைந்துவிட்டார். இவர் காரியம் செய்யவேண்டிய சமயத்தில் நழுவி விடுவார். நெருக்கடியான சமயத்தில் அவரை நம்பவே கூடாது.”

“சாஸ்திரியார் ஐரோப்பாவில் காங்கிரசை இழிவாகவும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை மதிப்பாகவும் பேசி பிரசாரம் செய்தார். வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்ற சாஸ்திரியார், காங்கிரஸ் சார்பாக ஜெயிலுக்குச் சென்றவர்களையும் கஷ்டப்பட்டவர்களையும் வெகு கேவலமாகக் கண்டித்துப் பேசினார். இதற்கு ஆக நான் அவரை சந்தித்தபோது கேட்டதற்கு பிறகு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இப்படி பேசியதற்கு காரணம் கூறும்போது தன்னை மறந்து அப்படிப் பேசிவிட்டதாகச் சொல்லி வருத்தப்பட்டார்.”

“எல்லா கட்சியாராலும் கண்டிக்கப்பட்ட வெள்ளை அறிக்கையை கிடைத்ததை பெற்று உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் என்று கல்கத்தா மிதவாத மாநாட்டில் தலைமை வகித்து பேசினார்.”

“இதனால் சர்க்கார் காங்கிரஸ்காரர்கள் சொல்வதை மதிக்க முடியாமல் போய்விட்டது.”

“அதன் பிறகும் பூனாவில் ஒரு முக்கியக் கூட்டத்தில் பேசும்போது பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுப்போய்விட்டால், இந்தியாவில் பெருத்த கலகமும் தொல்லையும் நிகழும். ஆதலால் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் இருக்க வேண்டியது அவசியம் என்று சொன்னார். இப்படிப்பட்ட லட்சணத்தில், சாஸ்திரியாரும் மிதவாதிகள் எல்லாம் மிகத்தீவிரவாதிகள் என்று கருதப்படுகிறாராம். ஆகவே மிதவாதமென்பது எப்படிப்பட்டது என்பது பற்றி நாம் சொல்லவேண்டியதில்லை” என்று எழுதியிருக்கிறார்.

(இவை ஜவஹர்லால் எழுதிய தன் சுயசரிதத்தில் காணலாம்.)

இந்த யோக்கியதை உள்ள சாஸ்திரியாரைப்பற்றி இன்று தேசீயப் பார்ப்பனர்கள் என்பவர்களும் தேசீயப் பத்திரிகை என்பவைகளும் இன்று ஆகாயமளாவப் புகழ்கின்றன. விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் இதே தேசீய பத்திரிகைகளும் தேசீயவாதிகளும் இதில் 100ல் ஒரு பங்கு கெடுதியும் கெட்ட குணமுமில்லாத பார்ப்பனரல்லாத பிரமுகர்களை பழிக்கின்றன, தூற்றுகின்றன. சாதாரண ஒரு பொதுமனிதன் நடுநிலையுள்ள மனிதன் தோழர் ஏ. ராமசாமி முதலியாரையும் கனம் சீனிவாச சாஸ்திரியையும் கண்டால் அரசியல் விஷயம், பொதுவாழ்வு ஆகியவைகளை மாத்திரம் எடுத்துக்கொண்டு யார் யோக்கியர், யார் நாணயஸ்தர், யார் விஷய ஞான முள்ளவர்கள் என்பதாகச் சொல்லும்படி கேட்டால் அவர் என்ன சொல்லக் கூடும். யாரால் நாட்டிற்கு அதிக கெடுதி இல்லை என்று கேட்டால் என்ன சொல்லக்கூடும்.

இன்று தோழர் கனம் சாஸ்திரியார் ஒரு நாட்டுக்கோட்டை செட்டியாரின் ஆதரவில் இருந்து கொண்டு, அவருக்கு வெள்ளைக்காரரிடம் ஆக வேண்டிய காரியங்களுக்கு தரகராய் இருந்துகொண்டு அண்ணாமலை யுனிவர்சிட்டி வைஸ்சான்சலர் பதவியைக் கைப்பற்றி அதை அக்கிரகாரமாக ஆக்கி அங்கு பார்ப்பன விஷத்தைக் கக்கி அந்த யுனிவர்சிட்டியால் பார்ப்பனரல்லாதாருக்கு தக்க நன்மையில்லாமல் செய்து வருகிறார். அங்குள்ள பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்கள் உத்தியோகஸ்தர் ஆகியவர்களின் நிலைமையை கஷ்டமாக்கி வருகிறார். இவருடைய தேச பக்திக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்?

குடி அரசு கட்டுரை 09.08.1936

 

You may also like...